குதிராம் போஸ்: இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் முதன்முறையாக 18 வயதில் தூக்கிலிடப்பட்ட இளைஞர்

குதிராம் போஸ்

பட மூலாதாரம், NIYOGI BOOKS

படக்குறிப்பு, குதிராம் போஸ்
    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி

1905 ஜூலை 19 ஆம் தேதி வங்காளத்தைப் பிரிக்க கர்சன் பிரபு முடிவு செய்தவுடன், வங்காளத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் மக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கோபமடைந்தனர். எல்லா இடங்களிலும் போராட்டங்கள், வெளிநாட்டு பொருட்களை புறக்கணித்தல் மற்றும் செய்தித்தாள்களில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கட்டுரைகள் என்று ஒரு வகையான எதிர்ப்பு அலை ஏற்பட்டது.

அந்த நேரத்தில் சுவாமி விவேகானந்தரின் சகோதரர் பூபேந்திரநாத் தத், 'ஜுகாந்தர்' நாளிதழில் எழுதிய கட்டுரையை, தேச துரோகமாக அரசு கருதியது.

கல்கத்தா பிரசிடென்சியின் மாஜிஸ்ட்ரேட் டக்ளஸ் கிங்ஸ்ஃபோர்ட், அச்சகத்தைக் கைப்பற்ற உத்தரவிட்டது மட்டுமல்லாமல், இந்தக் கட்டுரையை எழுதியதற்காக பூபேந்திரநாத் தத்துக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதித்தார். இந்த முடிவு ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சி நெருப்பில் நெய்யை ஊறியது.

இது மட்டுமின்றி, வந்தே மாதரம் முழக்கத்தை எழுப்பிய 15 வயது மாணவருக்கு 15 பிரம்படிகள் என்ற கடுமையான தண்டனையை கிங்ஸ்ஃபோர்ட் வழங்கினார்.

இதற்குப் பிறகு, 1907 டிசம்பர் 6 அன்று இரவு, மேதினாபூர் மாவட்டத்தில் உள்ள நாராயண்கர் அருகே, வங்காளத்தின் லெப்டினன்ட் கவர்னர் ஆண்ட்ரூ ஃப்ரேசர் பயணம் செய்த ரயில் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த முயற்சி நடத்தப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு சந்திரநாகோரில் லெப்டினன்ட் கவர்னரின் ரயிலை தகர்க்க மற்றொரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பரிந்திர கோஷ், உலாஸ்கர் தத் மற்றும் ப்ரஃபுல் சாக்கி ஆகியோர் இந்த முயற்சியில் இடம்பெற்றனர்.

டக்ளஸ் கிங்ஸ்ஃபோர்ட்

பட மூலாதாரம், NIYOGI BOOKS

படக்குறிப்பு, அப்போதைய கல்கத்தா பிரசிடென்சியின் மாஜிஸ்ட்ரேட் டக்ளஸ் கிங்ஸ்ஃபோர்ட்

சிறுவயதிலிருந்தே ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பு

1906 இல் மேதினாப்பூரில் ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சத்யேந்திரநாத் போஸ் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து வந்தே மாதரம் என்று பெயரிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தை அச்சிட்டார். இந்த துண்டு பிரசுரத்தை கண்காட்சியில் விநியோகிக்கும் பொறுப்பு குதிராம் போஸிடம் ஒப்படைக்கப்பட்டது.

அங்கு ஆங்கிலேயர்களின் கைக்கூலியான ராம்சரண் சென், அரசுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதைக்கண்டார். இதை அங்கு பணியில் இருந்த கான்ஸ்டபிளிடம் தெரிவித்தார். ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் குதிராமை பிடிக்க முயன்றார். குதிராம் அந்த சிப்பாயின் முகத்தில் ஒரு குத்து கொடுத்தார். அப்போது மற்ற போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து குதிராம் போஸைப் பிடித்தனர்.

"சத்யேந்திரநாத்தும் அதே கண்காட்சியில் சுற்றித் திரிந்தார். அவர் போலீஸாரை கண்டித்து, துணை மாஜிஸ்ட்ரேட்டின் மகனை ஏன் பிடித்தீர்கள் என்று கேட்டார். அதைக்கேட்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். பிடி சிறிது தளர்ந்தும் குதிராம் போஸ் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்,"என்று லக்ஷ்மேந்திர சோப்ரா குதிராம் போஸின் வாழ்க்கை வரலாற்றில் எழுதியுள்ளார்.

"பின்னர் சத்யேந்திரநாத், காவல்துறையினரை திசை திருப்பிய குற்றத்திற்காக ’டி வெஸ்டன்’ நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால் அவர் மீதான இந்த குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியவில்லை. ஆயினும் வெஸ்டன் எழுதிய தீர்ப்பின் காரணமாக, 1906 ஏப்ரல் மாதம் சத்யேந்திரநாத் ஆசிரியர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.”

குதிராம் போஸ்

பட மூலாதாரம், BHARTIYA GYANPEETH

குதிராம் போஸ் மற்றும் பிரஃபுல்லா சாகி கைத்துப்பாக்கிகளுடன் முஸாஃபர்பூரை அடைந்தனர்

1908 இல், 17 வயதான குதிராம் போஸ் மற்றும் பிரஃபுல்லா சாகி ஆகியோரிடம் டக்ளஸ் கிங்ஸ்ஃபோர்டைக் கொல்லும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக புரட்சியாளர்கள் ஒரு பார்சல் வெடிகுண்டை அனுப்பி கிங்ஸ்ஃபோர்டை கொல்ல முயன்றனர். ஆனால் அவர் அந்தப்பார்சலை திறக்கவில்லை. பார்சலை திறந்த ஒரு ஊழியர் படுகாயம் அடைந்தார்.

இதற்கிடையில் புரட்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு பயந்து கிங்ஸ்ஃபோர்ட், வங்காளத்திலிருந்து பிகாரில் உள்ள முசாஃபர்பூருக்கு இடமாற்றம் வாங்கிக்கொண்டார். குதிராமுக்கு இரண்டு கைத்துப்பாக்கிகள் வழங்கப்பட்டன, பிரஃபுல்லா சாகிக்கு ஒரு கைத்துப்பாக்கியும், கூடுதல் தோட்டாக்களும் வழங்கப்பட்டு அவர்கள் முசாஃபர்பூருக்கு அனுப்ப்பட்டனர். ஹேம்சந்த் கனுங்கோ அவர்களிடம் சில கைக்குண்டுகளையும் கொடுத்தார்.

" 1908 ஏப்ரல் 18 ஆம் தேதி, குதிராம் போஸ் மற்றும் பிரஃபுல்லா சாகியும் தங்கள் பணிக்காக முசாஃபர்பூரை அடைந்தனர். அங்கு இருவரும் வீர் மோதி ஏரி பகுதியில் உள்ள தர்மசாலாவில் தங்கினர். இரு இளைஞர்களும் கிங்ஸ்ஃபோர்டின் குடியிருப்பை நெருக்கமாக கண்காணித்தனர். அவரது தினசரி வழக்கங்களையும் பட்டியலிடத்தொடங்கினர். அதற்குள் போலீஸ் துப்பறியும் அதிகாரிகளுக்கு இந்தத் திட்டம் பற்றி சில துப்புகள் கிடைத்துவிட்டன. அவர்கள் கிங்ஸ்ஃபோர்டை எச்சரித்து அவருடைய பாதுகாப்பை அதிகரித்தனர்."என்று லக்ஷ்மேந்திர சோப்ரா குதிராம் போஸின் வாழ்க்கை வரலாற்றில் எழுதியுள்ளார்.

கிங்ஸ்ஃபோர்ட் தனது மனைவியுடன் குதிரைகள் பூட்டப்பட்ட விக்டோரியா கோச்சில் தினசரி இரவு ஸ்டேஷன் கிளப்புக்கு செல்வதை குதிராம் மற்றும் பிரஃபுல்லா சாகி கண்டுபிடித்தனர். கிளப்பில் இருந்து திரும்பி வரும் வழியில் கிங்ஸ்ஃபோர்டின் வண்டி மீது வெடிகுண்டை வீசி அவரைக்கொல்ல இருவரும் திட்டமிட்டனர்.

குதிராம் போஸ்

பட மூலாதாரம், INDIAN POSTAL DEPARTMENT

இரவு 8.30 மணியளவில் வண்டி மீது வீசப்பட்ட வெடிகுண்டு

அந்த நாட்களில், முசாஃபர்பூரில் உள்ள ஸ்டேஷன் கிளப்பில் மாலை வேளையில் பரபரப்பு அதிகமாக இருக்கும். அங்கு தினமும் மாலையில் பிரிட்டிஷ் அதிகாரிகளும் உயர் பதவிகளில் பணிபுரியும் இந்தியர்களும் கூடி பார்ட்டி வைப்பார்கள். உள்ளரங்க விளையாட்டுகளை விளையாடுவார்கள். ஆனால் கல்கத்தாவை ஒப்பிடும்போது முசாஃபர்பூரில் மாலை நேர சந்திப்புகள் சீக்கிரமே முடிவடையும்.

அன்று கிங்ஸ்ஃபோர்ட், ஆங்கில பாரிஸ்டர் பிரிங்கிள் கென்னடியின் மனைவி மற்றும் மகளுடன் பிரிட்ஜ் விளையாடிக் கொண்டிருந்தார். 1908 ஏப்ரல் 30 ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு ஆட்டம் முடிந்ததும், திருமதி கென்னடி மற்றும் கிரேஸ் கென்னடி ஆகிய இரு ஆங்கிலேயப் பெண்களும் குதிரை வண்டியில் ஏறிச்சென்றனர். இந்த வண்டி ஏறக்குறைய கிங்ஸ்ஃபோர்டின் வண்டி போலவே இருந்தது. கிங்ஸ்ஃபோர்டும் அவரது மனைவியும் அவர்களது குதிரை வண்டியில் சென்றனர். அந்தப்பெண்கள் கிங்ஸ்ஃபோர்டின் வீடு வழியாகச்செல்லும் சாலையில் சென்றனர்.

"அது ஒரு இருண்ட இரவு. வண்டி கிங்ஸ்போர்ட் வீட்டின் வளாகத்தின் கிழக்கு வாயிலை அடைந்தபோது, சாலையின் தெற்கு முனையில் மறைந்திருந்த இரண்டு பேர் அதை நோக்கி ஓடினர்.

அவர்கள் வண்டிக்கு உள்ளே வெடிகுண்டை வீசினர்,” என்று நூருல் ஹோதா தனது 'அலிபூர் பாம்ப் கேஸ்' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. அதில் இருந்த இரண்டு பெண்களும் பலத்த காயம் அடைந்தனர். வண்டியின் பின்னால் இருக்கும் படியில் நின்றுகொண்டிருந்த ஒரு பணியாளுக்கு காயமேற்பட்டு மயக்கமடைந்தார். காயமடைந்தவர்கள் கிங்ஸ்ஃபோர்ட்டின் வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டனர். கிரேஸ் கென்னடி ஒரு மணி நேரத்திற்குள் காலமானார். திருமதி கென்னடி அடுத்த 24 மணி நேரத்திற்கு, வாழ்வுக்கும் சாவிற்கும் இடையே ஊசலாடினார். மே 2 ஆம் தேதி அவரும் உயிரிழந்தார்."

