டெல்லியில் காருடன் இழுத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு நடந்தது என்ன? – களத்தில் பிபிசி

கஞ்சாவ்லா வழக்கு
    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கஞ்சாவ்லா வழக்கை விசாரித்து வரும் தில்லி போலீஸார் செவ்வாய்கிழமை மதியம் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, இந்த விவகாரத்தில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது என்று தெரிவித்தனர்.

"பாதிக்கப்பட்ட பெண்ணுடன் மற்றொரு பெண் இருந்தார். விபத்தில் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து நடந்தவுடன் அவர் எழுந்து சென்று விட்டார்,” என்று டெல்லி காவல்துறையின் சிறப்பு கமிஷனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சாகர்ப்ரீத் ஹூடா கூறினார்.

"சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி எங்களிடம் இருக்கிறார். இப்போது காவல்துறையுடன் அவர் ஒத்துழைத்து வருகிறார். அவரது வாக்குமூலம் CRPC இன் பிரிவு 164 இன் கீழ் பதிவு செய்யப்படுகிறது. இது ஒரு முக்கியமான விஷயம்," என்று அவர் குறிப்பிட்டார்.

”குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவதில் இது முக்கியமானதாக இருக்கும். இந்த விவகாரத்தில் விசாரணை நடந்து வருகிறது. டெல்லி காவல்துறை விரைவில் விசாரணையை முடிக்கும். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்" என்றும் ஹூடா கூறினார்.

டெல்லியில் உள்ள மெளலானா ஆசாத் மருத்துவ கல்லூரியில் உயிரிழந்த பெண்ணின் பிரேதப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து போலீசார் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

டெல்லி போலீஸ் சிறப்பு கமிஷனர்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, டெல்லி போலீஸ் சிறப்பு கமிஷனர் சாகர் ப்ரீத் ஹூடா

அன்று இரவு நடந்தது என்ன?

இரவு 8.29 மணிக்கு 29 வினாடிகள் நீடித்த தொலைபேசி அழைப்பில், 'எப்போது வீட்டிற்கு வருவாய்' என்று தாய் மகளிடம் கேட்டுள்ளார். அதற்கு மகள், 'தாமதமாகும்' என பதிலளித்துள்ளார்.

அதன் பிறகு தாய் மகளிடையே எந்தப் பேச்சும் நடக்கவில்லை. மறுநாள் காலை ஒரு பெண் போலீஸ் போன் செய்து, 'உங்கள் ஸ்கூட்டி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. போலீஸ் ஸ்டேஷனுக்கு வாருங்கள்' என்றார்.

கஞ்சாவ்லா சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் தாய் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுகொண்டிருந்தபோது வழியில் போலீஸ் வாகனம் அவரை அழைத்துச்செல்ல வந்தது. முதலில் சம்பவ இடம் மற்றும் அதற்குப்பின்னர் சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

"என் மகளுக்கு என்ன நடந்தது என்று என்னிடம் சொல்லவில்லை. நான் போலீசிடம் தொடர்ந்து கெஞ்சினேன். ஆனால் என் மகளை என்னிடம் காட்டவில்லை,"என்று பெண்ணின் தாயார் கூறினார்.

அவரது 20 வயது மகள் டிசம்பர் 31 இரவு சந்தேகத்திற்கிடமான முறையில் காலமானார். சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆகியும், அன்று இரவு அவருக்கு என்ன நடந்தது என்பது இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

பெண்ணின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் டெல்லி போலீசார், காரால் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்ட வழக்காகவே கருதுகின்றனர்.

சுல்தான்புரியின் கிருஷ்ண விஹார் பகுதியில் அந்தப்பெண் சென்றுகொண்டிருந்த ஸ்கூட்டி காருடன் மோதியது. அவரது உடல் காருக்கடியில் சிக்கி 12 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் அவரது உடலின் ஒரு பகுதி சிதைந்தது.

புத்தாண்டின் முதல் நாள் காலை அதாவது ஜனவரி 1ஆம் தேதி டெல்லியின் ஜோந்தி கிராமப் பகுதியில் அந்தப்பெண்ணின் உடல் ஆடையின்றி கண்டெடுக்கப்பட்டது. அவரது உடை தேய்ந்து கிழிந்திருக்க வாய்ப்பு உள்ளது.

பெண் மரணம்

'குடும்ப பாரத்தை தனியாளாக சுமந்த மகள்'

டெல்லியின் மங்கோல்புரி பகுதியில் உள்ள ஒரு சிறிய வீட்டில் விரக்தியுடன் அமர்ந்திருந்த இறந்த பெண்ணின் தாய், இந்த சம்பவத்திற்குப் பிறகு எதையும் சாப்பிடவில்லை.

"எங்களிடம் பத்து ரூபாய் கூட இல்லை. மகளின் இறுதிச் சடங்குகளைச் செய்யக் கூட எங்களிடம் பணம் இல்லை. என் மகளைத்தான் குடும்பமே நம்பியிருந்தது" என்று அவர் கூறுகிறார்.

இவரது கணவரும் எட்டு ஆண்டுகளுக்கு முன் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து விட்டார். கணவர் கொலை செய்யப்பட்டதாக அவர் கருதுகிறார். ஆனால் அது ஒரு தற்கொலை வழக்கு என்று போலீசார் கூறுகின்றனர்.

கணவர் இறந்த பிறகு அவர் தனது 6 குழந்தைகளையும் தனியாக வளர்த்து வந்தார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார்.

இதைத் தொடர்ந்து குடும்பத்தை நடத்தும் பொறுப்பை அவரது மகள் ஏற்றுக்கொண்டார். வறுமை காரணமாக இறந்தவரின் தாய் தனது இரண்டு மகள்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துள்ளார்.

"என் மகள் சிரித்த முகத்துடன் இருப்பாள். சமூக வலைதளங்களில் ரீல் தயாரிப்பது அவளுக்கு பிடிக்கும். அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்," என்று அவர் கூறினார்.

அந்தப்பெண் திருமணம் போன்ற நிகழ்வுகளில் விருந்தினர்களை வரவேற்கும் பெண்ணாக வேலை செய்து வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

”அவர் நாளொன்றுக்கு 500 ரூபாய் சம்பாதித்து வந்ததால் எங்கள் குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது’’ என்கிறார் பெண்ணின் தாய்.

இருப்பினும் அவர் எந்த நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்பது தாய்க்கும், குடும்பத்தில் உள்ள யாருக்கும் தெரியாது. ஜனவரி 31 அன்று இரவு அவர் எங்கு சென்றார் என்று கூட குடும்பத்தினருக்குத் தெரியவில்லை.

கடைசியாக தனது மகளுடன் பேசியதை நினைவு கூர்ந்த அவர், “தாமதமாக வருவேன் என்றுதான் சொன்னார். ஆனால் நிகழ்ச்சி எங்கே என்று சொல்லவில்லை,”என்றார்.

காவல்துறைக்கு எதிராக மக்கள் போராட்டம்

திங்கள்கிழமை டெல்லியில் உள்ள சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு வெளியே ஏராளமான உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நீதி கோரி அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

போராட்டத்தில் பங்கேற்க வந்த ஓம்வதி என்ற பெண்,"குற்றவாளிகளை போலீசார் பாதுகாப்பதாக கருதுகிறோம். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" என்றார்.

போராட்டக்காரர்கள் டெல்லி காவல்துறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். காவல் நிலையத்திற்கு வெளியே ஒட்டப்பட்டிருந்த குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் சுவரொட்டியையும் அவர்கள் கிழித்தெறிந்தனர்.

ஐந்து பேர் கைது

ஐந்து பேர் கைது

பட மூலாதாரம், DELHI POLICE

இந்த வழக்கில் 5 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் மங்கோல்புரியில் வசிப்பவர்கள்.

தீபக் கன்னா என்ற இளைஞர் காரை ஓட்டி வந்ததாகவும், அதில் அமித் கன்னா, மனோஜ் மித்தல், மிதுன், கிருஷ்ணா ஆகியோர் அமர்ந்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கார் அடையாளம் காணப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தீபக் கன்னா தொழில் ரீதியாக வாகன ஓட்டுநர். அமித் கன்னா வங்கிக்யில் பணிபுரிகிறார். கிருஷ்ணா, ஸ்பெயின் கலாச்சார மையத்தில் பணிபுரிகிறார்.

மிதுன் சிகையலங்கார நிபுணர் மற்றும் மனோஜ் மித்தல் சுல்தான்புரி கேபி பிளாக்கில் ரேஷன் கடை நடத்தி வருகிறார்.

மனோஜ் மித்தல் பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்புடையவர் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். அவருக்கு வாழ்த்து தெரிவித்து சுல்தான்புரி மற்றும் மங்கோல்புரியிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு வெளியேயும் மனோஜ் மித்தலின் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. ஆவேசமான கும்பலால் அவை கிழித்தெறியப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் மங்கோல்புரியைச் சேர்ந்தவர்கள். இறந்தவரும் இந்தப் பகுதியில்தான் வசித்து வந்தார். அவரது வீட்டிற்கும் குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டிற்கும் இடையே ஒன்றரை முதல் இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ளது.

காவல்துறை மீது எழுப்பப்பட்ட கேள்விகள்

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பலர் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

சுல்தான்புரி பகுதியில் வசிக்கும் டெலிவரி பாய் விகாஸ் மெஹ்ரா, ஜனவரி 31 அன்று இரவு காருக்கு அடியில் பெண்ணின் சடலத்தை பார்த்ததாகக் கூறியுள்ளார்.

"இரவு சுமார் 2.15 மணி இருக்கும். நான் கஞ்சாவ்லா சாலையில் இருந்து வந்து கொண்டிருந்தேன். முன்னால் போலீஸ் போஸ்டைப் பார்த்ததும் திடீரென்று ஒரு கார் வேகமாகத் திரும்பியது.

அதன்மீது இடிக்காமல் நான் தப்பித்தேன். அந்த காருக்கு அடியில் ஒரு பெண்ணின் தலையை பார்த்தேன்" என்று விகாஸ் மெஹ்ரா கூறுகிறார்.

"இதுபற்றி நான் காவல்நிலையத்தில் தெரிவித்தேன். ஆனால் அங்கிருந்த காவலர்கள் உனக்கு காயம் ஏற்படவில்லை அல்லவா, நாங்கள் காரை பார்த்துக்கொள்கிறோம், நீ வீட்டிற்குச் செல் என்று கூறி என்னை அனுப்பிவிட்டார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.

ஊடகங்களிடம் பேச வேண்டாம் என்று தனது மகனை போலீசார் எச்சரித்ததாக விகாஸின் தந்தை கூறுகிறார்.

நேரில் பார்த்த மற்றொரு சாட்சியான தீபக்கும் பெண்ணை காருக்கு அடியில் பார்த்ததாக கூறியுள்ளார்.

நேரில் பார்த்த சாட்சி தீபக்

போலீஸ் யாரும் வரவில்லை

டெல்லியின் லாட்பூர் கிராமத்தில் வசித்து வரும் தீபக், பால் வியாபாரம் செய்கிறார்.

“இரவு 3.18 மணிக்கு கடையை திறந்தேன். அதே நேரத்தில் பலேனோ கார் மெதுவான வேகத்தில் வந்து கொண்டிருந்தது.

காரிலிருந்து டயர் வெடித்த பிறகு வருவது போல ஒரு சத்தம் கேட்டது. கஞ்சாவ்லாவில் இருந்து வந்த வாகனம் மெதுவாக குதுப்கர் நோக்கி சென்று கொண்டிருந்தது. உடல் அதன் முன் டயருக்கு அடியில் சிக்கியிருப்பதை நான் கண்டேன்,”என்று தீபக் தெரிவித்தார்.

உடனே 112க்கு போன் செய்து காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாக தீபக் கூறுகிறார்.

"இரவு 3:30 மணியளவில், மீண்டும் அதே வாகனம் திரும்பி வந்தது. நான் மீண்டும் போலீசாருக்கு போன் செய்து, இப்போது இந்த வாகனம் மீண்டும் கஞ்சாவ்லா நோக்கி செல்கிறது என்றேன். வாகனம் இருக்கும் இடத்தைக் கூற நான் அதை ஸ்கூட்டி வாகனத்தில் பின்தொடர்ந்தேன். கார் வேகமாக செல்லவில்லை. அதே சமயம் அது நிற்கவும் இல்லை.”

காரைப் பற்றி போலீஸாரிடம் தொலைபேசியில் சொல்லிக்கொண்டே இருந்ததாகவும், ஆனால் எந்தவொரு காவலரும் வரவில்லை என்றும் தீபக் கூறுகிறார். "தடுப்புகளை வைத்து போலீசார் வாகனத்தை நிறுத்துவார்கள் என்று என்னிடம் கூறப்பட்டது’’ என்கிறார் தீபக்.

வாகனம் லாட்பூர் மற்றும் ஜோந்தி கிராமத்திற்கு இடையே இரண்டு முறை சுற்றி வந்தது. இரண்டாவது முறையாக கஞ்சாவ்லாவை நோக்கி வாகனம் திரும்பி வந்தபோது, அதன் அடியில் உடல் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

"நாங்கள் எங்கள் பிக்-அப் காரில் வாகனத்தைப் பின்தொடர்ந்தோம். கஞ்சாவ்லா பக்கத்தில் நின்றிருந்த PCR-க்கு தகவல் கொடுத்தோம். ஆனால் PCR, வாகனத்தை நிறுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை."என்று தீபக் தெரிவித்தார்.

விபத்து நடந்தது எங்கே?

விபத்து

இந்த சம்பவம் கிருஷ்ண விஹாரில் உள்ள ஷனிபஜார் சாலையில் அதிகாலை 2 மணியளவில் நடந்தது என்று எப்.ஐ.ஆர் தெரிவிக்கிறது. இந்த பகுதி சுல்தான்புரி காவல் நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

இங்கிருந்து ஸ்கூட்டியை மீட்டதாக எப்ஐஆரில் போலீசார் கூறியுள்ளனர்.

"4.30-4.45 மணிக்கு என் அம்மா சத்தம் கேட்டு ஜன்னலைத் திறந்தார். நானும் கண் விழித்தேன். போலீசார் ஸ்கூட்டியை இங்கிருந்து எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டியின் ஹேண்டில் உடைந்திருந்தது" என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஸ்கூட்டி தனது வீட்டின் பின்புறம் உள்ள பாதையில் நிறுத்தப்பட்டிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த தெரு ஷனிபஜார் மார்க்கிலிருந்து செல்கிறது.

கிருஷ்ண விஹாரின் ஷனிபஜார் பகுதியில் உள்ள ஒரு சிசிடிவியின் காட்சிகளை பிபிசி பார்த்தது. அதில் விபத்தில் தொடர்புடைய பலேனோ கார் அதிகாலை 1.53 மணியளவில் செல்வதை பார்க்கமுடிந்தது.

இந்த சிசிடிவி காட்சியில் ஸ்கூட்டியும் தெரிகிறது. இருப்பினும் இறந்தவர் பயணித்த ஸ்கூட்டிதான் அது என்பதை இந்த மங்கலான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உறுதிப்படுத்த இயலாது.

இந்த விபத்து குறித்து இங்கு யாருக்கும் எந்த தகவலும் இல்லை என்கிறார் இந்த சாலையில் வசிக்கும் அங்கூர் சர்மா.

"அதிகாலை 4:30-5 மணிக்கு ஸ்கூட்டி கண்டுபிடிக்கப்பட்டது. இரவு 1:54 மணிக்கு எங்கள் தெருவில் சந்தேகத்திற்குரிய வாகனமும் காணப்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏதோ தவறு நடந்திருப்பதாக நாங்கள் உணர்கிறோம். அவருக்கு நீதி கிடைக்கவேண்டும்,” என்றார் அவர்.

ஜோந்தி கிராமம் கிருஷ்ண விஹாரிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து ஜோந்தியை அடைய 35 நிமிடங்கள் ஆகும். நான் கிருஷ்ண விஹாரிலிருந்து ஜோந்தி கிராமத்திற்கு காரில் பயணித்தேன். போவதற்கும், வருவதற்கும் சரியாக முப்பந்தைந்து நிமிடங்கள் ஆனது.

இவ்வாறான நிலையில் அதிகாலை 1.54 மணியளவில் கிருஷ்ண விஹாரில் காணப்படுகின்ற வாகனத்தின் ஓட்டுநர் விபத்தால் பயந்து ஓடினார் என்றால் ஜோந்தி கிராமத்தை அடைய ஒன்றரை மணி நேரம் ஏன் ஆனது என்ற கேள்வி எழுகிறது.

கிருஷ்ண விஹாரில் நடந்த விபத்துக்குப் பிறகு, பயத்தின் காரணமாக கஞ்சாவ்லாவை நோக்கி தாங்கள் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.

'பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகள்'

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உயிரிழந்த பெண், பாலியல் வன்கொடுமைக்குப்பிறகு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது உறவினர்களும், ஆர்ப்பாட்டம் செய்வோரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

"ஒவ்வொரு அம்சமும் விசாரிக்கப்படும் என்றும், பிரேத பரிசோதனையில் வேறு ஏதாவது தெரியவந்தால் அந்தப்பிரிவுகளும் சேர்க்கப்படும் என்றும் போலீசார் உறுதியளித்துள்ளனர்."என்று பென்ணின் தாயார் குறிப்பிட்டார்.

பாலியல் வன்புணர்வு நடந்தது விசாரணையில் தெரியவந்தால், கற்பழிப்பு, கொலை ஆகிய பிரிவுகளும் சேர்க்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

திட்டமிடாத கொலை மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது ஆகிய பிரிவுகளை போலீசார் இதுவரை சேர்த்துள்ளனர்.

எஃப்எஸ்எல் குழு சம்பவ இடத்தையும் விபத்துக்குள்ளான வாகனங்களையும் ஆய்வு செய்து தடயவியல் ஆதாரங்களை சேகரித்துள்ளது.

டெல்லி போலீஸ் என்ன சொல்கிறது?

கஞ்சாவ்லா வழக்கில் டெல்லி காவல்துறை செவ்வாய்க்கிழமை காலை ஒரு புதிய தகவலை அளித்துள்ளது. சம்பவத்தின் போது இறந்தவர் ஸ்கூட்டியில் தனியாக இருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் சென்ற பாதையை பற்றி விசாரித்தபோது, அவர் தனது ஸ்கூட்டியில் தனியாக இல்லை என்பது தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தாக செய்தி முகமை ANI கூறுகிறது.

விபத்தின் போது அவருடன் மற்றொரு இளம் பெண் இருந்துள்ளார். விபத்தில் அவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். ஆனால் இறந்தவரின் கால் காரில் சிக்கிக் கொண்டது. இதனால் அவர் காரில் தொடர்ந்து இழுத்துச் செல்லப்பட்டார்.

'சில கிலோமீட்டர்கள் வரை அந்தப்பெண்ணின் உடலை வாகனம் இழுத்துச் சென்றதால் தலையின் பின்புறம் மற்றும் உடலின் பின்பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன' என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.

“அந்தப் பெண் சுமார் 10-12 கிலோமீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டார்” என்று டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி சாகர்தீப் ஹூடா செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

”இதுவரை நடந்த விசாரணையின் அடிப்படையில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவக் குழுவின் அறிக்கை அடிப்படையில் மேலும் விசாரணை நடத்தப்படும். தடயவியல் மற்றும் சட்டக் குழுக்களின் உதவியும் பெறப்பட்டு வருகிறது. டெல்லி காவல்துறையின் பல குழுக்கள் விஷயத்தை விசாரித்து வருகின்றன."

"விசாரணை அதிகாரி அறிக்கையின்படி முதல் பார்வையில் இது ஒரு சாலை விபத்து வழக்கு போலத்தெரிகிறது. விசாரணை நடந்து வருகிறது. பிற பிரிவுகளை சேர்க்க அவசியம் ஏற்பட்டால் அவையும் சேர்க்கப்படும்," என்று டெல்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் சுமன் நல்வா பிபிசியிடம் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: