பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு: காங்கிரஸிற்குள் முரண்பாடு ஏன்?

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் தேசிய அளவில் காங்கிரஸ் அதனை ஆதரிக்கும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதனை எதிர்க்கிறார்கள். இந்த முரண்பாடு ஏன்? பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடு வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என தீர்ப்பளித்திருக்கும் நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி அதனை வரவேற்றிருக்கிறது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட காங்கிரஸின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருப்பதை காங்கிரஸ் வரவேற்கிறது. இந்தப் பயணத்தில் காங்கிரஸ் ஒரு முக்கியப் பங்கை வகித்திருக்கிறது" என்று குறிப்பிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் பிரமுகர்களிடமிருந்து வந்த எதிர்வினை வேறு மாதிரியாக இருந்தது. இந்தத் தீர்ப்பு குறித்து பதிவிட்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, இந்தத் தீர்ப்பு ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என பதிவிட்டார். "உச்சநீதிமன்ற தீர்ப்பு நூற்றாண்டுகால சமூக நீதி போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு. இடஒதுக்கீடு சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக, சம வாய்ப்புகளை உருவாக்கவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை அதிகாரப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. சமூக ஒடுக்குமுறையைக் கருத்தில் கொள்ளாமல், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை நியாயப்படுத்துவது அரசியல் சாசனத்திற்கு முரணானது. ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அநீதி இழைப்பது. இடஒதுக்கீட்டுக் கொள்கையை நீர்த்துப் போகச்செய்வது" என்றார் அவர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
அதேபோல சிவகங்கை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக கார்த்தி பி சிதம்பரமும் இந்தத் தீர்ப்பை எதிர்த்துப் பதிவிட்டார். "உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு பெறுவதிலிருந்து பலரை விலக்கி வைக்கிறது. 3:2 விகிதத்தில் தீர்ப்பு வந்திருப்பது, எதிர்கொள்ளவேண்டிய முரண்பாடான கேள்விகளை முன்வைக்கிறது. பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டிற்கான வரையறையும் சரியானதாக இல்லை. இந்தத் தீர்ப்பு உண்மையான பொருளாதார, சமூக மேம்பாட்டிற்கு உதவவில்லை" என்று அவர் பதிவிட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3

பட மூலாதாரம், Getty Images
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை இந்தத் தீர்ப்பை ஆதரித்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை எதிர்த்திருப்பது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. ட்விட்டரில் இது குறித்து பலரும் கேள்வியெழுப்பிவருகின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரியிடம் கேட்டபோது, "கட்சித் தலைமை தெரிவிப்பதுதான் அதிகாரபூர்மான நிலைப்பாடு" என்றார். அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இந்தத் தீர்ப்பை வரவேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. "பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை 50 சதவிகித இடஒதுக்கீட்டு வரம்பை மீற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அனைத்து பிரிவினருக்குமான நீதியை அது வழங்கும் என்றால் அதனை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. 2005-2006 இல் இதற்கான முயற்சி டாக்டர் மன்மோகன்சிங் அரசால் எடுக்கப்பட்டது. 2014இல் நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தயாரிக்கப்பட்டது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய 5 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு எதிர்ப்பது என்பதும் சமூக நீதியாகாது. ஏனெனில், ஐந்தாயிரம் ஆண்டுகாலமாக பெரும்பகுதி சமுதாயம் சிரமப்பட்டது, சமூகநீதி வழங்கப்படவில்லை, இப்பொழுது எங்களுக்கு வழங்குங்கள் என்று கேட்பது சரியானதாக இருக்கும். ஆனால், எங்களைப் போலவே பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினரும் சங்கடப்பட வேண்டும் என்று கூறுவது சமூகநீதியாகாது. சமூகநீதி என்பது மனிதகுலத்திற்கே பொதுவானதேயொழிய எந்தவொரு தரப்பிற்கும் அது உரியதல்ல" என்று கூறியிருக்கிறது.
காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாகவே பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஆதரித்துவந்திருக்கிறது. 1991ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது அந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதியன்று பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். ஆனால், 1992ல் வழங்கப்பட்ட இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பில், இந்த ஒதுக்கீடு ரத்துசெய்யப்பட்டது. வெறும் பொருளாதார அளவுகோலை வைத்துமட்டும் ஒருவரை பிற்படுத்தப்பட்டவராக அடையாளம் காணமுடியாது என்றது நீதிமன்றம். இதற்குப் பிறகு 2004ல் மன்மோகன் சிங் பிரதமரான பிறகு, பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான ஆணையம் ஒன்று அதே ஆண்டு ஜூலை 6ஆம் தேதி அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் 2006 ஜூலையில் மறுபடியும் திருத்தியமைக்கப்பட்டது. இதற்கு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.ஆர். சின்ஹோ தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஆனால், பொதுமான புள்ளிவிவரங்கள் இந்த ஆணையத்திற்குக் கிடைக்கவில்லை, தமிழ்நாடு, பிஹார் மாநிலங்கள் இந்த முயற்சியைக் கடுமையாக எதிர்த்தன. இந்த ஆணையம் தனது பரிந்துரைகளை 2010 ஜூலை மாதம் அப்போதைய சமூக நீதித் துறை அமைச்சர் முகுல் வாஸ்நிக்கிடம் அளித்தது. ஆனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் அதன் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. அதன் பரிந்துரைகள் பொதுவெளியிலும் விவாதிக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 2019ல், அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 103வது திருத்தத்தின் மூலம் இதனை முறைப்படி அமல்படுத்தியது. தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பிக்கள் மட்டுமல்லாமல் தில்லியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரும் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் காங்கிரசின் தலைவருமான உதித் ராஜும் இந்த இட ஒதுக்கீட்டு தொடர்பான தீர்ப்பில் உள்ள முரண்பாட்டை கடுமையாக எதிர்த்திருக்கிறார். 50 சதவீதத்தையும் தாண்டி இட ஒதுக்கீடு தரலாம் என்று நீதிமன்றம் கூறியிருப்பதைக் கடுமையாக கண்டிக்கிறார் அவர். "நான் பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்க்கவில்லை ஆனால், உச்ச நீதிமன்றத்தின் மேல் ஜாதி மனநிலையை வலியோடு கவனிக்கிறேன். இந்திரா சஹானி தீர்ப்பிலிருந்து தான் உயர்த்திப் பிடித்த நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் எடுத்திருக்கிறது. SC/ST/OBC இட ஒதுக்கீடு தொடர்பான விவகாரங்களில் மட்டும் உச்ச நீதிமன்றம் இடஒதுக்கீடு 50%க்குள் இருக்க வேண்டுமெனக் கூறுகிறது" என்று அவர் கூறியிருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் மிக உணர்வுகரமான பிரச்னையாக இருந்து வருகிறது. திராவிடக் கட்சிகள் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்க்கின்றன. தி.மு.க., தி.க. ஆகிய கட்சிகள் இந்த தீர்ப்புக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்திருக்கின்றன.
அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை வரும் சனிக்கிழமையன்று நடத்த தமிழ்நாடு அரசு முடிவுசெய்திருக்கிறது. அ.தி.மு.கவைப் பொருத்தவரையில் இதுவரை எடப்பாடி கே. பழனிச்சாமி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஓ பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை, இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டுமெனக் கூறியிருக்கிறார். வி.கே. சசிகலாவும் அதே கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்தத் தீர்ப்பை கடுமையாக எதிர்த்திருப்பதோடு, சீராய்வு மனு தாக்கல்செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளது. இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வமாக இந்தத் தீர்ப்பை ஆதரித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: • ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக் • டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர் • இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம் • யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













