புதுக்கோட்டை தீண்டாமை சிக்கல்: குடிநீரில் மலத்தை கலந்தவர்களை ஏன் கண்டறிய முடியவில்லை?

Pudukottai Vengaivayal Village Public
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

புதுக்கோட்டை மாவட்டம் இறையூரில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மலம் கொட்டப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த தொட்டியில் இருந்து வந்த குடிநீரைப் பருகிய குழந்தைகள் பலரும் தொடர்ந்து உடல் நலப் பாதிப்புக்குள்ளான நேரத்தில்தான் தண்ணீரில் மலம் கலந்திருந்தது கண்டறியப்பட்டது. இதைச் செய்தவர்கள் யார் என்பது தற்போதுவரை கண்டறியப்படவில்லை. இதற்கிடையில், அங்கு இரட்டைக் குவளை முறை மற்றும் தலித்துகளுக்கு கோயிலுக்குள் நுழைவதற்கு தடை போன்ற தீண்டாமை வடிவங்கள் இருந்ததாக மாவட்ட ஆட்சியர் கண்டறிந்ததால், மூவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவங்கள் காரணமாக தலித் மற்றும் பிற சமூகத்தினர் இடையே ஒற்றுமை குலையக்கூடாது என்ற நோக்கத்தோடு, மாவட்ட நிர்வாகம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது. அங்கு மக்களிடையே தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.

கள நிலவரம் என்ன? இறையூர் கிராமத்திற்கு நேரில் சென்ற பிபிசி தமிழ் இரண்டு தரப்பிடமும் பேசியது.

தண்ணீரில் மலம் கலந்தது தெரியவந்தது எப்படி?

புதுக்கோட்டையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இறையூர் கிராமம். இந்த கிராமத்தில் பட்டியல் சாதியினரோடு, முத்தரையர் மற்றும் அகமுடையார் சாதிகளைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இறையூருக்குள் நாம் நுழைந்தபோது, அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். தலித் மக்கள் வசிக்கும் பகுதியிலும், ஆதிக்க சாதியினர் வசிக்கும் பகுதியிலும் மக்கள் சிறு குழுக்களாக அமர்ந்து கடந்த ஒருவாரமாக தங்கள் கிராமத்திற்கு அரசு அலுவலர்கள் வருவதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.

இறையூரில் தலித் மக்கள் பகுதியில் உள்ள 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து வந்த நீரைக் குடித்த பல குழந்தைகள் உடல் நலப் பாதிப்புக்கு ஆளாகினர். பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுவன் ஒருவனின் தாயான பாண்டிசெல்வியை சந்தித்தோம்.

''காய்ச்சல் இரண்டு நாட்கள் குறையவில்லை என்பதால், அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். தொடர்ந்து வாந்தி, வயிற்றுப்போக்கு என்று என் மகன் அவதிப்பட்டான். ஏழு நாட்களைத் தாண்டியும் மகனுக்கு காய்ச்சல் சரியாகவில்லை.

எங்கள் ஊரில் உள்ள மற்ற குழந்தைகளுக்கும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு என ஏற்பட்டதால் ஒவ்வொருவராக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவர்கள் எங்கள் பகுதியில் உள்ள குடிநீரைப் பரிசோதிக்கச் சொன்னார்கள். அப்போதுதான் தண்ணீரில் மலம் கொட்டப்பட்டிருந்தது தெரியவந்தது,'' என கண்ணீருடன் பேசினார்.

Pandiselvi
படக்குறிப்பு, பாண்டிசெல்வி

பாண்டிசெல்வி உள்ளிட்ட பலரின் புகாரை அடுத்து, மாவட்ட நிர்வாகம் குடிநீர்த் தொட்டியைப் பார்வையிட்டபோது அதில் அதிக அளவில் மலம் கொட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.

குடிநீர் தொட்டியை தூய்மை செய்ததோடு, உடனடியாக 30,000லிட்டர் கொள்ளளவு கொண்ட பொது தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்வது தொடங்கியது.

''மலம் கலந்த தண்ணீரை என் குழந்தைக்கு நானே கொடுத்திருக்கிறேன். என் கையால் நானே விஷம் கொடுத்தது போல கொடுத்திருக்கிறேன். தொட்டியை தூய்மை செய்துவிட்டார்கள்.

ஆனால் இப்போதும் தண்ணீரைப் பயன்படுத்துவதில் ஓர் அருவறுப்பு உணர்வு இருக்கிறது. எங்கள் ஊரை பலரும் மலம் கலந்த தண்ணீரைக் குடித்த ஊர் என்று அடையாளம் சொல்கிறார்கள். இது எங்கள் காலத்தோடு முடியும் விவகாரம் இல்லை. இது ஒரு காயமாக மாறிவிட்டது. இது மீண்டும் தொடருமோ என்ற பயம் எங்களுக்கு உள்ளது,'' என்கிறார் பாண்டிசெல்வி.

இரட்டை டம்ளர் முறை, கோயில் நுழைவுக்குத் தடை

10 நாட்கள் சிகிச்சைக்குப் பின்னர் தற்போது சிறுவன் உடல்நலம் தேறியுள்ளான். நாம் அந்த கிராமத்திற்குச் சென்ற நேரத்தில் ஒரு வாரகால சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பிய மற்றொரு சிறுமியைக் கண்டோம்.

ஐந்து குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். சில பெரியவர்களுக்கும் காய்ச்சல், வாந்தி ஏற்பட்டது என்று ஊர் மக்கள் தெரிவித்தனர். 10 குழந்தைகள் உள்பட 30 பேருக்கு இதுவரை உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

 ''எங்கள் ஊரில் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மிகவும் இழிவான செயல் இது. இதுவரை யார் மலத்தைக் கொட்டினார்கள் என்று கண்டறிய முடியவில்லை என்கிறார்கள். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிறது. அதை அமுதப் பெருவிழாவாக அரசு கொண்டாடும் வேளையில், எங்களுக்குக் கிடைத்தது மலம் கலந்த தண்ணீர்.

சாதிய வன்மம் இன்னும் குறையவில்லை என்பதற்கு எங்கள் ஊர் ஓர் எடுத்துக்காட்டு. பெரிய அரசியல்வாதிகளின் வீட்டு வாசலில் யாராவது மலம் கழித்திருந்தால் கூட உடனடியாக கண்டுபிடித்திருப்பார்கள்.

நாங்கள் சாதாரணமானவர்கள் என்பதால், நாங்கள் அதைப் பருகியிருக்கிறோம் என்று சொன்னால்கூட விசாரணையில் தீவிரம் இல்லை,'' என்கிறார் சிந்துஜா என்ற இளம்பெண்.

சிந்துஜா
படக்குறிப்பு, சிந்துஜா

இந்தச் சம்பவத்தை அடுத்து இறையூர் கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வந்திருந்தபோது, ஆதிக்க சாதி ஒன்றைச் சேர்ந்த மூக்கையா நடத்தும் டீ கடையில் இரட்டைக் குவளை முறை பின்பற்றப்படுவதைக் கண்டறிந்தார்.

அதோடு அங்குள்ள ஐயனார் கோயிலில் தலித் மக்கள் நுழைவதற்குத் தடை உள்ளதாக தலித் மக்கள் தெரிவித்ததும், அவர்களை கோவிலுக்குள் அழைத்துச் செல்ல முற்பட்டார்.

அப்போது, ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிங்கம்மாள் என்பவர் சாமியாடி, கோவிலுக்கு தலித் மக்கள் வரக்கூடாது என்று தடுத்தார். காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். ஆட்சியர் தலித் மக்களை கோவிலுக்குள் கூட்டிச் சென்றார்.

இதில், இரட்டைக் குவளை முறையைப் பின்பற்றிய புகாரில் டீ கடை உரிமையாளர் மூக்கையா, அவர் மனைவி மீனாட்சி மற்றும் கோவில் நுழைவைத் தடுத்த புகாரில் சிங்கம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது.

கோவில் நுழைவு பற்றிப் பேசிய சிந்துஜா, ''கலெக்டர் வந்தபோது எங்களைக் கோவிலுக்குக் கூட்டிச் சென்றார். மூன்று தலைமுறையாக இந்தக் கோவிலுக்குப் போகவேண்டும் என்று எங்கள் மக்கள் காத்திருந்தார்கள். இப்போதுதான் விடிவு பிறந்திருக்கிறது.

இறையூர் கிராமம்

மாற்று சாதியினருடன் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி கொண்டாடினோம். எங்கள் ஊருக்கு இப்போது போலீஸ் பாதுகாப்பு தந்திருக்கிறார்கள். உண்மையில், மலத்தை கொட்டியது யார் என்று கண்டறிந்து தண்டனை கொடுத்தால்தான் எங்களுக்கு நீதி கிடைத்ததாகச் சொல்லமுடியும்,'' என்கிறார் சிந்துஜா.

59 வயதான சதாசிவத்திடம் பேசியபோது, தீண்டாமை கொடுமை இறையூரில் குறையவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார். ''என் சிறுவயதில், என் தந்தையை மாற்று சாதி இளைஞர்கள் பெயர் சொல்லிக் கூப்பிடுவார்கள்.

எங்களை சமமாக நடத்தமாட்டார்கள். கோவிலுக்கு நாங்கள் சென்றதில்லை. கலெக்டர் வந்ததால் இப்போது நாங்கள் போனோம். ஆனால் தொடர்ந்து நாங்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவோமா எனத் தெரியவில்லை.

என் தலைமுறையில் வன்கொடுமையை அனுபவித்தோம். எங்கள் குழந்தைகள் காலத்திலாவது மாற்றம் வரும் என்று நம்பினோம். ஆனால் மோசமான முறையில் தீண்டாமை தொடர்கிறது,'' என்கிறார் சதாசிவம்.

தீண்டாமைக் கொடுமை இல்லை என்று கூறும் ஆதிக்க சாதியினர்

இறையூரில் தீண்டாமை நிலவுகிறதா என்று விசாரிக்க தினமும் பல்வேறு தன்னார்வலர்கள் அங்கு வருகிறார்கள், அரசியல் கட்சியினரும் போராட்டங்கள் நடத்துகின்றனர் என்கிறார்கள் ஆதிக்க சாதியினர். அவர்கள் வசிக்கும் பகுதிக்கு நாம் சென்றபோது பலரும் பேசுவதற்குத் தயாராக இல்லை.

அவர்களின் கருத்துகளைச் சொல்வதால் எந்தப் பயனும் இல்லை என்றும் யாரும் அவற்றை வெளியிடுவதில்லை என்றும் தெரிவித்தனர். ஊடகங்கள் தங்கள் ஊருக்கு வருவதைத் தாங்கள் விரும்பவில்லை என்றும் சில பெண்கள் தெரிவித்தனர். பலமுறை நாம் அவர்களின் எண்ணத்தை அறிய முற்பட்ட போது, அங்கிருந்தவர்கள் பிபிசி தமிழ் செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை சூழ்ந்து நின்றனர்.

''எங்களைப் பற்றி யாரும் செய்தி எழுத மாட்டார்கள். எங்கள் ஊருக்கு வருபவர்கள் பாதிக்கப்பட்ட பகுதி எங்கிருக்கிறது என்று எங்களிடம் கேட்கிறார்கள். இதுவரை நாங்கள் எல்லோரும் சகோதரர்களாகப் பழகினோம்.

கோவிலுக்கு வருவது தப்பில்லை. ஆனால் பல ஆண்டு காலமாக அவர்கள் வாசல்வரைதான் வருகிறார்கள் என்பதால் அது தொடர்ந்தது,'' என ஆதிக்க சாதி இளைஞர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

இறையூர் கிராமம்

கோவில் திருவிழாவில் தலித் மக்களைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் சாமியாடும் உரிமை உள்ளது என்றும் தீண்டாமைக் கொடுமை ஏதும் அங்கு இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆதிக்க சாதியைச் சேர்ந்த இளம்பெண் மகேஸ்வரி நம்மிடம் பேசுவதற்கு முன்வந்தார். ''நாங்கள் யாரையும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறவில்லை. அவர்களாகவே அவர்களை அப்படிச் சொல்கிறார்கள். இங்குள்ள பால்வாடியில் எல்லா சாதி குழந்தைகளும் ஒன்றாகத்தான் விளையாடுகிறார்கள்.

எல்லோரும் ஒரே சாலையைத்தான் பயன்படுத்துகிறோம். டீக்கடையில் இரட்டைக் குவளை இருந்ததாகக் கைது செய்திருக்கிறார்கள். ஆனால் டீ கடையில் அப்படி நடக்கவில்லை.

சாமிக்கு மாலை போட்டவர்களுக்கு தனி டம்ளர், மற்றவர்களுக்குத் தனி டம்ளர் தரப்பட்டது. அதைத் தவறாகப் புரிந்துகொண்டார்கள்,'' என்கிறார் மகேஸ்வரி.

மேலும், ''மலத்தைக் கலந்தது யார் என்று தெரிந்தால், எங்களுக்கும் மகிழ்ச்சிதான், எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அப்படிச் செய்யவில்லை என்று நாங்கள் நம்புகிறோம். அதை யார் செய்தது என்று போலீஸ் சீக்கிரம் கண்டுபிடித்தால் தலித் மக்களைவிட எங்களுக்குத்தான் தீர்வாக இருக்கும். இத்தனை ஆண்டுகளாக இங்கு எந்தப் புகாரும் வரவில்லை. தீடீரென இத்தனை கைதுகள், போலீஸ் வருவது, அரசு அதிகாரிகள் வருவது எங்களுக்கு வருத்தமாக உள்ளது,'' என்கிறார் மகேஸ்வரி.

மகேஸ்வரி

விசாரணையில் தொய்வு ஏன்?

குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது யார் என்பதற்குத் தற்போது வரை பதில் கிடைக்கவில்லை. அந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்று தெரிந்துகொள்ள பலமுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேவை தொடர்பு கொள்ள முயன்றோம்.

ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. குற்றவாளிகளைக் கண்டறிய 11 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக திருச்சி டிஐஜி சரவணசுந்தர் தெரிவித்துள்ளார். அதோடு, இறையூர் பகுதியில் சிசிடிவி பொருத்துவதற்கான முயற்சிகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டறிவதில் தொய்வு இருப்பது கண்டிக்கத்தக்கது என்கிறார் சமூகசெயற்பாட்டாளர் கதிர். ''இரட்டைக் குவளை முறை, கோவில் நுழைவு பிரச்னைகளில் அதிகாரிகள் தலையீடு மக்களுக்கு உதவியது.

ஆனால் தீண்டாமை கொடுமையின் உச்சமாக குடிநீரில் மலம் கலந்தவர்கள் யார் என்று கண்டுபிடிக்கவில்லை. இந்தத் தாமதம் என்பது இந்தப் பிரச்னையை நீர்த்துபோகச் செய்துவிடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

இறையூர் கிராமம்

தொட்டியில் கிடந்த மலத்தின் அளவு, ஒரு நபர் கொண்டு வந்து கொட்டியது போல இல்லை. இதில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தோன்றுகிறது,'' என்கிறார்.

வன்கொடுமை வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரும் நிகழ்வுகள் அரிதாகவே நடப்பதாகக் கூறுகிறார் கதிர். அவர், ''பொதுவாகவே, தலித் மக்கள் மீதான வன்கொடுமை வழக்குகளில் புகார்கள் பதிவானாலும், அந்த வழக்குகளில் தண்டனை பெற்றுத் தருவது மிகவும் குறைவு.

தமிழகத்தில் கடந்த ஏழு ஆண்டுகளில் வன்கொடுமை வழக்குகளில் தண்டனை கிடைப்பது வெறும் ஐந்து முதல் ஏழு சதவீதமாக உள்ளது என்று தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதனால் இறையூரில் நடந்த கொடுமைக்கு விரைவில் நீதி கிடைக்கவேண்டும்.

அதில் ஏற்படும் தாமதம் அந்த மக்கள் சந்தித்த வன்கொடுமை வெற்றி பெறுவதற்குச் சமம்,'' என்கிறார். மேலும், குடிநீரில் மலம் கலந்த நபரைக் கண்டறியாமல், பிற தீண்டாமை முறைகளுக்கு முக்கியத்துவம் தருவது, வழக்கை திசைதிருப்பவது போல உள்ளது என்றார்.

இறையூர் கிராமம்
படக்குறிப்பு, மலம் கலக்கப்பட்ட தண்ணீர்த் தொட்டி

''தீண்டாமை பற்றி யாரும் பேசவில்லை''

புதுக்கோட்டையில் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை கொடுமைகள் நிலவுவது ஏன் என்றும் மாவட்டம் முழுவதும் உள்ள நிலைமையைச் சரிசெய்ய என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் தெரிந்துகொள்ள ஆட்சியர் கவிதா ராமுவை நேரில் சந்தித்துப் பேசினோம்.

''இறையூரில் நடந்த சம்பவங்களை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தீண்டாமை கொடுமை சம்பவங்கள் தெரிய வந்தால் உடனடியாகப் புகார் தெரிவிக்க வாட்சப் எண்ணை அறிவித்துள்ளோம்.

இறையூர் கிராமத்தில் மக்களின் தேவைகளைக் கண்டறியும் முகாம், கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில் தொடங்க பயிற்சி மற்றும் கடன் தருவது உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டங்களைச் செயல்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இறையூரில் இரண்டு பிரிவு மக்களை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, சமத்துவப் பொங்கல் நிகழ்வும் நடத்தப்பட்டது. தீண்டாமை பிரச்னை என்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும்தான் நடக்கிறது என்று சொல்லமுடியாது.

இறையூர் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
படக்குறிப்பு, இறையூர் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

அதுவும் எங்கள் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நடந்த வன்முறை வெளியில் வந்துள்ளது. இதுபோன்ற விவரங்களைத் தெரிவிக்க சிறப்பு உதவி எண் ஒன்றை அறிமுகம் செய்துள்ளோம். விரைவில் மற்ற ஊர்களின் நிலவரத்தைக் கண்டறிவோம்,'' என்றார்.

இறையூரில் குடிநீரில் மலம் கலந்தவர் யார் என்று இதுவரை கண்டறியாதது பற்றிக் கேட்டபோது, ''அந்தப் பகுதியில் எங்கும் சிசிடிவி இல்லை. விசாரணையை துரிதப்படுத்தியிருக்கிறோம். தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் அந்த வழக்குக்கு முக்கியத்துவம் தரும் முயற்சிதான்,'' என்கிறார்.

பட்டியலின மக்களுக்கு ஏற்படும் வன்முறைகள் தொடர்பாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறவேண்டிய கூட்டத்தில் விவரங்கள் விவாதிக்கப்படவில்லையா எனக் கேட்டோம்.

''மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்துகிறோம். ஆனால் இதுநாள் வரை எங்களிடம் தீண்டாமை கொடுமை பற்றி யாரும் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை. இறையூரில் இருந்த தீண்டாமை கொடுமை வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

இதுபோல பிற ஊர்களில் புகார்கள் இருந்தால், அதன்மீதும் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம். அதேநேரம், எல்லா சாதியினரும் ஒற்றுமையாக இருப்பதை ஊக்குவிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். இந்த கிராமத்தை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்கிறோம்,'' என்றார் கவிதா ராமு.

இறையூர் சம்பவம் உணர்த்துவது என்ன?

இறையூர் கிராமம்

பிபிசி தமிழிடம் பேசிய சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர் லட்சுமணன், தீண்டாமை கொடுமை பலவிதமான வடிவங்களில் தமிழ்நாட்டில் தொடர்கிறது என்றும் தடுப்பதற்கான கவனம் கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்.

தீண்டாமை குறித்த ஆய்வுகளில் இவர் ஈடுபட்டு வருகிறார். ''சுகாதாரம், தண்ணீர், கல்வி, சாலை வசதிகள் போன்றவற்றில் தமிழ்நாடு அதிக அளவில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. ஆனால் சமூக மாற்றத்தை பொறுத்தவரை, நாம் பண்பட்ட சமூகமாக இல்லை என்பதைத்தான் இறையூரில் நடந்த விவகாரம் நமக்கு உணர்த்துகிறது.

இந்த மாற்றம் மக்களின் மனதளவில் ஏற்படவேண்டிய மாற்றம். நாம் பெரியார் மண்ணில் இருக்கிறோம் என்று சொல்வதெல்லாம் உண்மையைப் பூசி மொழுகும் முயற்சிதான்,'' என்கிறார் லட்சுமணன்.

''சமீபத்தில், வேலூர் மாவட்டத்தில் சுடுகாட்டுக்குச் செல்வதற்குப் பாதை விட மறுத்ததால் தலித் முதியவரின் உடலை பாலத்தில் இருந்து கயிறு கட்டி இறக்கினார்கள். தலித் குழந்தைகளை கழிவறை கழுவ வைக்கும் சம்பவங்கள் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது செய்தியாகின்றன.

இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடக்கிறது என்பது அவலநிலைதானே. கொரோனா ஊரடங்கு இருந்த காலத்தில் தலித் மக்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது.

2020இல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் 1,274 வழக்குகள் பதிவாகின. அந்த எண்ணிக்கை 2021ல் 1377 ஆக உயர்ந்துள்ளது. அதனால் மக்களிடம் மனமாற்றம் ஏற்படாமல், சமூக மாற்றம் சாத்தியம் இல்லை,'' என்கிறார் லட்சுமணன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: