மாதம் ரூ.66,660 சம்பாதிப்பவர் ஏழையா? - மு.க.ஸ்டாலின் கேள்வி

பட மூலாதாரம், Getty Images
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் 10 சதவிகித இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படாது என்று கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறினார்.
இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் பங்கேற்கவில்லை. திமுக தவிர ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மாதம் 66,660 ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழைகளா தினமும் 2,222 ரூபாய் சம்பாதிப்பவர்கள் ஏழைகளா” என்று கேள்வி எழுப்பினார்.
“இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 340-வது பிரிவில் சமுதாய ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியவர்கள் என்பதுதான் வரையறையாக இருக்கிறது. அதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பொருளாதார அளவுகளை புகுத்த நினைத்தது ஒன்றிய அரசு. இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி போய்விட்டது திறமை போய்விட்டது என்று இதுவரை சொல்லிவந்த சிலர், இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள்.” என்று அவர் குறிப்பிட்டார்.
“பொருளாதார ரீதியாக இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தில் இல்லை. 10 சதவீத இடஒதுக்கீடானது, உண்மையில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு ஆனது அல்ல இதனை ஏற்றுக் கொண்டால், வருங்காலத்தில் சமூகநீதி உருகுலைந்து போகும்” எனக் கூறினார்.
''சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே சமூகரீதியாகவும், கல்விரீதியாகவும் பின்தங்கியவர்களுக்குத் தரப்பட வேண்டிய ஒன்று என்பதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்ட வரையறை அதற்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் பொருளாதார அளவுகோலைப் புகுத்த நினைத்தது ஒன்றிய அரசு அதன்படி ஒரு சட்டத்தை 2019 ஆம் ஆண்டு செய்தார்கள் அந்தச் சட்டத்தைத்தான் தற்போது உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வில் மூன்று நீதிபதிகள் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்துள்ளார்கள்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் பொன்முடி, வைகோ உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகள் 10 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தாகவும் தீர்மானத்தில் கையெழுத்திட்டதாகவும் அமைச்சர் பொன்முடி கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













