கெளதம் அதானி: பிரதமர் மோதியுடனான நெருக்கம், வாழ்வின் நான்கு திருப்புமுனை குறித்து சொன்னது என்ன?

கெளதம் அதானி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கெளதம் அதானி

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், என்டிடிவியின் எதிர்காலம் முதல் பிரதமர் நரேந்திர மோதியுடனான நெருக்கம் பற்றி வெளிவரும் செய்திகளுக்கு தனது முதல் எதிர்வினையை அளித்துள்ளார்.

அதானி குழுமம் சமீபத்தில் என்டிடிவி என்ற செய்தி சேனலை வாங்கியது. இந்த பங்குகள் கொள்முதல் ஊடக உலகில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக என்டிடிவி மேம்பாட்டாளர்களான பிரணாய் ராய் மற்றும் ராதிகா பிரணாய் ராய் ஆகியோர் தாங்கள் உருவாக்கிய குழுவிலிருந்து வெளியேறினர். அவர்களுடன் என்டிடிவி ஹிந்தி பத்திரிகையாளரான ரவீஷ் குமாரும் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இதற்குப் பிறகு இந்த கையகப்படுத்தல் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. என்டிடிவியின் செயல்பாட்டில் அதானி குழுமத்தின் குறுக்கீடு தொடர்பான அச்சங்களும் இதில் அடங்கும்.

கெளதம் அதானி இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில், என்டிடிவி ஒரு சுதந்திரமான, நம்பகமான மற்றும் உலகளாவிய நிறுவனமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

என்டிடிவியின் இதழியல் சுதந்திரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அதானி, "என்டிடிவி ஒரு சுதந்திரமான, நம்பகமான மற்றும் உலகளாவிய நிறுவனமாக இருக்கும் என்பதை நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். மேலும் நிர்வாகத்திற்கும் ஆசிரியர் குழாமுக்கும் (எடிட்டோரியல்) இடையே ஒரு தெளிவான லட்சுமண ரேகை (வரம்புக்கோடு) இருக்கும்.

என் ஒவ்வொரு வார்த்தையையும் நீங்கள் முடிவில்லாமல் விவாதிக்கலாம். அதில் இருந்து வெவ்வேறு அர்த்தங்களை கொள்ளலாம். இதற்கு முன்னரும் பலர் இதைச் செய்திருக்கிறார்கள். ஆனால் முக்கிய விஷயம் என்னவென்றால், எங்களுக்கு சிறிது நேரம் கொடுங்கள், பின்னர் எங்களைப் பற்றி ஒரு கருத்தை உருவாக்குங்கள்," என்றார்.

கெளதம் அதானி

பட மூலாதாரம், VIJAY SONEJI/MINT VIA GETTY IMAGES

நரேந்திர மோதியுடனான நெருங்கிய நட்பு

கௌதம் அதானி மற்றும் அவரது குழுவினர் பிரதமர் மோதியுடனான நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்த கேள்விக்கு, "பிரதமர் மோதியும் நானும் குஜராத்தில் இருந்து வருகிறோம். அதனால்தான் இதுபோன்ற வணிக குற்றச்சாட்டுகளுக்கு நான் எளிதான இலக்காகிவிட்டேன். ஆனால் ஒரு தொழிலதிபராக எனது பயணத்தை பார்க்கும்போது அதை நான்கு கட்டங்களாக பிரிக்க முடியும். அவை ஆச்சரியமாக இருக்கலாம். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோதே எனது தொழில் பயணம் தொடங்கியது," என்கிறார்.

"ராஜீவ் காந்தி இறக்குமதி-ஏற்றுமதி கொள்கையை தாராளமயமாக்கியபோது, பல விஷயங்கள் திறந்தவெளி பொது உரிமப் பட்டியலில் கொண்டு வரப்பட்டன.

அது எனது ஏற்றுமதி நிறுவனத்தை தொடங்க வாய்ப்பாக அமைந்தது. ராஜீவ் காந்தி இல்லாமல் ஒரு தொழிலதிபராக எனது பயணம் தொடங்கியிருக்காது.

"இதற்குப் பிறகு, 1991இல் பிரதமர் நரசிம்மராவ் மற்றும் நிதியமைச்சர் ஆக இருந்த மன்மோகன் சிங் இருவரும் பெரிய பொருளாதார மாற்றங்களைச் செய்தபோது எனக்கு மற்றொரு ஏற்றம் கிடைத்தது.

பல தொழில்முனைவோரைப் போலவே, நானும் அந்த சீர்திருத்தங்களின் பலனைப் பெற்றேன். இதைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. காரணம், அனைத்தும் எழுத்து வடிவில் உள்ளன," என்றார்.

1995-ல் கேசுபாய் படேல் குஜராத் முதல்வராக பதவியேற்றபோது எனக்கு மூன்றாவது திருப்புமுனை ஏற்பட்டது. அதுவரை குஜராத்தில் அனைத்து தொழில் வளர்ச்சியும் மும்பையில் இருந்து டெல்லி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 8ஐ சுற்றியே எல்லாம் நடந்தது.

அதானி

பட மூலாதாரம், ANI

அது சூரத் மற்றும் ஆமதாபாத்தை சுற்றியும் நடக்க வேண்டும் என்ற அவரது தொலைநோக்கு பார்வை மற்றும் கடலோரப் பகுதிகளை மேம்படுத்துவதில் அவர் காட்டிய அர்ப்பணிப்பு பல தொழில் வாய்ப்புகளை ஊக்குவித்தது. இதன் காரணமாக நான் முந்த்ராவை அடைந்தேன். அங்கு எங்களின் முதல் துறைமுகத்தை உருவாக்க முடிந்தது. மற்றவை எல்லாம் வரலாறு," என்கிறார் அதானி.

"நான்காவது திருப்புமுனை 2001இல் குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோதியின் ஆட்சிக் காலத்தில் நடந்தது. அவரது கொள்கைகள் குஜராத்தின் பொருளாதார முகத்தை மாற்றியது மட்டுமல்லாமல் சமூக மாற்றத்தையும் கொண்டு வந்தன.

இதனுடன் வளர்ச்சியும் தடைபடாமல் இருந்தது. அவர் காலத்தில், இது தொழில்கள் மற்றும் வேலைவாய்ப்பில் வரலாறு காணாத வளர்ச்சிக்கு வழிவகுத்தது.

இன்று, அவரது தலைமையில், தேசிய மற்றும் சர்வதேச அளவிலும் வளர்ச்சியைக் காண்கிறோம். மேலும் புதிய இந்தியா உருவாகி வருகிறது.

இத்தகைய நிலையில் எனது வளர்ச்சியை சுற்றி பல புனைக்கதைகள் வருவது துரதிருஷ்டவசமானது. நான் கூறியது போல் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை," என்கிறார் அதானி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: