சிங்கப்பூர் தேர்தல்: திருமணம் கடந்த உறவு, ஊழல் புகார்களில் சிக்கிய ஆளும் கட்சி தப்பிக்குமா?

சிங்கப்பூர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கும் சிங்கப்பூரில் அதிபருக்கு குறைந்த அளவே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது

சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

திருமணத்துக்கு வெளியே உறவு, ஊழல் புகார்கள் போன்றவற்றால் விமர்சிக்கப்படும் ஆளும் கட்சி மீதான மக்களின் தீர்ப்பாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்யும் கட்சி மீதான மக்களின் நம்பிக்கைக்கான சோதனை இது.

எனினும் பிரதமருக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கும் சிங்கப்பூரில் அதிபருக்கு குறைந்த அளவே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இந்த தேர்தலில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்று அடுத்த அதிபராக வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது.

ஆளும் மக்கள் செயல் கட்சியின் சார்பில் அவர் களத்தில் இருக்கிறார்.

சிங்கப்பூர் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1959-ம் ஆண்டு முதல் சிங்கப்பூரை ஆண்டு வரும் மக்கள் செயல் கட்சியின் இமேஜ், ஊழல் புகார்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் லீ சியென் லூங் அண்மையில் கவலை தெரிவித்திருந்தார்.

1959-ம் ஆண்டு முதல் சிங்கப்பூரை ஆண்டு வரும் மக்கள் செயல் கட்சியின் இமேஜ், ஊழல் புகார்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் லீ சியென் லூங் அண்மையில் கவலை தெரிவித்திருந்தார்.

தர்மன் சண்முகரத்னம் தவிர, காக் சோங் (75), டான் கின் லியான்(75) ஆகிய இருவரும் அதிபர் தேர்தல் களத்தில் இருக்கின்றனர்.

இந்த 3 பேரில் வெற்றி பெறும் வேட்பாளர், சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் ஹலிமா யாகூப்பிடம் இருந்து பொறுப்புகளை ஏற்பார்கள்.

நாடாளுமன்றம் செய்த சட்டத்திருத்தங்களால், 2017-ம் ஆண்டு அதிபர் தேர்தலின் போது அவர் மட்டுமே போட்டியிடத் தகுதியானவராக இருந்தார். அந்த திருத்தத்தின்படி, குறிப்பிட்ட இனக்குழுவில் இருந்து தொடர்ந்து 5 தடவை யாரும் அதிபராகவில்லை என்றால் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்படுவார்.

2017-ம் ஆண்டு 4 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதால், அங்கே அரிதான நிகழ்வாக போராட்டங்கள் எழுந்தன.

சிங்கப்பூர் மக்கள் தொகையில் நான்கில் 3 பகுதியினர் சீனர்கள். எஞ்சியவர்கள் மலாய், இந்தியா அல்லது யுராஷியன் வம்சாவளியினர் ஆவர்.

இந்த ஆண்டு அனைத்து இனக் குழுவினரும் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் அதிபர் தேர்தலில் 27 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1991-ம் ஆண்டு சட்டம் பொதுமக்களே நேரடியாக அதிபரை தேர்ந்தெடுக்க வழிவகை செய்யப்பட்ட பிறகு நடைபெறும் மூன்றாவது தேர்தல் இது. சிங்கப்பூரில் அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும்.

சிங்கப்பூர் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, மிகச் சிறந்த பொருளாதார வல்லுநரான தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூர் துணை பிரதமர், நிதி அமைச்சர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

யார் இந்த தர்மன் சண்முகரத்னம்?

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, மிகச் சிறந்த பொருளாதார வல்லுநரான தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூர் துணை பிரதமர், நிதி அமைச்சர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். தேர்தல்களில் மக்களின் பெருவாரியான வாக்குகளால் தொடர்ந்து வெற்றி பெற்றவர். 2016-ம் ஆண்டு யாகூ நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்பில், சிங்கப்பூரில் அதிகார மிக்க பிரதமர் பதவிக்கு தர்மன் சண்முகரத்னம் வர வேண்டும் என்று மக்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

1959-ம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பின் சிங்கப்பூர் இதுவரை 3 பிரதமர்களை மட்டுமே கண்டுள்ளது. அவர்கள் மூவருமே பெரும்பான்மை சீன இனக் குழுவைச் சேர்ந்தவர்கள். முதல் பிரதமரான லீ குவான் யூ-வின் மகனான லீ சியென் லூங் தான் தற்போது அந்நாட்டின் பிரதமராக இருக்கிறார். 2025-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக அடுத்த பிரதமராக தர்மன் சண்முகரத்னத்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ஆனால், அது பெரும்பான்மை சீனர்களை தர்மசங்கடப்படுத்தும் என்ற கருத்து கட்சிக்குள் எழுந்ததால் அதுகுறித்த தயக்கம் இருந்து வந்தது. தர்மன் சண்முகரத்னமும் தாம் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்று வெளிப்படையாக அறிவித்தார்.

மக்களிடையே பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த தர்மன் சண்முகரத்னத்தை அதிபராக்குவதன் மூலம் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதில் தற்போதைய பிரதமர் லீ சியென் லூங் தனக்கான நெருக்கடியை சற்று குறைத்துக் கொண்டுள்ளதாக அந்நாட்டு அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

செப்டம்பர் 13-ம் தேதி தற்போதைய அதிபர் ஹலிமாவின் பதவிக்காலம் முடிவடையும் என்பதால் அதற்குள் தர்மன் சண்முகரத்னம் அடுத்த அதிபராக பொறுப்பேற்றுக் கொள்வார்.

திருமணம் கடந்த உறவு, ஊழல் குற்றச்சாட்டுகள்

பட மூலாதாரம், REUTERS

படக்குறிப்பு, 54 வயதான சபாநாயகர் டான் சுவான் - ஜின், 47 வயதான நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹியூர் ஆகியோர் இடையே திருமணத்தை தாண்டிய உறவு இருப்பது தெரியவந்ததும் இருவரும் பதவி விலகினர்.

திருமணம் கடந்த உறவு, ஊழல் குற்றச்சாட்டுகள்

அண்மையில் ஊழல் தொடர்பாக சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனால் 64 வருடங்களாக ஆட்சி செய்துவரும் மக்கள் செயல் கட்சி தனது நற்பெயரை இழந்து வருவதாகவும் கருதப்பட்டது.

இது தவிர, நாடாளுமன்ற சபாநாயகரும், பெண் நாடாளுமன்ற உறுப்பினரும் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருப்பது தெரியவந்ததும் ராஜிநாமா செய்தனர்.

மிகவும் தூய்மையான நிர்வாகத்துக்குப் பெயர் பெற்ற, உலகிலேயே அதிக ஊதியம் பெறும் தலைவர்களைக் கொண்ட சிங்கப்பூர் மக்களை இது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

1959 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஆட்சியை கைவசப்படுத்தி நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மையைக் கொண்டிருக்கும் ஆளும் மக்கள் செயல் கட்சிக்கு (PAP) தற்போதைய நெருக்கடி ஆதரவைக் பெருமளவில் குறைத்துவிடும் எனப் பல அரசியல் வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.

54 வயதான சபாநாயகர் டான் சுவான்-ஜின் 47 வயதான நாடாளுமன்ற உறுப்பினர் செங் லி ஹியூர் ஆகியோர் இடையே திருமணத்தை தாண்டிய உறவு இருப்பது தெரியவந்ததும் கட்சி, நாடாளுமன்ற பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்களில் டான் திருமணமானவர், செங் திருமணமாகாதவர்.

இதுபோல சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் மற்றும் ஹோட்டல் அதிபர் ஓங் பெங் செங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போதே வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகள் எழுந்தன. 2008-இல் சிங்கப்பூருக்கு கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தைக் கொண்டு வந்ததில் இருவரும் முக்கிய பங்கு வகித்தனர்.

ஈஸ்வரன் தனது அமைச்சர் பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக கடந்த புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: