முகலாயர்களிடமிருந்து கோஹினூர் வைரத்தை கொள்ளையடித்த நாதிர் ஷாவின் கதை

பட மூலாதாரம், HISTORY/UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGES
- எழுதியவர், அசத் அலி
- பதவி, பிபிசி உருது, லண்டன்
நாதிர் ஷா இரானில் தனது ஆட்சியை நிறுவியபிறகு டெல்லியை நோக்கிப் புறப்பட்டார்.
நாதிர் ஷா அரியணை ஏறியவுடன், பேரரசின் மேற்கு எல்லைகள் பாதுகாப்பாக இருந்தன, மேலும் அவரிடம் இரானின் முழு கட்டுப்பாடும் இருந்தது. இந்நிலையில் அவர் கிழக்கே கந்தஹார் நோக்கி திரும்பினார். இந்த படையெடுப்பின் செலவினத்திற்காக பேரரசுக்குள் இருந்த மக்கள் பெரும் விலை கொடுத்தனர் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் பொருளாதாரத்தின் சக்கரம் நின்றுபோனது.
கந்தஹாரில் வெற்றி பெற்ற பிறகு நாதிர் ஷா, தனது ராஜ்ஜியத்தில் தேடப்பட்டு வந்த ஆப்கானியர்களுக்கு முகலாயப் பேரரசு அடைக்கலம் கொடுத்ததாகக்கூறி டெல்லியை ஆக்கிரமிக்க புறப்பட்டார். அவர் இரானிய மற்றும் முகலாய பேரரசுக்கு இடையே உள்ள காபூலைக் கைப்பற்றினார். மேலும் அவரது அடுத்த இலக்கு டெல்லியாக இருந்தது.
டெல்லிக்கு வடக்கே உள்ள கர்னாலில் முகலாய பேரரசர் முகமது ஷாவின் படையை தோற்கடித்து 1739 மார்ச் மாதம் அவர் டெல்லியை அடைந்தார். இதன் போது ஏற்பட்ட சில கலவரங்களில் சில இரானிய வீரர்கள் கொல்லப்பட்டனர். நாதிர்ஷா படுகொலைகளுக்கு உத்தரவிட்டார். இதில் 30,000 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள்.
இதற்கு முன் நாதிர் ஷா போர்க்களத்தை தவிர, தேவையற்ற ரத்தம் சிந்தாமல் தனது அனைத்து இலக்குகளையும் அடைந்தார். ஆனால் டெல்லிக்குப் பிறகு தனது முந்தைய கொள்கைகள் இனி தேவையில்லை என்று அவர் முடிவு செய்தார்.
நாதிர் ஷா மற்றும் முஹம்மது ஷா

பட மூலாதாரம், HISTORY/UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGES
நாதிர் ஷா முகலாய பேரரசரை அரியணையில் இருந்து அகற்றவில்லை. திரும்பி செல்வதற்கு முன்பு அவருக்கு பல பரிசுகளை வழங்கினார் மற்றும் தனது கைகளால் விலைமதிப்பற்ற நகைகளைக்கொண்டு அவரது கிரீடத்தை அலங்கரித்தார். முழுமையான இறையாண்மையை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்து.முகலாயப் பேரரசர் முகமது ஷா பதிலுக்கு, திபெத் மற்றும் காஷ்மீரில் இருந்து சிந்து நதியின் மேற்குப் பகுதி முழுவதையும் நாதிர் ஷாவுக்கு கொடுத்தார். இந்த ஒப்பந்தம் முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது.
நாதிர் ஷா சிந்து நதிக்கு மேற்கே உள்ள எல்லா முகலாயப் பகுதிகளையும், டெல்லியிலிருந்து ஏராளமான நகைகள், தங்கம் மற்றும் வெள்ளியையும் அன்பளிப்பாகப் பெற்றார். கையகப்படுத்தப்பட்ட மொத்த சொத்தின் மதிப்பு சுமார் 70 கோடி ரூபாய். 1756 முதல் 1763 வரையிலான போரில் பிரெஞ்சு அரசு செலவழித்த பணத்தை விட இது அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நாதிர் ஷா பெற்ற மிகவும் விலைமதிப்பற்ற நகைகளில் கோஹினூர், தர்யா-இ-நூர் மற்றும் தாஜ்மா ஆகியவை அடங்கும். டெல்லி மீதான அவரது தாக்குதலின் நோக்கம் இரானின் மேற்கில் ராணுவ நடவடிக்கைகளுக்குத் தேவையான பணத்தைப் பெறுவதாகும்.
ஐரோப்பா மற்றும் ரஷ்யாவின் அரசவைகளில் நாதிர்ஷா குறித்த எதிரொலி

பட மூலாதாரம், HERITAGE IMAGES
முகலாயப் பேரரசுக்கு எதிரான வெற்றி, நாதிர்ஷாவின் 'உலகப் புகழை புதிய உயரத்திற்கு'கொண்டுசென்றது. "இந்தியாவில் அவர் இருந்த இரண்டு மாதங்களின் கதை வணிகர்கள் மூலம் உலகின் எல்லா மூலைகளுக்கும் பரவியது. இந்தியாவில் உள்ள ஐரோப்பிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பாதிரியார்கள் நாதிர் ஷாவைப் பற்றி அறிக்கைகள் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
நாதிர் ஷாவின் நடவடிக்கைகள் லண்டன் செய்தித்தாள்களில் பெருமையாக பேசப்பட்டன. உஸ்மானிய மற்றும் ரஷ்ய ஏகாதிபத்திய அரசவைகள், யானைகள் மற்றும் நகைகள் உட்பட பல அன்பளிப்புகளை நாதிர்ஷாவிடமிருந்து பெற்றன. ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்ட நகைகள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருங்காட்சியகத்தில் இன்றும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்று எழுத்தாளர் எக்ஸோர்டி குறிப்பிட்டுள்ளார்
சில மாதங்களிலேயே பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் நாதிர் ஷா பற்றிய புத்தகங்கள் வெளிவந்தன, ஏறக்குறைய ஒரு தலைமுறைக்குப் பிறகும் அனைவருக்கும், குறைந்த பட்சம் படித்த வகுப்பினருக்கு அவரது பெயர் தெரிந்திருந்தது.
டெல்லி, நாதிர்ஷாவின் வாழ்க்கை சாதனைகளின் உச்சமாக இருந்தது. சுமார் இரண்டு மாதங்கள் தங்கிய பிறகு, அவர் 1739 மே 16 அன்று டெல்லியை விட்டு வெளியேறினார்.
ஆனால் டெல்லியை கைப்பற்றியபிறகு நாதிர்ஷா ஒற்றுமையின்மையை சந்தித்தார். அவர் நோய்வாய்ப்பட்டார். கொடுமை, கோபம் மற்றும் பேராசை ஆகியவை அவரது ஆளுமையாக மாறியது. இறுதியில் அவர் தனது சொந்த அதிகாரிகளால் கொல்லப்பட்டார்.
நாதிர் ஷா: எழுச்சிக்குப்பிறகு வீழ்ச்சி
இந்தியாவில் இருந்து திரும்பிய நாதிர் ஷா தான் இல்லாத நேரத்தில் தனது மகன் ரஸா கலி, முன்னாள் சஃபாவிட் பேரரசர்களான தஹ்மாஸ்ப் மற்றும் அப்பாஸ் ஆகியோரை தூக்கிலிட்டார் என்பதை அறிந்தார். இது தவிர நாதிர் ஷா தனது மகனின் பெரிய அரசவை குறித்தும் மகிழ்ச்சியடையவில்லை. ரஸா கலியிடம் இருந்து துணை பதவியை பறித்தார் நாதிர்ஷா. இதைத் தொடர்ந்து தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. மகன் தனக்கு எதிராக சதி செய்வதாக நாதிர்ஷாவின் மனதில் எண்ணம் வேரூன்றியது.
இந்தியாவிற்குப் பிறகு நாதிர் ஷா துர்கிஸ்தானுக்கு ஒரு வெற்றிகரமான படையெடுப்பை மேற்கொண்டார் மற்றும் தாகெஸ்தானை நோக்கி அணிவகுத்துச் சென்றார், ஆனால் அவர் அங்கு தோல்வியைச் சந்தித்தார். அவருடைய படையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. அதற்குள் நாதிர்ஷாவின் உடல்நிலையும் மோசமடைந்தது. அவருக்கு கல்லீரல் நோய் ஏற்பட்டது. மலேரியாவில் ஆரம்பித்து அதிக குடிப்பழக்கத்தால் அது மோசமடைந்தது.
இதனுடன் அவருக்குள் கோபமும் அதிகரித்து, மனநலப் பிரச்சனைகளும் தொடங்கியதாக எக்ஸோர்டி எழுதுகிறார். இதற்கிடையில் 1742 ஆம் ஆண்டில் அவரது மகன் ரஸா கலி அவரைக் கொல்லத் திட்டமிட்டுள்ளதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை ரஸா கலி மறுத்தார். ஆனால் நாதிர் ஷா அதை நம்பவில்லை. ரஸா கலியின் கண்களை அவர் பறித்தார். அதன் பிறகு ரஸா கலி அரியணையில் அமரும் கேள்வி நிரந்தரமாக முடிவுக்கு வந்தது.
"தாகெஸ்தானில் ஏற்பட்ட தோல்வி, நோய் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக தனது மகனின் கண்களைப்பறித்த வருத்தம் அவரது வாழ்க்கையில் ஒரு நெருக்கடியை உருவாக்கியது. அது அவரை உளவியல் ரீதியாக உடைத்தது. பிறகு அவர் அதிலிருந்து மீளவே முடியவில்லை."
சிறுவயதில் அவர் உணர்ந்த வறுமை மற்றும் தாழ்வு மனப்பான்மை காரணமாக நாதிர் ஷாவுக்கு தனது குடும்பம் எப்போதுமே மிகவும் முக்கியமானதாக இருந்தது என்று எக்ஸோர்டி எழுதுகிறார். இப்போது இந்த அடித்தளம் அசைக்கப்பட்டது. அவர் தனது முந்தைய வலிமையை இழந்துவிட்டார். அவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் விரைவாக மோசமடைந்தது.”
திடீரென்று காபூலை விட்டு வெளியேற வேண்டியிருந்தது

பட மூலாதாரம், IMAGNO/GETTY IMAGES
நாதிர் ஷா டெல்லியிலிருந்து மோசமான வானிலையில் பல நதிகளைக் கடந்து 1739 டிசம்பர் 2 அன்று காபூலை அடைந்தார். அந்த நேரத்தில் சிந்து மாகாண ஆளுநர் குதா யார் கான் நாதிர் ஷாவுக்கு அடிபணிய மறுத்துவிட்டார்.
ஆப்கானிஸ்தானின் பனி மலைகளில் இருந்து சிந்துவின் வெப்பமான பாலைவனம் மற்றும் சமவெளிக்கு பயணம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என்று குதா யார் கான் நினைத்திருக்கலாம். ஆனால் நாதிர் ஷா இதுபோன்ற விஷயத்தை புறக்கணிப்பவர் அல்ல.
நாதிர் ஷா இரண்டு மாதங்களில் ஆயிரம் மைல்கள் பயணம் செய்து சிந்துவை அடைந்தார். இறுதியில் குதா யார் கான் உமர்கோட்டில் கைது செய்யப்பட்டார், மேலும் அவர் தனது பொக்கிஷத்தையும் இழக்க நேரிட்டது.
'உலகின் மிகப்பெரிய ராணுவம்'

பட மூலாதாரம், BILDAGENTUR-ONLINE/UNIVERSAL IMAGES GROUP VIA GETT
நாதிர் ஷாவின் ராணுவத்தில் 3 லட்சத்து 75 ஆயிரம் வீரர்கள் இருந்தனர் என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. அதில் ஷியா இரானியர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தனர். ராணுவத்தில் "60 ஆயிரம் துர்க்மான்கள் மற்றும் உஸ்பெகிஸ்தானியர்கள், 70 ஆயிரம் ஆப்கானியர்கள் மற்றும் இந்தியர்கள், 65 ஆயிரம் குராசானியர்கள், மேற்கு இரானில் இருந்து 1.2 லட்சம் வீரர்கள், அஜர்பைஜான் மற்றும் காஃப் மலைகளில் இருந்து 60 ஆயிரம் வீரர்கள் இருந்தனர்.
டெல்லி படையெடுப்புக்குப்பிறகு, இரானில் அளிக்கப்பட்ட மூன்று வருட வரி விலக்கு மற்றும் அது உருவாக்கிய பொருளாதார வளம் கடந்த காலத்தின் ஒரு விஷயமாக மாறியது..
1740 களில் பாக்தாத் மீதான படையெடுப்பால் சிரமங்கள் மேலும் அதிகரித்தன. பொருளாதாரம் முடங்கியது மற்றும் வரி வசூலிப்பவர்களிடமிருந்து தப்பிக்க மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி காடுகளில் ஒளிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாக்தாத், பாஸ்ரா மற்றும் கிழக்கில் இருந்து இந்தியாவை நோக்கி மக்கள் அதிக அளவில் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மிகப்பெரிய ராணுவமும் அதன் காரணமான வரி விதிப்பும் நாதிர்ஷாவின் கதையில் ஒரு நிலையான அம்சமாக உள்ளது.
தன் வாழ்நாள் முழுவதும் வெற்றிகரமான ஆக்கிரமிப்புகளுக்குப் பிறகு, தனது வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் தாகெஸ்தான் மலைகளில் ஏற்பட்ட தோல்வி நாதிர் ஷா மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஒட்டோமான் பேரரசு அவரது இலக்காக இருந்தது. பாக்தாத், பாஸ்ரா, சுமாரா, நஜாஃப், கர்பலா மற்றும் ஷட் அல்-அரப் ஆகியவற்றை சுற்றிவளைக்க நாதிர் ஷா உத்தரவிட்டார். கார்குக் மற்றும் மொசூல் மீதும் முற்றுகையிட உத்தரவிடப்பட்டது.
போர் நீடித்தது. திடீரென்று நாதிர் ஷா ஓட்டோமான் பேரரசின் சுல்தானிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றார், தனது எல்லைகளில் இருந்து நாதிர் ஷா பின்வாங்கினால் சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக சுல்தான் செய்தி அனுப்பினார். இதையடுத்து 1743 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி மொசூலில் இருந்து பின்வாங்குமாறு நாதிர் ஷா தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டார்.
சில வருடங்களுக்கு முன் ஒரு புகார் வந்தவுடன் காபூலில் இருந்து சிந்து வரை பலநூறு கிலோமீட்டர் பயணம் செய்து அதே நாதிர் ஷாவா இது என்று பலரும் ஆச்சரியம் அடைந்தனர்.
நாதிர் ஷா போரில் சண்டையிடும் விருப்பத்தை இழந்துவிட்டதாக எக்ஸோர்டி கருதுகிறார். இந்த மாபெரும் படையை வழிநடத்தும் கவனமும் அவரிடம் இருக்கவில்லை.
"சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு தனது மகன் ரஸா கலி கலி கானின் கண்களை பிடுங்கி எறிந்த அதே நாளில் மொசூல் முற்றுகையை முடிக்க நாதிர் ஷா உத்தரவிட்டது வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல."
நாதிர்ஷாவின் வாழ்க்கையின் 'திருப்புமுனை' இது என்று அவர் கூறுகிறார்.
"அவரது வாள், அவரது ராணுவம் அனைத்தும் விழிப்புடனும் வலிமையுடனும் இருந்தன. எதையும் செய்யத் தயாராக இருந்தன. அவரது உத்தரவின் பேரில் எங்கு வேண்டுமானாலும் செல்லத் தயாராக இருந்தன ... ஒட்டோமான் இராக்கின் பெரும்பகுதி அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. இஸ்தான்புல்லை நோக்கி முன்னேறுவதற்கான சாத்தியம் இருந்தது. இஸ்லாமிய உலகத்தின் தலைமையே அவரது இலக்காக இருந்தது. ஆனால் இந்த அனைத்திற்குமான வாரிசை அவர் அழித்துவிட்டார்.”
ஒரு நாள் திடீரென அவர் தனது ராணுவம் மற்றும் போர் நடவடிக்கைகளை கைவிட்டு, அரண்மனையைச் சேர்ந்த சில பெண்கள் மற்றும் ஒரு சிறிய குதிரைப் படையுடன், கர்பலா மற்றும் நஜாப் போன்ற ஷியா புனித தலங்களுக்கு புறப்பட்டார்.
இந்த யாத்திரையின் போது அவரை சந்தித்த ஓட்டோமான் பேரரசின் அதிகாரி ஒருவர், 'நாதிர்ஷா இப்போதும் அழகாக இருந்தாலும், அவரது முகத்தில் வயது மற்றும் மன குழப்பம் தெரிந்தது. அவரது கண்கள் மஞ்சளாக இருந்தன. அவரது பற்கள் பல உதிர்ந்துவிட்டன. அவர் எண்பது வயதானவர் போல காணப்பட்டார்,” என்று பதிவு செய்துள்ளார்.
அந்த நாட்களில் ஒரு பிரெஞ்சு பாதிரியார் அவருக்கு சிகிச்சை அளித்ததாகவும், அவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் எக்ஸோர்டி எழுதுகிறார்.
நாதிர் ஷாவின் கடைசி இரவு
1746 இல் ஒட்டோமான் பேரரசுடனான ஒப்பந்தத்திற்குப் பிறகு, இரண்டு பேரரசுகளும் 1639 இன் எல்லைகளை ஏற்றுக்கொண்டதாக வரலாற்றாசிரியர் ஹுமாயுன் கோட்சியன் எழுதுகிறார். இதற்கிடையில் நாதிர் ஷாவின் கொடுங்கோலாட்சி நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் ஒரு நாள் நாதிர் ஷா, இரானிய தளபதிகளால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நினைத்து தனது பாதுகாப்புப் பொறுப்பை அப்தாலி ஆப்கானியர்களிடம் ஒப்படைத்தார். இரானிய தளபதிகளைக் கொல்ல உத்தரவிட்டார்.
தன் பாதுகாப்புப் பொறுப்பை அகமது கான் அப்தாலியிடம் ஒப்படைத்தார். ஆனால் இந்த உரையாடலை இரானிய காவலர்கள் கேட்டுவிட்டனர்.
நாதிர் ஷாவின் இரானிய அணி தங்களுக்கு ஒரு இரவு மட்டுமே உள்ளது என்பதை உணர்ந்தது. நாதிர் ஷா மீதான நடவடிக்கைக்காக 70 நம்பகமான அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. நாதிர் ஷா அன்றிரவு தனது வழக்கமான கூடாரத்திற்கு பதிலாக மனைவி சக்கியின் கூடாரத்தில் தூங்கச் சென்றார்.
தான் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டால் தன்னை எழுப்பி விட வேண்டும் என்று சக்கியிடம் சொல்லிவிட்டு படுக்கையில் படுத்தார் நாதிர் ஷா. தாக்குதல் நடத்தியவர்கள் அங்கு சென்றடைந்தபோது சக்கியின் கண்கள் திறந்தன. அவர் நாதிர் ஷாவை எழுப்பினார். நாதிர் ஷா உடனடியாக தன் வாளை எடுத்தார். ஆனால் கால் தடுக்கி கீழே விழுந்துவிட்டார். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான சலார் கான், அவரை கழுத்து மற்றும் தோள்பட்டைக்கு இடையில் தாக்கி, கையை வெட்டினார்.
நாதிர் ஷா தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவர் எழுந்திருக்க முயன்றும் தோல்வியடைந்தார். தன்னைக் கொல்ல வேண்டாம் என்று தாக்கியவர்களிடம் கெஞ்சினார். ஆனால் முகமது கான் கஜர் முன்னோக்கிச் சென்று ஒரே அடியில் அவரது தலையை துண்டித்துவிட்டார்.
நாதிர்ஷாவின் மரணத்திற்குப் பின் வந்த பத்தாண்டுகள் 'வன்முறை, அராஜகம் மற்றும் அழிவு' ஆகியவற்றின் கதையாக இருந்தது. அலெக்சாண்டரின் ராணுவத்தைப் போலவே நாதிர் ஷாவின் ராணுவமும், பல்வேறு தளபதிகளிடையே பிரிக்கப்பட்டது. துரானி பேரரசை நிறுவிய அஹ்மத் கான் அப்தாலியும் இந்த தளபதிகளில் ஒருவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: • ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக் • டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர் • இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம் • யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













