'இந்தி தெரியாதா?' - தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் பேச்சால் புதுச்சேரியில் சர்ச்சை

தேசிய சிறுபான்மையின நல ஆணைய உறுப்பினர் பேச்சால் புதுச்சேரியில் சர்ச்சை
படக்குறிப்பு, சையத் ஷாஹிசாதி
    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

"பிரிட்டிஷ் மொழியான ஆங்கிலம் தெரிகிறது. இந்திய தேசிய மொழியான இந்தி தெரியாதா?" என்று புதுச்சேரி அதிகாரிகளிடம் தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹிசாதி கேட்ட விவகாரம் சர்ச்சையாக மாறியுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சிறுபான்மையினர் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுவது பற்றி ஆய்வு செய்ய தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹிசாதி இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி வந்திருந்தார்.

நவம்பர் 11ஆம் தேதி புதுச்சேரி தலைமை செயலகத்தில் சையத் ஷாஹிசாதி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், வக்ஃப் வாரிய அமைச்சர், பல்வேறு துறைச் செயலர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆய்வுக் கூட்டத்தில் நடந்தது என்ன?

ஆய்வுக் கூட்டம் தொடங்கியதும் சிறுபான்மையினர் பயன்பெறும் நலத்திட்டங்கள் குறித்து தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் பேசத் தொடங்கினார். அவர் அங்கு முழுமையாக இந்தியில் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசிய இந்தி மொழி அக்கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் பலருக்கும் புரியவில்லை.

இதையடுத்து அதிகாரிகள் சிலர் புதுச்சேரியைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு இந்தி தெரியாது, அதனால் இந்தியில் பேசுவது அவர்களுக்குப் புரிந்து கொள்ள முடியாது. ஆகவே ஆங்கிலத்தில் பேச வேண்டுகோள் என்று வைத்ததாகக் கூறப்படுகிறது.

அதற்கு ''தேசிய மொழியான இந்தி அதிகாரிகளுக்குத் தெரியாமல் இருப்பது எப்படி'' என்று சையத் ஷாஹிசாதி கேட்டதாக தகவல் வெளியானது.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சையத் ஷாஹிசாதி இந்தி மொழியில் பேசினார். அதை மற்றொரு அதிகாரி மூலம் மற்றவர்களுக்கு மொழிபெயர்ப்பு செய்ததாகக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.

தேசிய சிறுபான்மையின நல ஆணைய உறுப்பினர் பேச்சால் புதுச்சேரியில் சர்ச்சை

இந்தக் கூட்டம் முடிந்ததும் தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹிசாதி அதிகாரிகளிடம் இந்தி தெரியாதது குறித்துப் பேசியதாகக் கூறப்படும் விஷயம் புதுச்சேரி முழுவதும் பரவத் தொடங்கியது.

எதிர்க்கட்சி தலைவர் கடுமையான கண்டனம்

இதற்குப் புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா. சிவா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தார். "இந்திய ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல், நாட்டின் பன்முகத் தன்மையைச் சிதைக்கும் வகையில் நாடு முழுக்க ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கல்வி, ஒரே கலாசாரம் என்று கொண்டுவர முயன்று வருகிறது. இது நாட்டை அனைத்து வகையிலும் சீரழிக்கவே செய்யும்.

ஆனால் ஒன்றிய அரசின் இந்த மனப்பான்மைக்கு ஒத்துழைப்பு தரும் அரசியல்வாதிகள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு ஒன்றிய ஆட்சியாளர்கள் மேலும், மேலும் பதவி உயர்வை வழங்கி வருகின்றனர். இதனால் அவர்களும் ஒன்றிய அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்," என்றார் அவர்.

"அந்த வகையில் புதுச்சேரியில் நடைபெற்ற சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹிசாதி அதிகாரிகள் மத்தியில் இந்தியிலேயே பேசினார்.

புதுச்சேரி அதிகாரிகள் யாருக்கும் இந்தி தெரியாது, எனவே ஆங்கிலத்தில் பேசினால் நீங்கள் சொல்ல வரும் கருத்தைப் புரிந்து கொள்வோம் என்று தெரிவித்தனர். "

தேசிய சிறுபான்மையின நல ஆணைய உறுப்பினர் பேச்சால் புதுச்சேரியில் சர்ச்சை

''இதை ஏற்று ஆங்கிலத்தில் பேசுவதற்கு மாறாக 'இந்தி தேசிய மொழி உங்களுக்குத் தெரியாதா? இந்தியைத் தெரிந்து கொள்ளாமல் எப்படி அரசுப் பதவிக்கு வந்தீர்கள்?' என்று கேட்டு அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார். இதை புதுச்சேரி திமுக வன்மையாகக் கண்டிக்கிறது," என்றார் அவர்.

"இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு உடனடியாகத் தலையிட்டு தமிழ் பேசும் அதிகாரிகள் மத்தியில் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்தி பேச வற்புறுத்திய தேசிய சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனி புதுச்சேரிக்கு வரும் ஒன்றிய அரசின் அமைச்சர்கள், ஆணையர்கள், அதிகாரிகள் தேசிய ஒருங்கிணைப்பு மொழியான ஆங்கிலமும் புதுச்சேரி அலுவல் மொழியான தமிழும் தெரிந்தவர்களை அனுப்பி வைக்கவேண்டும் வலியுறுத்துகிறேன்," என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா தெரிவித்தார்.

கருப்புக் கொடி

இதனிடையே திட்டச் செயல்பாடுகள் குறித்து சையத் ஷாஹிசாதி விளக்கமளிக்கப் புதுச்சேரி தலைமை செயலகத்தில் சனியன்று செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையறிந்த புதுச்சேரி தந்தை பெரியார் திராவிட கழகம், தமிழ்த் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆணைய உறுப்பினரின் செயலைக் கண்டித்தும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் தலைமை செயலகம் முன்பு ஒன்று திரண்டனர்.

தேசிய சிறுபான்மையின நல ஆணைய உறுப்பினர் பேச்சால் புதுச்சேரியில் சர்ச்சை

சிறுபான்மையின நல ஆணைய உறுப்பினருக்கு எதிராகவும் ஆளுநர், முதல்வரைக் கண்டித்தும் கருப்புக் கொடியைக் காட்டி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய சமூக அமைப்பினரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

"இந்தி மட்டுமே தெரியும்" - சையத் ஷாஹிசாதி

இதைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் தேசிய சிறுபான்மையின நல ஆணைய உறுப்பினர் சையத் ஷாஹிசாதி மற்றும் வக்புவாரிய அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் ஒன்றாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, சிறுபான்மையின மக்களுடன் நடத்திய கூட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு வக்பு வாரிய தலைவர் நியமனம், வக்பு வாரிய இட ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, ஹஜ் புனிதப் பயணத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்துப் பேசினார்.

அப்போது ஆய்வுக் கூட்டத்தில் சையத் ஷாஹிசாதி இந்தி மொழியில் பேசியதால், ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியதாகக் கூறப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. எனக்கு இந்தி மட்டும் தான் தெரியும், அதனால் இந்தியில் பேசுகிறேன்," என்றார் சையத் ஷாஹிசாதி.

தேசிய சிறுபான்மையின நல ஆணைய உறுப்பினர் பேச்சால் புதுச்சேரியில் சர்ச்சை

இதையடுத்து புதுச்சேரி அமைச்சர் சாய் ஜெ. சரவணன்குமாரிடம், ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு இந்தி தெரியாதா என்று சையத் ஷாஹிசாதி கேள்வி எழுப்பியதாக வெளியான சர்ச்சை குறித்து பிபிசி கேள்வி எழுப்பியது. அப்போது, "பொதுவாக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இந்தியுமே தெரியும் என்ற அடிப்படையில் தான் கேட்டார். மற்றபடி சர்ச்சை எதுவும் எழவில்லை," என்று பதிலளித்தார்.

இந்திய சட்டப்படி இந்தி உள்ளிட்ட 22 மொழிகள் அலுவல்பூர்வ மொழிகள் மட்டுமே; இந்தியாவுக்கு தனி தேசிய மொழி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்கள் ஆய்வுக் கூட்டத்தில் ஏற்பட்ட இந்தி சர்ச்சை குறித்து மீண்டும் அதே கேள்வியை எழுப்பவே, "பிரிட்டிஷ் மொழி ஆங்கிலம் தெரிகிறது. இந்திய தேசிய மொழி இந்தி தெரியதா?' என்றுதான் கேட்டார்," என்று அமைச்சர் சாய் ஜெ. சரவணக்குமார் தெரிவித்தார்.

"வெறுப்புணர்வைக் காட்ட இந்தியைப் பயன்படுத்துகின்றனர்"

பிரதமர் நரேந்திர மோதியிடம் தங்கள் விஸ்வாசத்தை நிரூபிக்க தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வரும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இதுபோன்று இந்தி மொழியை ஆயுதமாகக் கையாள்வதாக புதுச்சேரி தந்தை பெரியார் திராவிட கழகத் துணைத் தலைவர் இளங்கோவன் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

"இந்தியாவின் ஆட்சி மொழி எல்லா மாநில மொழிகளும் தான் என்று இந்திய அரசமைப்பு சட்டம் சொல்கிறது. அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப ஆட்சி மொழி உள்ளதே தவிர இந்தி தான் இந்தியாவின்‌ ஆட்சி மொழி என்று எங்கும் சொல்லப்படவில்லை. ஆனால் அனைத்து மாநிலங்களுக்குமான இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும் என்று ஜவஹர்லால் நேரு கூறியுள்ளார்.

இதை வட மாநிலங்களில் இருந்து வரும் அதிகாரிகள் புரிந்துகொள்வது இல்லை. குறிப்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தி படிக்க மாட்டார்கள், சாதி அமைப்புகளை எதிர்ப்பாளர்கள் என்ற பரவலான கருத்து உள்ளது.

அதன் அடிப்படையில் இங்கு வரும் அதிகாரிகள் அதன் வெறுப்புணர்வை இவ்வாறு காட்டுகின்றனர். இதேபோன்று தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் பெரிய சர்ச்சையாக வெடித்தது, அதனால் 'இந்தி தெரியாது போடா' என்ற வாசகம் உலகளவில் டிரெண்ட் ஆனது," என்றார் இளங்கோவன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: