குடிநீர் தேக்க தொட்டியில் மலம் - புதுக்கோட்டையில் விஷமச் செயல் - போலீஸ் விசாரணை

- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் அடையாளம் தெரியாத விஷமிகள் மலம் கலந்துள்ள சம்பவத்தால் அப்பகுதியில் சலசலப்பு காணப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி. இவ்வூராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின் வேங்கை வயல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர்.
அந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வேங்கை வயலில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் ஐந்து பேருக்கு கடந்த இரண்டு மூன்று நாட்களாக உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்னை இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
அந்த நீர்த்தேக்க தொட்டியை திங்கட்கிழமை ஏறி அப்பகுதி மக்கள் பார்த்தபோது குடிநீரில் மலம் கலந்திருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரைக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர்.
அதன்பேரில் எம்எல்ஏ எம்.சின்னதுரை, குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், அன்னவாசல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஊர் பஞ்சாயத்து தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போராடி கிடைத்த நீர்த்தேக்க தொட்டி

மேலும், காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் நடந்துள்ள சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை முடிவில் தான் உண்மை நிலை தெரியவரும் என்கின்றனர் அதிகாரிகள்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "பல ஆண்டுகளாக குடிநீர் வசதியின்றி இருந்தோம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் 2016-17ஆம் ஆண்டில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.
தொட்டியின் மேலே உள்ள மூடியை திறப்பது பெரியவர்களால் மட்டுமே முடியும், விளையாட்டுத் தனமாக சிறுவர்கள் யாரும் செய்திருக்க வாய்ப்பில்லை. எனவே, திட்டமிட்டு யாரோ சிலர் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம்," என்றார்.
சாதி பிரச்னை காரணமா?

இறையூர் பஞ்சாயத்து தலைவி பத்மா பிபிசி தமிழிடம் பேசுகையில், "எங்கள் ஊரில் இது போன்ற அருவருப்பான சம்பவம் நடைபெற்றது இதுவே முதல் முறை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
பக்கத்து கிராமத்தில் அருந்ததியர் மக்களுக்கும் பிற சாதி மக்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எங்கள் கிராமத்தில் சாதி பிரச்னை ஏற்பட்டதில்லை," என்கிறார்.
"நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்தது திட்டமிட்டு நடந்ததாக தெரிகிறது. காலையிலிருந்து போலீசார் நடத்திய விசாரணையில் இதுவரைக்கும் யார் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்தது என தகவல் எதுவும் தெரியவில்லை.
போலீசாருடன் இணைந்து ஊர் மக்கள் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம். நிச்சயம் போலீஸ் விசாரணையில் தெரிய வரும்.. மலம் கலந்தவர்கள் நிச்சயம் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.
இந்த நீர்த்தேக்க தொட்டியில் பட்டியலின மக்கள் மட்டும்மில்லாமல் ஊரில் உள்ள பல தரப்பு மக்களும் தண்ணீர் பயன்படுத்தி வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு நீர்த்தேக்க தொட்டியில் உள்ள தண்ணீரால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது என உறுதியாக கூற முடியாது காரணம் தற்போது இருக்கக்கூடிய காலநிலை காரணமாக குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டு இருக்கலாம்," என்றார் பத்மா.
முதல்வருக்கு எம்எல்ஏ கடிதம்

இதுகுறித்து எம்எல்ஏ எம்.சின்னதுரையிடம் பேசினோம்.
"நீர்த்தேக்க தொட்டியில் மலம் இருப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து உண்மை தன்மை குறித்து ஆராய்வதற்காக நேரில் சென்று பார்த்தபோது அந்த நீர்த்தேக்க தொட்டியில் மலம் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குடிநீர்த் தொட்டியில் இருந்த தண்ணீர் உடனடியாக வெளியேற்றப்பட்டதோடு, அப்பகுதி மக்களுக்கு மாற்று குடிநீர் வழங்கப்பட்டது.
நீர்த்தேக்க தொட்டியில் இருந்த மலம் ஒரே நாளில் போடப்பட்டதாக தெரியவில்லை காரணம் மலம் அதிக அளவு இருப்பதால் பையில் எடுத்து வந்து போட்டு இருக்கலாம் என தெரிய வருகிறது.
கிராம மக்களிடம் விசாரிக்கும் போது அந்த கிராமத்தில் ஜாதி பிரச்சனை அல்லது குறிப்பிட்டு யாரையும் சந்தேகக்க படும் அளவு இல்லை என்கின்றனர்.
இருப்பினும் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கழித்தவர் யார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை செய்ய திருக்கோரணம் ஆய்வாளர் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது," என்கிறார்.

நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்தவர்கள் நாளை விஷம் கலக்க மாட்டார்களா என்ற அச்சத்தில் உள்ளனர். இது தொடர்பாக முதல்வருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார் எம்எல்ஏ சின்னத்துரை.
"கிராம பொதுமக்கள் அந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கேமரா பொருத்த முடியாது என்பதால் மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்படி பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் தொடர்ந்து வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை விசாரணையில் குற்றம் செய்தவர்கள் யார் என்பது உறுதி செய்யப்பட்டால் நிச்சயம் தண்டனை பெற்றுத் தரப்படும்.
தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து இதுபோன்ற இழிவான சம்பவம் தொடராமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என்கிறார் எம்.சின்னதுரை.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












