EWS உயர் வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு: இந்திரா சாஹ்னி வழக்கின் தீர்ப்பு என்ன சொல்கிறது?

இந்திய உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில், மண்டல் கமிஷன் வழக்கு என்ற இந்திரா சாஹ்னி வழக்கு தற்போது பெரிய அளவில் விவாதிக்கப்படுகிறது. 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு வழங்கிய அந்த வழக்கு பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஏற்றதா?

பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கலாமா என்ற வழக்கில், தற்போது தீர்ப்பளித்துள்ள இந்திய உச்ச நீதிமன்றம், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது செல்லும் என கூறியுள்ளது.

ஐந்து நீதிபதிகளில் மூன்று பேர் இதனை ஆதரித்தும் இருவர் எதிர்த்தும் தீர்ப்பெழுதியுள்ளனர். ஒரு நீதிபதி, பொருளதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளித்தால், அதனை எல்லாப் பிரிவினருக்கும் அளிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். ஆனால் உண்மையில் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை இந்திய அரசியலமைப்பு ஏற்கிறதா?

சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்களை முன்னேற்ற சிறப்புச் சலுகைகள் அளிப்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 15(4) மற்றும் 16(4) ஆகியவை அனுமதிக்கின்றன. இதன் அடிப்படையில்தான் இந்தியாவில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவந்தது.

கலேல்கர் ஆணையம்

பட்டியலினத்தோர் மற்றும் பழங்குடியிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலேயே இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 46 மற்றும் 335 ஆகியவை இதை உறுதிசெய்கின்றன. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோரின் நிலை குறித்து அறியவும் அவர்கள் பின்தங்கியிருந்தால் மேம்படுத்துவதற்காக செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயவும் தத்தாத்ரேய பாலகிருஷ்ண கலேல்கர் என்பவர் தலைமையில் ஒரு ஆணையம் 1953ல் அமைக்கப்பட்டது. முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்றும் கலேல்கர் ஆணையம் என்றும் அழைக்கப்பட்ட இந்த ஆணையம் 1955ல் தனது பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்தது. இந்தியா முழுவதும் 2399 ஜாதிகள் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளாகவும் 837 ஜாதிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளாகவும் இருப்பதாக இந்த ஆணையம் கூறியது. இந்த ஜாதியினரிடம் கல்வி அறிவு இல்லாமையே பின்தங்கிய தன்மைக்குக் காரணம் எனக் குறிப்பிட்ட ஆணையம், 6 வயது முதல் 14 வயது வரை கல்வியைக் கட்டாயமாக்க வேண்டுமென்று கூறியது. தொழிற்கல்வி நிலையங்களில் 70 சதவீதம் இட ஒதுக்கீடு தர வேண்டுமென்றும் இந்த ஆணையம் பரிந்துரைத்தது. பின்தங்கிய நிலையை அளவிட ஜாதியை அடிப்படையாகக் கொண்டு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. ஆனால், இந்த ஆணையத்தின் தலைவராக இருந்த கலேல்கரே இந்தப் பரிந்துரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும் ஆணையத்தின் ஐந்து உறுப்பினர்களும் பரிந்துரைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

கல்வியில் இட ஒதுக்கீடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கல்வியில் இட ஒதுக்கீடு

இந்த ஆணையத்தின் பரிந்துரை மீதான அரசின் குறிப்பு 1956ல் அப்போதைய உள்துறை அமைச்சர் ஜி.பி. பந்தால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கலேல்கர் ஆணையத்தின் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன. பின்தங்கிய தன்மையை அளவிட சரியான அளவுகோல்கள் பயன்படுத்தப்படவில்லை என அரசு காரணம் கூறியது.

ஜாதியை மட்டும் வைத்து பின்தங்கியவர்களை வரையறுக்க முடியாது என்று கூறிய மத்திய அரசு, மாநில அரசுகள் தங்களுக்கேற்ற அளவுகோல்களைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தது. ஆனால், ஜாதியைவிட பொருளாதார அளவுகோல்களை வைத்தே பின்தங்கிய தன்மையை அளவிடலாம் என்றும் தெரிவித்தது. இதற்குப் பிறகு பிற்படுத்தப்பட்டோர் நிலை குறித்து அறிய எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், 1979ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தது.

மண்டல் ஆணையம்

இந்த ஆணையத்தின் தலைவராக பீஹார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பி.பி. மண்டல் நியமிக்கப்பட்டார். இந்த ஆணையம் மூன்று விஷயங்களைப் பற்றி தன் பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும்.

  • சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பின்தங்கியிருப்பவர்கள் என்பதை வரையறுப்பதற்கான விதியை வகுக்க வேண்டும்.

  • 2. இம்மாதிரி சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பின்தங்கியிருப்பவர்களை மேம்படுத்த என்ன செய்ய வேண்டுமென்பதைப் பரிந்துரைக்க வேண்டும்.
  • 3. இம்மாதிரி பின்தங்கிய வகுப்பினருக்கு வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்க வேண்டும்.

1980ஆம் ஆண்டு மண்டல் ஆணையம் தனது பரிந்துரைகளை அரசிடம் சமர்ப்பித்தது. பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான 11 குறியீடுகளை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

அவை, சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்டோர், கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டோர். இந்த வகையில் இந்தியாவில் மொத்தமாக 3,743 ஜாதியினர் பிற்படுத்தப்பட்ட ஜாதியினராக இருப்பதாக இந்த ஆணையம் கண்டறிந்தது.

1931ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1971ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை வைத்து, இந்தியாவில் 52 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் என வரையறுத்தது.

ஏற்கனவே பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கு 22.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுவரும் நிலையில், ஓபிசிக்களின் எண்ணிக்கை அளவுக்கு அதாவது 52 சதவீத இட ஒதுக்கீடு அளித்தால், அது 50 சதவீதம் என்ற எல்லையைத் தாண்டிவிடும் என்பதால், வெறும் 27 சதவீத இட ஒதுக்கீட்டை அளிக்க ஆணையம் முடிவுசெய்தது.

குடிமை பணி நியமனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், அரசின் உதவியைப் பெறும் நிறுவனங்கள் ஆகியவற்றில் இந்த இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் நிதியால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டு விதி பொருந்தும் என்றது ஆணையம்.

இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் வெளியான உடனேயே, ஓபிசிக்களின் மக்கள் தொகை 52 சதவீதம் இருக்காது என பலரும் விமர்சித்தனர். மேலும், கலேல்கர் ஆணையத்தின் பரிந்துரைகள் எப்படி ஓரங்கட்டப்பட்டனவோ, அப்படித்தான் இந்தப் பரிந்துரைகளும் ஓரங்கட்டப்படும் என பலரும் கருதினர்.

இதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் இந்த அறிக்கை மீது நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில், 1990ல் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது, ஆணையத்தின் அறிக்கையைச் செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்தது. தமிழ்நாடு போன்ற சில மாநிலங்களைத் தவிர, நாடு முழுவதும் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு நிலவியது. முடிவில், வி.பி. சிங் அரசு கவிழ்ந்தது.

வி.பி. சிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வி.பி. சிங்

இதற்குப் பிறகு பிரதமராக வந்த நரசிம்மராவ், ஓபிசிகளுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் அதில் ஏழ்மையான பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பு தெரிவித்தது. இதன் மூலம் மொத்த இட ஒதுக்கீட்டின் அளவு 59.5ஆக உயர்ந்தது. இந்த அறிவிப்புக்கு மீண்டும் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்திரா சஹானி வழக்கு என்ன?

இந்த அறிவிப்புகள், வேலை வாய்ப்பில் எல்லோருக்கும் சமவாய்ப்பு அளிக்க வேண்டுமென்ற அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 16க்கு முரண்பாடானவை எனக் கூறி இந்திரா சஹானி என்ற பத்திரிகையாளர் பொது நல வழக்கு ஒன்றைத் தொடுத்தார். மேலும் பலரும் இதுபோன்ற வழக்குகளைத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றமும் எழுப்பி, அதற்கு பதில் காண முயன்றது. எம். கனியா, எம். வெங்கடாசலய்யா, எஸ். ரத்னவேல் பாண்டியன், டி. அகமதி, கே. சிங், பி. சாவந்த், ஆர். சஹாய், பி.ஜே. ரெட்டி உள்ளிட்ட ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

மனுதாரர்களின் சார்பில் என்.ஏ. பல்கிவாலா, கே.கே. வேணுகோபால் போன்ற மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராயினர். இட ஒதுக்கீடு அளிப்பதால், திறமையானவர்கள் ஒதுக்கப்படுவார்கள்; திறமையற்றவர்கள் பதவிகளுக்கு வருவார்கள் என்பது போன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவதால், இந்தியாவில் ஜாதி அமைப்பு மேலும் வலுப்படும் என்றார்கள்.

தவிர, இந்த ஆணையமானது 1931ஆம் ஆண்டின் ஜாதிவாரி கணக்கெடுப்பை வைத்து ஓபிசி சதவீதத்தை மதிப்பிட்டிருக்கிறது. அதனை ஏற்க முடியாது. மறுபடியும் புதிதாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. இந்த அறிக்கையானது அரசியல் சாஸனத்தையே திருத்தி எழுதுகிறது என்றும் குறிப்பிட்டார்கள். இந்த வாதங்களுக்கு அரசுத் தரப்பில் எதிர் வாதங்கள் வைக்கப்பட்டன.

இந்திரா சஹானி வழக்கு

பட மூலாதாரம், Getty Images

இந்த வழக்கில் 16 நவம்பர் 1992ல் தீர்ப்பளிக்கப்பட்ட போது நான்கு நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கினார்கள். மீதமுள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் வேறுபட்டார்கள். ஆனால், 6:3 என்ற விகிதத்தில் பெரும்பாலான கேள்விகளுக்கு விடையளிக்கப்பட்டன.

இந்திய சமூகத்தை அரித்துக்கொண்டிருக்கும் புற்றுநோயாக ஜாதியை குறிப்பிட்ட இந்தத் தீர்ப்பு, இந்திய சமூகத்தில் ஒருவர் பின்தங்கியவரா என்பதை அடையாளம் காண ஜாதியே அளவுகோல் எனக் குறிப்பிட்டது. இந்து அல்லாதவர்களை, அவர்களது கல்வி மற்றும் பொருளாதார நிலையை வைத்து அடையாளம் காணவேண்டும் என்றது.

ஆனால், இந்த இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த வசதியானவர்கள் பறித்துக்கொள்வதை அனுமதிக்க முடியாது என்பதால் வசதியானவர்கள், பதவிகளை அனுபவித்தவர்கள் இடஒதுக்கீட்டை பெறுவதிலிருந்து தடுக்கப்படவேண்டும் என நீதிமன்றம் குறிப்பிட்டது. ஆனால், யார் வசதியானவர்கள் என்பதை அரசு தீர்மானிக்கலாம் என்றது.

மேலும், பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது அரசியல் சாசன விரோதம் என நீதிமன்றம் குறிப்பிட்டது. அரசியல் சா;னம் அதை அனுமதிக்கவில்லையென்பதோடு, இட ஒதுக்கீடு என்பது வரலாற்று ரீதியில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களை மேம்படுத்துவதற்கான ஒரு வழியே தவிர, வறுமையை போக்குவதற்கான திட்டமல்ல என்றும் குறிப்பிட்டது. மேலும், இட ஒதுக்கீட்டிற்கு உச்சபட்ச அளவாக 50 சதவீதம் என்பதை இந்த வழக்கு உறுதி செய்ததது.

ஆனால், பதவி உயர்வுகளுக்கும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமென்ற மண்டல் கமிஷன் பரிந்துரையை நீதிமன்றம் ஏற்கவில்லை. நியமனங்களுக்கு மட்டுமே அது செல்லுமெனக் கூறியது. பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை அடையாளம் காண தேசிய மட்டத்திலும் மாநில மட்டத்திலும் ஆணையங்களை உருவாக்க வேண்டுமென்றும் பரிந்துரைத்தது.

இந்தத் தீர்ப்பை முன்னெறிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்தனர். வி.பி. சிங் அரசு மண்டல் கமிஷன் அறிக்கையை ஏற்கப்போவதாக சொன்னபோது ஏற்பட்ட வன்முறை அளவுக்கு இல்லாவிட்டாலும், பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.

தீர்ப்பு வெளியாகி மூன்றாண்டுகளுக்குப் பிறகு அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 16ல் 4A என்கிற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. இதன் மூலம் பட்டியலினத்தவருக்கும் பழங்குடியினருக்கும் பதவி உயர்வுகளிலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

2006ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில் மத்தியக் கல்வி நிலையங்கள் (சேர்க்கையில் இட ஒதுக்கீடு) சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அரசின் நிதி உதவி பெறும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் ஓபிசிகளுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட ரிட் மனுக்களை, உச்ச நீதிமன்றம் இரு ஆண்டுகளுக்குப் பிறகு தள்ளுபடி செய்தது.

2012ஆம் ஆண்டில் ஆரம்பக் கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது சரியென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் மூலம் தனியார் பள்ளி உட்பட அனைத்து பள்ளிக்கூடங்களிலும் 25 சதவீதம் சமூக - பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு வழங்குவதை நீதிமன்றம் உறுதி செய்தது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு மூன்று முக்கியமான விஷயங்களைத் தீர்மானித்தது:

  • மொத்த இட ஒதுக்கீடு 50 சதவீதத்தைத் தாண்டக் கூடாது.
  • சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் பின்தங்கியிருப்பதை உறுதிசெய்ய ஜாதியே அடிப்படையாகக் கொள்ளப்படும், பொருளாதார ரீதியில் பின்தங்கியிருப்போருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
  • இட ஒதுக்கீடு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டவர்களில் பொருளாதார ரீதியில் முன்னேறியவர்களுக்கு அளிக்கக்கூடாது.

இந்திரா சஹானி வழக்கில் 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு செல்லும் என வழங்கப்பட்ட தீர்ப்பை ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வே வழங்கியுள்ளது. 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு வழங்கிய ஒரு தீர்ப்பின் முக்கியமான அம்சங்களை ஐந்து நீதிபதிகளைக் கொண்ட ஒரு அமர்வு மாற்றியமைக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

இதனை அடிப்படையாக வைத்தே இந்தத் தீர்ப்பை ஏற்காத அரசியல் கட்சிகள் மறுசீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்யக்கூடும்.

காணொளிக் குறிப்பு, "தப்பு செஞ்சா முகத்தை காட்டுவாங்களா?" - கோவை சம்பவத்தில் கைதானவர்களின் குடும்பங்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: