இந்தியாவின் செஸ் எதிர்காலமாக பிரகாசிக்கும் பெண்கள் - செஸ் உலகக் கோப்பையில் புரிந்த சாதனை

- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
FIDE செஸ் உலகக்கோப்பை போட்டியில், இந்தியாவை சேர்ந்த 18 வயது பிரக்ஞானந்தா இறுதிப் போட்டி வரை சென்று வெள்ளிப் பதக்கத்தை வென்றபோது, பாராட்டுகள் குவிந்தன.
இதைத் தாண்டி இந்தியா இந்த ஆண்டு, இதே உலகக்கோப்பை நிகழ்வில் மற்றொரு சாதனையை வரலாறு காணாத வகையில் புரிந்துள்ளது.
FIDE 2023 போட்டியில் பெண்கள் பிரிவில், இந்தியாவில் இருந்து ஏழு பெண் போட்டியாளர்கள் பங்கு பெற்றனர். இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத வகையில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வு என்று செஸ் விளையாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
''செஸ் விளையாட்டில் இந்தியாவுக்கு இது பொற்காலம். பிரக்கை போல நம் இளம் சகோதரிகள் வரலாறு படைத்திருக்கிறார்கள். செஸ் விளையாட்டில் இந்தியாவின் பெண் போட்டியாளர்கள் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள்,'' என துள்ளலுடன் பேசுகிறார் விஜயலட்சுமி சுப்புராமன்.

கடந்த 2001ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டராக பட்டம் பெற்ற விஜயலட்சுமி சுப்புராமன், இந்தியாவில் செஸ் விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான பிரத்யேகமான போட்டிகளை அதிகரிக்க வேண்டும் எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.
அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் புள்ளிவிவரங்கள்படி, அஜர்பைஜானில் நடைபெற்ற 2023 FIDE உலகக்கோப்பையில் ஏழு பெண்கள் பங்கேற்றனர்.
இதுவரை அதிகபட்சமாக 2021இல் இந்தியாவில் இருந்து நான்கு பெண்கள்தான் இந்தப் போட்டியில் பங்குபெற்றனர். இதற்கு முந்தைய பல ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரண்டைத் தாண்டவில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
''ஏழு என்பது இந்தியாவுக்கு ஒரு ஹேட்ரிக் நம்பர். உலகம் முழுவதும் இருந்து வந்து பங்கேற்ற 103 பெண்களில், இந்தியா சார்பில் பங்குபெற்ற பெண்கள் எழுவர் என்பது உண்மையில் பெரிய சாதனைதான்.
இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்பதில் நாங்கள் அக்கறையுடன் இருக்கிறோம்,'' என்கிறார் அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளர் பாரத் சிங்.
அந்த ஏழு பெண்கள் யார்?
இந்தியாவை முன்னிறுத்தி விளையாடிய பெண்களில் இரண்டு போட்டியாளர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
சென்னையைச் சேர்ந்த வைஷாலி மற்றும் சேலத்தைச் சேர்ந்த நந்திதா ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதில் வைஷாலி, பிரக்ஞானந்தாவின் சகோதரி.
அடுத்ததாக, ஹரிகா துரோணவல்லி, பிரியங்கா நட்டாக்கி, மற்றும் கொனேரு ஹம்பி ஆகிய மூவரும் ஆந்திராவை சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவை சேர்ந்த திவ்யா தேஷ்முக், மேற்கு வங்கத்தை சேர்ந்த மேரி ஆன் கோம்ஸ் ஆகியோர் பெண் போட்டியாளர்கள் பட்டியலில் அடங்குவர்.

இந்திய பெண் போட்டியாளர்கள் சாதித்தது என்ன?
பெண் போட்டியாளர்களுக்காக நடத்தப்படும் உலகக்கோப்பை போட்டி ஏழு சுற்றுகளைக் கொண்டது. இதில், 103 பெண்கள் கலந்துகொண்டனர்.
பெண் போட்டியாளர்களுக்கான செஸ் உலக கோப்பையை இந்த ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா கோரியாச்சினா வென்றுள்ளார்.
இந்திய பெண் போட்டியாளர்களைப் பொறுத்தவரை, அரையிறுதி போட்டிக்குத் தேர்வாகும் ஆட்டத்தில், அலெக்ஸாண்ட்ரா கோரியாச்சினாவுக்கு கடுமையான போட்டியாக ஹரிகா துரோணவல்லி விளங்கியதாக FIDE இணையதளம் சொல்கிறது.
அரை இறுதிக்கு முன்னதாக, அலெக்ஸாண்ட்ரா கோரியாச்சினா- ஹரிகா ஆகியோர், மூன்று சுற்றுகளில் டை பிரேக் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோனேறு ஹம்பி காலிறுதி வரை விளையாடினார். மேரி, ஹரிகா, வைஷாலி, திவ்யா ஆகிய நால்வரும், மூன்று சுற்றுகள் வரை விளையாடினர். பின்னர் தோல்வியைத் தழுவி வெளியேறினர்.
பிரியங்கா நட்டாக்கி இரண்டாவது சுற்றில் வெளியேறினார். அவர் அந்த இரண்டாவது சுற்றில் போட்டியாளராக எதிர்கொண்டது கோனேறு ஹம்பியைதான். நந்திதா முதல் சுற்றில் வெளியேறிவிட்டார்.
உலகக்கோப்பை போட்டி அனுபவம்

இந்தியாவின் 17வது பெண் கிராண்ட்மாஸ்டர் நந்திதா. 2022இல் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் பெற்றவர். அதன் தொடர்ச்சியாக 2023 உலகக்கோப்பை போட்டிக்குத் தேர்வானவர்.
பெண் போட்டியாளர்களின் பங்கேற்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசினார் நந்திதா. உலகக்கோப்பை போட்டிக்குச் சென்று வந்தது பெரிய அனுபவமாக இருந்தது எனத் தெரிவித்தார் நந்திதா.
''நான் முதல் சுற்றில் தோல்வி அடைந்தேன். ஆனால் இது எனக்கு நல்ல அனுபவத்தைத் தந்தது. சீனாவைச் சேர்ந்த அனுபவமிக்க போட்டியாளருடன் மோதினேன்.
முதல்முறை தோல்வி என்பது அடுத்து சிறப்பாக விளையாடவேண்டும் என்ற எண்ணத்தை வலிமையாக என்னுள் ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இந்தியாவில் இருந்து போட்டியிட்ட ஏழு பெண்களில் நானும் ஒருவர் என்பது எனக்குப் பெருமை. நாங்கள் கோப்பையை வாங்கவில்லை என்றாலும், இந்தியாவின் சார்பாக ஏழு பெண்கள் சர்வதேச அரங்கில் போட்டியிட்டோம் என்பதில் அளவற்ற மகிழ்ச்சி,'' என்கிறார் நந்திதா.
இந்தியாவில் 'ஓபன்' மற்றும் 'பெண்கள்' என்ற இரண்டு விதமான போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 'ஓபன்' பிரிவில், ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கு பெறலாம்.
பெண்களுக்காக நடத்தப்படும் போட்டியில் பெண் போட்டியாளர்கள் மட்டும் விளையாடுவார்கள். ஆனால் 'ஓபன்' பிரிவில் அதிக எண்ணிக்கையில் ஆண்கள்தான் உள்ளனர் என்பதால், பெண்களுக்கான போட்டிகள் அதிகம் நடத்தப்பட வேண்டும் என்பதை நந்திதா வலியுறுத்துகிறார்.
''ஓபன் பிரிவுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் பெண்களுக்கான போட்டிகள் குறைவான அளவில்தான் நடத்தப்படுகின்றன. கிரிக்கெட் விளையாட்டில் உள்ளது போலவே, பெண்களுக்கான செஸ் பிரிவுக்கு அதிக கவனம் கிடைப்பதில்லை.
எங்களுக்கு வாய்ப்புகள் தேவை, பயிற்சியாளர்கள் தேவை, போட்டிகள் தேவை, அரசாங்கம் மட்டுமல்லாது, தனியார் நிறுவனங்களும் பெண்களுக்கான போட்டிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்,'' என்கிறார்.
பெண்களுக்கு ஏன் முக்கியத்துவம் தர வேண்டும்?

இந்தியாவில் செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டம் கொண்டவர்கள் 82 நபர்கள். அதாவது ஆண்கள் மற்றும் பெண்கள் என கலப்புப் பிரிவில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்ற, 82 நபர்களில் 80 நபர்கள் ஆண்கள், இரண்டு பேர் மட்டுமே பெண்கள். ஹரிகா துரோணவல்லி மற்றும் கோனேறு ஹம்பி ஆகியோர்தான் அந்த இரண்டு பெண்கள்.
அதேநேரம், பெண் கிராண்ட்மாஸ்டர்கள் என்று குறிப்பிடப்படும், WGM(Women Grand Master) என்ற பட்டத்தைப் பெற்றுள்ளவர்கள், வெறும் 23 பேர் மட்டுமே.
இந்தியாவின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தை விஜயலட்சுமி பெற்று சரியாக 22 ஆண்டுகள் ஆகிறது. அவருக்குப் பின்னர், சராசரியாக ஆண்டுக்கு ஒரு பெண் போட்டியாளர்தான் பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற முடிந்திருக்கிறது.
''செஸ் விளையாட்டு உள் அரங்கத்தில் நடக்கும், உடல் உழைப்பு அதிகம் தேவையிருக்காது, அதனால் பெண்கள் அதிகம் இருப்பார்கள் என்பது ஒரு கற்பிதம். இந்த விளையாட்டில் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
இந்தியாவில் பல மாநிலங்களில் இந்தப் போட்டி நடக்கும், அதிக புள்ளிகளைப் பெற வேண்டுமெனில், அதிகமாக சர்வதேச போட்டிகளில் கலந்து வெற்றி பெற வேண்டும் என்பதால், பயணம் அதிகம் செய்ய வேண்டும், குடும்பப் பொறுப்புகளை கவனிக்க முடியாது.
இதில்தான் பெண் போட்டியாளர்கள் பின்தங்கிவிடுகிறார்கள். வெறும் தனிநபர்களின் வெற்றியாக பெண்களின் வெற்றி அமைவதில்லை,'' என ஆதங்கத்துடன் சொல்கிறார் விஜயலட்சுமி.
சென்னை மகாபலிபுரத்தில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழ்வில், பெண்கள் பிரிவில் வெண்கல பதக்கம் பெற்றபோது, கோனேறு ஹம்பி ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்தார்.
முழுவீச்சில் போட்டிக்கான தயாரிப்பில் ஈடுபட்டபோது, குடும்ப வேலைகள், வளைகாப்பு என எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தவில்லை என ஊடகத்தினரிடம் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, நந்திதா தற்போது நடைபெற்ற உலகக்கோப்பையில் தோல்வியைத் தழுவியிருந்தாலும், இந்த முறை அவர் அஜர்பைஜானில் நடந்த போட்டிக்கு எப்போதும்போல தனியாகத்தான் பயணித்தார்.
''இதுவரை 40 நாடுகளுக்குச் சென்று போட்டிகளில் கலந்திருக்கிறேன். என் பெற்றோர், கணவர் என்னை மதிக்கிறார்கள். ஒரு சிலர், நான் தொழில்முறை செஸ் விளையாட்டு வீரர் என்று சொன்னால், 'அப்போ வேலைக்குப் போகவில்லையா?' என்று கேட்டிருக்கிறார்கள். 'வெளிநாடுகளுக்கு எப்படி தனியாகச் செல்கிறாய்?' என்றும் கேட்டிருக்கிறார்கள். பெண்களின் பயணம், பாதுகாப்பு குறித்த புரிதல் சமூகத்தில் இன்னும் அதிகரிக்க வேண்டும்,'' என்று சொல்கிறார் நந்திதா.
இந்திய பெண்களின் வெற்றிப் பயணம் அடுத்த உலகக்கோப்பை போட்டியின்போது மேலும் அதிகரிக்க வேண்டும். அதற்கு முன்னதாக இந்தியாவில் பெண்களுக்கான போட்டிகளை அதிகம் நடத்த வேண்டும் என்பதை பெண் போட்டியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலர் பாரத் சிங்கிடம் பேசியபோது, ''இந்தியாவில் செஸ் விளையாட்டிற்கு ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் பெண்களுக்கான போட்டிகளை அதிகரிக்க திட்டமிட்டிருக்கிறோம்.
செஸ் போட்டிகளை நடத்த தனியார் நிறுவனங்கள் பலவும் விருப்பம் தெரிவித்துள்ளன. எங்களுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது,'' என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












