EWS இடஒதுக்கீடு விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக ஏன் பங்கேற்கவில்லை?

எடப்பாடி பழனிசாமி

பட மூலாதாரம், Edappadi Palanisamy

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

இட ஒதுக்கீடு பெறாத சாதிகளில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு இட ஒதுக்கீடு தருவதற்காக அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக தமிழ்நாடு முதல்வர் அறிவித்திருந்தார்.

அத்துடன் இந்த விவகாரத்தைப் பற்றி விவாதித்து முடிவெடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் அவர் கூட்டியிருந்தார்.

இந்தக் கூட்டத்தில் அதிமுக-வும் பாஜக-வும் மட்டும் பங்கேற்கவில்லை. பாஜக நிலைப்பாடு அறிந்ததே என்பதால் அது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் திமுக-வின் நிலைப்பாட்டில் இருந்து பெரிய மாறுபாடுகள் இல்லாத அதிமுக இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது கேள்விகளை உருவாக்கியுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு பத்து சதவீத இடஒதுக்கீடு தருவதற்கு அரசமைப்புச் சட்டத் தடை இல்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அதேநேரம், அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காதது வருத்தம் அளிக்கிறது என்றும் கூட்டத்தில் பங்கேற்காதபோதும் தமிழக அரசின் முடிவுக்கு அதிமுக ஆதரவு தரும் என்று நம்புகிறோம் என்றும் பொன்முடி கூறினார்.

ஆனால் அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்காததற்கு பலவிதமான காரணங்களை சொல்லும் அதிமுக தலைவர்கள், இடஒதுக்கீடு விவகாரத்தில் குழப்பத்தில் இருந்ததை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு சவால் வந்தபோது, அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதற்கு சட்டப் பாதுகாப்பு பெற முயற்சி எடுத்தவர்.

தற்போது இடஒதுக்கீடு முறையில் புதிய பிரச்னை வந்துள்ள நேரத்தில் அது தொடர்பான நிகழ்வில் அதிமுக பங்குபெறவில்லை என்பதை அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காதது ஏன் என எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் என இருதரப்பில் உள்ள தலைவர்களிடமும் விதவிதமான பதில்கள்தான் வந்தன. பிபிசி தமிழிடம் பேசிய அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமார், ''சென்னையில் இன்று பாஜக தலைவர் அமித்ஷாவின் நிகழ்வு ஒன்று நடந்தது.

அதில் பங்கேற்கவேண்டிய சூழல் இருந்ததால், அனைத்து கட்சிகூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும், அதிமுகவை பொறுத்தவரை எந்தவொரு இடஒதுக்கீடாக இருந்தாலும் அது எவரையும் பாதிக்கக்கூடாது. அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுகிறோம் என்ற தி.மு.க.வின் கபட நாடகத்தையும், இரட்டை வேடத்தையும் தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்து ஆராய 2006-ம் ஆண்டு ஒரு கமிஷனை அமைத்தது காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியிலான மத்திய அரசு. அந்த கமிஷன் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இதற்கான சட்டத்தை உருவாக்கியதும் காங்கிரஸ்-தி.மு.க. மத்திய கூட்டணி அரசு. அதனால் கூட்டத்தில் பங்கேற்பதில் எந்த பயனும் இல்லை என்பதால், பங்கேற்கவில்லை,''என்றார் ஜெயக்குமார்.

பெயர் சொல்ல விரும்பாத மூத்த அதிமுக தலைவர் ஒருவர், ''இடஒதுக்கீடு பிரச்சனை பற்றி யாரும் ஊடகத்தில் பேசக்கூடாது என முடிவு செய்துள்ளார்கள். கட்சி அறிக்கை தருவதை தாண்டி எந்த கேள்விக்கும் எந்த விதமான பதில்களையும் பேசவேண்டாம் என எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் பாதிப்பு தமிழகத்திற்குதான். ஆனால் அதனை நாங்கள் பேசுவதற்கு தடை உள்ளது,''என்கிறார். பாஜகவின் அழுத்தம் காரணமாக அதிமுக பேசவில்லையா என கேட்டபோது, ''நேரடியாக அழுத்தம் எதுவும் இல்லை. ஆனால் கட்சி மேலிடம் எந்த விமர்சனத்தையும் விரும்பவில்லை,''என்றார்.

ஸ்டாலின்

ஓ பன்னீர்செல்வம் அணியில் உள்ள கோவை செல்வராஜிடம் கேட்டபோது, அனைத்து கட்சி கூட்டத்திற்கான அழைப்பு எதுவும் முறைப்படி வழங்கவில்லை என்றும் அதனால்தான் பங்கேற்கவில்லை என்றும் கூறுகிறார்.

ஆனால், சட்டமன்றத்தில் இடஒதுக்கீடு பற்றிய அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என்பது, அந்த கட்சி தமிழக மக்களை எந்த அளவு புறக்கணித்து, வெறும் கட்சி தலைவர்களின் கூடாரமாக மாறிவிட்டது என்பதை உணர்த்துகிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன்.

''தமிழகம் பல்வேறு துறையில் இன்று முன்னணியில் இருப்பதற்கு 69சதவீத இடஒதுக்கீடு ஒரு முக்கிய காரணி. அதிலும் குறிப்பாக இடஒதுக்கீட்டை கொண்டுவருவதில் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு பற்றிய விவகாரத்தை கையில் எடுத்தார். பின்னர் அதன் காரணமாக 1980ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பலத்த பின்னடைவை சந்தித்தார். அதன்பின்னர், அவரே திருத்திகொண்டு, பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு தமிழகத்திற்கு ஒத்துவராது என்றார்.

ஜெயக்குமார்

அடுத்ததாக, ஜெயலலிதா 1994ல் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ், குடியரசு தலைவர் ஷங்கர் தயாள் சர்மா ஆகியோரை வலியுறுத்தி, தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கு தடை வராமல் இருக்க சட்டத்திருத்தம் கொண்டுவர முயற்சித்து வெற்றிகண்டார். தற்போது, அதிமுகவின் இருபெரும் தலைவர்கள் உழைத்த ஒரு திட்டத்திற்கும், தமிழக மக்களின் வளர்ச்சிக்கு எதிரான ஒரு திட்டம் வரும்போது, அதனை அதிமுக எதிர்க்கவில்லை, தங்களது கருத்தை சட்டமன்றத்தில் சொல்லவில்லை என்பது ஏமாற்றம் தருகிறது,''என்கிறார் இளங்கோவன்.

அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுவதற்கு முந்தைய நாள் அதிமுக, வெறும் விமர்சனங்களை மட்டும் அள்ளி தெளித்துவிட்டு, உண்மையான பங்கேற்பை செய்வதில் இருந்து நழுவுகிறது என்கிறார் அவர்.

''ஒரு சட்டமன்றம் என்பது பிரதான எதிர்க்கட்சியின் பங்கேற்பு இருந்தால்தான் முழுமை பெறும். அதுவும், ஒரு சமூக பிரச்சனை, ஒட்டுமொத்த மாநிலத்தையும் பாதிக்கும் பிரச்சனையில் பேசுவதற்கு அதிமுக முன்வரவில்லை என்பது, அவர்கள் தார்மீகபொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது,'' என்றார் இளங்கோவன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: