'பொதுப் பிரிவில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சிக்கு இடம் கொடுப்பதாகச் சொல்வது அண்டப் புளுகு' - தொல். திருமாவளவன்

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு, மனு ஸ்மிருதியின் சர்ச்சைக்குரிய பகுதிகளை பிரசுரித்து விநியோகிப்பது என தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டிற்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாகவும் சொல்லியிருக்கிறார். இவையெல்லாம் குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் திருமாவளவன். அந்தப் பேட்டியிலிருந்து:
கே. முன்னேறிய வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டை வி.சி.க. கடுமையாக எதிர்க்கிறது. இதற்குக் காரணம் என்ன?
ப. பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு உதவ வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அவர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் பொருளாதாரத்தில் மேம்படுவதற்கு அரசு உதவ வேண்டும். கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பது சமூக நீதி அடிப்படையில்தான் வழங்கப்பட்டு வருகிறது. பொருளாதார அடிப்படையில் வழங்குவதில்லை என்ற முடிவு, அரசியலமைப்பு நிர்ணய சபையிலேயே விவாதித்து முடிவெடுக்கப்பட்டது. அதற்கு நேர் மாறாக இந்த சட்டமும் இந்தத் தீர்ப்பும் அமைந்துள்ளது என்பதால் இதனை எதிர்க்கிறோம்.
பொருளாதார ரீதியில் நலிவடைந்தோருக்கு கட்டணமில்லாமல் கல்வியை வழங்கலாம். கடனுதவி வழங்கலாம். வரி குறைப்பு, வரி விலக்கு செய்யலாம். ஆனால், வீம்புக்கு எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்குவதைப் போல, முன்னேறிய வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்குவது என்ற ஆர்.எஸ்.எஸ்சின் கொள்கையை பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்துகிறது. அதனை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது. ஆகவே, இது சமூக நீதிக் கோட்பாட்டிற்கு எதிரான சதிச் செயல் என்று கருதுகிறோம்.
சமூக நீதிக் கோட்பாடு என்பது ஜாதியின் பெயரால் வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு சமூகத் தகுதியை உயர்த்துவதற்காக வழங்கப்பட்ட ஒரு முன்னுரிமை. இது புரியாதவர்கள் அல்ல அவர்கள். ஆனால், சமூகநீதிக் கோட்பாட்டின் அடிப்படையைத் தகர்ப்பதுதான் அவர்களது நோக்கம்.
இந்த மண்ணில் சமத்துவம் என்பது சமூகத் தகுதியோடு தொடர்புடையதாக இருக்கிறது. பிறப்போடு தொடர்புடையது. ஏழையாய் இருக்கிற பிராமணனுக்கு இந்த சமூகத்தில் மரியாதை உண்டு. அவர் கோவிலின் கருவறைக்குள் பூசாரியாக அமர முடியும். ஆனால், பணக்காரனாக இருந்தாலும் சத்திரியனோ, சூத்திரனோ கோவிலின் கருவறைக்குள் நுழைய முடியாது. பட்டியல் சமூகத்தைச் சார்ந்த அவர்ணஸ்தர்கள் கோவிலின் அருகில்கூட செல்ல முடியாது
ஆகவே, இங்கு சமூகம்தான் பிரதானமாக இருக்கிறது. அதற்கு முதன்மைத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் உருவானதுதான் சமூகநீதிக் கோட்பாடு. அதைச் சிதைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சங் பரிவார அமைப்புகள் நீண்ட காலமாகவே வெளிப்படையாக பேசிவருகின்றன.
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இடஒதுக்கீடு என்ற பெயரால், முன்னேறிய சமூகத்திற்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவோம் என இந்தச் சட்டம் சொல்கிறது. இதுவே அவர்கள் உள்நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு என்றால் எஸ்.சி., ஓ.பி.சி. என எல்லோருக்குமே பொருந்தும். அவர்களுக்கு ஏற்கனவே இட ஒதுக்கீடு இருக்கிறது என்கிறார்கள். அப்படியானால், இப்போது வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு எனச் சொல்ல வேண்டாமே.. முன்னேறிய வகுப்பினருக்கு பத்து சதவீதம் இட ஒதுக்கீடு தருகிறோம் என நேரடியாகச் சொல்லிவிடலாம். எதற்காக EWS என பூசி மொழுக வேண்டும்?
கே. அப்படி முன்னேறிய சமூகத்தினருக்குக் கொடுத்தால் அது ஏற்புடையதா?
ப. அப்படிக் கொடுத்தால் அது சமூக நீதிக்குப் பொருந்தாதல்லவா? சமூக ரீதியில் கீழே இருப்பவர்கள், வஞ்சிக்கப்படுபவர்களுக்கு வழங்கப்படுவதுதான் சமூக நீதி. அதிலிருந்து தப்பிப்பதற்காக, பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு வழங்குவதாகச் சொல்கிறார்கள். பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை.
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தபோது எந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் கொடுத்தீர்கள் எனக் கேட்டார்கள். இப்போது பத்து சதவீதம் வழங்குகிறார்களே, அதற்கு என்ன அடிப்படை? முன்னேறிய சமூகத்தில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் பத்து சதவீதம் பேர் இருக்கிறார்கள் என யார் சொன்னது? அதற்கு என்ன அடிப்படை? இது வீம்புக்குச் செய்கிற வேலை. இது ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களின் நோக்கம்.
முன்னேறிய சமூகத்தின் மொத்த மக்கள் தொகையே பத்து சதவீதம் இருக்காது. அதில் பிராமண சமூகத்தினர் மூன்று முதல் நான்கு சதவீதம் இருப்பார்கள். அதிலும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் மிகவும் குறைவாக இருப்பார்கள். முன்னேறிய சமூகத்தினர் 15 சதவீதம் இருப்பதாக வைத்துக்கொண்டாலும், பொருளாதார ரீதியில் பின்தங்கியோர் அந்த 15 சதவீதத்தில் மூன்று அல்லது நான்கு சதவீதம்தான் இருப்பார்கள்.
எஸ்.சி., எஸ்.டிக்கான இட ஒதுக்கீட்டிற்கு ஒரு கால வரம்பு இருக்கிறது. 10 ஆண்டுகள்தான். அதற்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், இந்த இட ஒதுக்கீட்டிற்கு என்ன கால வரம்பு இருக்கிறது? எவ்வளவு காலத்திற்கு இதை அளிக்கப் போகிறார்கள்? 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியிருக்கிறபோது, அதைவிட சிறிய அமர்வாக இருக்கிற ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு எப்படி அதற்கு மாறான தீர்ப்பைச் சொல்ல முடியும்?

பட மூலாதாரம், Getty Images
கே. ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கத்தான் 50 சதவீத கணக்குப் பொருந்தும். பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டிற்குப் பொருந்தாது என்கிறார்களே..
ப. மொத்தமே ஐம்பது சதவீதம்தான் என்பதுதான் நீதிமன்றத் தீர்ப்பு. ஜாதி அடிப்படையிலா, பொருளாதார அடிப்படையிலா என்பதெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. மத்திய அரசே 9 நீதிபதிகள் அளித்த தீர்ப்பை மீறினால், நீதிமன்றத்திற்கு என்ன மரியாதை இருக்கிறது? ஆர்.எஸ்.எஸ். சங் பரிவாரங்களின் செயல் திட்டத்தை பா.ஜ.க. தனக்கு உள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி செயல்படுத்துகிறது.
கே. இதனை ஆர்.எஸ்.எஸ்சின் செயல் திட்டம் என்கிறீர்கள். காங்கிரசும் சி.பி.எம்மும்கூட இதனை ஆதரிக்கின்றன. ஆகவே சில கட்சிகள் ஆதரிக்கின்றன, சில கட்சிகள் எதிர்க்கின்றன... அப்படித்தானே...
ப. சில கட்சிகள் எல்லாம் கிடையாது. தேசிய அளவில் காங்கிரசும் சி.பி.எம்மும் ஆதரிக்கின்றன. சி.பி.எம்மைப் பொருத்தவரை பொருளாதார அடிப்படையில் பிரச்னைகளை அணுக வேண்டும் என்பது அவர்களுடைய கொள்கைகளில் ஒன்று. ஏழையாய் இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற பொதுவான கருத்திலிருந்து இந்த நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்சின் உள்நோக்கத்தைப் புரிந்துவைத்திருந்தாலும் ஏழைகளுக்கு உதவுவதைத் தடுக்கக்கூடாது என்ற பொதுவான பார்வையின் அடிப்படையில் இதனை ஆதரிக்கிறார்கள். ஆனால், இவர்கள் நினைப்பதைப் போல ஆர்.எஸ்.எஸ். இதனை நினைக்கவில்லை என்பதை சி.பி.எம். தோழர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ்சிற்கு இருப்பது ஏழைகளின் மீதான பரிவு அல்ல. சமூக நீதிக்கு எதிரான சதி அது. சூத்திரர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதால் அவர்கள் அதிகாரம் பெறுகிறார்கள். எதிர்காலத்தில் இது பிராமணர் உள்ளிட்ட உயர் சாதியினரின் எதிர்காலத்தை இது பாதிக்கும் என நினைக்கிறார்கள். அதற்கான சதித் திட்டத்தோடு இந்த கருத்தை முன்வைக்கிறார்கள். இதை உணர்ந்தால் சி.பி.எம்மும் காங்கிரசும் ஏற்க மாட்டார்கள். காங்கிரஸ் கூடுதலாக சிம்ஹோ கமிஷன் மூலமாக இதனைக் கொண்டுவந்தோம் என்று சொல்வது அதிர்ச்சி அளிக்கிறது. காங்கிரசிற்குள் எப்போதும் சனாதன சக்திகள் இழையோடிக் கொண்டிருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த நிலைப்பாட்டை முன்னெடுத்திருக்கலாம்.
முன்பு எடுத்த நிலைப்பாடு என்பதால் இன்றைக்கும் அதைத் தக்கவைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், இது ஒரு தவறான நிலைப்பாடு. அவர்கள் வாக்கு வங்கிக்காக இதைச் செய்கிறார்களோ என்ற கருத்தும் எனக்கு இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
கே. தமிழ்நாட்டில் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு இருக்கிறது. ஆனால், தேசிய அளவில் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியானால், இந்த சமூக நீதி அரசியலின் எதிர்காலம் என்ன?
ப. ஒட்டுமொத்த இட ஒதுக்கீடே அழிக்கப்பட்டுவிடும். சமீபத்தில்கூட ஒருவர், எஸ்.சி., எஸ்.டிகளுக்கான இட ஒதுக்கீட்டை தரக்கூடாது என வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இனிமே இட ஒதுக்கீடு ஜாதி அடிப்படையில் இருக்கக்கூடாது, ஏழைகளுக்கு மட்டும்தான் தர வேண்டும் என்பார்கள். ஓ.பி.சிகளுக்கு வருமான வரம்பு இருப்பதால், அதை அளவுகோலாக வைத்து முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கிறார்கள். முன்னேறிய வகுப்பினருக்கு சமூக நீதிக் கோட்பாடு பொருந்தாது. இருந்தாலும் அவர்களுக்கு எட்டு லட்சம் வரம்பாக வைத்திருப்பதால், தங்களுக்கும் எட்டு லட்சம் என்பதை வரம்பாக வைத்து, அதற்குக் கீழே உள்ள ஆட்கள் எல்லாம் ஏழைகள் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
கே. தேசிய அளவில் வி.பி. சிங், லாலு பிரசாத் போன்ற சமூக நீதி பேசக்கூடிய தலைவர்கள் இல்லாத நிலையில் இந்த விவகாரத்தை எப்படி தேசிய அளவில் எடுத்துச் செல்வீர்கள்?
ப. எடுத்துச் செல்ல வேண்டும். ஆர்.எஸ்.எஸ்சின் சதித்திட்டத்தை வட இந்தியாவில் உள்ள ஜன நாயக சக்திகளும் புரிந்துகொண்டால், ஒரு ஒருங்கிணைந்த போராட்டம் இந்திய அளவிலும் நடக்கும். இப்போது ஆங்காங்கே உணரத் துவங்கியிருக்கிறார்கள். சந்திரசேகர ராவ், மமதா பானர்ஜி, நிதீஷ் குமார், உத்தவ் தாக்கரே என பலரும் பா.ஜ.கவை எதிர்க்கிறார்கள். அக்கட்சியோடு கூட்டணி வைத்த பலரும் அதிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள்.
தலித் சமூகத்தைச் சேர்ந்த, ஓ.பி.சி. சமூகத்தைச் சேர்ந்த ஜனநாயக சக்திகள் இந்த சனாதன அரசியலை எதிர்க்கிறார்கள். இவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு முக்கியமான தலைவர்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் முக்கியமாக தி.மு.கவுக்கு இருக்கிறது. வி.சி.கவைப் பொறுத்தவை எங்களால் ஆனதை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

கே. இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட பிறகு மீதமுள்ள 50 சதவீதத்திலும் பெரும்பான்மை இடங்கள் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கே செல்கிறது. ஆகவே முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் எந்த இடமும் கிடைப்பதில்லை என்கிறார்கள்...
ப. அப்படியானால், ஏன் பொருளாதார ரீதியில் பின்தங்கியோர் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். சமூக ரீதியில் இந்த விஷயத்தை முன்வையுங்கள். அப்போது விவாதிப்போம். இது முழுக்க முழுக்கத் தவறான வாதம். தவறான தகவல். எஸ்.சி., எஸ்.டியில் முன்னணியில் வருபவர்கள்கூட அவர்கள் பொதுப் பிரிவில் இடம்பெறத் தக்கவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவில்தான் இடம் கொடுக்கிறார்கள். அரிதாகத்தான் அவர்களுக்குப் பொதுப் பிரிவில் இடம் கிடைக்கிறது. ஓ.பி.சிக்கான இட ஒதுக்கீடு 27 சதவீதமாக இருந்தாலும் அதிகபட்சமாக 12 சதவீதத்திற்கு மேல் எந்தத் துறையிலும் அது நிரப்பப்படுவதில்லை. தகுதியான இட ஒதுக்கீட்டையே நிரப்பாத இவர்கள் எப்படி, பொதுப் பிரிவு இடங்களைக் கொடுக்கப் போகிறார்கள்?
பழங்குடியினருக்கு 7.5 சதவீதம் இருந்தாலும் அதில் ஒரு சதவீதம் கூட நிரப்பப்படுவதில்லை. எஸ்.சிக்களைப் பொறுத்தவரை 6-7 சதவீதம்தான் நிரப்பியிருப்பார்கள். மத்திய அரசு, மாநில அரசு இரண்டிலும் இதுதான் நிலை.
பொதுத் துறை நிறுவனங்களில் கீழ் நிலைப் பணிகளில் இதுபோன்ற இட ஒதுக்கீடுகளைச் சரியாக நிரப்புவார்கள். உச்ச நீதிமன்றத்தில் பிரமாண நீதிபதிகள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். போன்ற இடங்களிலும் அவர்கள் எண்ணிக்கையைவிட பல பத்து மடங்கு இடங்களை நிரப்புகிறார்கள். ஓ.பி.சி. பேராசிரியர்களே அங்கே கிடையாது. எஸ்.சி., எஸ்.டியாவது ஒன்றிரண்டு பேர் இருக்கிறார்கள். துணைப் பேராசியர் பணியிடங்களிலும் எஸ்.சி., எஸ்.டி கிடையவே கிடையாது. இதுபோன்ற அதிகாரமிக்க இடங்களில், வாய்ப்புகளில் ஓபிசிகளுக்கோ, ஒடுக்கப்பட்ட, பழங்குடியினருக்கோ இடமே கிடையாது. இந்த நிலையில், பொதுப் பிரிவில் இவர்களுக்கு இடம் கொடுப்பதாகச் சொல்வது அண்டப் புளுகு.
கே. சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் முரண்பட்ட ஒரு நீதிபதி, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கினால், அதை எல்லோருக்கும் வழங்குங்கள் என்று சொல்லித்தான் மறுப்பைப் பதிவுசெய்திருக்கிறார். இப்படி எல்லா ஜாதியினரிலும் பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை ஏற்கிறீர்களா?
ப. எங்கள் தரப்பு வாதத்தின்போது, இந்தப் பார்வையில் உள்ள பிழையைச் சுட்டக்காட்டியிருக்கிறோம். எல்லோருக்கும் பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு தாருங்கள், நாங்கள் அதை ஏற்கிறோம் என்று இதற்கு அர்த்தமல்ல. அடிப்படையிலேயே இந்த இட ஒதுக்கீடு எப்படி பாரபட்சமானது என்பதற்காகத்தான் இந்த வாதம் முன்வைக்கப்படுகிறது. பொருளாதார அடிப்படையில் ஒரு சிலருக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கப்படுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்றுகூறி எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். வி.சி.க. அதில் உடன்படுகிறது.
கே. அடுத்ததாக இதற்கான போராட்டத்தை எப்படி நடத்தப் போகிறீர்கள்.. நீதிமன்றத்திலா அல்லது மக்கள் மத்தியிலா?
ப. இது அரசியல் ரீதியாக வலுப்பெறும்போதுதான் நீதிமன்றத்திலும் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சமூக நீதிக் கோட்பாட்டிற்கு எதிராக பின்னப்பட்டிருக்கிற சதிவலையை அறுத்தெறிய வேண்டும். இல்லாவிட்டால் சமூக நீதியே போய்விடும். அது போய்விட்டால், மறுபடியும் சனாதனம் கட்டமைப்பு உருவாகிவிடும். சமத்துவத்திற்கு வாய்ப்பே இருக்காது.
கே. ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். உங்கள் கருத்து என்ன?
ப. இது தமிழ்ச் சமூகத்தின் வெற்றி. காலம் கடந்த தீர்ப்பு என்றாலும் இதை வரவேற்கிறோம். நீதிபதிகளுக்கு பாராட்டுதல்களையும் நன்றியையும் உரித்தாக்குகிறோம். இவர்களை விடுவித்ததற்கு நீதிமன்றம் மூன்று காரணங்களைக் குறிப்பிடுகிறது. ஒன்று, நன்னடத்தை. இரண்டாவது, பேரறிவாளன் விடுதலை. மூன்றாவது, தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம். இந்த மூன்றையும் வைத்துத்தான் உச்ச நீதிமன்றம் இவர்களை விடுவித்துள்ளது. இதில், ஆளுநர் தன் கடமையைச் செய்யத் தவறியிருக்கிறார் என்று சொல்லியிருக்கிறது.
ஆளுநர் இதற்குப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். மாநில அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்பதைத் தெரிவித்திருக்கிறது. தமிழர் விரோதப் போக்கை ஆளுநர் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார். வி.சி.கவின் சார்பில் ஆளுநர் பதவிவிலக வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

கே. இந்த விடுதலையை எதிர்ப்பவர்கள் வைக்கும் முக்கியமான கேள்வி, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது உடன் மேலும் பலர் கொல்லப்பட்டார்கள். அவர்களுக்கு நீதி வேண்டாமா எனக் கேட்கிறார்கள்...
ப. நீதி வழங்கப்பட்டதாகத்தானே பொருள். இவர்கள் தண்டிக்கப்பட்டு அடுத்த நாளே வெளியில் வரவில்லையே. 30 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார்களே. அவர்கள் குற்றவாளியா, இல்லையா என்பது அடுத்த கேள்வி. ஆனால், அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். பொதுவாக 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க ஆளுநருக்கே அதிகாரம் உண்டு. 161வது பிரிவின் கீழ் நன்னடத்தை விதிகளின்படி அவர்களை விடுவிக்கலாம். அதுபோலத்தான் இவர்களையும் அணுக வேண்டும்.
ராஜீவ் காந்தி மிகப் பெரிய தலைவர். அவர் கொல்லப்பட்டது ஏற்புடையதல்ல. சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால், அவர்கள் சாகும்வரை உள்ளேயே கிடக்கவேண்டும் என்ற பார்வை சரியானதல்ல. ராஜீவ் காந்தியின் துணைவியார் சோனியா காந்தி, மனிதாபிமான அடிப்படையில் நளினிக்கு தூக்கு தண்டனை வேண்டாம், ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என அப்போதே குடியரசுத் தலைவருக்கு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில், அவரது தண்டனை குறைக்கப்பட்டது. தனது கணவர் கொலையில் இந்தப் பெண்ணுக்கு பங்கிருக்கிறது, அவர் சாகும் வரை தண்டிக்கப்பட வேண்டும் என்ற வன்மத்தை அந்தக் குடும்பம் வெளிப்படுத்தவில்லை.
இத்தனை ஆண்டு காலத்தில், இவர்களை விடுவிக்கக்கூடாது என ராஜீவின் குடும்பத்திலிருந்து யாரும் பேசியதில்லை. அதிருப்தியான கருத்தைக்கூட சொன்னதில்லை. ராஜீவின் குடும்பத்திற்கு வன்மம் இருப்பதாகத் தெரியவில்லை.
கே. ஆர்.எஸ்.எஸ்சின் ஊர்வலத்திற்கு மிகக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து, வழக்குத் தொடர்ந்தீர்கள்.. ஆர்.எஸ்.எஸ். எல்லா அமைப்புகளையும் போல ஒரு அமைப்பு. அவர்களை இவ்வளவு கடுமையாக எதிர்க்கிறீர்கள்?
ப. தனிப்பட்ட முறையில் எனக்கும் ஆர்எஸ்எஸ்சிற்கும் ஒன்றும் கிடையாது. எனக்கு எதிராக அவர்கள் எந்த செயலையும் செய்ததில்லை. ஆனால், நான் உள்வாங்கியுள்ள அரசியல் எனக்கு ஒரு புரிதலைத் தருகிறது. நான் அம்பேத்கர், பெரியார் அரசியலை உள்வாங்கியிருக்கிறோம். அவர்களது அரசியலில் இருந்து பார்க்கும்போது ஆர்எஸ்எஸ் ஒரு ஆபத்தான இயக்கம். அது வெளிப்படையான இயக்கமில்லை. பதிவுசெய்யப்பட்ட இயக்கமில்லை. யார் மாநிலத் தலைவர் போன்ற விஷயங்களை அவர்கள் இதுவரை அறிவித்ததே கிடையாது. பாபர் மசூதியை இடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்த இயக்கம். இது போன்ற எத்தனையோ சம்பவங்களோடு அவர்களுக்கு தொடர்பு உண்டு.
அவர்கள் முன்னெடுக்கும் அரசியல் ஆபத்தானது. இந்து ராஷ்ட்டிரம் என்பதை உரத்து முழங்குகிறார்கள். மதச்சார்பின்மை கூடாது, இந்து மதச் சார்புதான் வேண்டும் என்ற அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான அரசியலைப் பேசுகிறார்கள். அகண்ட பாரதம் பற்றிப் பேசுகிறார்கள். முஸ்லிம் வெறுப்பையும் இந்து வெறுப்பையும் நாள்தோறும் பரப்புகிறார்கள். அது அவர்களின் செயல் திட்டத்திலேயே இருக்கிறது. இந்து பெரும்பான்மைவாதத்தை தங்களுக்கான அரசியல் உத்தியாக பயன்படுத்திக்கொண்டு, வெளிப்படையாக சிறுபான்மையினரைத் தாக்குகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ். தனித்து இயங்கக்கூடிய அமைப்பு அல்ல. தமிழ்நாட்டில் இயங்கக்கூடிய இந்து முன்னணி உள்பட அனைத்து இயக்கங்களும் ஆர்எஸ்எஸ்சின் சித்தாந்தப்படியே இயங்குகின்றன. இவர்கள், இலக்கு இந்து தேசியவாதத்தை முன்வைப்பது. பழைய சனாதனக் கட்டமைப்பை, பிறப்பின் அடிப்படையிலான உயர்வு, தாழ்வை கட்டமைக்க நினைக்கிறார்கள். சமூக நீதி இதனை தலைகீழாகப் புரட்டுகிறது. அதனால், இதெல்லாம் அவர்களுக்கு பகையாகத் தெரிகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பாக இருக்கும் சனாதனக் கட்டமைப்பை செயல்படுத்த நினைக்கிறார்கள்.
அவர்களுடைய அரசியல் முகமாக இருக்கும் பா.ஜ.க. பேரணி நடத்த வேண்டியதுதானே.. அதற்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கப்போவதில்லை. ஆனால், ஆர்எஸ்எஸ் ஒரு பயங்கரவாத இயக்கம். அதனால் எதிர்க்கிறோம்.

பட மூலாதாரம், Getty Images
கே. சமீபத்தில் மனு ஸ்மிருதியின் சில பகுதிகளை அச்சிட்டு எல்லோருக்கும் வழங்கினீர்கள். ஆனால், மனு ஸ்மிருதி தற்போது புழக்கத்தில் இல்லை, அதில் என்ன இருக்கிறது என யாருக்கும் தெரியாது, அதில் சில பக்கங்களைத் தேர்வுசெய்து, அச்சிட்டு விநியோகிப்பது சரியா என பா.ஜ.க. கேள்வி எழுப்புகிறது...
ப. இது குதர்க்கவாதம். இப்போது இந்துச் சமூகம் எப்படி இருக்கிறது என்பதை அவர்கள் அறிவார்கள். வர்ண அடிப்படையிலான கட்டுமானம்தான் நமது சமூக கட்டுமானம். பிராமணர்கள் இருக்கிறார்களா இல்லையா, அக்கிரஹாரம் இருக்கிறதா இல்லையா, சாதி இந்துக்கள் தனியாக வசிக்கிறார்களா இல்லையா, பட்டியல் சமூகத்தினர் தனியாக வசிக்கிறார்களா இல்லையா, தனி குளம், தனி சுடுகாடு, தனி குவளை எல்லாம் இருக்கிறது. இந்துக்கள் ஒரு ஜாதியிருந்து இன்னொரு ஜாதிக்குள் திருமணம் செய்து கொள்ள முடியாது. இதெல்லாம் இருப்பது உண்மையென்றால், மனு ஸ்மிருதி இருப்பது உண்மை.
மனு ஸ்மிருதி நாடாளுமன்றத்தில் பேசப்படாமல் இருக்கலாம். யார் கையிலும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், சமூகம் என்பது மனு ஸ்மிருதி அடிப்படையில்தான் இயங்குகிறது.
கே. ஆனால், இப்படி விநியோகிப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைப்பதாகாதா?
ப. நாங்கள் எந்த சமூகத்தைப் பற்றியும் சொல்லவேயில்லையே. புத்தகத்தில் இருப்பதைத்தானே சொல்கிறோம். அதில் ஒரு எழுத்தையும் நான் மொழிபெயர்க்கவில்லை. இடதுசாரி இயக்கமோ, பெரியாரிய இயக்கமோ, அம்பேத்கரிய இயக்கமோ அதை மொழிபெயர்க்கவில்லை. அதை மனு ஸ்மிருதியை நம்புபவர்கள் மொழிபெயர்த்த நூல். ராமானுஜாச்சாரியார் 1865ல் எழுதிய நூலில் இருந்து இந்தப் பகுதிகளை எடுத்திருக்கிறோம். ஸ்ரீ அன்னை ஆனந்த நாச்சியார் அம்மாள் எழுதி 2011ல் இந்து பப்ளிகேஷன் ஒரு புத்தகத்தை வெளியிட்டது. அதைப் பயன்படுத்தியிருக்கிறோம். பிறகு திருலோக சீத்தாரம் மொழிபெயர்த்த மனுஸ்மிருதியையும் பயன்படுத்தியிருக்கிறோம். இவர்கள் யாரும் பெரியார் இயக்கத்தையோ அம்பேத்கர் இயக்கத்தையோ சார்ந்தவர்கள் கிடையாது.
இவர்கள் எழுதிய புத்தகத்தில் இருந்து எடுத்துத்தான் இதோ பாருங்கள் மனு ஸ்மிருதியில் இப்படிச் சொல்லியிருக்கிறது. இன்று பெண்கள் இந்த அளவுக்கு ஒடுக்கப்படுவதற்கு மனு ஸ்மிருதிதான் காரணம்; ஜாதீயப் பாகுபாடுகளுக்கு மனு ஸ்மிருதிதான் காரணம்; வர்ண பாகுபாடுகளுக்கு மனு ஸ்மிருதிதான் காரணம். இந்த மனு ஸ்மிருதியை தங்கள் புனித நூலாகக் கொண்டிருக்கிற ஆர்எஸ்எஸ் எப்படிப்பட்ட சமூகத்தை நமக்குத் தரும்?
ஆர்எஸ்எஸ்ஸை வழிநடத்தக்கூடியவர்கள் சனாதனக் கட்டமைப்பையே விரும்புகிறார்கள். மனு ஸ்மிருதி அடிப்படையிலான சமூக கட்டமைப்பையே அவர்கள் விரும்புகிறார்கள். நீங்கள் பா.ஜ.கவை ஆதரித்தால், ஆர்.எஸ்.எஸ்சை ஆதரிப்பதாக அர்த்தம்; ஆர்.எஸ்.எஸ்சை ஆதரித்தால், நீங்கள் சனாதனத்தை ஆதரிப்பதாக அர்த்தம்; நீங்கள் சனாதனத்தை ஆதரித்தால் மனு ஸ்மிருதியை ஆதரிப்பதாகப் பொருள். அந்த மனு ஸ்மிருதியை நீங்கள் படித்துப் புரிந்துகொள்ளுங்கள் என்று நாங்கள் தருகிறோம். இதில் எந்த ஜாதிக்கும் எதிராகவோ, அமைப்புக்கும் எதிராகவோ நாம் பேசவில்லை.
கே. சமீப காலமாக தேசிய அளவில் கவனம் பெறக்கூடிய ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு, இட ஒதுக்கீடு விவகாரம் போன்ற விஷயங்களைக் கையில் எடுக்கிறீர்கள். தேசிய அளவில் கட்சியை வளர்க்கவும் தேசிய அளவிலான தலைவராக உருவெடுக்கவும் முயல்கிறீர்களா?
ப. அப்படி நான் திட்டமிட்டு எதையும் செய்வதில்லை. எனக்கு உடன்பாடா விஷயங்களில் நான் தலையிடுவேன். அவ்வளவுதான். அம்பேத்கர், பெரியார் கொள்கையை உள்வாங்கிக் கொண்டதால், இந்த களங்களில் நின்று நான் பணியாற்றுகிறேன். இது பிற மாநிலங்களிலும் வரவேற்கப்படுகிறது. அந்த அடிப்படையில் எங்கள் இயக்கம் ஆந்திராவில் உருவாக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. தெலுங்கானா, கேரளா, கர்நாடகாவில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கடந்த பத்தாண்டுகளாகவே நாங்கள் இயங்கிக் கொண்டிருக்கிற அமைப்புதான். இப்போது மகாராஷ்டிராவிலும் இந்த இயக்கத்தின் கிளையைத் துவங்க தோழர்கள் முன்வந்திருக்கிறார்கள். அதற்கான ஆலோசனைக் கூட்டங்களும் நடந்திருக்கின்றன. தில்லியிலும் சிலர் இயக்கத்தை துவங்க முன்வந்திருக்கிறார்கள். ஆனால், தேசிய அளவில் இயக்கத்தைக் கட்ட வேண்டும் என்று எந்தக் கணக்கும் கிடையாது. அம்பேத்கர் அரசியலை தேசிய அளவில் எடுத்துச் செல்ல வேண்டும். அவ்வளவுதான்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