குதிராம் போஸ்

பட மூலாதாரம், NIYOGI BOOKS

போஸ் மற்றும் சாகியின் தலைக்கு 5000 ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டது

"குண்டு வெடிப்பு அவ்வளவு வலிமையானது அல்ல. ஆனால் கொலையாளிகள் மிகவும் துல்லியமாக தாக்குதல் நடத்தினர். அவர்கள் தங்கள் குறியில் ஒரு அடி தவறியிருந்தாலும் இரண்டு பெண்களில் குறைந்தது ஒருவராவது உயிர் பிழைத்திருப்பார்,” என்று அந்த சம்பவத்தின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிங்ஸ்ஃபோர்ட் மீதான ’சாத்தியமான தாக்குதல்’ பற்றி கல்கத்தா காவல்துறை எச்சரித்தபோது, அவரது பாதுகாப்பிற்காக இரண்டு போலீஸ்காரர்கள், தஹசில்தார் கான் மற்றும் ஃபயாசுதீன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

ஏப்ரல் 30 அன்று மாலை, ஸ்டேஷன் கிளப்புக்கும் கிங்ஸ்ஃபோர்டின் வீட்டிற்கும் இடையே ரோந்து செல்லும் பொறுப்பு இந்த இரண்டு போலீசாருக்கும் வழங்கப்பட்டது. இரவு 8:30 மணிக்கு அதே போலீஸ்காரர்கள்தான் கிங்ஸ்ஃபோர்டின் வீட்டிற்கு வெளியே வெடிப்பு சத்தத்தை கேட்டனர். இரண்டு பேர் அங்கிருந்து தெற்கு நோக்கி ஓடுவதை அவர்கள் கண்டனர். ஆனால் அவர்கள் இருட்டில் ஓடி மறைந்துவிட்டனர்.

குதிராம் போஸும் பிரஃபுல்லா சாகியும் அங்கிருந்து ஓடிவிட்டனர். ஆனால் அவசரத்தில் குதிராமின் காலணிகள் அங்கேயே தங்கிவிட்டன. இந்த சம்பவத்திற்குப் பிறகு, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர், முசாஃபர்பூரில் இருந்து மொகாமா மற்றும் பாங்கிபூர் இருக்கும் திசையில் அவர்களைக் கைது செய்ய பல போலீஸாரை அனுப்பினார். இவர்களை பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 5000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

குதிராம் போஸ்

குதிராம் போஸ் கைது செய்யப்பட்டார்

முசாஃபர்பூர் நகரம் முழுவதும் பரபரப்பு பரவியது. குதிராமும் சாகியும் ரயில் தண்டவாளத்தில் ஓடி சமஸ்திபூர் அருகே உள்ள வைனி ரயில் நிலையத்தை அடைந்தனர். இரவு இருளில் சுமார் 24 மைல் தூரத்தை நடந்தே சென்றனர். வைனி ரயில் நிலையத்திற்கு வெளியே புரட்சியாளர்கள் இருவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி, உயிர் பிழைத்தால் மீண்டும் கல்கத்தாவில் சந்திப்போம் என்ற தீர்மானத்துடன் வெவ்வேறு திசைகளில் சென்றனர்.

"1908 மே 1 அன்று, வைனி ரயில் நிலையம் அருகே குதிராம் தண்ணீர் குடித்துவிட்டு ஓய்வெடுக்க உட்கார்ந்து கொண்டிருந்தபோது, மக்கள் தங்களுக்குள் இரவு நடந்த சம்பவத்தைப் பற்றி பேசிக்கொண்டதை கேட்டார். அவர்களில் ஒருவர், ' இந்த தாக்குதலில் கிங்ஸ்ஃபோர்ட் இறக்கவில்லை. ஆனால் பிரிட்டிஷ் தாய் மற்றும் மகள் கொல்லப்பட்டனர்’ என்று சொன்னார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குதிராம், 'அப்படியானால் கிங்ஸ்ஃபோர்ட் சாகவில்லையா?' என்று தன்னை மறந்து கேட்டார். சில பிரிட்டிஷ் போலீஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் உளவாளிகளும் அங்கு சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர்.

குதிராமின் சோர்வு, பரபரப்பு, வயது, பெங்காலி உச்சரிப்புடன் கூடவே அவர் வெறுங்காலுடன் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் உடனடியாக பிடிபட்டார். அவர் பிடிக்கப்படும்போது, அவரது உடையில் இருந்து ஒரு சிறிய ரிவால்வர் கீழே விழுந்தது. அவரது சட்டைப் பையில் இருந்து 37 தோட்டாக்கள் மற்றும் 30 ரூபாயும் கிடைத்தது,”என்று லக்ஷ்மேந்திர சோப்ரா எழுதுகிறார்.

 குதிராம் போஸ் கைது செய்யப்பட்ட போது

பட மூலாதாரம், NIYOGI BOOKS

காலணிகள் காலில் அணிவித்துப்பார்க்கப்பட்டன

"குதிராமின் இடுப்பில் ஒரு கோடிட்ட கோட் கட்டப்பட்டிருந்தது. பின்னர் கிளப் வளாகத்திற்கு வெளியே குதிராம் போஸ் அதே கோட் அணிந்திருந்ததை தஹசில்தார் கான் அடையாளம் காட்டினார். போஸ் கைது செய்யப்பட்ட செய்தியைக் கேட்ட மாவட்ட மாஜிஸ்திரேட், அவரை அழைத்துவர வைனி சென்றடைந்தார். பின்னர் தாசில்தார் கான் மற்றும் ஃபயாசுதீனும், குதிராம் போஸை அடையாளம் காட்டினார்கள். 1908 ஏப்ரல் 30 ஆம் தேதி கிளப்பின் முன் காணப்பட்ட இருவரில் இவர் ஒருவர் என்று அவர்கள் குறிப்பிட்டனர்,” என்று லக்ஷ்மேந்திர சோப்ரா எழுதியுள்ளார்.

சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட காலணிகள் குதிராம் போஸின் கால்களில் அணிவிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. காலணிகள் அவருக்கு சரியாக பொருந்தியது. இவை தனது காலணிகள்தான் என்று குதிராமே ஒப்புக்கொண்டார்.

போலீஸ் விசாரணையில் குதிராம் போஸ் தனது கூட்டாளியின் உண்மையான பெயரை வெளியிடவில்லை. அவரது பெயர் தினேஷ் சந்திர ராய் என்று கூறினார். கிங்ஸ்ஃபோர்டின் வண்டியை அடையாளம் காண்பதில் தவறு செய்ததாக குதிராம் ஒப்புக்கொண்டார். போலீஸ் கைதியாக குதிராம் போஸ் முசாஃபர்பூர் ஸ்டேஷனை அடைந்தபோது, அவரைப் பார்க்க ஏராளமான மக்கள் அங்கே திரண்டிருந்தனர்.

 பிரஃபுல்லா சாகி

பட மூலாதாரம், NIYOGI BOOKS

படக்குறிப்பு, குதிராம் போஸின் கூட்டாளி பிரஃபுல்லா சாகி

பிரஃபுல்லா சாக்கி தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்

மே 1ஆம் தேதி மாலை 6 மணிக்கு, சப்-இன்ஸ்பெக்டர் நந்த்லால் பானர்ஜி சிங்பூம் செல்ல ரயில் ஏறினார். சமஸ்திபூர் ஸ்டேஷனின் பிளாட்பாரத்தில் ஒரு வங்காள இளைஞன் புதிய ஆடைகள் மற்றும் காலணிகளை அணிந்திருப்பதை நந்த்லால் பார்த்தார். அவனது உடை அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அந்த இளைஞன் அமர்ந்திருந்த பெட்டிக்குள் அவர் நுழைந்தார். அந்த இளைஞனிடம் பேச முயன்றார், இதனால் அந்த இளைஞன் கோபமடைந்தான். அந்த இளைஞன் கம்பார்ட்மென்ட்டை விட்டு வேறு பெட்டிக்கு சென்றான். மொகாமா காட் ஸ்டேஷனில் நந்தலால் மீண்டும் அந்த இளைஞன் அமர்ந்திருந்த பெட்டிக்கு சென்றார்.

 பிரஃபுல்லா சாக்கியின் ரயில் டிக்கெட்

பட மூலாதாரம், NIYOGI BOOKS

படக்குறிப்பு, பிரஃபுல்லா சாக்கியின் ரயில் டிக்கெட்

இதற்கிடையில், சப்-இன்ஸ்பெக்டர் தனது சந்தேகத்தை முசாஃபர்பூர் காவல்துறைக்கு தந்தி மூலம் தெரிவித்தார். மொகாமா நிலையத்தில், சந்தேகத்தின் அடிப்படையில் அந்த இளைஞனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அவருக்கு பதில் தந்தி வந்தது. தான் பிடிபடப்போவதை அறிந்த வாலிபர் பிளாட்பாரத்தில் குதித்தார்.

"இளைஞன் பெண்கள் காத்திருப்பு அறையை நோக்கி ஓடினான். அங்கு ஒரு ரயில்வே லோலீஸ்காரர் அவரைப் பிடிக்க முயன்றார். பின்னர் அந்த இளைஞன் ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து அவரை நோக்கி சுட்டான். ஆனால் அவனது குறி தவறியது.

சுற்றிவளைக்கப்பட்டபோது அவன் தன்னை இரண்டு முறை சுட்டுக் கொண்டான். ஒரு தோட்டா கழுத்து எலும்புக்கு அருகிலும் மற்றொன்று தொண்டையிலும் பாய்ந்தது. அந்த இளைஞன் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தான்," என்று நூருல் ஹோதா எழுதுகிறார்,

பிரஃபுல்லா சாகியை சிறப்பித்து வெளியிடப்பட்ட தபால்தலை

பட மூலாதாரம், INDIAN POST

படக்குறிப்பு, பிரஃபுல்லா சாகியை சிறப்பித்து வெளியிடப்பட்ட தபால்தலை

ஒரு மாதத்தில் மரண தண்டனை

பிரஃபுல்லா சாகியின் உடல் முசாஃபர்பூருக்குக் கொண்டு செல்லப்பட்டது, அங்கு தஹ்சில்தார் கான் மற்றும் ஃபயாசுதீன் ஆகியோர் குதிராம் போஸுடன் கிளப்பின் வளாகத்திற்கு அருகில் சுற்றிக்கொண்டிருந்தவர் அவர்தான் என்பதை அடையாளம் காட்டினர்.. பின்னர் பிரஃபுல்லா சாகியின் உடல் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் குதிராம் போஸிடம் காண்பிக்கப்பட்டது.

குதிராம் போஸ் தனது தோழரின் உடலை அடையாளம் கண்டுகொண்டார். ஆனால் அவரது பெயரை தினேஷ் சந்திர ராய் என்று சொன்னார். சாகியின் கைத்துப்பாக்கியைக் காட்டியபோது, அவரால் அதை அடையாளம் காண முடியவில்லை. ஆனால் தன்னிடம் கைத்துப்பாக்கி இருப்பதாக தினேஷ் சொன்னதாக அவர் கூறினார்.

இந்த சம்பவத்திற்கு ஐந்து மாதங்களுக்குப் பிறகு, 1908 நவம்பர் 9 ஆம் தேதி பிரஃபுல்லா சாகியைக் கைது செய்த நந்தலால் பானர்ஜி, கல்கத்தாவில் ஸ்ரீச்சந்திர பால் மற்றும் கணேந்திரநாத் கங்குலி ஆகியோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஹெச். டப்சு கார்ண்டஃப் நீதிமன்றத்தில் குதிராம் போஸ் மீது கொலை வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. குதிராம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, சாலையின் இருபுறமும் நின்றிருந்த மக்கள் ஜிந்தாபாத் மற்றும் வந்தே மாதரம் என்ற முழக்கங்களுடன் அவரை வரவேற்றனர். 1908 ஜூன் 13 ஆம் தேதி நீதிமன்றம், குதிராம் போஸுக்கு மரண தண்டனை விதித்தது.

குதிராம் போஸ்

பட மூலாதாரம், NIYOGI BOOKS

படக்குறிப்பு, குதிராம் போஸ்

இந்தியா முழுவதும் இரங்கல்

1908 ஆகஸ்ட் 11 அன்று காலை 6 மணிக்கு, இந்திய சுதந்திர வரலாற்றில் முதன்முறையாக ஒரு வாலிபர் தூக்கிலிடப்பட்டார். அப்போது அவர் கையில் பகவத்கீதையின் பிரதி இருந்தது. அப்போது அவருக்கு வயது, 18 வயது, 8 மாதம் மற்றும், 8 நாட்கள். சிறைக்கு வெளியே அவருக்கு பிரியாவிடை அளிக்க பெரும் கூட்டம் வந்தே மாதரம் பாடியது.

லோகமான்ய பாலகங்காதர திலகர் குதிராம் போஸின் தியாகம் குறித்து பல கட்டுரைகளை எழுதினார்.

1908 மே 10 ஆம் தேதி புனேயில் இருந்து வெளியான மராத்தா இதழில், "இது தீவிர எதிர்ப்பை ஒரு உறுதியான வடிவத்தில் முன்வைப்பதற்கான தீவிர கிளர்ச்சியின் பாதையாகும். இதற்கு பிரிட்டிஷ் அரசே பொறுப்பு" என்று எழுதினார்.

பாலகங்காதர திலகர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாலகங்காதர திலகர்

குதிராம் போஸின் படங்கள் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டன. இலக்கியவாதி பால்கிருஷ்ண பட் தனது விரிவுரை ஒன்றில், குதிராம் போஸுக்கு அஞ்சலி செலுத்தியதற்காக ஆசிரியர் பணியை விட்டு விலக வேண்டியிருந்தது. முன்ஷி பிரேம்சந்த் தனது படிக்கும் அறையின் சுவரில் குதிராம் போஸின் படத்தை வைத்திருந்தார்.

குதிராம் போஸின் தியாகத்தின் மிகப்பெரிய தாக்கம் மாணவர்கள் மீது ஏற்பட்டது. வந்தே மாதரம் மற்றும் 'ஆனந்தமட்' படிக்கும் ஆர்வம் அவர்களிடையே எழுந்தது.

வங்காளத்தின் கைவினை கலைஞர்கள் ஒரு சிறப்பு வேட்டியை நெய்யத் தொடங்கினர், அதன் விளிம்பில் குதிராம் என்று எழுதப்பட்டது. பீதாம்பர் தாஸ் அவரது நினைவாக ஒரு பாடலை எழுதினார். அது இன்றும் வங்காளத்தின் ஒவ்வொரு வீட்டிலும் பாடப்படுகிறது. இந்தப் பாடல் 'ஏக் பார் பிதாய் தே மா கூரே ஆஷி' (ஒருமுறை விடை கொடு அம்மா, நான் சுற்றித் திரிந்து மீண்டும் வருவேன்).

இந்த பாடலின் கடைசி வரிகளின் பொருள் இவ்வாறு வரும்...

’ஓ அம்மா, இன்று முதல் 10 மாதங்கள் மற்றும் 10 நாட்களுக்குப் பிறகு, நான் மீண்டும் சித்தி வீட்டில் மீண்டும் பிறந்துவருவேன். என்னை அடையாளம் தெரியவில்லை என்றால் என் கழுத்தில் தூக்குக்கயிறு அடையாளத்தை பாருங்கள்.’

காணொளிக் குறிப்பு, உலகின் ஐந்து மர்மமான புனித இடங்கள் - அவற்றைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: