"டிரோன் தாக்குதலில் என் கண் முன்னே நண்பர் இறந்தார்" - ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிந்த இந்தியர்களின் திகில் அனுபவம்

- எழுதியவர், அமரேந்திர யர்லகத்தா
- பதவி, பிபிசி செய்தியாளர்
“இந்தியாவுக்கு திரும்பி வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அந்த நாட்களை நினைக்கும் போது அழுகை வருகிறது. குடும்பத்தை மீண்டும் சந்திக்க முடிந்ததற்கு அல்லாவுக்கு நன்றி. இது எனக்கு மறுபிறப்பு" என்று கண்ணீர் மல்க முகமது சுஃபியான் பிபிசியிடம் கூறினார்.
சுஃபியான் தெலங்கானா மாநிலம் நாராயண்பேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்.
ஏஜென்டுகளால் ஏமாற்றப்பட்டு எட்டு மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா-யுக்ரேன் போரில் பணிபுரிந்து விட்டு வெள்ளிக்கிழமை இந்தியா திரும்பினார்.
ஹைதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், குடும்பத்தினரை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.
ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்த ஆறு இளைஞர்களில் சுஃபியானும் ஒருவர்.
அவர்களில் மேலும் மூன்று பேர் கர்நாடக மாநிலத்தின் கலபுரிகி (குல்பர்கா/Kalaburagi) பகுதியைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் காஷ்மீரைச் சேர்ந்தவர், மற்றொருவர் பஞ்சாபைச் சேர்ந்தவர்.

ரஷ்யா சென்றது எப்படி?
24 வயதான சுஃபியான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஷ்யா சென்றார். முன்னதாக துபாயில் உள்ள ஒரு ஆடையகத்தில் வேலை பார்த்து வந்தார்.
"துபாயில் பணிபுரியும் போது, ரஷ்யாவில் உதவியாளர் பணிக்கான விளம்பரம் ஒன்றை யூடியூப் சேனலில் பார்த்தேன். அந்த யூடியூப் சேனலை நடத்தி வருபவர் ஃபைசல் கான். முகவராகவும் செயல்படுகிறார். ரஷ்யாவில் ’உதவியாளர்’ (security helper) வேலைகள் குறித்த வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் போட்டு இளைஞர்களை ஈர்ப்பதே அவரது பணி. ” என்று விளக்கினார்.
யூடியூப் விளம்பரத்தைப் பார்த்த சுஃபியான் ரஷ்யா செல்ல விரும்பினார். துபாயில் இருந்து 15 நாட்கள் விடுமுறைக்காக இந்தியா திரும்பினார். அதன் பின்னர் ரஷ்யா சென்றார்.
இந்திய இளைஞர்களுக்கு ரஷ்யாவில் `செக்யூரிட்டி உதவியாளர்’ பணி வழங்குவதாக உறுதியளித்து ஏஜென்டுகள் அழைத்துச் சென்றுள்ளனர். இதற்காக ரஷ்யாவிலும், மும்பையிலும் நான்கு ஏஜென்டுகள் வேலை செய்து வந்துள்ளனர். துபாயில் இந்த நால்வரின் ஒருங்கிணைப்பாளராக ஃபைசல் கான் செயல்பட்டுள்ளார்.
ஃபைசல் கான் தனது யூடியூப் சேனலில் வெளியிடும் வீடியோக்களைப் பார்க்கும் இளைஞர்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களில் அவரை தொடர்பு கொள்வார்கள்.
ரஷ்யா சென்றால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என நினைத்து ஃபைசல் கானை அணுகியதாக சுஃபியான் பிபிசியிடம் தெரிவித்தார்.
“ரஷ்யாவில் காவலாளி வேலை என்றுதான் சொன்னார்கள். ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. யுக்ரேன் உடனான போருக்கு அழைத்துச் செல்லப்படுகிறேன் என்றும் அவர் கூறவில்லை. மூன்று மாதங்கள் பயிற்சி. அப்போது மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்றார்கள். அதன்பிறகு, சம்பளம் அதிகரிக்கப்படும் என நம்பினோம்” என சுஃபியான் பிபிசியிடம் தெரிவித்தார்.

ரஷ்யா சென்ற பிறகு என்ன நடந்தது?
ரஷ்யாவுக்குச் சென்ற பிறகு, சுஃபியான் உட்பட பல இந்திய இளைஞர்கள் ஏஜெண்டுகளால் ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு ஒரு மாதம் முதல் ஒன்றரை மாதங்கள் வரை பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் யுக்ரேன் எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டு போரில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதுகுறித்து கர்நாடக மாநிலம் கலபுரிகியைச் சேர்ந்த அப்துல் நதீம் பிபிசியிடம் பேசினார்.
“ராணுவத்தில் சேர வேண்டும் என்று எங்களுக்குச் சொல்லப்படவில்லை. இது வெறும் `செக்யூரிட்டி ஹெல்பர்’ வேலைதான் என்றார்கள். ரஷ்யா சென்ற பிறகு, ஏஜெண்டுகள் மாற்றிப் பேசினர். நாங்கள் ஏமாற்றப்பட்டோம். ஃபைசல் கான் எங்களை ரஷ்யாவிற்கு அழைக்கும் போது ஏஜெண்டு போல் நடித்து வந்தார். நாங்கள் முற்றிலும் ஏமாற்றப்பட்டோம். ரஷ்யா செல்வதற்காக ஃபைசல் கான் எங்கள் ஒவ்வொருவரிடமும் தலா 3 லட்சம் ரூபாய் வசூலித்தார்” என்று நதீம் தெரிவித்தார்.
ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட பிறகு, எங்களிடம் இருந்து தொலைபேசிகளை வாங்கி வைத்து கொண்டனர். குடும்பத்துடன் பேச முடியவில்லை என்று சுஃபியான் விளக்கினார்.
“கடந்த வருடம் நான் துபாயில் இருந்து இந்தியா திரும்பினேன். டிசம்பர் மாதம் நான் ரஷ்யா சென்றேன். ஹைதராபாத்தில் இருந்து சென்னை சென்று, அங்கிருந்து ஷார்ஜா வழியாக ரஷ்யா சென்றடைந்தேன்"என்றார்.
போரில் பங்கேற்ற அனுபவங்களை சுஃபியான் விவரிக்கையில்,
“போரின் போது நாங்கள் அனைவரும் தனித்தனியாக அனுப்பப்பட்டோம். வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்படுவோம். ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும்போது ராணுவத்தினர் எங்கள் தொலைபேசிகளை எடுத்து கொள்வார்கள். எங்களால் யாரிடமும் பேச முடியாது'' என்றார்.
பிப்ரவரியில் பிபிசி நிருபர் உடனான உரையாடலின் போது ஏஜென்ட் ஃபைசல் கான், போன்களுக்கு அனுமதி இல்லை என்று ரஷ்ய அதிகாரிகள் முன்பே கூறியதாக தெரிவித்திருந்தார். யுக்ரேன் எல்லையில் இருக்கும் போது தொலைபேசிகளைப் பயன்படுத்தினால், அந்த சிக்னலை வைத்து ஆளில்லா விமானத்தை அங்கு ஏவ முடியும் என்றும் ரஷ்ய அதிகாரிகள் கூறியிருந்தனர்.
“25 நாட்கள் பயிற்சிக்குப் பிறகு என் வீட்டில் இருப்பவர்களுடன் பேச முடிந்தது. எங்கள் பெற்றோர்கள் மிகவும் கவலைப்பட்டனர். நடந்ததைச் சொன்னேன். அதன்பிறகு என்னை அங்கிருந்து அழைத்து வர முயற்சி செய்யத் தொடங்கினர்'' என்றார் அவர்.
“எங்கள் பயிற்சியின் ஒரு பகுதியாக AK 12, AK 74 மற்றும் கையெறி குண்டுகளைப் பயன்படுத்த கற்றுக் கொடுத்தனர். பயிற்சியில் கவனம் செலுத்தாவிட்டாலோ, சரியாகச் செய்யாவிட்டாலோ, துப்பாக்கியால் சுட்டு பயமுறுத்துவார்கள். அவர்கள் சொல்வதை செய்ய வேண்டும்.” என்று சுஃபியான் நினைவு கூர்ந்தார்.
காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 15 மணி நேரம் பணியில் இருந்ததாக அவர் தெரிவித்தார். சொன்ன வேலையைச் செய்யவில்லை என்றால் தண்டிக்கப்படுவோம் என்றார். ஆனால், என்ன மாதிரியான தண்டனைகள் என்று கேட்டபோது, சுஃபியனால் விவரிக்க முடியவில்லை.
'கண் முன்னே இறந்த நண்பர்'

ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய போது ஹைதராபாத், நாம்பள்ளியைச் சேர்ந்த அப்சன் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த ஹாமில் ஆகிய இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்
குஜராத்தைச் சேர்ந்த ஹாமில் ஆளில்லா விமான தாக்குதலில் தங்கள் கண் முன்னே கொல்லப்பட்டதாக ரஷ்யாவில் இருந்து திரும்பிய இளைஞர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
"பகல் மற்றும் இரவு எப்போதும் உயிருக்கு ஆபத்து இருக்கும். எங்களுடன் வந்த நண்பரை (ஹாமில்) இழந்தோம். அவர் எங்கள் கண்முன்னே இறந்தார். எங்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை,” என்று கலபுரிகியைச் சேர்ந்த முகமது சமீர் அகமது பிபிசியிடம் கூறினார்.
"என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சத்தில் நாங்கள் நாட்களைக் கழித்தோம்" என்று அவர் பிபிசியிடம் விளக்கினார்.

காட்டுக்குள் கடந்த நாட்கள்
ஃபைசல் கானால் ஏமாற்றப்பட்டவர்களில் கர்நாடகாவின் கலபுரிகியைச் சேர்ந்த சமீர் அகமதுவும் ஒருவர். ரஷ்யா செல்வது குறித்து பேசுகையில்,''டிசம்பர் 18ம் தேதி சென்னை சென்றிருந்தேன். அங்கிருந்து துபாய் வழியாக மாஸ்கோ செல்ல வேண்டியிருந்தது. 21ஆம் தேதி மாஸ்கோ சென்றடைந்தேன்” என்று விளக்கினார்.
"நாங்கள் அங்கு ராணுவத்தில் சேர்க்கப்பட்டோம். நாங்கள் சந்தித்த கஷ்டங்கள் மிகவும் அதிகம். குடிநீர் கிடைக்கவில்லை. உணவு கேட்டால் ஒரு நீண்ட தூர சந்தைக்கு கொண்டு செல்வார்கள். நாங்கள் இருந்த கிராமத்திலிருந்து வெகுதூரம் செல்ல வேண்டியிருந்தது. பல நேரம், காட்டிலேயே சாப்பிட்டு தூங்க வேண்டும் போல் இருந்தது'' என்றார்.
கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொரு இளைஞர் சையத் இல்யாஸ் ஹுசைனி பிபிசியிடம் பேசினார்.
“அங்கே தினமும் போர் நடந்து கொண்டிருந்தது. துப்பாக்கிகளும் குண்டுகளும் எப்பொழுதும் வெடித்துக் கொண்டே இருக்கும். மிகவும் பயமாக இருந்தது. நாங்கள் ரஷ்யாவிற்கு எப்படி சென்றோமோ அப்படியே திரும்புவோம் என்று வீட்டில் உள்ளவர்களுக்கு வாக்குறுதி அளித்தோம். அதனால் மிகுந்த பயத்துடன் நாட்களை கடத்தினோம்’’ என்றார்.
"நாங்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்த பிறகு, நாங்கள் இரண்டு மாதங்கள் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு பணிக்கப்பட்டோம். பின்னர், சுரங்கம் தோண்டும் பணி வழங்கப்பட்டது" என்று ஹுசைனி கூறினார்.
ரஷ்யா சென்ற பின்னர் தான் ராணுவத்தில் சேர வேண்டும் என்பது தெரிந்ததாகவும், ஆனால் அதற்கு முன்பு அந்த ஏஜெண்டுகள் தன்னிடம் சொல்லவில்லை என்றும் சையது இலியாஸ் ஹுசைனி கூறினார்.

45 இளைஞர்கள் விடுதலை
ரஷ்யாவில் சிக்கிய சில இளைஞர்களை மீட்க இந்திய அரசு கடுமையாக முயற்சி செய்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
செப்டம்பர் 12 ஆம் தேதி, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஷ்வால், ரஷ்யாவில் சிக்கியிருந்த 45 பேர் மீட்கப்பட்டதாக தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோதியின் ரஷ்யா பயணத்தின் போது, ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் இந்திய இளைஞர்களை திருப்பி அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டதாக ரந்தீர் ஜெய்ஷ்வால் அறிவித்தார்.
இந்த செயல்முறை துவங்கியதும் இளைஞர்கள் இந்தியா திரும்பினர்.
"நாங்கள் செப்டம்பர் 6 ஆம் தேதி யுக்ரேனின் எல்லையை விட்டு வெளியேறினோம். சுமார் 36 மணி நேரம் பயணம் செய்து மாஸ்கோவை அடைந்தோம். அங்கிருந்து கடந்த 10ம் தேதி இந்தியா புறப்பட்டோம். ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எங்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்" என்று சுஃபியான் கூறினார்.
எங்களுக்கு கடந்த நான்கைந்து மாதங்களாக சம்பளம் கூட வழங்கப்படவில்லை என கூறினார்.
'தெரிந்திருந்தால் அனுப்பி இருக்கவே மாட்டோம்'

ரஷ்யாவில் இருந்து நாடு திரும்பிய இளைஞர்களை பார்த்ததும் குடும்பத்தினர் உணர்ச்சிவசப்பட்டனர்.
ஷம்ஷாபாத் விமான நிலையமே உணர்ச்சிப்பூர்வமான தருணங்களால் நிறைந்தது. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். 'இறைவன் அருளால் மீண்டு வந்துள்ளோம்' என நாடு திரும்பியவர்கள் விளக்கினர்.
ரஷ்யாவுக்கு போரில் பணியமர்த்தப்படவிருப்பது பற்றி முன்கூட்டியே தெரிவிக்கப்படாமல் ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டதாக அந்த இளைஞர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
"ஒன்பது மாதங்களாக, நாங்கள் கடவுள் மேல் நம்பிக்கை வைத்து காத்திருந்தோம். கடந்த ஒன்பது மாதங்களாக அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான எங்கள் முயற்சிகள் பலனளித்துள்ளன. இந்திய அரசு இதை முன்னரே செய்திருந்தால், நாம்பள்ளியைச் சேர்ந்த அஃப்சானும், குஜராத்தைச் சேர்ந்த ஹாமிலும் நம்மிடையே இருந்திருப்பார்கள்" என்று சுஃபியானின் சகோதரர் கூறினார்.
கலபுரிகியைச் சேர்ந்த சையத் நவாஸ் அலி பிபிசியிடம் பேசினார். இவர் ரஷ்யாவில் இருந்து திரும்பிய சையத் இல்யாஸ் ஹுசைனியின் தந்தை. பிரதமர் மோதி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் தங்கள் மகன்களை அழைத்து வர உதவினர் என்றார்.
“அவர்கள் எதற்காக ரஷ்யா செல்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. மோசடி நடந்தது. இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் நாங்கள் எங்கள் பிள்ளைகளை அனுப்பி இருக்க மாட்டோம். இருப்பினும், கடவுள் எங்கள் பிள்ளைகளைக் காப்பாற்றிவிட்டார். எங்களுக்காக அரசு கடுமையாக உழைத்துள்ளது. எங்கள் பிள்ளைகளை அரசு பாதுகாப்பாக கொண்டு வந்துள்ளது என்று நவாஸ் அலி கூறினார்.
தங்களது ராணுவத்தில் பணிபுரிந்த பல இந்தியர்கள் சட்டப்பூர்வ விசா வைத்திருக்கவில்லை என்று புதுதில்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் முன்னதாக தெளிவுபடுத்தியது.
“ரஷ்யா வேண்டுமென்றே இந்தியர்களை தனது ராணுவத்தில் சேர்க்கவில்லை. இந்தப் போரில் அவர்கள் எந்தப் பங்கையும் வகிக்க மாட்டார்கள். இந்திய அரசுக்கு ரஷ்யா துணை நிற்கிறது. இந்தப் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம், ”என்று ரஷ்ய தூதரகம் ஜூலை மாதம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.
ஏஜென்ட் ஃபைசல் கான் யார்?
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தபோது, ஏஜென்ட் ஃபைசல் கானிடம் பிபிசி பேசியது.
அப்போது ஃபைசல் கான் கூறுகையில், `செக்யூரிட்டி ஹெல்பர்’ பணி என்று எங்கும் கூறவில்லை.
“நான் ராணுவ உதவியாளர் பணி என்று தெளிவாக சொன்னேன். எனது முந்தைய வீடியோக்களை நீங்கள் பார்க்கலாம். உதவியாளர் பணி குறித்து ரஷ்ய அதிகாரிகளிடமிருந்து வந்த தகவல்களும் எங்களிடம் உள்ளன. கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக இந்த வேலையில் இருக்கிறேன். இதுவரை பல்வேறு இடங்களில் சுமார் இரண்டாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளேன். அதற்கு ரூ.3 லட்சம் பெற்றேன். அவை அனைத்தும் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக வந்த பணம். இது கருப்புப் பணம் அல்ல" என்று துபாயில் இருந்து ஜூம் செயலி (Zoom) அழைப்பு மூலம் பிபிசியிடம் ஃபைசல் கான் விளக்கினார்.
பாதிக்கப்பட்டவர்கள் இந்தியாவை அடைந்த பிறகு, முகவர் ஃபைசல் கானை தொடர்பு கொள்ள பிபிசி மீண்டும் முயற்சித்தது. ஆனால், அவரை அணுக முடியவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












