இந்து சமய அறநிலையத் துறையை இரண்டாகப் பிரிக்க வேண்டுமா? திருமாவளவன் கோரிக்கை தேவையா?

Thol.Thirumavalavan

பட மூலாதாரம், Thol.Thirumavalavan facebook page

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்து சமய அறநிலையத் துறையை சைவ சமய அறநிலையத் துறை என்றும், வைணவ சமய அறநிலையத் துறை என்றும் பிரித்துப் பராமரிக்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரையில் நடைபெற்ற அவரது கட்சி உறுப்பினர் ஒருவரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று திருமாவளவன் பேசுகையில், இந்த திருமண நிகழ்ச்சி மூலமாக தமிழ்நாடு அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுகிறேன். இந்து சமய அறநிலைய துறையை சைவ சமய அறநிலையத்துறை என்றும், வைணவ சமய அறநிலையத்துறை என்றும் பிரித்து பராமரிக்க வேண்டும். இவ்விரு சமயங்களையும் இந்து சமயம் என்று ஆக்கியதன் மூலம் சிவனியம், திருமாலியம் என்ற கோட்டுப்பாடுகள் நீர்த்துப்போகின்றன. சனாதனம் என்ற பார்ப்பனீயம் கோலோச்சுகிறது. வர்ணசிராமம் மீண்டும் தலைதூக்குகிறது" என்று தெரிவித்தார்.

இது, சைவ சமய அறநிலையதுறை என்றும் வைணவ சமய அறநிலையதுறை என இந்து அறநிலைய துறையை பிரிப்பதற்கான தேவை இருக்கிறதா? உண்மையில் இந்து அறநிலையத் துறை என்று இருப்பது சைவ, வைணவ சமயங்களின் முக்கியத்துவத்தை குறைக்கிறதா என்ற கேள்வியும், விவாதமும் எழுந்துள்ளன.

இப்படி ஒரு கோரிக்கை திடீரென இப்போது ஏன் எழ வேண்டும்? தற்போது இந்து அறநிலையத் துறையின் கீழ் இரு சமயக் கோயில்களும் நிர்வகிக்கப்படுவதால் என்ன சிக்கல்? சைவ, வைணவத் துறைகளாகப் பிரிப்பதற்கான நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதா? என விசிக நாடாளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான ரவிக்குமாரிடம் கேட்டோம்.

''நிர்வாக சீர்திருத்தம் தேவைதான்''

''இரண்டும் தனி மதங்கள் என்பதில் சந்தேகம் இல்லை. நாயக்கர் காலத்தில் சைவ கோயில்களில் ராமாயண கதை ஓவியங்கள் மற்றும் சிற்ப தொகுதிகள் அமைக்கப்பட்டன. ஆங்கிலேயர்கள்தான் இந்து என்ற பெயரை கொடுத்து விதவிதமான மதங்களை ஒரே தொகுப்பில் கொண்டுவந்தார்கள். ஆனால் அந்த இரண்டு மதங்களுக்கு நடுவில் இடைவெளி இன்றும் உள்ளது. சைவத்தில் ஓரளவு நெகிழ்வுத் தன்மை உள்ளது, அதை வைணவத்தில் காணமுடியவில்லை. நிர்வாக காரணங்களுக்காக இரண்டாகப் பிரிப்பதில் மேலும் இரண்டு மதங்களுக்கும் முக்கியத்துவம் அதிகரிக்கும் என்பது உண்மை,''என்கிறார் ரவிக்குமார்.

அதோடு, இந்து என்பது ஒரு செயற்கையான அடையாளம் என்றும் இந்து என்ற பெயரின் அடிப்படையில் சர்ச்சையை ஏற்படுத்தி இந்தியாவின் உண்மையான பொருளாதார, சமூகப் பிரச்சனைகளை பாஜக மறைப்பதாகக் கருதுகிறார் ரவிக்குமார்.

ரவிக்குமார்
படக்குறிப்பு, ரவிக்குமார்

''வேலைவாய்ப்பின்மையால் நாம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளோம். இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவைக் கண்டுள்ளது. இந்தியா பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கவுள்ளது. ஆனால் இதுபோன்ற விவகாரங்களை விவாதிக்க தயாராக இல்லை என்பதால், இந்து அடையாளத்தைப் பற்றி மட்டுமே பேசிவருகிறது பாஜக. அதனால் இந்து என்ற செயற்கையான அடையாளத்தை விடுத்து, சைவம், வைணவம் என்ற உண்மையான அடையாளத்தை ஏற்பது தற்போதைய தேவைதான்,''என்கிறார் அவர்.

"இதனால் பயனில்லை"

சைவ சமய சொற்பொழிவாளர் சோ சோ மீனாட்சி சுந்தரத்திடம் இது பற்றிக் கருத்து கேட்டபோது, "சைவம் - வைணவம் என பிரிப்பதால் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரமுடியாது. இந்து அறநிலையதுறையின் பணிகளை செம்மைப்படுத்துவதில்தான் கவனம் தேவை," என்றார்.

''சைவம், வைணவம் என்பவை இரண்டு மதங்களாக இருந்தது வரலாறு. இந்து மதம் என்பது உருவாக்கப்பட்ட மதம். ஆனால் இன்றைய தேவை பிரிப்பது அல்ல. எல்லா கோயில்களையும் சிறப்பாக நடத்தும் பணிகள் நடைபெறவேண்டும் என்பதுதான் எங்களை போன்ற சமயவாதிகளின் எண்ணம். பல சிதிலமடைந்த கோயில்கள் உள்ளன, சிலைகள் காணாமல் போனது குறித்துகூட பல ஆண்டுகள் கழித்துதான் தெரியவருகிறது. கோயிலின் சொத்துக்கள் தனியார் வசம் உள்ளன. இவற்றையெல்லாம் மீட்கும் பணிகள் நடைபெறவேண்டும் என்பதுதான் எங்கள் வேண்டுகோள். பிரித்து நிர்வாகம் செய்வதால் புண்ணியம் இல்லை என்பது என் கருத்து,''என்கிறார் சோசோ மீனாட்சி சுந்தரம்.

''இந்து அடையாளத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள்''

திருமாவளவனை போன்ற ஓர் அரசியல் தலைவர் மத சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த யோசனையை முன்வைப்பதாகவே பார்க்கவேண்டும் என்பது எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் கருத்து.

தமிழ்ச்செல்வன்

பட மூலாதாரம், Tamil selvan

படக்குறிப்பு, தமிழ்ச்செல்வன்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், தெய்வ நம்பிக்கை, கடவுளர்கள் உருவான வரலாறு குறித்து புத்தகங்களை எழுதியுள்ளார்.

''பெரும்பாலான தமிழர்களுக்கு நாட்டார் தெய்வங்கள்தான் குலதெய்வங்களாக உள்ளன. நாட்டார் தெய்வங்கள் மதச்சார்பற்ற கடவுளாகவும், ஒரு மக்கள் குழுவில் வாழ்ந்து, மறைந்த மனிதர்களாகவும் இருக்கின்றன. வைதீக முறையில் வந்தவர்கள், சைவ, வைணவ கடவுளர்களை இந்து என்ற அடையாளத்தில் இணைத்துவிட்டார்கள். அதோடு, பெரும்பான்மை மக்களின் நாட்டார் தெய்வங்களையும் இந்து என்ற பெயரின் கீழ் கொண்டுவந்துவிட்டார்கள். கர்நாடகத்தில், நீண்டகால கோரிக்கைக்கு பின்னர், லிங்காயத்துகள் இந்துக்கள் இல்லை என்றும் தாங்கள் தனி மதத்தை சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தியுள்ளார்கள். அதனால், தமிழ்நாட்டிலும், சைவ வைணவ சமயங்களை தனி மதங்களாக அங்கீகரிப்பதால் அவை தேவையான கவனம் பெரும்,'' என்கிறார் தமிழ்செல்வன்.

மேலும், இந்து என்ற அடையாளத்தை வைத்து பாஜகவினர் மக்களை திசை திருப்புவதால், உண்மையான அடையாளமான சைவம் மற்றும் வைணவம் என்பதை அங்கீகரிப்பதில் தவறில்லை என்கிறார் அவர்.

''இந்து என்ற ஒற்றை அடையாளத்தைத் தவிர பாஜகவின் அரசியல் அடையாளம் எதுவுமில்லை. உண்மையான சமய அடையாளங்களைக் குறிக்கும் விதத்தில் இந்து சமய அறநிலையத் துறையை பிரிப்பதில் தவறில்லை,''என்கிறார் அவர்.

பாஜகவின் எதிர்வினை

Narayanan Thirupathy

பட மூலாதாரம், Narayanan Thirupathy facebook page

படக்குறிப்பு, நாராயணன் திருப்பதி

ஆனால் திருமாவளவனின் கோரிக்கை மக்களிடம் பிளவை ஏற்படுத்தும் கோரிக்கை என பாஜக விமர்சிக்கிறது. பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, திருமாவளவனின் கோரிக்கை குறித்து பேசும்போது,''ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருக்கக்கூடாது. பிளவை ஏற்படுத்தவேண்டும் என்ற சதித்திட்டத்தின் முதற்கட்ட கோரிக்கையாக திருமாவளவனின் கோரிக்கை உள்ளது. அதுபோலவே, சாதிகள் இனி இல்லை. இந்தியாவில், சைவம், வைணவம் மட்டுமே இருக்கவேண்டும். வேறெந்த மதமும் இருக்கக்கூடாது என்று அவர் கோரிக்கை வைப்பாரா?''என்று அவர் கேட்கிறார்.

நடைமுறை தேவை என்ன?

திருமாவளவனின் கோரிக்கையில் தவறில்லை என்றும் இந்து சமய அறநிலையத்துறையை இரண்டாகப் பிரிப்பதற்கான தேவையும் தமிழ்நாட்டில் இல்லை என வாதிடுகிறார் அரசியல் விமர்சகர் பிரியன்.

''தற்போது பொது மக்களிடம் தங்களை சைவனாக, வைணவனாக அடையாளப்படுத்தவேண்டும் என்ற தேவை எழவில்லை. அதனால், இந்து அறநிலையதுறையை பிறப்பதற்கான உடனடி தேவை எழவில்லை. இந்து என்ற பெயர் ஆங்கிலேயர்கள் கொடுத்தது என்பது வரலாறு. அரசியல் சாசனத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெயராக உள்ளது. ஆனால் இன்றளவில் அந்த பெயர்தான் பொதுப்பயன்பாட்டில் உள்ளது. நீதிக்கட்சி ஆட்சியில்தான் இந்து அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. திமுகவின் மூலமான நீதிக்கட்சியயைச்சேர்ந்தவர்கள் இந்து என்ற பெயரை அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய திராவிடமாடல் ஆட்சியில் இந்து அறநிலையத்துறையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. பல கோயில்கள் புனரமைப்பு, குடமுழுக்கு, அர்ச்சகர், பூசகர்களுக்கு ஊதியம் அதிகரிப்பது என பலவிதமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதனால், இந்த கோரிக்கை உடனடியாக செயல்படுத்தவேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

ஆனால் இந்து என்ற அடையாளத்தை மையமாகவைத்து பாஜகவின் அரசியல் களம் அமைந்துள்ளதால், தமிழகத்தில் அதன் விளைவுகள் அதிகரித்துள்ளதால், அதனை எதிர்க்க ஒரு எதிர்க்கட்சியாக திருமாவளவன் இந்து அடையாளத்தை மாற்றவேண்டும் என்று கூறுவதில் தவறில்லை. அவர் சொல்வதற்கான நியாயம் உள்ளது,''என்கிறார் பிரியன்.''அரசியல்களமாக இந்து என்ற அடையாளத்தை பாஜக பயன்படுத்துவதால், திருமா போன்றவர்கள் தங்களது உணர்வை வெளிப்படுத்தியது நியாயமானது,''என்கிறார்.

காணொளிக் குறிப்பு, பொன்னியின் செல்வன் நாவலுக்கும் திரைப்படத்துக்கும் கதை வேறுபாடு என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: