கோவில்பட்டி பள்ளிக்குள் புகுந்து சாதியைச் சொல்லி திட்டி, தலித் மாணவனைத் தாக்கியதாக இரு பெண்கள் மீது வழக்கு

சிதம்பரம்பட்டி
படக்குறிப்பு, சிதம்பரம்பட்டி பள்ளி

கோவில்பட்டி அருகே பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவரை சாதியை கூறி சக மாணவியின் பெற்றோர் திட்டி அடித்ததாக எழுந்த புகாரை அடுத்து இரண்டு பெண்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிதம்பரம் பட்டியை சேர்ந்த பேச்சுப் பாண்டி மனைவி மாரியம்மாள் (30). இவரது மகள் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மீது அதே பள்ளியில் படிக்கும் 7-ம் வகுப்பு மாணவர் (தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்) தடுக்கி விழுந்து உள்ளார். இதனால் மாரியம்மாள், தனது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த சங்கர லட்சுமணன் மனைவி லட்சுமி (40) என்பவருடன் வியாழக்கிழமை மாலை அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்று 7-ம் வகுப்பு பயிலும் 12 வயது தலித் மாணவனை சாதியின் பெயரை சொல்லி அவதூறாக பேசி தாக்கியுள்ளார். இது குறித்து தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவரின் தாய் லட்சுமி என்பவர் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் மாரியம்மாள், லட்சுமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே வெள்ளிக்கிழமை தாக்குதலுக்குள்ளான மாணவனின் தாய் லட்சுமி மற்றும் உறவினர்கள் கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட்டு, டிஎஸ்பி வெங்கடேஷிடம் மாணவரை தாக்கியவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அவர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர்கள் கல்வி மாவட்ட அலுவலர் ஜெயபிரகாசத்திடம் வழங்கிய மனுவில், நாங்கள் தேவேந்திர குல சமூகத்தை சேர்ந்தவர்கள். எங்கள் ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் எங்களது குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு பயின்று வரும் கண்ணன் - லட்சுமி தம்பதியின் மகன், அதே பள்ளியில் படித்து வரும் வேறு சமூகத்தைச் சேர்ந்த சிறுமியின் தாயார் அவரது உறவினர் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து, பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவரை தாக்கி உள்ளனர். இதை தலைமை ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்கள் கண்டிக்காமல் இருந்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலருக்கு புகார் தெரிவிக்கவில்லை. எனவே எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பள்ளி தலைமை ஆசிரியரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

கோவில்பட்டி அரசு பள்ளி ஒன்றில் கடந்த மூன்று நான்கு மாதத்திற்கு முன்பு ஆசிரியர்கள் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக மாணவர் ஒருவரிடம் தொலைபேசியில் ஆசிரியர் ஒருவர் சாதி ரீதியாக பேசிய ஆடியோ வைரலானதை அடுத்து அந்த அரசு பள்ளி ஆசிரியர் தற்காலிக பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காவல் நிலையம்

கோவில்பட்டியில் அரசு பள்ளிகளில் தொடர்ந்து சாதிய ரீதியான பிரச்னைகள் நடைபெறுவது குறித்து,நேற்று மாணவர் மீது நடந்த தாக்குதல் குறித்து பிபிசி தமிழ் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த கல்வி அலுவலர் ஒருவரிடம் விளக்கம் கேட்டது. பெயர் வெளியிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர் , ''கோவில்பட்டியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவரிடம் பள்ளியில் என்ன நடந்தது என்பது குறித்து நேரடியாக கோவில்பட்டி மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை செய்துள்ளார். வரும் திங்கட்கிழமை இது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையில் ஆசிரியர்கள் மீது தவறு இருக்கும் பட்சத்தில் நிச்சயம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் ஆசிரியர்களிடையே உறவு பாலத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் அரையாண்டு தேர்வு முடிந்து ஜனவரி மாதம் பள்ளிகள் திறக்கும் போது வரும் ஆசிரியர்களுக்கு மனோதத்துவ நிபுணர்களை கொண்டு கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்துள்ளோம். அந்த கவுன்சிலிங்கில் மாணவர்களை எவ்வாறு நல்வழிப்படுத்த வேண்டும், மாணவர்களுக்கு ஆரோக்கியமான மனநிலையுடன் கல்வி கற்று கொடுப்பது எப்படி, உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் விழிப்புணர்வு வழங்கத் திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.

அவசர சிகிச்சைப் பிரிவு

''தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி விகிதம் உள்ள பள்ளிகளைக் கொண்ட மாவட்டத்தில் இரண்டாவது மாவட்டமாக தூத்துக்குடி தேர்வு செய்யப்பட்ட தமிழக அரசால் விருது வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்வியில் மட்டும் இல்லாமல் எதிர்காலத்தில் நல்ல மனிதனாக வாழ கற்றுக் கொடுப்பதற்கு முழு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,'' என்றார் அந்தக் கல்வித்துறை அலுவலர். இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி காவல் துறையிடம் கேட்ட போது பள்ளியில் மாணவர் மீது தாக்குதல் நடத்தியதாக மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: