இட ஒதுக்கீடு எதுவும் இல்லாத மாநிலம்: சத்தீஸ்கரில் நிலவும் விசித்திரமான சூழ்நிலை

இட ஒதுக்கீடு

பட மூலாதாரம், CGABAR KH

    • எழுதியவர், அலோக் பிரகாஷ் புதுல்
    • பதவி, ராய்பூரில் இருந்து பிபிசி இந்திக்காக

வடக்கில் இருந்து வரும் குளிர் காற்றுக்கு மத்தியில் இடஒதுக்கீடு விவகாரத்தில் சத்தீஸ்கர் அரசியல் எல்லா திசைகளிலும் சூடுபிடித்துள்ளது.

இடஒதுக்கீடு கோரி பழங்குடியினர் பகுதிகளில் தினமும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சில இடங்களில் மறியல் போராட்டம், சில இடங்களில் தர்ணா நடக்கிறது. வேறு சில இடங்களில் முதல்வர் பூபேஷ் பகேலின் உருவ பொம்மை எரிக்கப்படுகிறது.

சில நாள்களில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் நடைபெற்றது. சில இடங்களில் ரயில் போக்குவரத்தை நிறுத்தும் முயற்சியும் நடந்தது.

சத்தீஸ்கரில் இடஒதுக்கீடு தொடர்பாக ஒரு விசித்திரமான சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக பொதுப்பணித்துறை மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு விதிகள் மற்றும் பட்டியல் அமல்படுத்தப்படாமல் உள்ள ஒரே மாநிலம் இது தான்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மாநில பொது நிர்வாகத் துறை, இடஒதுக்கீடு முறை அரசியலமைப்புக்கு எதிரானது என்று உயர்நீதிமன்றம் அறிவித்த பிறகு, இடஒதுக்கீடு தொடர்பான விதிகள் மற்றும் பட்டியல்கள் மாநிலத்தில் செயல்படவில்லை என்று கூறியுள்ளது.

இந்த நிலை ஏற்பட்டது எப்படி?

நாட்டிலேயே மிக அதிகமாக 82 சதவிகித இடஒதுக்கீடு முறையை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மாநில அரசு அமல்படுத்தியது. ஆனால் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் இதற்கு தடை விதித்தது.

இதற்குப் பிறகு இந்த ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்,பழைய இட ஒதுக்கீடு முறையும் 'அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது' என்று கூறி அதையும் ரத்து செய்தது.

இடஒதுக்கீடு அமல்படுத்தப்படாததால், இன்ஜினியரிங், பாலிடெக்னிக், ஆசிரியர் படிப்பு, தோட்டக்கலை, வேளாண்மை உள்ளிட்ட பல படிப்புகளில் கவுன்சிலிங் மற்றும் சேர்க்கை பணிகள் முடங்கியுள்ளன.

மாநிலத்தில் பொறியியல், பாலிடெக்னிக், எம்சிஏ போன்ற தொழில்நுட்ப படிப்புகளுக்கு சுமார் 23 ஆயிரம் இடங்களும், பி.எட்.க்கு 14 ஆயிரம் இடங்களும், டி.எல்.எட்.க்கு சுமார் 7 ஆயிரம் இடங்களும், விவசாயம் மற்றும் தோட்டக்கலைத் துறைக்கு சுமார் 2500 இடங்களும் உள்ளன.

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய ஆட்சேர்ப்பு மற்றும் தேர்வு முடிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. 12 ஆயிரம் ஆசிரியர் பணி நியமனம் உள்ளிட்ட பல பணியிடங்களுக்கான அறிவிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

சுமார் ஆயிரம் காலி பணியிடங்களுக்கு நவம்பர் 6-ம் தேதி நடைபெற இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

பியூன் பணிக்கான 2.5 லட்சம் பேரின் தேர்வு முடிவு வெளியிடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பல நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இடஒதுக்கீடு காரணமாக மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு விவகாரம் நீதிமன்றத்தை எட்டியுள்ளது.

இட ஒதுக்கீடு இல்லாத மாநிலம்

பட மூலாதாரம், CGABAR KH

முன்னோக்கிய பாதை

"சத்தீஸ்கரில் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அடுத்த வாரம் அல்லது பத்து நாட்களில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று நம்புகிறேன்,"என்று சத்தீஸ்கரின் அட்வகேட் ஜெனரல் சதீஷ் சந்திர வர்மா பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த நெருக்கடியை சமாளிக்க மாநில அரசு டிசம்பர் முதல் வாரத்தில் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக விவாதிக்க சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை கூட்டியுள்ளது.

ஆனால் மாநில அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்து இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கூறுகிறது.

ஆயினும் இந்த நிலைக்கு பாரதிய ஜனதா கட்சியே காரணம் என்று அம்மாநில முதல்வர் பூபேஷ் பகேல் குற்றம்சாட்டுகிறார்.

"இது அவர்களது செயல்களால் ஏற்பட்ட நிலை. அதை நாங்கள் சரிசெய்ய முயற்சிக்கிறோம்" என்கிறார் முதல்வர் பூபேஷ் பகேல்.

82% இட ஒதுக்கீடு முடிவு

பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக் காலத்தில், ரமண் சிங் அரசு 2012 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி ஒரு அறிவிக்கையை வெளியிட்டு இட ஒதுக்கீடு சட்டம் 1994 இன் பிரிவு 4 ஐ திருத்தியது.

அதன் கீழ் சத்தீஸ்கர் உருவானதில் இருந்து பொருந்தக்கூடிய இடஒதுக்கீடு 50 சதவிதத்திலிருந்து 58 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. ரமண் சிங்கின் அரசு பழங்குடியினருக்கான 20 சதவிகித இடஒதுக்கீட்டை 32 சதவிகிதமாக உயர்த்தியது. அதே நேரம் பட்டியல் இனத்தவருக்கான 16 சதவிகித இட ஒதுக்கீட்டை 12 சதவிகிதமாகக் குறைத்தது.

இட ஒதுக்கீடு இல்லாத மாநிலம்

பட மூலாதாரம், CGABAR KH

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 14 சதவிகித இடஒதுக்கீடு மாற்றப்படாமல் அப்படியே வைக்கப்பட்டது.

இந்த இடஒதுக்கீட்டு முறையை எதிர்த்து சில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பலர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதற்குப் பிறகு 2018 இல் வந்த பூபேஷ் பகேல் அரசு, 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி புதிய இடஒதுக்கீடு முறையை அமல்படுத்துவதாக அறிவித்தது.

இந்தப் புதிய முறையில், பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீடு 12 சதவிகிதத்தில் இருந்து 13 சதவிகிதமாகவும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடஒதுக்கீடு 14 சதவிகிதத்தில் இருந்து 27 சதவிகிதமாகவும் உயர்த்தப்பட்டது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டைச் சேர்த்த பிறகு, சத்தீஸ்கரில் இடஒதுக்கீட்டின் அளவு 82 சதவிகிதத்தை எட்டியது.

பூபேஷ் பகேல் அரசின் இந்த முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்றம் இந்த இடஒதுக்கீட்டு முறையை தடை செய்தது.

பின்னர் , 2012ல் ரமண் சிங் அரசு கொண்டு வந்த இடஒதுக்கீடு முறையே மாநிலத்தில் அமலில் இருந்தது.

ஆனால் இந்த ஆண்டு செப்டம்பர் 19 ஆம் தேதி சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், ரமன் சிங் அரசு கொண்டுவந்த இடஒதுக்கீடு முறையானது உறுதியான அடிப்படையின்றி அமல் செய்யப்பட்டது என்றும் 50 சதவிகித இடஒதுக்கீட்டை விட அதில் அதிகம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறி, 2012ஆம் ஆண்டின் இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்தது.

”பட்டியல் சாதியினரின் இடஒதுக்கீட்டு சதவிகிதத்தை குறைப்பதற்கும் பழங்குடியினரின் இடஒதுக்கீட்டு சதவிகிதத்தை அதிகரிப்பதற்கும் நியாயமான காரணம் எதுவும் கூறப்படவில்லை,” என்று அரசியலமைப்பு நிபுணரும் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் அட்வகேட் ஜெனரலுமான கனக் திவாரி கூறினார்.

இட ஒதுக்கீடு இல்லாத மாநிலம்

பட மூலாதாரம், CGABAR KH

“உண்மையில் இடஒதுக்கீட்டின் சதவிகிதம் நிர்ணயிக்கப்படும்போது ஒரு பட்டியல் முறை உருவாக்கப்படுகிறது. யாருக்கு முதல் இடம், யாருக்கு இரண்டாவது, யாருக்கு மூன்றாவது என்று வெவ்வேறு வகுப்புகளுக்கு இடையே இது பிரிக்கப்படுகிறது. தற்போது உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால் புதிய சதவிகிதத்த்தை அமல்படுத்த முடியாது,”என்று கனக் திவாரி பிபிசியிடம் தெரிவித்தார்.

இட ஒதுக்கீட்டில் அரசியல்

சத்தீஸ்கரில் 2012-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டு முறை மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசும் எதிர்கட்சிகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தங்கள் அரசு அமல்படுத்திய இடஒதுக்கீடு விதிகளுக்கு தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருவதாக எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

பழங்குடியினருக்கு 32% இடஒதுக்கீடு வழங்குவதை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை. அதனால்தான் காங்கிரஸ் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் நாராயண் சண்டேல் பிபிசியிடம், "உயர்நீதிமன்றத்தில் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான வாதங்களையும் உண்மைகளையும் பூபேஷ் பகேலின் அரசு முன்வைக்கவில்லை. அதனால்தான் 2012 முதல் அமல்படுத்தப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது," என்றார்.

"இப்போது இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையில், பழங்குடியினருக்கு 32 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான அரசாணையை ஏன் அரசு கொண்டு வரவில்லை? செப்டம்பர் மாதம் தீர்ப்பு வந்தது. இத்தனை நாட்களாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?"என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ரமன் சிங் அரசால் அமல்படுத்தப்பட்ட பழங்குடியின இட ஒதுக்கீட்டை எதிர்த்த தலைவரான கே.பி.காண்டேவை, பட்டியல் சாதிகள் ஆணையத்தின் தலைவராக பூபேஷ் பகேலின் அரசு ஆக்கியது என்று சத்தீஸ்கரின் முன்னாள் அமைச்சரும், பாஜகவின் பழங்குடியின தலைவருமான கேதார் காஷ்யப் செய்தியாளர் சந்திப்பில் குற்றம் சாட்டினார்.

மறுபுறம், பூபேஷ் பகேல் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட இடஒதுக்கீடு முறையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த குணால் சுக்லாவையும் ஆராய்ச்சி பெஞ்ச் தலைவராக பூபேஷ் அரசு ஆக்கியது.

இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக விவாதிக்க மாநில சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தொடரை அழைத்திருப்பதை அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் சுட்டிக்காட்டுகிறார்.

ஆட்சியில் இருந்தபோது, பாரதிய ஜனதா கட்சி தனது இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஆதரவாகத் தேவையான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காததால், இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

ஆனால் இடஒதுக்கீடு விவகாரத்தில் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், பஸ்தரின் பழங்குடியின தலைவருமான அரவிந்த் நேதம் தனது கட்சி அரசுக்கு எதிராகவே போர்கொடி தூக்கியுள்ளார்.

இட ஒதுக்கீடு

பட மூலாதாரம், CGABAR KH

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அரவிந்த் நேதம், சத்தீஸ்கரில் உள்ள எல்லா பழங்குடியின சமூகங்களின் பாதுகாவலராகவும் உள்ளார். பழங்குடியினரை அரசு வஞ்சிக்கிறது என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.

“கடந்த இரண்டு மாதங்களில் இந்த அரசு பழங்குடியின நலன்களுக்கு இரண்டு பெரிய அடிகளை கொடுத்துள்ளது. முதலாவதாக, Panchayat extension schedule area சட்டத்தின் விதிகளில் பழங்குடியினர் ஓரங்கட்டப்பட்டனர்.

இரண்டாவது மாநிலத்தில் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இதற்குப் பிறகும் அரசு பழங்குடியினருடன் நிற்பதாகச் சொல்கிறது. இது ஒரு கொடூரமான நகைச்சுவை," என்று அரவிந்த் நேதம் கூறினார்.

சத்தீஸ்கரில் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும், சட்டப்பேரவையிலும் என்ன நடக்கும் என்பதை அனைவரும் எதிர் நோக்கியுள்ளனர்.

ஆனால் சத்தீஸ்கரில் இடஒதுக்கீட்டின் அதிகபட்ச அளவு என்னவாக இருக்கும் என்பது மிகப்பெரிய கேள்வி.

பூபேஷ் பகேலின் அரசு, 2012-ல் பாஜகவின் ரமண் சிங் அரசு அமல்படுத்திய இடஒதுக்கீட்டு கொள்கையை ஆதரிக்குமா அல்லது 2019இல் தான் கொண்டு வந்த இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல் செய்ய வேறு ஏதாவது வழி தேடுமா? இதற்கு வரும்நாட்கள்தான் பதில் சொல்லும்.

காணொளிக் குறிப்பு, EWS இட ஒதுக்கீடு என்பது என்ன? தமிழ்நாட்டில் அதற்கு எதிர்ப்பு ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: