புதுக்கோட்டை தலித் பகுதி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் பட்டியலின மக்கள் குடியிருப்பில் உள்ள மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பான வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி ஜனவரி 14ம் தேதி உத்தரவிட்டுள்ளார் தமிழ்நாடு டிஜிபி சி.சைலேந்திரபாபு.
இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் யார் என்பதை போலீசார் அடையாளம் காணவில்லை.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, இறையூரில் நிலவிய பிற தீண்டாமை முறைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அது தொடர்பாக நடவடிக்கைகளை எடுத்தார்.
இரட்டைக் குவளை முறை நிலவியதாக கண்டறிந்த அவர் அது தொடர்பாக நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, டீக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
உள்ளூர் கோயிலில் பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படவில்லை என்று கண்டறிந்த அவர், உடனடியாக பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். பிறகு அமைதிக் கூட்டங்கள் நடத்தப்பட்டு பட்டியல் சாதியினருடன் பிற சாதியினரும் இணைந்து டிசம்பர் 27 அன்று கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இதில் அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆனால், குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பான வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தாலும், குற்றவாளிகள் யார் என்பதை போலீஸ் கண்டுபிடித்து அறிவிக்காமல் கால தாமதம் ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
அத்துடன், "குற்றவாளிகளைத் தேடி கைது செய்வதற்காக அமைக்கப்பட்ட காவல்துறையின் தனிப்படை, வன்கொடுமைக்காளான தலித்துகளையே குற்றவாளிகளாக்கும் கொடூரத்தில் ஈடுபட்டுள்ளது" என்று கூறியும், சிபிசிஐடி விசாரணை கோரியும் முதல்வர், அமைச்சர்கள் அந்த ஊருக்கு நேரில் செல்லவேண்டும் என்று வலியுறுத்தியும் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, ஆதவன் தீட்சன்யா, சுகிர்தராணி உள்ளிட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஒப்பமிட்டு முதல்வருக்கு ஒரு விண்ணப்பத்தைத் தயாரித்தனர். அத்துடன் அந்த விண்ணப்பத்தில் மேலும் பலரிடமும் கையெழுத்துத் திரட்டும் பணிகளும் நடந்துவந்தன.
இந்நிலையில்தான், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றும் உத்தரவு வெளியாகியுள்ளது.
இறையூரில் நடந்தது என்ன?
புதுக்கோட்டை அருகே முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான விசாரணைக்காக மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேற்று இறையூர் பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து, பட்டியல் சாதி மக்களிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது ஊரில் உள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை நிலவுவதாகவும், இப்பகுதி அய்யனார் கோவிலில் பல தலைமுறைகளாக பட்டியல் சாதியினருக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்று மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தியதில் இரட்டை குவளை முறை நிலவுவது உறுதியானது. தொடர்ந்து அங்குள்ள அய்யனார் கோயிலைத் திறந்து பட்டியலின மக்களை அங்கு வழிபட அழைத்துச் சென்றார் மாவட்ட ஆட்சியர்.
இதனைத் தொடர்ந்து டீக்கடை உரிமையாளர்கள் மற்றும் கோயிலுக்குள் நுழைய எதிர்ப்புத் தெரிவித்த இருவர் உட்பட நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதில் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்ட குற்றச்சாட்டு, இரட்டைக் குவளை முறை குற்றச்சாட்டு ஆகிய இரண்டு விவகாரங்களுக்கு தீர்வு காணும் வகையில், பட்டியல் சாதியினர் உள்ளிட்ட 3 சாதியினர் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது.
மூன்று சாதிகளைச் சேர்ந்த 26 பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், இறையூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் பட்டியல் சமூக மக்களையும் பாகுபாடு இன்றி வழிபாடு செய்ய அனுமதிப்பது, குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது, தேநீர் கடையில் இரட்டை குவளை முறையைக் களைந்து அனைத்து சமூக மக்களும் சமமாக வாழ்வது என்ற மூன்று முடிவுகள் எட்டப்பட்டன.
ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்

முன்னதாக, வெள்ளனூர் அருகே பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலந்திருந்த சம்பவம் தொடர்பாக நேரில் விசாரிக்க சென்ற மாவட்ட ஆட்சியரிடம், தங்களை கோவிலுக்கு அனுமதிக்கவில்லை என்று பட்டியலின மக்களில் சிலர் முறையிட்டனர்.
இதையடுத்து அவர்களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கோவிலுக்குள் அழைத்து சென்றார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின் வேங்கை வயல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர்.
அந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வேங்கை வயலில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் ஐந்து பேருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்னை இருக்கலாம் எனத் தெரிவித்தனர்
அந்த நீர்த்தேக்க தொட்டியை திங்கட்கிழமை ஏறி அப்பகுதி மக்கள் பார்த்தபோது குடிநீரில் மலம் கலந்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரைக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர்.

அதன்பேரில் எம்எல்ஏ எம்.சின்னதுரை, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், அன்னவாசல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு பரிசோதனை செய்தபோது, மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக வெள்ளனூர் போலீசில் புகார் செய்யப்பட்டு ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும், காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் நடந்துள்ள சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
யார் மீது சந்தேகம்?
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "பல ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி இருந்தோம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் 2016-17ஆம் ஆண்டில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.
தொட்டியின் மேலே உள்ள மூடியை திறப்பது பெரியவர்களால் மட்டுமே முடியும், விளையாட்டுத் தனமாக சிறுவர்கள் யாரும் செய்திருக்க வாய்ப்பில்லை. எனவே, திட்டமிட்டு யாரோ சிலர் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்," என்றார்.
இறையூர் பஞ்சாயத்து தலைவி பத்மா பிபிசி தமிழிடம் பேசுகையில், "எங்கள் ஊரில் இது போன்ற அருவருப்பான சம்பவம் நடைபெற்றது இதுவே முதல் முறை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
பக்கத்து கிராமத்தில் அருந்ததியர் மக்களுக்கும் பிற சாதி மக்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டு பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எங்கள் கிராமத்தில் சாதி பிரச்னை ஏற்பட்டதில்லை," என்கிறார்.
குறிப்பிட்ட நீர்த்தேக்க தொட்டியை பட்டியலின மக்கள் மட்டுமில்லாமல் ஊரில் உள்ள பல தரப்பு மக்களும் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் நேரில் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
அப்போது, அப்பகுதி மக்கள் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒரு சிலர் அங்குள்ள அய்யனார் கோவிலுக்கு தங்களை அனுமதிக்க வில்லை என்றும், டீ கடையில் இரட்டை குவளை முறை இருப்பதாகவும், குற்றம்சாட்டினர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் உடனடியாக, பட்டியல் இன மக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்று வழிபட செய்தார். மேலும், அங்குள்ள டீக்கடையில் இரட்டை குவளை முறை உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டதோடு அப்பகுதியில் உள்ள அடையாளம் தெரியாத நபர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு வழக்கு பதிவு செய்யவும், போலீசாருக்கு, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டனர்.
3 வழக்குகள் பதிவு - அரசு தகவல்

புதுக்கோட்டை, கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இந்த விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்தார்.
அதில், "புதுக்கோட்டை இடையூரில், அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுநீர் கலக்கப்பட்டது. இந்த தண்ணீரை குடித்ததால் பல குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் ஆய்வு செய்த போது அப்பகுதியில் இரட்டைக்குவளை முறை வழக்கத்தில் இருந்தது தெரியவந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை பல கிராமங்களிலும் இது போன்ற தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகின்றன.
ஆகவே, புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் நடந்து வரும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து, அவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், புதுக்கோட்டை இடையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், விஜயகுமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என கேள்வி எழுப்பினார்.
"இரட்டைக்குவளை முறை, கோவிலில் அனுமதிக்காதது, மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் மலத்துடன் சாக்கடை நீர் கலந்தது தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இரட்டைக்குவளைமுறை, கோவிலில் அனுமதிக்காதது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல்நிலை நீர்த் தொட்டியில் மலத்துடன் கழிவு நீர் கலந்தது தொடர்பாக சந்தேக நபர்களின் பட்டியல் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது," என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் புதுக்கோட்டை மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிப் பிரிவு துணை ஆணையர் ஆகியோர் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












