டெல்லியில் காருடன் இழுத்துச் செல்லப்பட்ட பெண்: விடுபட்ட சிசிடிவி காட்சிகள், விலகாத புதிர்

அஞ்சலி வழக்கு: நிமிடத்திற்கு நிமிடம் விசாரணை, விடுபடாத புதிர்
    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பி பி சி நிருபர்

டெல்லி சுல்தான்புரி பகுதியில் 20 வயது இளம்பெண் அஞ்சலி சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் பரிதாபமாக இறந்த சம்பவத்தை அடுத்து நடந்த விசாரணை குறித்த தகவல்களை தில்லி காவல்துறை செய்தியாளர் சந்திப்பை நடத்தித் தெரிவித்துள்ளது.

இதுவரை நடந்த விசாரணையின் அடிப்படையில், டெல்லி காவல்துறையின் சிறப்பு ஆணையர் சாகர்பிரீத் ஹூடா அளித்த தகவல்களை பார்க்கலாம்.

தில்லி காவல் துறை கூறியவை

  • சாட்சி நிதிக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது, அது குறித்து இப்போது தகவல் தெரிவிக்க முடியாது.
  • சிசிடிவி அடிப்படையில் மேலும் இரண்டு பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அதாவது, குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் ஐந்து பேர் அல்ல ஏழு பேர்.
  • குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற இருவரும் உண்மையை மறைக்க முயன்றுள்ளனர். குற்றவாளிகளைக் காப்பாற்ற உதவியுள்ளனர்.
  • சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படுகின்றன.
  • அழைப்பு விவரங்களின் அடிப்படையில், இறந்த அஞ்சலிக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே பழைய தொடர்பு எதுவும் கண்டறியப்படவில்லை.
  • மற்ற அம்சங்களை ஆய்வு செய்த பின்னர், காவல்துறை விரைவில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யும்.
  • கடைசி காட்சியை ட்ரேஸ் செய்யும் போது, ​​இந்த வழக்கில் நிதி ஒரு முக்கியமான சாட்சி என்ற முடிவுக்கு போலீசார் வந்துள்ளனர். அவரது வாக்குமூலம் 164 சிஆர்பிசியின் கீழ் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • சம்பவத்திற்குப் பிறகு காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்படவில்லை, இதற்கான காரணம் என்ன என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
  • இப்போது வரை இந்த வழக்கு ஒரு கொலை வழக்காகப் பதிவு செய்யப்படவில்லை. வலுவான ஆதாரம் இல்லாமல் பிரிவு 302 (கொலை) விதிக்க முடியாது. இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், பிரிவு 304 (குற்றமில்லா கொலை) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • இது மனிதப் பிழையா அல்லது செயல்பாட்டில் பிழையா என்பது குறித்தும் காவல்துறையின் பங்கு குறித்தும் உள்ளக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • அந்த இடத்தில் கிடைத்த ஸ்கூட்டியின் அடிப்படையில், அதன் உரிமையாளரின் வீட்டை போலீஸார் அடைந்தனர். அதன் பின்னரே சடலம் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறை தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு துப்பும் வெளிவரவில்லை.
  • அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புள்ளிகளை இணைக்கும் முயற்சி

டிசம்பர் 31-ஆம் தேதி இரவு வடமேற்கு டெல்லியின் சுல்தான்புரி பகுதியில் 20 வயது இளம்பெண் அஞ்சலி சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் பரிதாபமாக இறந்த சம்பவத்தை அடுத்து, டெல்லி காவல்துறையின் எதிர்வினை மற்றும் ஆரம்ப விசாரணை குறித்து தீவிரமாகக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

சுல்தான்புரியின் கிருஷ்ணா விஹார் பகுதியில் ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண் விபத்தில் சிக்கினார் என்பது காவல் துறைத் தரப்பின் வாதம். காரில் அவரது உடல் சிக்கிய நிலையில், இங்கிருந்து 14 கிமீ தொலைவில் உள்ள கஞ்சவாலா காவல் நிலையத்தின் ஜௌண்டா கிராமத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் வெளியாகி, சில மணிநேரங்களுக்குப் பிறகு, டெல்லி காவல்துறை அதிகாரப்பூர்வ அறிக்கையில் இது ஒரு விபத்து என்றும், காரில் இருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டது குறித்தும் தெரிவித்தது. அவர்கள் அனைவர் மீதும் குற்றமற்ற கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது ஐந்து பேர் அல்ல ஏழு பேர் குற்றவாளிகள் என்று போலீஸ் சொல்கிறது.

இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளோ அல்லது சாட்சிகளோ இல்லை என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், செவ்வாய்கிழமையன்று, நிதி என்ற இளம் பெண், தான் விபத்து நடந்தபோது ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்ததாகவும், பயம் காரணமாக அமைதியாக இருந்ததாகவும் கூறி முன் வந்தார்.

கொல்லப்பட்ட பெண் தனது தோழி என்றும், ஸ்கூட்டி கார் மீது மோதியதில் காரின் அடியில் சிக்கிக் கொண்டதாகவும் நிதி கூறினார்.

காவல்துறையின் கோட்பாடு மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விபத்து இங்கு நடந்ததாகக் கூறப்படுகிறது.
படக்குறிப்பு, காவல்துறையின் கோட்பாடு மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விபத்து இங்கு நடந்ததாகக் கூறப்படுகிறது.

சிசிடிவி காட்சிகள் ஏன் இல்லை?

இந்தச் சம்பவம் சுல்தான்புரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணா விஹார் பகுதியில் நடந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. பிபிசி சம்பவ இடத்தைப் பார்வையிட்டது. போலீசார் ஸ்கூட்டியை எடுப்பதை நேரில் பார்த்த பல சாட்சிகள் உள்ளனர்.

ஸ்கூட்டி போன்ற சில துண்டுகள் ஓரிடத்தில் கிடப்பதையும் மக்கள் பார்த்தனர். விபத்து நடந்த இடம் சுல்தான்புரி காவல் நிலையத்திலிருந்து 900 மீட்டர் தொலைவில் உள்ளது.

கிருஷ்ணா விஹாரின் இந்த தெரு 190 மீட்டர் நீளம் கொண்டது, அதில் நான்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பிபிசி இந்த கேமராக்களின் காட்சிகளையும் ஆய்வு செய்து, நிகழ்வுகளின் வரிசையை ஒன்றாக இணைக்க முயற்சித்தது.

இந்த நான்கு சிசிடிவிகளின் பதிவு நேரங்கள் வெவ்வேறானவை. ஆனால், ஒவ்வொரு படமாகப் பொருத்திப் பார்த்தால் என்ன தெளிவு கிடைக்கிறது?

இந்த இடத்தில் சிசிடிவி கேமரா உள்ளது. இதில் பலேனோ, ஸ்கூட்டி இரண்டும் வந்து போவது போல் காட்சியளிக்கிறது. இந்த இடம் விபத்து நடந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ளது.
படக்குறிப்பு, இந்த இடத்தில் சிசிடிவி கேமரா உள்ளது. இதில் பலேனோ, ஸ்கூட்டி இரண்டும் வந்து போவது போல் காட்சியளிக்கிறது. இந்த இடம் விபத்து நடந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ளது.

அனைத்து சிசிடிவிகளிலும் நேர முத்திரை வித்தியாசமாக இருப்பதாலும், நேரம் முன்னும் பின்னுமாக இருப்பதாலும், காட்சிகளின் நேர முத்திரையின் அடிப்படையில், எந்த நேரத்தில், எங்கு விபத்து நடந்தது என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை.

ஆனால் ஒரு சிசிடிவியின் நேர முத்திரையும், காவல்துறை கொடுத்த நேரமும் பொருத்தமாக இருக்கிறது. இதன்படி இரவு 2.05 மணியளவில் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என ஊகிக்க முடியும்.

விபத்திற்குச் சற்று முன்பும் பின்பும் ஸ்கூட்டி மற்றும் பலேனோ காரில் இரண்டு பெண்கள் அங்கிருந்து கிளம்பும் சிசிடிவி காட்சிகள் உள்ளன. ஆனால், கார்-ஸ்கூட்டி மோதி விபத்து அல்லது விபத்து போன்ற காட்சிகள் எதுவும் இல்லை.

அந்த இடத்தில் இதுபோன்ற சிசிடிவி கேமரா காட்சிகள் எதுவும் தெரியவில்லை, இந்த அறிக்கை எழுதும் வரை இதுபோன்ற காட்சிகள் எதுவும் வெளியில் வரவில்லை. விபத்து எப்படி நடந்தது, அதன் பிறகு என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியாததற்கு இதுவே காரணம்.

விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதில் ஸ்கூட்டி, பலேனோ கார் மற்றும் போலீஸ் பிசிஆர் வெளியே வருவது தெரிகிறது.
படக்குறிப்பு, விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதில் ஸ்கூட்டி, பலேனோ கார் மற்றும் போலீஸ் பிசிஆர் வெளியே வருவது தெரிகிறது.

சம்பவ இடத்திற்கு அருகில், பலேனோ காரின் கீழே பெண் இருப்பது தெரியாதது ஏன்?

விபத்து நடந்த இடத்திலிருந்து 20 மீட்டர் மற்றும் 50 மீட்டர் தொலைவில் உள்ள சிசிடிவி காட்சிகளை பிபிசி பார்த்துள்ளது. இதில், ஸ்கூட்டியில் இரண்டு பெண்கள் ஒருபுறமும், பலேனோ கார் மறுபுறமும் வருவது தெரிந்தது.

இந்த வீடியோக்கள் அடங்கிய சிசிடிவி விபத்து நடந்த இடத்தை விட சில படிகள் முன்னால் உள்ளது. அதாவது, விபத்து நடந்த சில நொடிகளில் இந்த சிசிடிவி பதிவாகியுள்ளது. ஆனால் இவற்றில் காருக்கு அடியிலோ, பக்கத்திலோ பெண் தென்படவில்லை.

சிசிடிவி காட்சிகள் தெளிவாக இல்லை. ஆனால் அந்த வீடியோவை ஃபிரேம் பை ஃபிரேம் பார்த்த பிறகும் காருக்கு அடியில் எந்தப் பெண்ணும் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. அப்போது அந்த பெண் காருக்கு அடியில் இருந்திருந்தால், அவளது எந்த பகுதியும் காட்சிகளில் கூட தெரியாத வகையில் சிக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் முன்பு, பலேனோ கார் சென்று 30 வினாடிகளுக்குப் பிறகு பிசிஆர் கடந்து செல்கிறது. இந்த சிசிடிவியின் நேர பதிவைச் சரிபார்க்க முடியவில்லை
படக்குறிப்பு, விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 50 மீட்டர் முன்பு, பலேனோ கார் சென்று 30 வினாடிகளுக்குப் பிறகு காவல் வாகனம் கடந்து செல்கிறது. இந்த சிசிடிவியின் நேர பதிவைச் சரிபார்க்க முடியவில்லை

சம்பவ இடத்தில் இருந்த பி சி ஆர் வேன், பலேனோ காரைப் பின் தொடர்ந்து செல்லாதது ஏன்?

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், பிபிசி பார்த்ததில், இந்தச் சம்பவம் நடந்த அதே நேரத்தில் ஒரு போலீஸ் பிசிஆர் வேனும் அந்த இடத்தில் காணப்பட்டது.

இந்த பி.சி.ஆர் வேனின் காட்சிகள் செய்தி சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது, விபத்து நடந்த போது அந்த வேன் அருகில் இருந்திருந்தால் இந்த வேனில் இருந்த போலீசார் ஏன் அப்போது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தப் பாதையில் பொருத்தப்பட்டுள்ள நான்கு சிசிடிவிகளில் முதல் சிசிடிவி காட்சிகளின்படி, பலேனோ கார் இந்தப் பாதையில் நுழைந்து சரியாக 30 வினாடிகளுக்குப் பிறகு, பிசிஆர் காரும் அதே பாதையில் நுழைகிறது.

சிசிடிவியின் நேர முத்திரையின்படி, பலேனோ இரவு 2.00.37 மணிக்கு வலது பக்கத்திலிருந்து பாதைக்குள் நுழைகிறது, பிசிஆர் வேன் பிற்பகல் 2.01.07 மணிக்கு இடது பக்கத்திலிருந்து நுழைகிறது. அதாவது, பிசிஆர் சந்தேகத்திற்குரிய பலேனோவுக்குப் பிறகு முப்பது வினாடிகளுக்குப் பிறகு அதே பாதையில் நுழைகிறது.

விபத்து நடந்ததாகக் கூறப்படும் இடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் முன்னால் உள்ள இடத்தின் மற்றொரு சிசிடிவி காட்சியும் பிசிஆர் வேனைக் காட்டுகிறது, இருப்பினும் எவ்வளவு நேரம் கழித்து பிசிஆர் கடந்து சென்றது என்பது நேர முத்திரையிலிருந்து தெளிவாகத் தெரியவில்லை.

இதுவரை கிடைத்த காட்சிகளில், காவல்துறையின் இந்த PCR சந்தேகத்திற்குரிய பலேனோவை துரத்துவதைப் பார்க்கமுடியவில்லை.

வியாழக்கிழமை தில்லி காவல்துறையின் செய்தியாளர் கூட்டத்தில், 'இந்தச் செயல்பாட்டில் மனிதப் பிழையா அல்லது அமைப்பின் தவறா என்பது குறித்து காவல்துறையின் பங்கு குறித்து உள் விசாரணை நடைபெற்று வருகிறது. முடிவு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்று கூறப்பட்டது.

எவ்வாறாயினும், பி.சி.ஆர். விஷயத்தில் தங்கள் தரப்பில் எந்தக் குறைபாட்டையும் போலீசார் இதுவரை ஏற்கவில்லை.

பிசிஓஆர் ஸ்கூட்டியை அந்த இடத்தில் பார்த்ததாக போலீசார் கூறுகின்றனர். அதன் எண்ணின் அடிப்படையில் போலீசார் அவரது உரிமையாளரின் வீட்டிற்கு வந்தனர். இதனடிப்படையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதையடுத்துக் காவல் துறையினர் அவரது தாயாரை அழைத்துச் சடலத்தை அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த சாலையில் விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்

பட மூலாதாரம், GOOGLE MAPS

படக்குறிப்பு, இந்த சாலையில் விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்

அஞ்சலியின் தோழியின் கூற்றின் மீது கேள்வி

செவ்வாய்கிழமை நடந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி தான் மட்டுமே என்று கூறிக்கொள்ளும் அஞ்சலியின் தோழி நிதியின் கூற்று தற்போது புதிராக மாறியுள்ளது.

நிதி சுல்தான்புரி காவல் நிலையத்திலிருந்து 300 மீட்டர் தொலைவிலும், சம்பவ இடத்திலிருந்து 1100 மீட்டர் தொலைவிலும் வசிக்கிறார்.

விபத்துக்குப் பிறகு மிகவும் பயந்துவிட்டதாகவும், யாரிடமும் எதுவும் சொல்லாமல் அமைதியாக வீட்டுக்குத் திரும்பியதாகவும் நிதி கூறியுள்ளார்.

அச்சம் காரணமாக சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் வரை இதை யாரிடமும் கூறவில்லை என்று கூறியுள்ளார்.

சிசிடிவி காட்சிகளில், ஓயோ ஹோட்டலுக்கு வெளியே அஞ்சலியுடன் மற்றொரு பெண் காணப்பட்டார். அவர் நிதி என்று நம்பப்படுகிறது.

சுல்தான்புரியின் சி-1 பிளாக்கில் நிதி தனியாக வசிக்கிறார். புதன்கிழமை, அவர் தனது வீட்டில் இருந்தார். ஊடகங்களுடன் பேசவில்லை.

அக்கம்பக்கத்தினருடன் பேசியதில், அவர் நீண்ட நாட்களாக தனியாக வசித்து வந்தது தெரிய வந்தது.

அவரது தந்தை நீண்ட காலத்திற்கு முன்பு இறந்துவிட்டார். அக்கம்பக்கத்தினருக்கு அவரது தொழில் பற்றி அதிகம் தெரியாது.

மறுபுறம், அஞ்சலியின் குடும்பத்தினர், நிதி பற்றித் தங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை என்றும், அவர் தங்கள் வீட்டிற்கு வந்ததில்லை என்றும் கூறுகிறார்கள்.

பிபிசி உடனான உரையாடலில் நிதி பொய் சொன்னதாக அஞ்சலியின் குடும்பத்தினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

தில்லி காவல்துறை வியாழக்கிழமை, 'நேரில் கண்ட சாட்சியான நிதிக்குக் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை. நீதிமன்றத்தில் அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது, இது குறித்து இப்போது தகவல் தெரிவிக்க முடியாது.”என்று கூறியது.

நிதியின் தாய் வீடு. அக்கம்பக்கத்தினர் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன், நிதி இந்த வீட்டை விட்டுச் சென்று விட்டார்.
படக்குறிப்பு, நிதியின் தாய் வீடு. அக்கம்பக்கத்தினர் கூறுகையில், பல ஆண்டுகளுக்கு முன், நிதி இந்த வீட்டை விட்டுச் சென்று விட்டார்.

கால வரிசைப்படி இது வரை கிடைத்த தெளிவு

பிபிசி டிசம்பர் 31 இரவு மற்றும் ஜனவரி 1 காலை நிகழ்வுகளை இணைக்க முயற்சித்தது. இதுவரை தெளிவாகத் தெரிந்தது-

அஞ்சலி மாலையே வீட்டை விட்டு வெளியேறிவிட்டு, இரவு வெகுநேரம் கழித்துத் திரும்பி வருவேன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டாள். கடைசியாக இரவு 8.29 மணிக்கு அம்மாவிடம் பேசினார்.

அஞ்சலி வேறொரு பெண்ணுடன் ஓயோ ஹோட்டலுக்குச் சென்றதை ஹோட்டல் காட்சிகள் காட்டுகிறது. சிசிடிவி காட்சிகள் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் கூற்றின் படி, இருவருக்கும் இடையே சிறிது நேரம் மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. காட்சிகளில், பெண்கள் அதிகாலை 1.32 மணிக்கு ஓயோ ஹோட்டலில் இருந்து வெளியேறுவதைக் காணலாம்.

இரவு இரண்டு மணியளவில், விபத்து நடந்த இடத்திற்கு அருகில் அஞ்சலியும் மற்றொரு பெண்ணும் ஸ்கூட்டியில் செல்கின்றனர். ஓயோ ஹோட்டலுக்கும் ஸ்பாட்டிற்கும் இடையே சுமார் இரண்டரை கிலோமீட்டர் தூரம் உள்ளது. இந்த நேரத்தில், அந்த இடத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான பலேனோ கார் மற்றும் போலீஸ் பி.சி.ஆர். வேன் காணப்படுகின்றன.

இந்த வாகன நிறுத்துமிடத்தில் பலேனோ காரை போலீசார் கண்டுபிடித்தனர். எஃப்எஸ்எல் குழுவினர் சிறிது நேரத்தில் இங்கு வந்து காரில் இருந்து தடயவியல் ஆதாரங்களை சேகரித்தனர்.
படக்குறிப்பு, இந்த வாகன நிறுத்துமிடத்தில் பலேனோ காரை போலீசார் கண்டுபிடித்தனர். எஃப்எஸ்எல் குழுவினர் சிறிது நேரத்தில் இங்கு வந்து காரில் இருந்து தடயவியல் ஆதாரங்களை சேகரித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கஞ்சவாலாவிலிருந்து ஜௌண்டா கிராமத்தை நோக்கி வாகனத்தை ஓட்டிச் சென்றது சிசிடிவி காட்சிகளில் காணப்படுகின்றது. அதிகாலை 3.17 மணிக்கு எடுக்கப்பட்ட காட்சியில், சந்தேகத்திற்குரிய பலேனோ கார் யூ-டர்ன் எடுப்பதைக் காணலாம். இப்போது அதன் அடியில் ஏதோ தெரிகிறது.

பலேனோ காரின் அடியில் சடலத்தைப் பார்த்தவர்கள் காவல்துறைக்கு பல PCR அழைப்புகளை செய்தனர். காலை 3.30 மணியளவில் சம்பவ இடத்திலிருந்து 13.1 கிலோமீட்டர் தொலைவில் பலேனோ காரின் அடியில் இருந்து அஞ்சலியின் உடல் யு-டர்ன் மீது விழுந்தது. சிறிது நேரம் கழித்து, பெண்ணின் சடலம் சாலையில் கிடப்பது குறித்து கஞ்சவாலா காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

மாலை 4.51 மணியளவில், ஜவுண்டி கிராமத்தில் சடலம் விழுந்த இடத்திலிருந்து 14.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரோகினியின் செக்டார்-1 இன் வாகன நிறுத்துமிடத்தில் கார் ஓட்டுபவர்கள் காரை நிறுத்துகின்றனர்.

காலை 6:55 மணிக்கு, போலீஸ் டீம் பார்க்கிங்கில் உள்ள கார் அருகே சென்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து, எஃப்எஸ்எல் குழு சம்பவ இடத்திற்கு வந்து காரில் இருந்து தடயவியல் ஆதாரங்களை சேகரிக்கிறது. டெல்லி போலீஸ் குழு இங்கு முழுமையான விசாரணையை நடத்துவதாக நேரில் பார்த்த சாட்சியங்கள் கூறுகின்றன.

இதற்கிடையில், டெல்லி போலீசார் காரில் இருந்த 5 பேரையும் கைது செய்தனர். ரோகினி செக்டார் 1ல் வசிக்கும் தங்கள் நண்பரிடம் அவசரத் தேவை என்று கூறி இளைஞர் இந்தக் காரைக் கடனாகப் பெற்றுள்ளார்.

மருத்துவக் குழு தனது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அஞ்சலி மீது கற்பழிப்பு அல்லது பாலியல் வன்முறையை உறுதிப்படுத்தவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: