பஞ்சாப் பவுலர்களை வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால், படிக்கல் - ராஜஸ்தானுக்கு ப்ளேஆஃப் வாய்ப்பு எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஐபிஎல் சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்னும் தன்னை உயிர்ப்புடன் வைத்துள்ளது. ஆனால், பஞ்சாப் கிங்ஸ் அணி, ஐபிஎல் தொடரிலிருந்து தொடர்ந்து 7வது முறையாக ப்ளே ஆஃப் செல்லாமல் வெளியேறியது.
தரம்ஷலாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 66வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் சேர்த்தது. 188 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 பந்துகள் மீதம் இருக்கையில் இலக்கை அடைந்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தோல்வி
பஞ்சாப் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஷிகர் தவண்(17), பிரப்சிம்ரன் சிங்(2) அதர்வா(19) லிவிங்ஸ்டோன்(9) ஆகியோர் சொதப்பலாக பேட் செய்து ஏமாற்றினர்.
6.3 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ப்ளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறவேண்டும் என்ற நோக்கில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஷாட்களை ஆட முயன்றுதான் விக்கெட்டுகளை தவறவிட்டனர்.
தரம்ஷலா ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றது, இதில் சற்று பொறுமையாக நின்று, நிதானமாக ஆடியிருந்தால், நல்ல ஸ்கோர் செய்திருக்கலாம்.
நடுவரிசையில் களமிறங்கிய ஜிதேஷ் ஷர்மா, சாம் கரன் கூட்டணி அணியை சரிவிலிருந்து மீட்டனர். இந்த சீசன் முழுவதும் பஞ்சாப் அணிக்கு ஜிதேஷ் சர்மா நல்ல கேமியோ ஆடி ஸ்கோர் செய்துள்ளார். விக்கெட் சரிவைத் தடுக்கும் வகையில் மந்தமாகவே ஆடினர். 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் வரும்போது இருவரும் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரி மட்டுமே அடித்திருந்தனர்.

பட மூலாதாரம், BCCI/IPL
ஜிதேஷ், கரன், ஷாருக்கான் அதிரடி
அதன்பின் ஆடம் ஸம்பா, சாஹல், சைனி பந்துவீச்சை குறிவைத்து அடிக்கத் தொடங்கினர். சைனி வீசிய 14வது ஓவரில் ஜிதேஷ் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசினார்.
ஜிதேஷ் 44 ரன்கள் சேர்த்த நிலையில், சைனி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 5வது விக்கெட்டுக்கு சாம்கரன், சைனி இருவரும் சேர்ந்து 64 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
18 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 141 ரன்கள்தான் சேர்த்திருந்தது. ஆனால், கடைசி இரு ஓவர்களில் ஷாருக்கான், சாம் கரன் சேர்ந்து சாஹல், போல்ட் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர்.
சாஹல் வீசிய 19வது ஓவரில் சாம்கரன், ஷாருக்கான் இருவரும் சிக்ஸர், பவுண்டரிகளா விளாசி 28 ரன்கள் சேர்த்தனர். டிரன்ட் போல்ட் வீசிய கடைசி ஓவரிலும் 18 ரன்களை சேர்த்தனர். கடைசி இரு ஓவர்களில் மட்டும் 46 ரன்களை விளாசி அந்த அணி பெரிய ஸ்கோரை எட்ட சாம் கரன், ஷாருக்கான் உதவினர்.

பட மூலாதாரம், BCCI/IPL
ஜெய்ஸ்வால், படிக்கல் அரைசதம்
ஜெய்ஸ்வாலுக்கு இந்த சீசன் அற்புதமாக மாறிவிட்டது. கடந்த போட்டியில் செய்த தவறுகளைத் திருத்தி, ஷாட்களில் கவனம் செலுத்தியதால், இயல்பான ஆட்டத்துக்கு ஜெய்ஸ்வால் திரும்பினார். பட்லர் தொடக்கத்திலேயே டக்அவுட்டில் வெளியேறினார். இதனால் ஜெய்ஸ்வால், படிக்கல் ஆட்டத்தை வழிநடத்தினர். இருவரும் பஞ்சாப் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். பவர்ப்ளேயில் 57 ரன்கள் சேர்த்தது ராஜஸ்தான் அணி.
8.1 ஓவர்களில் சாம் கரன், ரபாடா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சேர்ந்து 73 ரன்கள் வாரி வழங்கினர். ஜெய்ஸ்வால் நிதானமாக ஷாட்களை ஆட, படிக்கல் சரவெடியாக மாறி, பஞ்சாப் பந்துவீச்சாளர்களின் பந்துகளை பறக்கவிட்டார். 29 பந்துகளில் படிக்கல் 51 ரன்கள்(3சிக்ஸர்,5பவுண்டரி) அடித்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேப்டன் சாம்ஸன் 2 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.
ஹெட்மயர், ஜெய்ஸ்வால் ஜோடி அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். ஜெய்ஸ்வால் 35பந்துகளில் அரைசதம் அடித்து 50 ரன்களில் எல்லிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஹெட்மயர், ரியான் பராக் தலைமீது அணியை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு விழுந்தது. கடைசிநேரத்தில் ஹெட்மயர் ஷாட்களை ஆட முயன்றபோது, ஷாட்கள் சரியாக மீட் ஆகவில்லை. கடைசி 3 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 33 ரன்கள் தேவைப்பட்டன. 19 ஓவருக்குள் சேஸிங் செய்தால் ஆர்சிபி அணியின் நிகர ரன்ரேட்டைவிட அதிகரிக்கும் என்பதால், ஹெட்மயர் பரபரப்புடன் இருந்தார்.
ரபாடா வீசிய 18-வது ஓவரில் ரியான் பராக் இரு சிக்ஸர்களை விளாசி சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். சாம் கரன் வீசிய 19-வது ஓவரில் ஹெட்மயர் இரு பவுண்டரிகளை விளாசி 46 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. ஜூரேல், போல்ட் களத்தில் இருந்தனர்.
ராகுல் சாஹர் வீசிய கடைசி ஓவரில் முதல் பந்தில் ஜூரேல் 2 ரன்களும், 2வது பந்தில் ஒரு ரன்னும் எடுத்தார். போல்ட் 3வது பந்தில் ஒரு ரன்எடுத்து ஜூரேலிடம் ஸ்ட்ரைக்கை கொடுத்தார். 4வது பந்தில் ஜூரேல் ஸ்ட்ரைட்டில் இறங்கிவந்து சிக்ஸர் விளாச ராஜஸ்தான் அணி வென்றது. ஜூரைல் 10 ரன்களுடனும், போல்ட் ஒரு ரன்னுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பஞ்சாப் பந்துவீச்சாளர்கள் தொடக்கத்தில் நன்றாகப் பந்துவீசி ராஜஸ்தானுக்கு நெருக்கடி அளித்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆனால், அதை தொடர்ந்து எடுத்துச் செல்லத் தவறினர். நாதன் எல்லீஸ், சாஹர், இருவரைத் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் 40 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர்.

பட மூலாதாரம், BCCI/IPL
ராஜஸ்தானை காத்த ஹீரோக்கள்
யஷஸ்வி ஜெய்ஸ்வால்(51), தேவ்தத் படிக்கலின் கேமியோ(50), சிம்ரன் ஹெட்மயர்(44) ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். ஆட்டநாயகன் விருது தேவ்தத் படிக்கலுக்கு வழங்கப்பட்டது.
ராஜஸ்தான் வீரர் ஜெய்ஸ்வால் ஐபிஎல் தொடரில் ஒருசீசனில் 600 ரன்களை கடந்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார்.
தேசிய அணிக்குத் தேர்வாகாமல் ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை குவித்த ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஷின் 15 ஆண்டுகால சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
பட்லரின் டக்அவுட் சாதனை
கேப்டன் சஞ்சு சாம்ஸன், ஜாஸ் பட்லர் ஆகியோர் பேட்டிங்கில் சொதப்புவது தொடர்கிறது. அதிலும் ஜாஸ் பட்லர் தன்னுடைய 85 இன்னிங்ஸ்களுக்கு பிறகுதான் முதல் டக்அவுட்டை சந்தித்தார்.
ஆனால், தற்போது, ஐபிஎல் தொடரில் கடந்த 10 இன்னிங்ஸில் 5 முறை பட்லர் டக்அவுட் ஆகியுள்ளார்.

பட மூலாதாரம், BCCI/IPL
“எங்களின் நிலை அதிர்ச்சியாக இருக்கிறது”
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்ஸன் கூறுகையில், “நிகர ரன்ரேட்டை பராமரிக்க வேண்டிய நோக்கில் ஹெட்மயர் ஆட்டம் சிறப்பானது. 19 ஓவருக்குள் இலக்கை அடைந்துவிடுவோம் என நம்பினோம். ஆனால் முடியவில்லை. புள்ளிப்பட்டியலில் எங்கள் அணி இருக்கும் இடம் சற்று அதிர்ச்சியாக இருக்கிறது.
கடந்து வந்த பாதையைப் பார்த்தால் ஏராளமான அம்சங்களை ஆலோசிக்க வேண்டியுள்ளது. இளம் வயதில் ஜெய்ஸ்வால் ஆட்டம் பிரமிப்பாக இருக்கிறது, இதேநிலையில் ஜெய்ஸ்வால் ஆடினால் 100 டி20 போட்டிகளில் விளையாடுவார்,” எனத் தெரிவித்தார்.
ராஜஸ்தானுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு
ப்ளே ஆஃப் வாய்ப்பில் இன்னும் 3 இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் 6 அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் ப்ளே ஆஃப் சுற்று முடிந்துவிடும் நிலையில் அடுத்துவரும் ஒவ்வோர் ஆட்டமும் முக்கியமானவை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்தவரை, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் தோல்வியில்தான் அந்த அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறது. இதனால், கடைசிவரை ராஜஸ்தான் அணி காத்திருக்க வேண்டும்.
ஆர்சிபி தனது கடைசி லீக்கில் குஜராத் டைட்டன்ஸ் அணி ஒருவேளை 181 ரன்கள் சேர்த்திருந்தால், அதை சேஸிங் செய்யும்போது அதற்கு அதிகமாக 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்க வேண்டும். அவ்வாறு தோற்றால் ஆர்சிபி நிகர ரன்ரேட் தற்போது 0.180 என பிளஸில் இருப்பது குறையும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது 0.148 என பிளசில் இருப்பதால், ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்பு கிடைக்கும். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி லீக்கில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடமும் தோற்க வேண்டும். ஏற்கெனவே மும்பை இந்தியன்ஸ் அணியின் நிகர ரன்ரேட் மைனஸில் இருப்பதால், தானாகவே போட்டியிலிருந்து வெளியேறும்.
கொல்கத்தா அணி தனது கடைசி லீக்கில் லக்னெள அணிக்கு எதிராக 180 ரன்களுக்கு மேல் சேர்த்து 102 ரன்கள் வித்தியாசத்தில் வெல்லும் பட்சத்தில் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பு கிடைக்கும்.
அதேநேரம், பஞ்சாப் கிங்ஸ் அணி 12 புள்ளிகளுடன் ஐபிஎல் தொடரிலிருந்து தொடர்ந்து 7வது முறையாக ப்ளேஆஃப் சுற்றுக்குள் செல்லாமல் வெளியேறியது. இதன் மூலம் டெல்லி கேபிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் வெளியேறியுள்ளன.

பட மூலாதாரம், BCCL/IPL
சிஎஸ்கேவுக்கு கட்டாய வெற்றி
சிஎஸ்கே, லக்னெள அணிகள் தலா 15 புள்ளிகளுடன் சமமாக இருப்பதால், இரு அணிகளுக்கும் தங்களின் கடைசி லீக் ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
இதில்வெற்றி பெறும் அணி ப்ளே ஆஃப் சுற்றில் 2வது இடத்தைப் பெறும். கடைசி போட்டியின் முடிவு வரை 15 புள்ளிகள் எடுத்த அணி காத்திருக்க வேண்டும்.
ஒருவேளை ஆர்சிபி, மும்பை ஆகிய அணிகள் தலா 16 புள்ளிகள் பெறும்பட்சத்தில் 15 புள்ளிகளுடன் இருக்கும் அணி ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறும்.
ஆதலால், லக்னெள, சிஎஸ்கே அணிகளுக்கு கட்டாய வெற்றி தேவை. ஒருவேளை சிஎஸ்கே, லக்னெள அணிகள் வென்றால், நிகர ரன்ரேட் பார்க்கப்படும்.
சிஎஸ்கே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வென்றால், லக்னெள முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு மேல் சேர்த்து, கொல்கத்தா அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.
இவ்வாறு நடந்தால், லக்னெள அணியின் நிகர ரன்ரேட் அதிகரித்து, ப்ளே ஆஃப்பில் 2வது இடத்தைப் பிடிக்கலாம்.
அதேநேரம், ஆர்சிபி அணி தோல்வி அடைந்து, மும்பை அணி வென்றால், மும்பைக்கு ப்ளே ஆஃப் சுற்றில் வாய்ப்புக் கிடைக்கும். இரு அணிகளும் வென்றால், நிகர ரன்ரேட் துருப்புச் சீட்டாக மாறும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












