உணவுப் போட்டியில் அதிக உணவை வேகமாக உண்ணும் போது உடலில் என்ன நடக்கிறது?

உணவு உண்ணும் போட்டி

பட மூலாதாரம், YouTube/Wake and Bite

படக்குறிப்பு, உணவுப் போட்டிகளுக்கு அறிவிக்கப்படும் பரிசுத் தொகை பலரை ஈர்க்கின்றது.
    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

கேரள மாநிலம் பாலக்காட்டில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த இட்லி சாப்பிடும் போட்டியின் போது 49 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.

போட்டியில் பங்கேற்ற அவருக்கு இட்லிகள் தொண்டையில் சிக்கிக் கொண்டதாகவும், சுற்றியிருந்தவர்கள் அவரை காப்பாற்றுவதற்காக தொண்டையிலிருந்த இட்லிகளை வெளியே எடுத்தனர் என்று காவல்துறை கூறியதாக பி டி ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இது இயற்கைக்கு மாறான மரணம் என்று காவ்லதுறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் உணவு விடுதிகளும் உணவு உற்பத்தி நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக இதுபோன்ற உணவுப் போட்டியை அறிவிப்பது வாடிக்கையான ஒன்றாகி வருகிறது. அத்தகைய உணவுப் போட்டிகளில் யார் பங்கேற்கிறார்கள்? அவர்களை போட்டியில் பங்கேற்க தூண்டுவது எது? இந்தப் போட்டி எப்போது உயிருக்கே ஆபத்தாக மாறுகிறது?

உணவு உண்ணும் போட்டி
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

போட்டியாளர் உடலில் என்ன நடக்கிறது?

எந்த வகையான உணவாக இருந்தாலும் ஒரே நேரத்தில் அதிகமான உணவை எடுத்துக் கொள்வது உடலுக்கு ஆபத்தானது என்கிறார் மருத்துவர் சந்திரசேகர். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பொது மருத்துவத்துறை தலைவராக இருக்கும் அவர், உணவுப் போட்டிகளில் பங்கேற்கும் போது, அது யாருடைய உயிருக்கு ஆபத்தாக இருக்கும், யாருக்கு இருக்காது என்பதை கணிக்க முடியாது என்கிறார்.

“உணவுப் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு போட்டியில் வெல்ல வேண்டும் என்ற பதற்றம் இருக்கும். எனவே அவர்களது இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும். ஒரே நேரத்தில் அதிக அளவிலான உணவை எடுத்துக் கொள்ளும் போது, உணவு குழாய் மற்றும் வயிற்றுப்பகுதி தொந்தரவுக்கு உள்ளாகும். வேகஸ் எனும் நரம்பு உணவுக் குழாய்க்கு அருகிலேயே தொடர்ந்து இருக்கக் கூடிய நரம்பாகும். அதிக அளவு உணவு உள்ளே செல்லும் போது, இதய செயல்பாட்டை குறைக்குமாறு வேகஸ் நரம்புக்கு சமிக்ஞை கிடைக்கும். மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பதற்கு பல நேரங்களில் இதுவே காரணமாகும். சாப்பிடுபவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற இணை நோய்கள் இருந்தால் அவர்களுக்கு ஆபத்து அதிகமாக இருக்கும்” என்கிறார்.

உணவு உண்ணும் போட்டி

பட மூலாதாரம், Dr.Chandrasekar

படக்குறிப்பு, உணவுக் குழாய்க்கு பதில் சுவாசக்குழாயில் சிக்கிக் கொள்ளும் உணவு, மூச்சு திணறலை ஏற்படுத்தும் என்று மருத்துவர் சந்திரசேகர் கூறுகிறார்

அதிக உணவை வேகமாக உண்ணும் போது உடலில் என்ன நடக்கிறது?

கேரளாவில் இட்லி சாப்பிட்ட நபர் எப்படி உயிரிழந்திருக்கக் கூடும் என்றும் மருத்துவர் சந்திரசேகர் விளக்கம் தந்தார். “ நமது வாயினுள் இருக்கும் உணவை லாவகமாக உணவுக் குழாய்க்குள் அனுப்புவது நமது நாக்கு. ஒரு கடி சாப்பிட்டு, அடுத்த கடி சாப்பிடுவதற்குள்ளாக இது நடக்கும். அதிக உணவை வேகமாக எடுத்துக் கொள்ளும் போது, உணவுக்குழாய்க்கு பதிலாக நுரையீரலுக்கு செல்லும் சுவாசக் குழாயில் உணவு சென்றுவிட வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால், உணவு சுவாசக் குழாயில் இன்னும் கீழ் இறங்கும். இதன் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தாக முடியலாம்.” என்று அவர் கூறினார்.

மேலும் தொடர்ந்த அவர், "மனித உடல், பழக்கத்தின் மூலமே எந்தவொரு நடவடிக்கையையும் செய்ய கற்றுக்கொள்ளும். பல ஆண்டுகளாக ஒரு விதமாக பழகிய உடலில் திடீரென அதிக அளவிலான உணவு, ஒரே நேரத்தில் உள்ளே சென்றால், அது உடலுக்கு அதிர்ச்சியாக இருக்கும்." என்றார்.

உணவுப் போட்டிகளில் ஏன் பங்கேற்கிறார்கள்?

உணவு உண்ணும் போட்டி

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, குழந்தையின் மருத்துவச் செலவுக்காக கால் டாக்சி ஒட்டுநர் கோவையில் நடைபெற்ற உணவுப் போட்டியில் பங்கேற்றார்.

கோவையில் இரண்டு வாரங்களுக்கு முன், ஓட்டல் திறப்பு விழாவுக்காக பிரியாணி உண்ணும் போட்டி நடத்தப்பட்டது. அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ரூ.1 லட்சம், 5 பிரியாணி சாப்பிட்டால் ரூ.50 ஆயிரம், 3 பிரியாணி சாப்பிட்டால் ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் வாகன ஓட்டுநர்கள் மற்றும் கூலித்தொழிலாளி ஆவர். இரண்டாம் இடம் பிடித்த வாடகை கார் ஓட்டுநரான கணேச மூர்த்தி, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது மகனின் மருத்துவ செலவுக்கும் படிப்பு செலவுக்கும் பணம் வேண்டும் என்பதால் போட்டியில் பங்கேற்றதாக கூறினார்.

சென்னையை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத ஐ.டி. ஊழியர் ஒருவர், “நான் சிறு வயதிலிருந்தே நன்றாக சாப்பிடுவேன். அதேபோன்று நன்றாக உடற்பயிற்சியும் செய்வேன். ஒரு முறை பரோட்டா உண்ணும் போட்டி நடைபெறுவதாக முகநூலில் பார்த்தேன். எப்படி இருக்கிறது என்று தெரிந்துக் கொள்வதற்காக பங்கேற்றேன். எட்டு பரோட்டாவுக்கு மேல் சாப்பிட முடியவில்லை. நான் கலந்து கொண்ட போது பலர் சாப்பிட முடியாமல் வாந்தி எடுத்தனர். அவர்கள் போட்டியிலிருந்து விலக்கப்பட்டனர்” என்றார்.

உணவு உண்ணும் போட்டி

பட மூலாதாரம், R Archana

படக்குறிப்பு, அர்ச்சனா, மனநல ஆலோசகர்

“நமக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விசயங்களை செய்யும் போது உடலில் டோபமைன் சுரக்கும். இந்தப் போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு குறிப்பிட்ட உணவை சாப்பிடும் போது டோபமைன் சுரக்கும். அதனால் அந்த செயலை மீண்டும்மீண்டும் செய்ய வேண்டும் என்ற உந்துதல் இருக்கும்.” என்கிறார் மனநல ஆலோசகர் அர்ச்சனா.

இந்தப் போட்டிகளில் பங்கேற்பதற்கு அவர்கள் கொண்டிருக்கும் காரணங்கள் முக்கியம் என்று குறிப்பிடுகிறார் அவர். “ இந்த உணவுப் போட்டிகளுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை தான் பலரை ஈர்க்கிறது. பொருளாதார தேவை இருப்பவர்கள், ஒரு வேளை உணவு கிடைத்துவிடும் என்று நினைப்பவர்கள் இதில் பங்கேற்கின்றனர். சிலர், உள்ளக் கிளர்ச்சிக்காக முயன்று பார்ப்போமே என்று சாப்பிடுவார்கள். சிலருக்கு இந்தப் போட்டியில் பங்கேற்று அதன் மூலம் கிடைக்கும் பாராட்டும் அங்கீகாரமும் ஒரு உந்துதலாக இருக்கலாம்.” என்கிறார்.

உணவு உண்ணும் போட்டி

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, ஒரே நேரத்தில் அதிக அளவில் உணவு உட்கொள்வது உயிரை பறிக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்

பிஞ்ச் ஈட்டிங் செய்பவர்களுக்கும் உணவுபோட்டிகளில் பங்கேற்பவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

“பிஞ்ச் ஈட்டிங்- Binge eating” என்ற சொல் நாம் அடிக்கடி கேள்விப்படும் சொல்லாக இருக்கிறது. ‘தொடர்ந்து சாப்பிடுவது’ என்று இந்த சொல்லுக்கு அர்த்தம். “எடை குறைப்பு, சர்க்கரை குறைப்பு என பல்வேறு காரணங்களுக்காக சாப்பிடாமலே இருந்துவிட்டு, பிறகு ஜங்க் புட்-ஐ தொடர்ந்து சாப்பிடுவார்கள். திடீரென இரண்டு நாட்கள் உணவின் அளவு குறைந்து விட்டால், அடுத்த சில நாட்களுக்கு அதீத பசி எடுக்கும். அப்போது என்ன வேண்டுமானாலும் சாப்பிடவேண்டும், தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்று தோன்றும்” என்கிறார். இப்படி உண்பதும் உணவுப் போட்டிகளில் பங்கேற்பதும் ஒன்றல்ல என்கிறார் அவர்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)