EWS இடஒதுக்கீடு பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு புது சிக்கல்களை கொண்டுவருமா?

மராத்தா போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ராகவேந்திர ராவ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

முன்னேறிய சாதிகளில் இருக்கும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது செல்லும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் சில நாள்களுக்கு முன்பு ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியது.

இதுவரை இட ஒதுக்கீடு பெறாத சாதிகளில் உள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வழி செய்யும் வகையில் அரசமைப்புச் சட்டத்தின் 103வது திருத்தம் 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அரசமைப்புச் சட்டத்தின் 15, 16 வது பிரிவுகளுக்கு, உட்பிரிவுகளை சேர்த்தது இந்த சட்டத் திருத்தம்.

இதையடுத்து, இடஒதுக்கீடு பெறாத சாதிகளில் உள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு தனது கல்வி நிறுவனங்கள், அரசு வேலைகளில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குவதை 2019-ம் ஆண்டே தொடங்கியது இந்திய அரசு.

இந்த அரசமைப்புச் சட்டத்திருத்தம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில்தான் EWS சட்டத் திருத்தம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

ஆனால், இந்த தீர்ப்பு ஒருமனதாக வரவில்லை. 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் 3 நீதிபதிகள் இந்த சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்தனர். இரண்டு நீதிபதிகள் இந்த பெரும்பான்மைத் தீர்ப்புடன் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். பெரும்பான்மை தீர்ப்பே செயல்படுத்தப்படும் என்பதால், இனி EWS இட ஒதுக்கீட்டை செயல்படுத்த இந்திய அரசுக்குத் தடை இருக்காது.

ஆனால், இந்த சட்டத் திருத்தம் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை மீறுவதாக வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்த சிறிது நேரத்திலேயே, மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இந்தத் தீர்ப்பை பாராட்டினார்.

”எந்தவொரு சாதி இட ஒதுக்கீட்டிலும் சேர்க்கப்படாத, பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு EWS இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் மகாராஷ்டிரா அரசும் மாநிலத்தில் மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக பணியாற்றி வருகிறது," என்றும் அவர் கூறினார்.

 EWS இடஒதுக்கீட்டைத் தக்கவைக்க வகைசெய்யும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, கடந்த பல ஆண்டுகளாக இடஒதுக்கீடு கோரி வரும் அந்த சமூகத்தினருக்கு மீண்டும் ஒரு வழியைத் திறந்துவிட்டுள்ளதா என்ற விவாதத்தை ஃபட்னாவிஸின் அறிக்கை கிளப்பியுள்ளது. பல நேரங்களில் இட ஒதுக்கீடு கோரும் மராத்தா போராட்டம் வன்முறையாகவும் மாறியதுண்டு.

'மராத்தா உள்ளிட்ட சாதிகளுக்கு இடஒதுக்கீட்டுக்கு பாதை திறக்கவில்லை'

மராத்தா இட ஒதுக்கீட்டுப் போராட்டம்
படக்குறிப்பு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மராத்தா சாதி இடஒதுக்கீடு கோரி பெரிய போராட்டத்தை நடத்தியது.

பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், ஹரியாணா பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராகவும் இருந்த நீதிபதி எஸ்.என்.அகர்வால் இது பற்றிப் பேசும்போது,

"மராத்தா சாதியில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் EWS இடஒதுக்கீட்டின் பலனைப் பெற முடியும். ஆனால் மராத்தா சமூகம் முழு இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கான வழியை உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு திறக்கவில்லை,"என்று அவர் கூறினார்.

 ஒட்டுமொத்த இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்திற்கு மேல் செல்லக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தியதை அவர் சுட்டிக்காட்டினார்.

"பட்டியல் சாதிகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுக்கான உச்ச வரம்பு ஏற்கனவே 50 சதவிகிதமாக உள்ளது. இட ஒதுக்கீடு பெறாத சாதிகளில் ஆண்டுக்கு எட்டு லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளவர்கள் அல்லது ஐந்து ஏக்கருக்கும் குறைவான விவசாய நிலம் உள்ளவர்கள் EWS இடஒதுக்கீட்டின் பலனைப் பெறுவார்கள்," என்கிறார் அவர்.

ஹிமாச்சல பிரதேச தேசிய சட்டப் பல்கலைக்கழக பேராசிரியராக உள்ள டாக்டர். சஞ்சல் குமார் சிங் இது பற்றிப் பேசும்போது,

" உச்ச நீதிமன்றம் EWS இடஒதுக்கீட்டை உறுதி செய்திருப்பதால், ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று அரசியல் மட்டத்தில் கூறலாம். இந்த கோரிக்கை ஏற்கனவே உள்ளது. இடஒதுக்கீடு கோரும் சமூகங்கள் தங்களுக்கும் இது கிடைக்கும் என்ற திசையில் ஊக்கம் பெறுகின்றன,” என்று கூறினார்.

பின்தங்கிய நிலை என்பது சமூக ரீதியிலானதா அல்லது கல்வி ரீதியிலானதா என்பது பல நீதித்துறை முடிவுகளில் வரையறுக்கப்பட்டுள்ளது.

"எனவே புதிதாக இட ஒதுக்கீடு கோரும் ஒரு சாதி அந்த அளவுகோல்களின்படி இட ஒதுக்கீடு பெறுவதற்கு பொருத்தமானதா என்று பார்க்கப்படுகிறது,”என்று அவர் தெரிவித்தார்.

அரசு வேலைகளில் ஒரு சாதி போதிய பிரதிநிதித்துவம் பெற்றுள்ளதா?

”மராத்தா இடஒதுக்கீட்டு கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. மராத்தா இடஒதுக்கீடு வழங்கும் முன் ’இந்த வகுப்பினர் பிற்படுத்தப்பட்டவர்கள்’ என்று தனது அறிக்கையில் காட்டுவதற்கு அரசு தவறிவிட்டது என்ற காரணத்தின் அடிப்படையில் அது நிராகரிக்கப்பட்டது. இந்த சமூகம் பின்தங்கிய சமூகம் என்பதை நிரூபிப்பதற்காக அரசு எதையும் செய்யவில்லை. அதனால்தான் அது ரத்து செய்யப்பட்டது,” என்றார் அவர்.

2021 மே மாதம் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு, மகாராஷ்டிர அரசின் சட்டத்தை அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டம், மராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு அளித்தது. இதன் மாநிலத்தில் இடஒதுக்கீட்டின் மொத்த அளவு 50 சதவீத வரம்பைத் தாண்டியது.

​​மராத்தா சாதிக்கான தனி இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்தின் 14 வது பிரிவு (சமத்துவத்திற்கான உரிமை) மற்றும் 21வது பிரிவு (சட்டத்தின் காரணமாக செயல்முறை) ஆகியவற்றை மீறுவதாக உச்ச நீதிமன்றம் அப்போது தனது தீர்ப்பில் கூறியது.

அதே நேரம் 1992 ஆம் ஆண்டு இந்திரா சாஹ்னி வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதில் இடஒதுக்கீடு வரம்பு 50 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்றம்.

பட மூலாதாரம், Getty Images

இட ஒதுக்கீடு கோரும் பல சாதிகள்

கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களில் பல சாதியினர் அவ்வப்போது இடஒதுக்கீட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில், இந்த கோரிக்கை வன்முறை ஆர்ப்பாட்டங்களின் வடிவத்தையும் எடுத்துள்ளது.

1931 ஆம் ஆண்டின் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, குஜ்ஜர் சமூகத்தினர் ராஜஸ்தான் மாநிலத்தின் மக்கள் தொகையில் சுமார் ஏழு சதவிகிதம் உள்ளனர்.

கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு மற்றும் பிற்படுத்தப்பட்ட தனிப்பிரிவில் வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அந்தப்பிரிவினர் 2005ம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தற்போதுள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படும் 21 சதவிகித இடஒதுக்கீட்டுடன் இந்த இடஒதுக்கீடு கூடுதலாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.

இதற்காக அவர்களும் பலமுறை போராட்டம் நடத்தினர்.

இட ஒதுக்கீட்டுப் போராட்டம்

இதேபோன்ற கோரிக்கையை ஹரியானாவில் ஜாட் சமூகத்தினர் முன்வைத்துள்ளனர். இந்த சமூகம் மாநிலத்தின் மக்கள் தொகையில் சுமார் 29 சதவிகிதம் மற்றும் இவர்கள் செல்வாக்கு மிக்க சமூகமாக உள்ளனர்.

2016 ஆம் ஆண்டில் இடஒதுக்கீடு தொடர்பான ஜாட் போராட்டம் வன்முறையாக மாறியதில் 30 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

இந்த வன்முறையில் பொது சொத்துக்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது.

குஜராத்தில், வரலாற்று ரீதியாக வளமான சமூகமாகக்கருதப்படும் பட்டிதார் சமூகமும் இதேபோன்ற இடஒதுக்கீட்டை கோரியுள்ளது.

அதிகரித்து வரும் போட்டி மற்றும் வேலையின்மை சூழலில், இடஒதுக்கீட்டின் பலன் தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று அந்த சமூகத்தினர் வாதிடுகின்றனர்.

ஓபிசி பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் இடஒதுக்கீட்டின் உதவியுடன் தொடர்ந்து தங்கள் பொருளாதார மற்றும் சமூக நிலையை மேம்படுத்தி வரும் நிலையில், இடஒதுக்கீடு இல்லாததால் தாங்கள் பாதிக்கப்படுவதாக பட்டிதார் சமூகத்தினர் கூறுகின்றனர்.

2015 ஜூலையில் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஓபிசி அந்தஸ்து கோரி குஜராத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். சில சமயங்களில் இந்த ஆர்ப்பாட்டங்கள் வன்முறையிலும் முடிந்தன.

EWS இடஒதுக்கீட்டை எப்படி பார்க்கவேண்டும்?

EWS இடஒதுக்கீட்டை நிலைநிறுத்தும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால், பல ஆண்டுகளாக இடஒதுக்கீடு கோரி வரும் எல்லா சமூகங்களும் மீண்டும் ஒருமுறை போராட்டம் நடத்தத் தொடங்கலாம் என்ற ஐயம் நிலவுகிறது.

அதே நேரத்தில், EWS பிரிவில் இட ஒதுக்கீடு மற்றும் OBC பிரிவில் இட ஒதுக்கீடு ஆகிய இரண்டும் வெவ்வேறானவை என்றும் இதை ஒன்று போலக்கருத முடியாது என்றும் பல வல்லுநர்கள் கருதுகின்றனர்.

"இது முற்றிலும் சரியான முடிவு. பட்டியல் சாதிகளிலும் பணக்காரர்கள் உள்ளனர். ஐ.ஏ.எஸ். அல்லது அமைச்சர்களாகவும் உள்ளனர்.

அதேநேரம் பொதுப்பிரிவில் பலர் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவடைந்துள்ளனர். எந்த இடஒதுக்கீட்டின் பலனும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. இப்போது அவர்கள் EWS ஒதுக்கீட்டின் கீழ் பலனைப் பெற முடியும்,”என்று நீதிபதி எஸ்.என்.அகர்வால் கூறுகிறார்.

”இடஒதுக்கீடு வழங்குவதன் அடிப்படை பொருளாதாரமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதனால் ஏழை மக்கள் அதன் பலனைப் பெற முடியும். ஏழைகள் இட ஒதுக்கீட்டின் பலனைப் பெற வேண்டும். அவர்களின் உரிமைகள் பணக்காரர்கள் மூலம் பறிபோகாமல் இருக்கும்,”என்றும் அவர் குறிப்பிட்டார்.

இட ஒதுக்கீடு

பட மூலாதாரம், Getty Images

இது சரிதான் - நீதிபதி அகர்வால்

” EWS இன் கீழ் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவது சரியானதுதான். அப்படி இல்லை என்றால், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினர் எங்கே போவார்கள்,"என்று நீதிபதி அகர்வால் கேள்வி எழுப்பினார்.

"இடஒதுக்கீட்டிற்கு பொருளாதார அளவுகோல்களை கடைப்பிடிப்பது முற்றிலும் சரியானது. ஏனென்றால் அது பொதுப் பிரிவின் ஏழை மக்களுக்குப் பலன் அளிக்கும்," என்கிறார் அவர்.

EWS ஒதுக்கீட்டைத் தக்கவைக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு நல்ல முடிவு என்று டாக்டர் சஞ்சல் குமார் சிங்கும் கருதுகிறார்.

"அமைப்புமுறை செயல்படும் போது ​​​​நலிந்த பிரிவினர் உருவாகின்றனர். சிலர் முன்னேறுகிறார்கள், சிலர் நலிவமடைகிறார்கள். கடந்த 30 ஆண்டுகளில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை முக்கியமாக விவாதிக்கப்படுகிறது. சிலர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். உலகமயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சியால் ஒரு சிலருக்கு மட்டுமே பலன் கிடைத்துள்ளது. அதனால் பலர் பின்தங்கியுள்ளனர்,” என்று அவர் கூறினார்.

”இத்தகைய சூழ்நிலையில், இதுபோன்ற ஆக்கபூர்வ நடவடிக்கை தொடர்ந்து தேவைப்படும். இடஒதுக்கீடு என்பது ஆக்கபூர்வ நடவடிக்கைக்கான ஒரு வழிமுறை ," என்று அவர் சுட்டிக்காட்டினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: