இந்திய விடுதலைக்குப் பிறகும் அரசு தலித்துகளுக்கு பாஸ்போர்ட் வழங்காத வரலாறு

விடுதலை - பாஸ்போர்ட்

பட மூலாதாரம், PRINT COLLECTOR/GETTY IMAGES

    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி நிருபர்

(உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ்.)

இந்திய உச்ச நீதிமன்றம், 1967ஆம் ஆண்டு தனது தீர்ப்பு ஒன்றில், பாஸ்போர்ட் வைத்திருப்பதும், வெளிநாடு செல்வதும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்தது. அறுபதுகளின் இந்தியாவில் இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பாகவே பார்க்கப்பட்டது. ஏனெனில் அந்த நேரத்தில் பாஸ்போர்ட் ஒரு சிறப்பு ஆவணமாகக் கருதப்பட்டது.

வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தவும் பிரதிநிதித்துவப்படுத்தவும் தகுதியுடையவர்கள் என்று கருதப்பட்டவர்களுக்கு மட்டுமே பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் ராதிகா சிங்கா இது குறித்துக் கூறுகையில், நீண்ட காலம் வரை, பாஸ்போர்ட் ஒரு குடிமகனின் கௌரவத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. இது மதிப்புமிக்க, வளமான மற்றும் படித்த இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது.

இதனால், மலாயா (மலேசியா), சிலோன் (இலங்கை), பர்மா (மியான்மர்) ஆகிய இடங்களில் வசித்தவர்கள் மற்றும் 'ஒப்பந்தத் தொழிலாளர் வர்க்கம்' என்று அழைக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை.

இந்த வகுப்புகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது. அவர்கள் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் அந்தப் பேரரசின் பல்வேறு மூலைகளுக்கும் தொழிலாளர்களாகச் சென்றனர்.

எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் காலத்மிக் நடராஜன், "இதனால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் இந்தியாவின் அன்புக்குரிய பிரதிநிதிகளாகக் கருதப்பட்டனர். இதனால் மற்றவர்கள் அன்புக்கு உரித்தாகாதவர்களாகக் கருதப்பட்டனர். மேலும் இந்த நடைமுறை 1947-க்குப் பிறகும் இந்திய பாஸ்போர் வழங்கலில் ஆதிக்கம் செலுத்தியது," என்று கூறுகிறார்.

விடுதலை - பாஸ்போர்ட்

பட மூலாதாரம், Getty Images

சுதந்திரத்திற்குப் பிறகும் மாறாத கொள்கைகள்

பாஸ்போர்ட் வழங்கலில் பாரபட்சம் காட்டும் இந்தியக் கொள்கையைப் பற்றி மேலும் அறிய, டாக்டர் நடராஜன் பாதுகாக்கப்பட்ட கோப்புகளில் ஆதாரங்கள் தேடினார்.

"ஆங்கிலேய ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகும், நிலைமை மாறவில்லை. புதிய அரசும் தனது 'விரும்பத்தகாத குடிமக்களில்' ஒரு 'குறிப்பிட்ட வகுப்பினரை' காலனித்துவ அரசு (பிரிட்டிஷ் ஆட்சி) போல உயர்வு - தாழ்வு என்ற பாகுபாட்டுடனே நடத்தியது," என்று அவர் கூறுகிறார்.

வெளிநாட்டுப் பயணம் செய்வது சுயமரியாதை மற்றும் இந்தியாவின் மரியாதையுடன் பிணைத்துப் பார்க்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் இந்தப் பாகுபாடும் செய்யப்பட்டது என்று டாக்டர் நடராஜன் கூறுகிறார். எனவே 'இந்தியா குறித்த சரியான பார்வை' கொண்டவர்கள் மட்டுமே வெளிநாட்டுப் பயணம் செய்ய முடியும்.

இத்தகைய சூழ்நிலையில், வெளிநாடுகளில் இந்தியாவை அவமானப்படுத்தாத குடிமக்களை அடையாளம் காணுமாறு இந்திய அரசு தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இதில், 1954-ம் ஆண்டு வரை மாநில அரசுகள் கடவுச்சீட்டு வழங்கலாம் கொள்கை பலனளித்தது. பெரும்பாலான மக்களுக்கு பாஸ்போர்ட்டை மறுப்பதன் மூலம் "விரும்பத் தகுந்த" இந்திய புலம்பெயர் சமூகத்தை உருவாக்க இந்தியா முயன்றது.

விடுதலை - பாஸ்போர்ட்

பட மூலாதாரம், Getty Images

ஆங்கிலேய அதிகாரிகளின் உதவி

1947க்குப் பிறகு ஒடுக்கப்பட்ட சாதிகளையும் வர்க்கங்களையும் சேர்ந்தவர்கள் பிரிட்டனுக்குச் செல்வதைத் தடுக்க பிரிட்டிஷ் அதிகாரிகளின் துணையுடன் இந்தக் கொள்கை செயல்படுத்தப்பட்டது என்று டாக்டர் நடராஜன் உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

(பிரிட்டிஷ் குடியுரிமைச் சட்டம் 1948, இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியக் குடியேறிகள் பிரிட்டனுக்கு வர அனுமதித்தது. இந்தச் சட்டத்தின்படி இந்தியாவிலும் இந்தியாவுக்கு வெளியேயும் வாழும் இந்தியர்கள் பிரிட்டிஷ் குடிமக்களாக இருந்தனர்).

இரு நாடுகளிலும் உள்ள அதிகாரிகள் பிரிட்டனுக்குச் செல்வதற்குத் தகுதியற்றவர்கள் என்று கருதப்படக்கூடிய இந்தியர்களின் ஒரு வர்க்கத்தையே உருவாக்கினர் என்று நடராஜன் கூறுகிறார். இதன் மூலம் இரு நாடுகளும் பயன்பெற்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, இது 'விரும்பத்தகாத' ஏழை, தாழ்ந்த சாதி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களின் வழித்தோன்றல்கள் முன்னேறுவது தடுக்கப்படும். அவர்கள் 'மேற்கு நாடுகளில் இந்தியாவை அவமானப்படுத்தலாம்' என்று கருதப்பட்டது.

பிரிட்டனைப் பொறுத்தவரை, வெள்ளையரல்லாத மற்றும் இந்தியக் குடியேறிகளின், குறிப்பாக நாடோடி வகுப்பினரின் கட்டுக்கடங்காத வருகையைக் கையாள்வதற்குத்தான் இது என்று அவர் கூறுகிறார்.

1958ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் ஓர் அறிக்கை வெளியானது. இது வெள்ளையரல்லாத புலம்பெயர்ந்தோரின் பெரும் வருகையால் உருவாக்கப்பட்டது.

மேற்கிலிருந்து வரும் இந்தியப் புலம்பெயர்ந்தோர் "பெரும்பாலும் நல்லவர்களாகவும், பிரிட்டிஷ் சமுதாயத்துடன் எளிதில் கலக்கக்கூடியவர்களாகவும்" இருப்பவர்கள் என்றும் "ஆங்கிலத்தில் பேசத் தெரியாத மற்றும் எல்லா வகையிலும் திறமையற்றவர்களாகவும் இருக்கும்" இந்திய மற்றும் பாகிஸ்தானிய குடியேறிகளுக்கு இடையேயான வேறுபாட்டை அந்த அறிக்கை எடுத்துக்காட்டியது.

இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்து குடியேறியவர்களில் பெரும்பாலோர் திறமையற்றவர்கள் மற்றும் ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள், ஏழைப் பின்னணி கொண்டவர்கள் என்று ஆங்கிலேயர்கள் கருதியதாக நடராஜன் கூறுகிறார்.

1950களில் காமன்வெல்த் உறவுகள் அலுவலகத்தில் நியமிக்கப்பட்ட ஒரு பிரிட்டிஷ் அதிகாரி ஒரு கடிதத்தில், இந்திய அதிகாரி "குறிப்பிட்ட வருங்காலக் குடியேறிகளைத் தடுப்பதில் உள்துறை அலுவலகம் வெற்றி பெற்றுள்ளது," என்று "வெளிப்படையாக மகிழ்ச்சி" தெரிவித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை - பாஸ்போர்ட்

பட மூலாதாரம், Getty Images

தலித்துகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை

இந்தக் கொள்கையின் கீழ், இந்தியாவில் பட்டியல் சாதியினர் அல்லது தலித்துகளுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகையான 140 கோடியில் தலித்துகளின் பங்கு 23 கோடி ஆகும். இதனுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் போன்ற அரசியல் தேவையற்றவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை.

திமுக போன்ற முன்னாள் பிரிவினைவாதப் பிராந்தியக் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு 1960களில் பாஸ்போர்ட் மறுக்கப்பட்டது. நிதி உத்தரவாதங்கள் மற்றும் பாதுகாப்பு சோதனைகள் இல்லாமல் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களையும் மீறிய மறுப்பு இது.

பாஸ்போர்ட் கொடுக்காமல் இருக்க வேறு வழிகள் இருந்தன. விண்ணப்பதாரர்கள் கல்வியறிவு மற்றும் ஆங்கில மொழி சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். போதுமான நிதி ஆதாரம் உடையவராக இருத்தலும் பொது சுகாதார விதிமுறைகளுக்கு உட்பட்டவராக இருப்பதும் கூட அவசியமாக இருந்தன.

பிரிட்டிஷ் இந்திய எழுத்தாளர் திலிப் ஹீரோ 1957ஆம் ஆண்டில் தனது கல்வி மற்றும் நிதி நிலைமை மிகவும் நன்றாக இருந்தபோதிலும் பாஸ்போர்ட் பெற ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது என்று நினைவு கூர்ந்தார்.

இத்தகைய ஒடுக்குமுறை கட்டுப்பாடு யாரும் நினைத்துப் பார்க்க முடியாத முடிவுகளைக் கொண்டு வந்தது. பல இந்தியக் குடிமக்கள் போலி பாஸ்போர்ட்டை பெறத் தொடங்கினர்.

இத்தகைய ஊழல்களுக்குப் பிறகு, படிப்பறிவில்லாத மற்றும் ஆங்கிலம் தெரியாத பாதி எழுத்தறிவு பெற்ற இந்தியர்கள் 1959 மற்றும் 1960க்கு இடையில் சில காலத்திற்கு பாஸ்போர்ட்டுகளுக்கு தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டனர்.

ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக, இந்தியாவின் பாஸ்போர்ட் அமைப்பு மேற்கு நாடுகளுக்குப் பயணம் செய்ய விரும்பும் அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்தவில்லை.

இந்தக் கொள்கையின் ஓர் அம்சம், 2018இல், பிரதமர் நரேந்திர மோதியின் அரசாங்கம், திறமையற்ற மற்றும் வரையறுக்கப்பட்ட கல்வி பெற்ற இந்தியர்களுக்கு ஆரஞ்சு நிறப் பாஸ்போர்ட் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியபோதும், காணக்கூடியதாக இருந்தது. பொதுவாக இந்திய பாஸ்போர்ட்டின் நிறம் நீலமாக இருக்கும்.

இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, இந்த திட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டியதாயிற்று.

இத்தகைய கொள்கையானது உயர் சாதி என்று தங்களை அழைத்துக்கொள்ளும் சாதிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் மேட்டுக்குடி வர்க்க மக்களுக்கு ஏற்ற இடமாக மட்டுமே வெளி நாடுகளை உருவாக்கி வைத்திருக்க இந்தியா நீண்ட காலமாக முயன்றுள்ளது என்கிறார் நடராஜன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: