தோனியின் கைகளில் 5வது முறையாக ஐபிஎல் கோப்பை தவழுமா? பிளேஆஃப் கணக்கு என்ன சொல்கிறது?

சென்னை சூப்பர் கிங்ஸ்

பட மூலாதாரம், BCCI/IPL

    • எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஐ.பி.எல். தொடரின் மிக முக்கியமான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

பிளேஆஃப் சுற்றை நோக்கி வேகமாக நடைபோட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், கடந்த போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிராக அடைந்த தோல்வியால் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது.

சென்னை அணி சிக்கலின்றி பிளேஆஃப் சுற்றில் நுழையுமா? அல்லது கடைசிப் போட்டி வரை காத்திருந்து மற்ற அணிகளின் முடிவைப் பொறுத்து அந்த வாய்ப்பைப் பெறுமா?

இன்றைய போட்டியில் கிடைக்கும் முடிவைப் பொருத்தது இது தெரிய வரும்.

ஐ.பி.எல். தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. இன்னும் 4 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் மட்டுமே பிளேஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது.

13 போட்டிகளில் 9 வெற்றிகள் மூலம் 18 புள்ளிகளைச் சேர்த்துள்ள அந்த அணி முதலிடத்தையும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிட்டது. அதேநேரத்தில், டெல்லி கேபிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்டன.

பிளேஆஃப் சுற்றில் எஞ்சியுள்ள 3 இடங்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகிய 6 அணிகள் போட்டியிடுகின்றன.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதுமே கிரிக்கெட் ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள மகேந்திர சிங் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 13 போட்டிகளில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வி மற்றும் லக்னௌவுக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் கிடைத்த ஒரு புள்ளியுடன் சேர்த்து 15 புள்ளிகள் பெற்றுள்ளது.

லக்னௌ சூப்பர் ஜெயென்ட்ஸ் அணியும் 15 புள்ளிகள் பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி இரண்டாவது இடத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொருத்தவரை, அடுத்து வரும் போட்டிகளின் முடிவு அடிப்படையில் இரண்டாவது, மூன்றாவது அல்லது நான்காவது இடத்தைப் பிடித்து பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறலாம்.

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் தோல்வியடைந்து, மற்ற போட்டிகளின் முடிவுகளும் சாதகமாக அமையாத பட்சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆஃபுக்கு முன்னேற முடியாமலும் போகலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னுள்ள சாத்தியமான வாய்ப்புகளை விரிவாகப் பார்க்கலாம்.

IPL CSK playoff

பட மூலாதாரம், Getty Images

முதல் தகுதிச்சுற்றில் நுழைய...

லீக் சுற்றில் புள்ளிகள் அடிப்படையில் குஜராத் டைட்டன்சுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பிடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெறவேண்டும்.

அதேநேரத்தில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியிடம் தோல்வியடைய வேண்டும். அப்படி நடந்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிக்கலின்றி இரண்டாவது இடத்தைப் பிடித்துவிடும்.

இரண்டாவதாக, சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னௌ அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் இரு அணிகளுமே 17 புள்ளிகளைப் பெற்றிருக்கும்.

அப்போது ரன் ரேட் அடிப்படையில் இரண்டாவது இடம் யாருக்கு என்பது தீர்மானிக்கப்படும். சென்னை அணி தனது ரன் ரேட்டை சிறப்பாகப் பராமரிக்கும் பட்சத்தில் தற்போதுள்ள இரண்டாவது இடத்தில் அப்படியே தொடரலாம்.

லீக் சுற்றில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் பட்சத்தில், இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வரும் செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்குச் சந்திக்கலாம்.

இந்தப் போட்டி சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் என்பது சிஎஸ்கே அணிக்குச் சாதகமாக இருக்கும். அதன்மூலம் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவது சி.எஸ்.கே.வுக்கு எளிதாகலாம்.

IPL CSK playoff

பட மூலாதாரம், Getty Images

சிஎஸ்கே மூன்றாவது இடம் பிடிக்க...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய போட்டியில் வென்றாலும், தோற்றாலும் புள்ளிகள் அடிப்படையில் மூன்றாவது இடம் பிடிக்க வாய்ப்புகள் உள்ளன. அது எப்படி?

முதலாவது, சென்னை, லக்னௌ அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் வெற்றிபெறும் பட்சத்தில், ரன் ரேட் அடிப்படையில் பின்தங்க நேரிட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்தில் வரும்.

இரண்டாவதாக, சென்னை அணி இன்றைய போட்டியில் தோற்று, லக்னௌ தனது கடைசி லீக் ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் லக்னௌ அணி இரண்டாவது இடத்தைப் பிடிப்பதில் சிக்கல் இருக்காது.

அதேநேரத்தில், ஆர்சிபி, மும்பை அணிகள் தங்களது கடைசி லீக் ஆட்டங்களில் தோற்றால் அந்த அணிகள் 14 புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கும். அந்தச் சூழலில் 15 புள்ளிகளுடன் இருக்கும் சென்னை அணி மூன்றாவது இடத்தைப் பிடிக்கும்.

மூன்றாவதாக, சென்னை, லக்னௌ, மும்பை, ஆர்சபி ஆகிய 4 அணிகளுமே தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் தோல்வியடையும் பட்சத்தில், சென்னை, லக்னௌ அணிகள் தலா 15 புள்ளிகள் பெற்றிருக்கும். அப்போது ரன் ரேட்டில் பின்தங்கினால் சென்னை அணி மூன்றாவது இடத்திற்கு வரும்.

நான்காவதாக, சென்னை, லக்னௌ அணிகள் தங்களது கடைசி ஆட்டத்தில் தோற்று, ஆர்சிபி அல்லது மும்பை அணிகளில் ஒன்று தனது கடைசி ஆட்டத்தில் வெல்லும் பட்சத்திலும் இது நடக்கும்.

அதாவது, ஆர்சிபியோ, மும்பையோ கடைசி ஆட்டத்தில் வென்றால் 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடிக்கும். 15 புள்ளிகள் பெற்றிருக்கும் சென்னை, லக்னௌ அணிகளில் நிகர ரன் ரேட் அடிப்படையில் மூன்றாவது இடம் பிடிக்கும். அந்த வாய்ப்பு சென்னைக்கு கிடைக்கும்.

IPL CSK playoff

பட மூலாதாரம், Getty Images

கடைசி அணியாக பிளேஆஃபில் நுழைய...

முதலிடம் பிடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டு விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தையும் விட்டுவிட்டால் பிளே ஆஃப் செல்ல கடைசியாக ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே எஞ்சியுள்ளது.

அதற்கு மற்ற போட்டிகளின் முடிவுகள் தெரியும் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். அந்தச் சூழலை விளக்கமாகப் பார்க்கலாம்.

சென்னை, லக்னௌ அணிகள் தங்களது கடைசி ஆட்டத்தில் தோற்று, ஆர்சிபியும், மும்பை இந்தியன்சும் தங்களது கடைசி ஆட்டத்தில் வெல்வதாக வைத்துக் கொள்வோம்.

அத்தகைய சூழலில், ஆர்.சி.பி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் 16 புள்ளிகளுடன் இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்துவிடும். பிளேஆஃபில் நுழைய, எஞ்சியுள்ள ஒரே இடமான நான்காவது இடத்திற்கு 15 புள்ளிகளுடன் இருக்கும் சென்னை, லக்னௌ அணிகளுக்கு இடையே போட்டி ஏற்படும்.

அப்போது ரன் ரேட்டில் லக்னௌ சூப்பர் ஜெயென்ட்ஸ் அணியைக் காட்டிலும் மேலாக இருக்கும் பட்சத்தில் சென்னை அணி நான்காவது இடத்தைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறலாம்.

அவ்வாறான சூழலில், லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியைக் காட்டிலும் ரன் ரேட்டில் பின்தங்கியிருக்கும் பட்சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடரைவிட்டே வெளியேறும் சூழல் ஏற்படும். சென்னை அணியின் கோப்பைக் கனவும் தகர்ந்துவிடும்.

IPL CSK playoff

பட மூலாதாரம், Getty Images

சிஎஸ்கே 5வது முறையாக கோப்பையை வெல்லுமா?

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இணையாக, சென்னை அணியும் ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெல்வது சிறப்பான ஒன்றாக அமையும்.

அது நடந்து, புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பிடித்தால், இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்றை குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சொந்த மண்ணில் விளையாடலாம். அதில் வெற்றி பெறும் பட்சத்தில் நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறலாம்.

ருதுராஜ், டெவோன் கான்வே, ரஹானே, ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் கேப்டன் தோனியின் அதிரடியும் ஒன்றுசேரும் அதேநேரத்தில், பந்துவீச்சும் சிறப்பாக அமையும் பட்சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக ஐ.பிஎல். கோப்பையை உச்சி முகரும்.

கேப்டன் தோனி கைகளில் ஐபிஎல் கோப்பை தவழும்போது ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: