இஸ்ரேல் சென்ற உத்தரபிரதேசம், ஹரியாணா தொழிலாளர்களின் நிலை என்ன? புதிதாக தேர்வானவர்கள் கூறுவது என்ன?

இஸ்ரேல்

பட மூலாதாரம், NAND KUMAR

படக்குறிப்பு, ஜகதீஷ்பூரை சேர்ந்த விஜய் குமாரும் இஸ்ரேல் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • எழுதியவர், பிரவீன் குமார்
    • பதவி, பிபிசி இந்திக்காக

இரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றத்தை கருத்தில் கொண்டு இந்திய அரசு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இந்திய மக்கள் மறு அறிவிப்பு வரும் வரை இரான் மற்றும் இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு பயணம் செய்வதற்கு இந்திய அரசு எந்த தடையும் விதிக்கவில்லை. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிமக்கள் பயணத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அரசின் இந்த அறிவிப்பிற்கு பிறகு வேலைக்காக இஸ்ரேலுக்குச் செல்ல இருந்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தற்போதைய சூழலில் அவர்களுக்கு பயணம் செய்ய அனுமதி வழங்கப்படாது.

ஏப்ரல் 15 ஆம் தேதி விமானம் மூலம் இஸ்ரேலுக்கு செல்லவிருந்த உத்தரபிரதேச இளைஞர்களுக்கு சனிக்கிழமை வாட்ஸ்அப் மூலம் ஒரு செய்தி வந்தது. அதில் 'வெளியுறவு அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களின்படி இஸ்ரேலுக்கு அனைத்து வகையான பயணமும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் கிடைக்கும் வரை காத்திருக்கவும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் அந்த இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஒருபுறம் போர் பயம் காரணமாக, குறித்த நேரத்தில் பயணம் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டிருப்பது ஒருவிதத்தில் அவர்களுக்கு நிம்மதி அளிக்கிறது. ஆனால் மறுபுறம் நல்ல வருமானம் பெறும் வாய்ப்பு தவறிவிடுமோ என்று அவர்கள் வருந்துகின்றனர்.

இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல் செல்லவிருந்த இந்திய தொழிலாளர்கள் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

'முன்னால் கிணறு, பின்னால் பள்ளம்' என்ற நிலைமை

இந்த இளைஞர்கள் டிக்கெட் மற்றும் விசாவுக்காக செலவிட்ட பணம் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 'முன்னால் கிணறு, பின்னால் பள்ளம்' என்று சொல்லக்கூடிய நிச்சயமற்ற நிலை, இந்த இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு முன்னால் எழுந்துள்ளது.

வெள்ளிக்கிழமை பயண ஆலோசனை வெளிவருவதற்கு முன் பிபிசி இந்தி, உத்தரபிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த சில இளைஞர்களிடம் பேசியது. அவர்கள் இஸ்ரேலுக்குச் செல்ல தயாராகிக்கொண்டிருந்தனர். இப்போது அரசின் புதிய அறிவிப்பு வெளியாகும் வரை இந்த இளைஞர்கள் காத்திருக்க வேண்டும்.

ஜகதீஷ்பூர் கிராமம் உத்தரபிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத் தலைமையகத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இஸ்ரேல் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அந்த இளைஞர்களில் ஒருவர் அஜீத் சிங். அவரை சந்திப்பதற்காக நாங்கள் ஜகதீஷ்பூருக்குச் சென்றபோது, அவர் ஒரு வீட்டில் கட்டுமானத் தொழிலாளியாக வேலை செய்வதைக் கண்டோம்.

அஜீத் தனது கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளாக கொத்தனாராக வேலை செய்து வருகிறார். இந்த வேலை மூலம் அவரது குடும்பம் நடக்கிறது.

"இது போன்ற வேலை தினமும் கிடைக்காது. கிடைக்கும் வேலையைப் பொறுத்து மாதம் 10,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். இவ்வளவு பணம் வீட்டுச் செலவுக்கு போதுமானதாக இல்லை" என்கிறார் 10வது வகுப்பு வரை படித்துள்ள அஜீத்.

இஸ்ரேல் செல்லவிருந்த அஜீத் கடந்த ஆண்டு வரை அந்த நாட்டின் பெயரைக் கூட கேட்டதில்லை.

அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தொடங்கிய பிறகு முதன்முறையாக செய்திகளில் இஸ்ரேலின் பெயரை அவர் கேட்டார்.

"குடும்ப சூழ்நிலை காரணமாக உயிரைப் பணயம் வைத்து இஸ்ரேலுக்குச் செல்கிறேன். எந்த நாட்டிற்குச் செல்கிறேன், அங்கு ஆபத்து நேரிடுமா என்று நான் கவலைப்படவில்லை" என்கிறார் அவர்.

குடும்பத்திற்காக பணம் சம்பாதிப்பதே முக்கியம் என்று கூறும் அஜீத், “இங்கே வேலை வாய்ப்பு அவ்வளவு அதிகம் இல்லாதபோது அரசு கண்டிப்பாக வெளியூர் செல்ல ஏற்பாடு செய்யும்” என்று கூறினார்.

இஸ்ரேல்

பட மூலாதாரம், NAND KUMAR

படக்குறிப்பு, தனது குடும்பத்துடன் அஜீத் சிங்

அரசின் ஏற்பாடுகள் பற்றி குடும்பத்தினர் கூறுவது என்ன?

அஜீத் சிங்குடனான உரையாடலின் போது அருகில் அமர்ந்திருந்த மனைவி ஃபூலா தேவியின் கண்களில் தொடர்ந்து கண்ணீர் வழிந்தது. பேசும்போது அவரது தொண்டையும் அடைத்தது.

"அவர் போகவேண்டும் என்று நான் விரும்பவில்லை. போகவேண்டாம் என்று பலமுறை சொல்லியும் அவர் சம்மதிக்கவில்லை. குடும்ப நலன் கருதி அவர் செல்வதே சரியாக இருக்கும் என்று இப்போது நான் என் மனதை தேற்றிக்கொண்டேன்,” என்றார் அவர்.

அஜீத் மட்டும் அல்ல. இவருடைய தம்பி தன்ராஜும் ப்ளாஸ்டரிங் வேலைக்காக இஸ்ரேல் செல்கிறார்.

உத்தரபிரதேச அரசு செய்துவரும் ஏற்பாடுகளில் தன்ராஜ் சற்று அதிருப்தியாக காணப்பட்டார்.

விண்ணப்பித்தபோது அங்கு செல்ல பணம் வசூலிக்கப்படாது என்று கூறப்பட்டது. ஆனால் பின்னர் டிக்கெட் மற்றும் விசாவிற்கு 66,800 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டியிருந்தது என்றார் அவர்.

போருக்கு மத்தியில் தனது மகன்கள் இஸ்ரேலுக்குச் செல்வது சரியென்று அவர்களின் தந்தை சாரதா சிங் கருதவில்லை. ஆனால் அரசு செய்த ஏற்பாடுகளில் அவர் திருப்தி அடைந்துள்ளார்.

"இங்கே தினமும் வேலை கூட கிடைக்காது. இரண்டு நாள் வேலை கிடைத்தால் பத்து நாட்கள் கிடைக்காது. அங்கே குறைந்த பட்சம் தினமும் வேலை கிடைக்க்கும். பணமும் ஓரளவு நன்றாக இருக்கிறது" என்கிறார் அவர்.

ஒரு வீட்டில் இருவர் தேர்வு செய்யப்பட்டதாக செய்தி வெளியானால் அவர்களில் ஒருவரின் தேர்வு ரத்து செய்யப்படலாம் என்ற அச்சத்தில், அஜீத் மற்றும் தன்ராஜ் இருவரும் தாங்கள் சகோதரர்கள் என்பதை வெளிப்படுத்துவதைத் தவிர்த்தனர்.

இஸ்ரேல்

பட மூலாதாரம், NAND KUMAR

படக்குறிப்பு, கூலி வேலை செய்யும் அஜீத் மற்றும் தன்ராஜ்

இஸ்ரேலுக்கு ஏன் இவ்வளவு தொழிலாளர்களின் தேவை உள்ளது?

இஸ்ரேலுக்கு இந்தியா மற்றும் சீனாவில் இருந்து சுமார் 70 ஆயிரம் தொழிலாளர்கள் தேவைப்படுவதாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஒரு அறிக்கை கூறியது. ஏனெனில் காஸா போர் தொடங்கிய பின்னர் அங்கு கட்டுமானத் துறையில் பணிபுரியும் ஆட்களுக்கு கடுமையான பற்றாக்குறை உள்ளது.

இஸ்ரேல் அங்கு பணிபுரியும் 80 ஆயிரம் பாலத்தீனர்களுக்கு நுழைவுத்தடை விதித்ததால் இந்த நிலைமை ஏற்பட்டது. இப்போது இஸ்ரேலுக்கு இந்தத்துறையில் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

இந்திய அரசுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின்படி, ப்ளாஸ்டரிங் வேலை, செராமிக் டைலிங், பில்டிங் ஃபிரேம்வொர்க், இரும்பு வெல்டிங் ஆகியவற்றில் திறமையான தொழிலாளர்கள் ஸ்க்ரீனிங் செய்யப்பட்ட பிறகு இஸ்ரேலுக்கு அனுப்பப்பட வேண்டும்.

இஸ்ரேலை சேர்ந்த குழு இந்த இளைஞர்களை சோதனை செய்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் உத்தரபிரதேசம் மற்றும் ஹரியாணாவில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இஸ்ரேல்

பட மூலாதாரம், NAND KUMAR

படக்குறிப்பு, இஸ்ரேல் செல்வதற்கு இந்திய தொழிலாளர்களிடம் ஸ்க்ரீனிங் செய்யப்படுகிறது.

10,000 இந்தியத் தொழிலாளர்கள் இஸ்ரேலுக்குச் செல்கிறார்கள்

ஸ்க்ரீனிங்கில் சுமார் 14 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்டனர். அதில் 9145 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர் என்று லக்னோவில் உள்ள அலிகஞ்ச் ஐடிஐயின் முதல்வர் ராஜ்குமார் யாதவ் கூறினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த தொழிலாளர்களுக்கு பணிக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 2176 தொழிலாளர்கள் இஸ்ரேல் செல்ல தேர்வு செய்யப்பட்டனர்.

உத்தரபிரதேசத்திற்கு முன்பு ஹரியாணா மாநிலத்தில் இருந்து 530 தொழிலாளர்கள் கடந்த வாரம் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர். சனிக்கிழமை காலை பிபிசி அசோசியேட் பத்திரிக்கையாளர் சத் சிங் இஸ்ரேலை அடைந்த இரண்டு இளைஞர்களிடம் பேசினார். தாங்கள் 'பாதுகாப்பாக இருப்பதாகவும், வேலை செய்யத் தொடங்கிவிட்டதாகவும், கவலைப்படத் தேவையில்லை' என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஹரியாணாவின் சோனிபத் மாவட்டத்தைச் சேர்ந்த சர்வீன் மோர் என்ற இளைஞரிடம் சத் சிங், ஜூம் மூலம் பேசினார்.

"இங்கு எல்லாம் நன்றாக உள்ளது. எனக்கு வேலை கிடைத்துவிட்டது. சாப்பாட்டு செலவுக்கு கம்பெனி பணம் கொடுத்தது. ஹோட்டல் போல ஒரு ரூம் உள்ளது. பாதுகாப்பு பயிற்சியும் கொடுக்கப்பட்டது. எதாவது பிரச்சனை வந்தால் பதுங்கு குழிக்குள் செல்ல அறிவுறுத்தியுள்ளனர்,” என்று அவர் சொன்னார்.

அதே சமயம் யமுனாநகரில் இருந்து இஸ்ரேல் சென்ற இளைஞர் மகேஷ், “நாங்கள் அனைவரும் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறோம்” என்றார்.

எனினும் இஸ்ரேல் சென்றுள்ள ஹரியாணா இளைஞர்களின் குடும்பத்தினர் கவலையாக உள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தில் இருந்து 238 தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் முதல்கட்டமாக 187 இளைஞர்கள் அங்கு செல்லவிருந்தனர். ஆனால் தற்போது அவர்கள் அனைவரும் மேலதிக தகவல் வரும்வரை காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த தொழிலாளர்கள் அனைவரும் அலிகஞ்ச் ஐடிஐயில் ப்ளாஸ்டெரிங், பீங்கான் டைலிங், இரும்பு வளைத்தல் மற்றும் கட்டிட பிரேம் ஒர்க் (ஷட்டரிங் கார்பென்டர்) ஆகியவற்றுக்கான ஸ்க்ரீனிங்கிற்கு பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டனர். உடல் நல சோதனை மற்றும் போலீஸ் சரிபார்ப்புக்குப் பிறகு அவர்கள் இஸ்ரேல் செல்வது முடிவானது.

ஜகதீஷ்பூரைச் சேர்ந்த மற்றொரு இளைஞரான ரஞ்சித்தை சந்தித்தோம். இரும்பு வெல்டிங் பணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இஸ்ரேல்

பட மூலாதாரம், NAND KUMAR

படக்குறிப்பு, ஜகதீஷ்பூரை சேர்ந்த ரஞ்சித்தும் இஸ்ரேல் செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

"நல்ல பணம் கிடைக்கும் என்று நம்புகிறேன்"

23 வயதான ரஞ்சித் இஸ்ரேலுக்கு செல்ல மிகவும் உற்சாகமாக இருந்தார். ரஞ்சித் ஏப்ரல் 15-ஆம் தேதி இஸ்ரேலுக்கு செல்லவிருந்தார். அவருடைய எல்லா ஆவண வேலைகளும் பூர்த்தியாகிவிட்டன.

மாதந்தோறும் கிடைக்கப்போகும் சம்பளம் 1,37,250 ரூபாய் பற்றி சொல்லும் போது ரஞ்சித்தின் கண்களில் ஒரு ஒளி தெரிகிறது. "அங்கு செல்வது குறித்து என் மனதில் எந்த வித பயமும் இல்லை. மொழி குறித்த பயம் கண்டிப்பாக இருந்தது. ஆனால் இந்தி பேசுபவர்கள் அங்கு இருப்பார்கள் என்று தேர்வின் போது கூறப்பட்டது. மிகப்பெரிய விஷயம் என்னவென்றால் என் சம்பளம் மூலம் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கை மேம்படும்," என்று அவர் குறிப்பிட்டார்

ரஞ்சித்தைப் போலவே ஜகதீஷ்பூர் கிராமத்தைச் சேர்ந்த விஜய் குமாரும் இரும்பு வெல்டிங் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். விஜய் குமார் டிக்கெட்டுக்கு தேவையான ஆவணங்களுடன் 66,800 ரூபாய் டெபாசிட் செய்துள்ளார். இப்போது அங்கு செல்லும் நாளுக்காக அவர் காத்திருக்கிறார்.

புறப்படும் தேதி எப்போது வேண்டுமானாலும் நிர்ணயம் செய்யப்படலாம் என்கிறார் அவர். மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் குறித்து பேசிய விஜய் குமார், "இங்கே உழைக்கும் மக்கள் அதிகம், வேலை குறைவு. அதனால் இங்கு போட்டி அதிகம். எனவே சரியான ஊதியம் கிடைப்பதில்லை. அங்கு குறைந்த பட்சம் எங்களுக்கு ஓரளவு நல்ல தொகை கிடைக்கிறது," என்று அவர் சொன்னார்.

இஸ்ரேல்

பட மூலாதாரம், NAND KUMAR

படக்குறிப்பு, டிக்கெட்டுக்காக அஜீத் சிங் டெபாசிட் செய்த பணம்

'டிக்கெட்டுக்கு நானே பணம் கட்டினேன்'

டிக்கெட்டுக்கான பணத்தை ஏற்பாடு செய்தது குறித்துப்பேசிய விஜய், "முன்பு பணம் குறித்து எதுவும் சொல்லவில்லை. டிக்கெட்டுக்கு பணம் கொடுக்கவேண்டும் என்று தெரிந்ததும் நான் சிரமப்பட்டேன். எப்படியோ நிலத்தை அடமானம் வைத்து பணத்திற்கு ஏற்பாடு செய்தேன். அங்கு நல்ல பணம் கிடைத்தால் வீட்டின் நிலை மேம்படும். நிலத்தையும் மீட்க முடியும்,” என்று அவர் கூறினார்.

இந்த நாட்களில் விஜய் இஸ்ரேல் பற்றிய தகவல்களை யூடியூப் மற்றும் இணையம் மூலம் சேகரித்து வருகிறார். ஆனால் அரசின் அறிவுரையை அறிந்ததில் இருந்து அவரின் கவலைகள் அதிகரித்துள்ளன.

"அங்கே சென்று சம்பள பணம் கையில் கிடைக்கும் வரை கவலை இருக்கத்தான் செய்யும். 2024 ஜனவரியில் இந்த செயல்முறை துவங்கி இப்போது மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. வருமானம் இல்லை. முதலில் ஸ்க்ரீனிங்கிற்காக ஓடினேன். பிறகு ஆவணங்களை சமர்ப்பிக்க லக்னோ சென்று வரவேண்டி இருந்தது. இன்னும் நான் எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை," என்று அவர் உணர்ச்சி பொங்க கூறினார்.

நாட்டின் பிரதமர் நரேந்திர மோதி என்பதால் இஸ்ரேல் செல்லும் மக்களுக்கு அங்கு எந்தப் பிரச்சனையும் வராது, ஆபத்தும் வராது என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார் விஜய் குமாரின் தந்தையின் மூத்த சகோதரர் ராம்பால் சிங்.

இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி

நாட்டில் வேலையின்மை நிலைமை

நரேந்திர மோதி கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக இருந்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் நோக்கத்தில் வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட உள்ளார். 2014 தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி பேருக்கு வேலை வழங்குவதாக அவர் வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனால் இந்தியாவில் வேலையின் நிலை அவ்வளவு நன்றாக இல்லை.

இந்தியாவில் வேலையின்மை குறைந்து வருகிறது, ஆனால் அதன் விகிதம் இன்னும் அதிகமாகவே உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் உள்ள வேலைகளின் வேகம் 2019 முதல் குறைந்து வருகிறது.

இதற்குக் காரணம் பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா என கூறப்படுகிறது என்று அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு 15 சதவிகிதத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர். இதுமட்டுமின்றி, 25 வயதுக்கு குறைவான பட்டதாரிகளில், மொத்தம் 42 சதவிகிதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர் என்று அந்த அறிக்கை மேலும் சுட்டிக்காட்டுகிறது.

இஸ்ரேல்

பட மூலாதாரம், NAND KUMAR

படக்குறிப்பு, தனது வீட்டின் முன் அமர்ந்திருக்கும் மோஹித் சிங்

"பணத்திற்காக ஆபத்தை எதிர்கொள்ளத் தயார்"

பாராபங்கியின் பினோவகிராம் பகுதியைச் சேர்ந்த மோஹித் சிங், தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, தற்போது இஸ்ரேல் செல்ல தயாராகி வருகிறார். மோஹித் சிங் முன்பு அமேத்தியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்தார், அங்கு அவர் மாதம் 15-20 ஆயிரம் ரூபாய் சம்பாதித்தார்.

விலைவாசி உயர்வு காரணமாக இவ்வளவு பணத்தைக் கொண்டு வீட்டை நடத்துவது கடினம், எனவே இஸ்ரேலில் வேலை வாய்ப்பு இருப்பதாகத் தெரிந்தவுடன் விண்ணப்பித்தேன் என்று அவர் சொன்னார்.

மோஹித் சிங் ஏப்ரல் 15 ஆம் தேதி டெல்லியில் இருந்து இஸ்ரேலுக்கு செல்ல இருக்கிறார். "இஸ்ரேல் என்று ஒரு நாடு இருப்பது கூட முன்பு எனக்குத் தெரியாது, போர் தொடங்கிய பிறகுதான் இஸ்ரேலைப் பற்றி முதன்முதலில் கேள்விப்பட்டேன்," என்றார் அவர்.

மோஹித் இப்போது சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஊடகங்கள் மூலம் இஸ்ரேலைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டுள்ளார். நல்ல பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதால் உயிர் பயம் இல்லை என்கிறார் அவர்.

"இஸ்ரேலில் சில தினசரி உபயோகப் பொருட்களின் விலை இந்தியாவை விட அதிகம். எனவே உணவுப் பொருட்களைத் தவிர, சமைப்பதற்கான பாத்திரங்களையும் எடுத்துச் செல்ல இருக்கிறேன். அரசு நினைத்திருந்தால் , இதுபோன்ற வேலைக்கான ஏற்பாடுகளை இங்கேயே செய்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் எங்களைப் போன்றவர்கள் வேலைக்காக இவ்வளவு தூரம் செல்ல வேண்டியதில்லை,” என்று மோஹித் குறிப்பிட்டார்.

இந்த இளைஞர்களை வேலைக்காக இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு அனுப்புவது குறித்துப்பேசிய பாரபங்கியின் உதவி தொழிலாளர் நல ஆணையர் மயங்க் சிங், "இந்த இளைஞர்களை தேர்வு செய்ய, ஐடிஐ அலிகஞ்சில் ஸ்கிரீனிங் நடத்தப்பட்டது. அங்கு இறுதியாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்," என்றார்.

போர்ச் சூழலுக்கு மத்தியில் இஸ்ரேலுக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடையே உள்ள அச்சம் மற்றும் கவலையைப் போக்க அரசு என்ன முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த மயங்க் சிங், "தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் கவலைகளைத் தீர்க்கும் வகையிலான கவுன்சிலிங் எங்கள் பொறுப்பு அல்ல. இது தொடர்பாக தொழிலாளர் துறைக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி நாங்கள் எங்கள் வேலையைச் செய்ய முயற்சித்தோம்,” என்று தெளிவுபடத் தெரிவித்தார்.

இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் இருந்து தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

இது போன்ற வேலைக்கான ஏற்பாடுகளை உத்தரபிரதேசத்திலும், உள்நாட்டிலும் செய்யமுடியுமா என்ற கேள்விக்கு மயங்க் சிங் எந்தக்கருத்தையும் சொல்லாமல் தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைப்பற்றி சொல்லத் தொடங்குகிறார்.

இந்த முழு விவகாரத்தின் சமூக மற்றும் பொருளாதார அம்சங்களை விளக்கிய மூத்த பத்திரிகையாளர் ராம் தத் திரிபாதி, "விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட மாநிலங்களில் இது ஒரு பெரிய பிரச்சனை. அங்கு வேலை வாய்ப்புகள் இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில் இளைஞர்கள் என்ன செய்யமுடியும். பெருநகரங்களில் கட்டிட காவலாளர்கள் ஆவதை தவிர வேறு வழி இல்லை. இஸ்ரேலுக்கு செல்லும் மாற்று வழி நிச்சயமாக கவர்ச்சிகரமான ஒன்றுதான்," என்று குறிப்பிட்டார்.

இந்தியா - இஸ்ரேல் ஒப்பந்தம்

இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி 15 பேர் கொண்ட இஸ்ரேலிய குழு இந்தியாவில் இருந்து கட்டட பூச்சு வேலை, பீங்கான் டைலிங், கட்டட சட்ட வேலைகள் மற்றும் இரும்பு வெல்டிங் ஆகியவற்றில் திறமையான தொழிலாளர்களை தேர்வு செய்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் இருந்து தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் அங்கு கட்டுமானம் மற்றும் தொழில்முனைவுத் துறையில் பங்களிக்கிறார்கள்.

இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு ஐந்தாண்டு விசா வழங்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ஒரு வருடம் மற்றும் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் இஸ்ரேலில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறுவார்கள். ஒரு வருடத்தில் ஒரு மாதம் விடுப்பு இருக்கும். அதன் போது தொழிலாளர்கள் தங்கள் நாட்டிற்கு வரலாம். தேவைப்பட்டால் இடையிலும்கூட தொழிலாளர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பலாம்.

இஸ்ரேலில் இந்திய தொழிலாளர்களின் நிலை என்ன?

பட மூலாதாரம், NAND KUMAR

நிபந்தனைகள் என்னென்ன?

"எந்த ஒரு தொழிலாளியும் வலுக்கட்டாயமாக அனுப்பப்படவில்லை. இளைஞர்கள் அனைவரும் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் வேலைக்குச் செல்கிறார்கள். அவர்கள் செல்வதற்கு மாநில அரசு முழுமையாக உதவுகிறது," என்று பாராபங்கியின் உதவி தொழிலாளர் ஆணையர் மயங்க் சிங் கூறினார்.

இருப்பினும் அடுத்து தகவல் வரும்வரை இஸ்ரேல் செல்ல இந்த இளைஞர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மயங்க் சிங்குக்கு சனிக்கிழமை வரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. 'ஏப்ரல் 15ம் தேதி செல்லவிருந்த இளைஞர்களிடம் இருந்து எனக்கு இந்த தகவல் கிடைத்தது' என்றார் அவர்.

அங்கு தொழிலாளர்களுக்கு மாதம் 1,37,250 இந்திய ரூபாய் சம்பளம் கிடைக்கும். அவர்கள் கூடுதல் நேரம் வேலை செய்தால் சம்பளம் அதற்கு மேலும் கிடைக்கக்கூடும். இஸ்ரேலில் தங்குமிடம், பணியமர்த்தும் நிறுவனத்தால் இலவசமாக வழங்கப்படும். ஆனால் உணவுக்கு அவர்களே பணம் செலவழிக்க வேண்டும்.

இந்தத் தொழிலாளர்கள், தேசிய திறன் வளர்ப்பு கழகத்தின் காப்பீட்டின் பலனையும் பெறுவார்கள். ஒவ்வொரு தொழிலாளிக்கும் 10 லட்சம் ரூபாய் மருத்துவக்காப்பீடும் இதில் அடங்கும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)