பிரசவங்களுக்கு அரசு மருத்துவமனைகளை தேர்ந்தெடுக்கும் பெண்கள்- காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் பிரசவங்களுக்கு அரசு மருத்துவமனைகளையே பெண்கள் அதிகம் நாடுகின்றனர் என்பது பொதுசுகாதாரத்துறை சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் 60-70% பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன என்று ஏற்கனவே இருக்கும் நிலையை இந்த தரவுகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் பெண்கள் தாமாக முன் வந்து விருப்பப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு வருகிறார்களா, அல்லது தனியாருக்கு செல்ல வழி இல்லாமல் அரசு மருத்துவமனைக்கு வருகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்நாட்டில் ஒராண்டுக்கு சராசரியாக ஒன்பது லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இவற்றில் சுமார் 60% பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. உதாரணமாக ஏப்ரல் 2021-மார்ச் 2022 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் 9.10 லட்சம் பிரசவங்கள் நிகழ்ந்தன, அவற்றில் 5.49 லட்சம் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளிலும், 3.60 லட்சம் பிரசவங்கள் தனியார் மருத்துவமனைகளிலும் நிகழ்ந்தன.

மருத்துவமனை பிரசவங்கள் இறப்புகளை தவிர்க்கும்

பட மூலாதாரம், Getty Images
உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகள் படி, 2017ம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் உலகில் 810 பெண்கள் மகப்பேறு காலத்தில், தவிர்க்கக்கூடிய காரணங்களால் இறக்கின்றனர். தாய்மார்கள் மற்றும் பச்சிளங் குழந்தைகளின் இறப்புகளை தவிர்க்க, பிரசவங்கள் வீட்டில் அல்லாமல் மருத்துவமனைகளில் நடைபெறுவது அவசியமாகும்.
இந்தியாவில் மருத்துவமனைகளில் நிகழும் பிரசவங்கள் 2005-06ம் ஆண்டில் 40.8% ஆக இருந்தது. 2019-20ம் ஆண்டில், 88.9% ஆக உயர்ந்துள்ளது என தேசிய குடும்ப நல ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
யூ டியூப் பார்த்து ஆங்காங்கே வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் சம்பவங்கள் ஒன்றிரண்டு செய்திகளில் இடம்பெற்றிருந்தாலும், 99.9 % பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறும் ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும். மேலும் மொத்த பிரசவங்களில் 66.9% பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன.
இந்த முன்னெடுப்புகளின் காரணமாக தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு சதவீதம் 54ஆக குறைந்துள்ளது.
கிராமப்புற பெண்களே அரசு மருத்துவமனைகளை அதிகம் நாடுகின்றனர்
நகர்ப்புறத்தில் வசிக்கும் பெண்களை விட கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களே அரசு மருத்துவமனைகளை அதிகம் நாடுகின்றனர் என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. கிராமப்புறங்களில் 75% பெண்களும் நகர்ப்புறங்களில் 50% பெண்களும் அரசு மருத்துவமனைகளில் பிரசவித்துள்ளனர்.
கிராமப்புறங்களில் தனியார் மருத்துவமனைகள் குறைவாக இருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என இந்த ஆய்வு கூறுகிறது. மேலும் சாதி ரீதியாக பார்க்கும் போது, எஸ் சி , எஸ் டி பெண்களில் அதிகமானோர் அரசு மருத்துவமனைகளையே பிரசவத்துக்காக நாடியுள்ளனர்.
பொருளாதார ரீதியாக பின் தங்கிய பெண்களும், படிப்பறிவு குறைவான பெண்களும் அரசு மருத்துவமனைகளுக்கு அதிகம் வருவதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
“இந்த தரவுகளின் மூலம், அதிக கட்டணம் செலுத்த முடிந்த பெண்கள் தனியார் மருத்துவமனைகளுக்கும், கட்டணம் செலுத்த இயலாதவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கும் வருகிறார்கள் என்பது தெரிகிறது. கிராமப்புறங்களில் தனியார் மருத்துவமனைகள் அதிகம் இல்லாததும் இதற்கு காரணம். தமிழ்நாடு வேகமாக நகரமயமாகி வருவதால், தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகமாகி மக்களுக்கு எந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை கிடைக்கும். மக்களின் வாங்கும் சக்தி அதிகமாகும் போது, தனியார் மருத்துவமனைகளை நோக்கி அவர்கள் செல்ல வாய்ப்புள்ளது. எனவே அரசு மருத்துவமனைகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது” என்று இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திட்டக் குழு உறுப்பினரும் மூத்த மருத்துவருமான அமலோற்பாவநாதன், “நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் வருமானம் குறைவு என்பது உண்மை தானே. கிராமப்புறங்களில் பாதுகாப்பான, தேவையான வசதிகள் கொண்ட தனியார் மருத்துவமனைகள் கிடையாது, ரத்த வங்கி, அவசர கால வெளியேற்ற வசதிகள் அங்கு இருக்காது. எனவே மக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். நகர்ப்புறங்களை போன்று கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் கூட்டமாக இருக்காது” என்றார்.
மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும் போது, தனியார் மருத்துவமனைகளுக்கு அதிகமாக செல்வது இயல்பு தான் என கூறும் மருத்துவர் அம்லோற்பாவநாதன், அதனால் அரசு மருத்துவமனைகளில் தரமான மருத்துவ சேவை வழங்கப்படவில்லை என்று அர்த்தம் இல்லை என்கிறார். “தனியார் மருத்துவமனையில், ஒருவர் தங்கள் மகப்பேறு மருத்துவரை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும், ஆனால் அரசு மருத்துவமனையில் அதை எப்போதும் செய்ய முடியாது, வாங்கும் சக்தி அதிகரிக்கும் போது கூட்டத்தில் இல்லாமல் சற்று தனியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும், அது தனியார் மருத்துவமனையில் சாத்தியமாகும்” என்றார்.
அனைத்து கர்ப்பிணி பெண்களும் அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்ற காரணத்தினாலும், அரசு மருத்துவமனை சேவைகள் பெறும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலட்சுமி திட்டத்தின் கீழ் ரூ.14 ஆயிரம் பணமும் ரூ.4ஆயிரம் பொருளாகவும் வழங்கப்படுவதாலும், 98% கர்பிணி பெண்கள் தங்கள் மகப்பேறு காலத்தில் ஒரு முறையாவது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளனர். அப்படி வரும் கர்பிணிகளை அருகில் உள்ள பெரிய அரசு மருத்துவமனைக்கு கூட்டிச் சென்று அங்குள்ள வசதிகளை காட்டி, மருத்துவ நிபுணரின் ஆலோசனையையும் பெற உதவ வேண்டும் என்று ஆய்வு கூறுகிறது.

எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் விஜயா கூறுகையில் , அரசு மருத்துவமனைகளில் வசதிகள் அதிகரித்திருப்பதாலேயே பிரசவங்கள் அங்கு அதிகம் நடப்பதாக தெரிவிக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள 126 சீமாங் மையங்கள் எனப்படும் தாய்மார்கள் மற்றும் பச்சிளங் குழந்தைகளுகான முழுமையான மருத்துவ சேவைகள் வழங்கும் மையங்களில் அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ளன என்றும் அறுவை அரங்குகள் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுகபிரசவங்கள் செய்துக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
“டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் தனியார் மருத்துவமனைகளும் இணைந்துக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றன. எனவே தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்த்தாலும் பெண்களுக்கு ரூ.18 ஆயிரம் கிடைக்கும். எனினும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது சராசரியாக சுகபிரசவத்துக்கு 80 ஆயிரம் முதல் 1.2 லட்சமும், சிசேரியன் பிரசவங்களுக்கு ரூ.2 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது” என்றார்.
அரசு மருத்துவமனைகள் பெண்கள் ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள்?

அரசு மருத்துவமனைகளை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என இந்த ஆய்வில் பெண்களிடம் கேட்டபோது, அருகில் உள்ள மருத்துவமனை என்பதால் தேர்ந்தெடுத்தாக தெரிவித்தனர். ஆனால் தனியார் மருத்துவமனைகளை தேர்ந்தெடுத்தவர்கள் அந்த மருத்துவமனை குறித்து ஏற்கனவே தெரிந்ததால் அங்கு சென்றதாக தெரிவித்தனர்.
சுத்தமான கழிவறைகளும்,சுகாதாரமான சூழலும், சற்று தனியாக இருப்பதற்கான வசதிகள் ஆகியவை அரசு மருத்துவமனைகளில் இல்லை என்று பெண்கள் கூறியிருப்பதை சுகாதாரத்துறை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே நேரம் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள் என்பதே தனியார் மருத்துவமனைகள் மீது வைக்கப்படும் முதன்மையான விமர்சனமாகவும் இருக்கிறது.
தரமான மருத்துவர் இல்லை என்ற நிலை எப்போதுமே அரசு மருத்துவமனைகளில் கிடையாது என்கிறார் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம். “மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை இந்த ஆய்வின் மூலம் தெரிந்துக் கொண்டோம். அரசு மருத்துவமனைகளின் சூழலை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுப்போம். பல இடங்களில், பெண்கள் மாதாந்திர ஆலோசனைகளை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெறுகிறார்கள், ஆனால் அவர்களின் பிரசவங்கள், அறுவை அரங்குகள் கொண்ட சீமாங் மருத்துவமனைகளில் நடைபெற வேண்டியுள்ளது. பிரசவிக்கப் போகும் மருத்துவமனையை ஏற்கனவே பார்காமல் இருந்ததையும் ஒரு தடையாக பெண்கள் நினைக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. எனவே, இனி மேல், மருத்துவ ஆலோசனைகள் ஒரு முறையாவது சீமாங் மருத்துவமனயில் வழங்கிட வழி செய்யப்படும்” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












