தமிழ்நாடு 69% இட ஒதுக்கீட்டைப் பெற்றது எப்படி? அதற்கு ஆபத்து வருமா?

இட ஒதுக்கீடு தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு விவகாரம் தேசிய அளவில் விவாதிக்கப்பட்டுவரும் நிலையில், நாட்டிலேயே சமூக அடிப்படையில் அதிக சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருக்கிறது. இது எப்படி நடந்தது?

தமிழ்நாட்டில் 'கம்யூனல் ஜி.ஓ' எனப்படும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செயல்படுத்தப்பட்ட 1928ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு அமலில் இருந்து வருகிறது. அந்த சமயத்தில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் பிராமணர் உள்ளிட்ட முன்னேறிய வகுப்பினருக்கும் இந்த கம்யூனல் ஜிஓவின் மூலம் இடஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த அரசாணையின்படி, அரசு அலுவலகங்களில் வேலை வாய்ப்புகளை அளிக்கும்போது, 12 இடங்களாக அவற்றைத் தொகுத்து வேலை வாய்ப்புகளை அளிக்கவேண்டும். அதன்படி, 12 இடங்களில் 2 இடங்கள் பிராமணர்களுக்கும் ஐந்து இடங்கள் பிராமணர் அல்லாதவர்களுக்கும் இரண்டு இடங்கள் இஸ்லாமியர்களுக்கும் இரண்டு இடங்கள் கிறிஸ்தவர், ஐரோப்பியர்கள், ஆங்கிலோ - இந்தியர்களுக்கு அளிக்கவேண்டும். ஒரு இடம் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவருக்குத் தரவேண்டும்.

சதவீதப்படி பார்த்தால், பிராமணர் அல்லாதவர்களுக்கு 44%, பிராமணர்களுக்கு 16%, முஸ்லிம்களுக்கு 16%, ஆங்கிலோ - இந்தியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு 16%, பட்டியல் இனத்தவர்களுக்கு 8% என இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இந்த அரசாணையை எதிர்த்து இரு மாணவர்கள் உச்சநீதிமன்றம் சென்றபோது, இந்த கம்யூனல் ஜி.ஓ. செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்மூலம் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது.

இதற்குப் பிறகு இடஒதுக்கீடு அளிக்கப்படுவதற்கு ஏதுவாக இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது. இதற்குப் பிறகு தமிழ்நாட்டில், பிற்படுத்தப்பட்டோருக்கு 25 சதவீதமும் பட்டியலினத்தோருக்கு 16 சதவீதஇட ஒதுக்கீடும் அமலுக்குவந்தது.

மு. கருணாநிதி முதலமைச்சராகஇருந்தபோது ஏ.என். சட்டநாதன் தலைமையில் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தார். இந்த ஆணையம் தனது பரிந்துரைகளை 1970ல்அளித்தது. அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. பட்டியலினத்தோருக்கான இட ஒதுக்கீடு 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இந்த 31 சதவீத இடஒதுக்கீடு, 50 சதவீதமாக உயர்ந்தது ஒரு சுவாரஸ்யமான வரலாறு. 1979ல் முதலமைச்சராகஇருந்த எம்.ஜி. ராமச்சந்திரன் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் பொருளாதார வரையறையை முன்வைத்தார். 1979ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி இதற்கானஆணை (M.S. no. 1156) வெளியிடப்பட்டது. அதன்படி பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டைப் பெற, குடும்பத்தின்ஆண்டு வருமானம் 9 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்என்று அறிவிக்கப்பட்டது. 

சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளின் படியே இதனைச் செயல்படுத்துவதாகச் சொன்னார்எம்.ஜி. ராமச்சந்திரன். 1980ல் நடந்த நாடாளுமன்றத்தேர்தலில் எம்.ஜி. ராமச்சந்திரன் தலைமையிலான அ.தி.மு.க. படுதோல்வியடைந்தது. இட ஒதுக்கீட்டிற்குபொருளாதார வரையறையை நிர்ணியித்ததே இந்தத் தோல்விக்குக் காரணம் எனக் கருதிய எம்.ஜி.ஆர். பொருளாதார வரம்பை நீக்கினார். அத்தோடு, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின்அளவை 31 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தினார். இதனால், ஒட்டுமொத்தஇட ஒதுக்கீட்டின் அளவு 68 சதவீதமாக உயர்ந்தது.

மு. கருணாநிதி

பட மூலாதாரம், Getty Images

1989ல் மு. கருணாநிதிதலைமையிலான தி.மு.க. அரசு, 50 சதவீத பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் 20 சதவீதம் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும் 30 சதவீதம் பிற்படுத்தப்பட்டுருக்கும்என ஒதுக்கீடு செய்தது. பழங்குடியினருக்கு 1 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதையடுத்து மொத்த இடஒதுக்கீட்டின் அளவு 69 சதவீதமாக உயர்ந்தது.

அந்த காலகட்டத்தில், இடஒதுக்கீட்டு தொடர்பான உச்சவரம்பு ஏதும் நடைமுறையில் இல்லை. இதே தருணத்தில் பிரதமராக இருந்த வி.பி. சிங் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் 27 சதவீதம் பிற்படுத்தப்பட்டோருக்கு எனஒதுக்கீடு செய்ததும், சில மாநிலங்கள் தவிர்த்து நாடு முழுவதும் கலவரங்களும் எதிர்ப்புப் பேரணிகளும் நடந்தன. இது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது.

1992ல் இது தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பில், மத்திய அரசின் பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தைத் தாண்டிச் செல்லக்கூடாது என உத்தரவிட்டது. இதன் காரணமாக, 1980ல்இருந்து தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுவந்த இட ஒதுக்கீட்டிற்கு சிக்கல் ஏற்பட்டது.

1993 ஏப்ரலில் சட்டமன்றத்தில் பேசிய அப்போதைய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத மொத்தஇட ஒதுக்கீட்டு அளவை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 50 சதவீதமாகக் குறைத்தால் அது நம் மாநிலத்தில் சமூகக் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை பதிவு செய்து, மறு ஆணையைக் கோரலாம் எனக் கூறியுள்ளார்" என்றுதெரிவித்தார்.

இந்த நிலையில், வாய்ஸ் கவுன்சில் அமைப்பின் உறுப்பினாரக இருந்த கே.எம். விஜயன், தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு கொள்கையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் தலைமை நீதிபதி எம்.என். வெங்கடாச்சலய்யா, நீதிபதி எஸ்.ஜி. அகர்வால் அடங்கிய அமர்வு தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. 

ஜெயலலிதா

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீதத்திற்குஅதிகமாக இட ஒதுக்கீடுஅளிக்க 1993 ஆகஸ்ட் 25ஆம் தேதிஇடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக அப்போதைய முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், "இடஒதுக்கீடு கொள்கையில் தமிழ்நாடு மேற்கொண்டுள்ள நிலையினையும் அதன் நெறியினையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும்வரை அரசு தொடர்ந்துமுயற்சி மேற்கொள்ளும்" என்றுதெரிவித்தார். இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் ஒரேகுரலில் அரசுக்கு ஆதரவாகநின்றன.

பல்வேறு அமைப்புகள் போராட்டங்களைத் துவங்கின. 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு தடை விதித்தநீதிமன்ற ஆணையை எதிர்த்து சாம்பலை உச்ச நீதிமன்றதலைமை நீதிபதிக்கு அனுப்பும்போராட்டமும் நடைபெற்றது.

இதற்கிடையில் மருத்துவ பட்ட மேற்படிப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு நீடிக்கலாம் என சென்னைஉயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் கே.எஸ். பக்தவத்சலம், டி,ராஜு அடங்கிய அமர்வு தீர்ப்பளித்து.

இதற்கிடையில், 69 சதவீத இடஒதுக்கீட்டு தமிழ்நாட்டில் நீடிக்கும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தைத்திருத்த வேண்டும் என நவம்பர் 9ஆம் தேதிதமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நவம்பர் 16ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க நவம்பர் 26ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 31 சி-யின் கீழ் சட்டம் இயற்றலாம்என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்தார். இட ஒதுக்கீடு 50 சதவீத்திற்கு மேல் போனால், அரசமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவுக்குமுரணாக இருக்கும் என்பதுதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. 31 சியின் கீழ் சட்டம்இயற்றப்பட்டால், அது அரசமைப்புச் சட்டப் பரிவுக்கு முரணாக உள்ளது எனக் கூறமுடியாது என முன்னாள் நீதியரசர் வேணுகோபால் கூறினார்.

இதையடுத்து 1993ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி கூடிய சட்டப்பேரவை, இடஒதுக்கீட்டிற்கான தனிச் சட்டமுன்வரைவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பிறகு, அந்தச்சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும்படி குடியரசுத்தலைவருக்கும் பிரதமருக்கும் லட்சக் கணக்கான தந்திகள் அனுப்பப்பட்டன. ஆனால், குடியரசுத்தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை.

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ்

பட மூலாதாரம், Getty Images

இந்த நிலையில், 1994 ஜூன் 25ஆம்தேதி தமிழ்நாடு முதலமைச்சர்ஜெ. ஜெயலலிதா தலைமையில் பிரதமர் நரசிம்மராவைச் சந்தித்து, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதற்குப் பிறகு, ஜூலை 14ஆம் தேதி பல்வேறுஅமைச்சகங்களுடன் பிரதமர் நரசிம்மராவ் ஆலோசனைநடத்தினார். இந்த நிலையில், ஜூலை 9ஆம் தேதிதமிழ்நாடு அரசின் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மா ஒப்புதல் வழங்கினார்.

இருந்தபோதும் இந்தச் சட்டம்குறித்து ஆராயும் உரிமை நீதிமன்றங்களுக்கு உண்டு என்பதால், இதனைபிரிவு 31 (பி)ன்கீழ், அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது பிரிவின் கீழ்கொண்டுவர வேண்டுமென தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து இந்தச் சட்டத்தை 9வது அட்டவணையில் சேர்க்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற 1994 ஆகஸ்ட் 13ஆம் தேதி மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி இதற்கான அரசியல் சட்டத்திருத்தம் ஆகஸ்ட் 24ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், மருத்துவக்கல்லூரி சேர்க்கையில் 69 சதவீதஇட ஒதுக்கீட்டை பின்பற்றக்கூடாதுஎன வழக்குத் தொடரப்பட்டது. அதில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 50 சதவீத இடஒதுக்கீடு என்ற அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கையை நடத்த வேண்டுமென 1994 நவம்பர் 17ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்புஏற்பட்டது.

இதற்குப் பிறகு தொடர்ந்தவழக்கில், 69 சதவீத இடங்களை உருவாக்குவதால் முற்பட்ட வகுபபினர் இழக்கும் இடங்களுக்கு ஏதுவாக மருத்துவம்மற்றும் பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை உருவாக்க வேண்டுமென 1996ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதிதீர்ப்பளித்தது.

இதற்குப் பிறகு தொடர்ந்து 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்குஎதிராக வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன. 69 சதவீத இடஒதுக்கீடு இருப்பதால் தங்களுக்கு இடம்கிடைக்கவில்லையென ஐந்து மாணவர்கள்சார்பில் 2012 வழக்குத் தொடரப்பட்டது. இதில்தீர்ப்பு ஏதும் அளிக்கப்படவில்லை.

நரசிம்ம ராவ்

பட மூலாதாரம், Getty Images

2014, 2015லும்சில மாணவர்கள் இதேபோல வழக்குத் தொடர்ந்தன. தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வழக்குகளில் தீர்ப்புவரவில்லை.

69 சதவீத இட ஒதுக்கீட்டைஅனுமதிக்கும் சட்டம் அரசமைப்புச்சட்டத்தின் 9வது அட்டவணையில் இருப்பதால், அதனை நீதிமன்றங்கள் ஆராய முடியாது. அது தொடர்பாக வழக்குத் தொடர முடியாது எனக் கருதுகிறது தமிழ்நாடுஅரசு.

ஆனால், 2007ஆம் ஆண்டில், ஒரு வழக்கில் தீர்ப்பளித்தஉச்ச நீதிமன்றம், ஒன்பதாவது அட்டவணையின் கீழ் உள்ளசட்டங்கள் அரசியலமைப்புச் சட்டம் வகுத்த அடிப்படை உரிமைகளைப் பாதிப்பதாக இருந்தால்அதில் நீதிமன்றம் தலையிடமுடியுமெனத் தீர்ப்பளித்தது.

அப்போதைய தலைமை நீதிபதி ஒய்.கே. சபர்வால் தலைமையிலான 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாஸனஅமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. சட்டத்தை இயற்றும் அதிகாரமும்அது சரியா என ஆராயும் அதிகாரமும் ஒரே அமைப்பிடம் இருக்க முடியாதுஎன நீதிமன்றம் கூறியது.

மேலும், 2007 அக்டோபரில் தீர்ப்பளித்த மற்றொரு அரசியல் சாஸன அமர்வு, இட ஒதுக்கீடு என்பது 50 சதவீதம் இருந்தால்தான், பாரபட்சத்திற்கு எதிராக இருக்கும். அதைத் தாண்டினால், மற்றொரு பிரிவினருக்கு அது பாரபட்சமானதாகிவிடும்என்று குறிப்பிட்டது.

கேசவானந்த பாரதி வழக்கில் தீர்ப்பு வந்ததற்குப் பின்பு, அதாவது 1973, ஏப்ரல் 24ஆம் தேதிக்குப்பிறகு 9வது அட்டவணையில்சேர்க்கப்பட்ட அனைத்து சட்டங்களும் நீதிமன்றத்தின்பரிசீலனைக்கு உரியவைதான் என்பது தற்போதுஉச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடாகஇருக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணைஎன்பது 1951ஆம் ஆண்டில் செய்யப்பட்ட முதலாவது அரசியல் சாஸனத் திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. நிலச் சீர்திருத்தச் சட்டங்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட இந்த அட்டவணையில் தற்போது 284 சட்டங்கள் உள்ளன. 

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: