உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களும் பத்திரமாக மீட்கப்பட்டது எப்படி?

உத்தராகண்ட் நிலச்சரிவு, 30 தமிழர்கள் மீட்பு

பட மூலாதாரம், Special Arrangement

படக்குறிப்பு, உத்தராகண்டிற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழர்கள்

உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. புனித தலங்களுக்கு சென்ற பக்தர்கள் பலரும் அருகே இருக்கும் ஆசிரமங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். தவாகாட் - தானக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கனமழை காரணமாக செப்டம்பர் 14 ஆம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால், தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் மேற்கொண்டு பயணிக்க இயலாமல் சிக்கித் தவித்து வந்தனர். அவர்கள் செப்டம்பர் ஒன்றாம் தேதி சென்னையில் இருந்து ஆதி கைலாஷ் பகுதிக்கு புனிதப் பயணம் சென்றவர்கள் ஆவர்.

தற்போது ஹெலிகாப்டர் மூலமாக அவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிபிசி தமிழிடம் பேசிய அவர்கள் என்ன கூறினர்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழிடம் பேசிய தமிழர்கள் கூறியது என்ன?

தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 பெண்கள் உட்பட 30 நபர்கள் உத்தராகண்டில் உள்ள ஆதி கைலாஷ் பகுதிக்கு புனிதப் பயணம் மேற்கொண்டனர். இவர்களுள் 28 பேர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள். இருவர் சீர்காழியை சேர்ந்தவர்கள்.

செப்டம்பர் 1ஆம் தேதி அன்று சென்னையில் இருந்து ரயில் மூலமாக உத்தராகண்ட் சென்ற அவர்கள், நிலச்சரிவு ஏற்பட்டதால் தவாகாட் பகுதியில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அனைவரும் ஆதி கைலாஷ் சென்று விட்டு திரும்புகையில், சாலையின் இருபுறங்களில் இருந்தும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மேற்கொண்டு எங்கும் நகர முடியாமல் தத்தளித்து வந்தனர். பின்னர், நாராயண ஆசிரமத்தில் அவர்கள் தஞ்சம் புகுந்தனர்.

பித்தோரகர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த ஆசிரமம் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மழை சற்று தணிந்த பிறகு, ஆசிரமத்தில் இருந்து தர்ச்சுலா என்ற இடத்தை நோக்கி சிற்றுந்தில் அவர்கள் சென்றனர். தவாகாட் பகுதிக்கு வந்த பிறகு அவர்களுக்கு மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

அவர்கள் நாராயண் ஆசிரமத்திற்கும் திரும்பி செல்ல இயலாத வகையில் அங்கும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு இருந்தது. சாலையில் விழுந்த பாறைகள், மண் மற்றும் கற்களை அகற்றி சாலை போக்குவரத்தை மீண்டும் துவங்க பல நாட்கள் ஆகலாம் என்று அறிவிப்பு வெளியான காரணத்தால் அவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

"நிலச்சரிவால், சாலையில் 10 கிலோமீட்டர் வரை பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதனை சரி செய்ய குறைந்தது 3 முதல் 4 நாட்கள் ஆகலாம் என்று தோன்றியது. ஆதனால் நாங்கள் பாதுகாப்பாக இருக்க போதி என்ற இடத்தில் தங்கினோம்", என்று இந்த குழுவை சேர்ந்த ஒருவரான சூரிய மூர்த்தி பிபிசியிடம் தெரிவித்தார்.

அங்கிருந்து உதவி வேண்டி தமிழக அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்றதாகவும் அவர் கூறினார்.

உத்தராகண்ட் நிலச்சரிவு, 30 தமிழர்கள் மீட்பு

பட மூலாதாரம், special arrangement

படக்குறிப்பு, உத்தராகண்ட் நிலச்சரிவு

மீட்புப் பணிகள் ஆரம்பம்

நடுவழியில் சிக்கிக் கொண்ட தமிழர்கள் செய்வதறியாது கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாருக்கு அலைபேசி மூலம் தகவலை தெரியப்படுத்தியுள்ளனர்.

அவர், பித்தோரகர் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு அங்கே சிக்கியுள்ள தமிழர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

அவர்களின் பாதுகாப்பு குறித்து பித்தோரகர் மாவட்ட ஆட்சியரிடம் சிபி ஆதித்யா பேசிய போது, "வானிலை நிலவரத்தைப் பொறுத்து அவர்களை ஹெலிகாப்டர் மூலம் சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்று தெரிவித்ததாக கூறியிருந்தார்.

தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட அறிவிப்பில், "நிலச்சரிவில் சிக்கியிருந்த தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார். ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், "அவர்களுக்கு அங்கு தேவையான அனைத்து வசதிகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து தர தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அவர்களை விரைவில் தமிழகம் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன", என்று கூறினார்.

தற்போது அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு தர்ச்சுலா என்ற இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கடலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உத்தராகண்ட் நிலச்சரிவு, 30 தமிழர்கள் மீட்பு

பட மூலாதாரம், MK Stalin / X

படக்குறிப்பு, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தராகண்டில் சிக்கிய தமிழர்களிடம் அலைபேசியில் உரையாடினார்

பாதிக்கப்பட்ட தமிழர்களிடம் பேசிய முதல்வர்

உத்தராகண்ட் நிலச்சரிவால் ஊர் திரும்ப முடியாமல் சிக்கியுள்ள தமிழர்கள் அனைவரையும் மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். அங்கு பாதுகாப்பாக உள்ள தமிழர்களில் ஒருவரான பராசக்தி அவர்களைத் தொடர்புகொண்டு பேசினேன். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்," என்று அவர் பதிவிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

*இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது