ஔரங்கசீப் தன் மகனுக்கு இந்தி கற்பிக்க உருவாக்கிய அகராதி

ஔரங்கசீப்

பட மூலாதாரம், INDIA IMAGES

படக்குறிப்பு, ஔரங்கசீப்பின் குணநலன் மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்துவருகிறது.
    • எழுதியவர், பைசல் முகமது அலி
    • பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி

இந்துக்களை வெறுத்த ஒரு கடுமையான இஸ்லாமிய ஆட்சியாளராக ஔரங்கசீப் பார்க்கப்படுகிறார். ஆனால் ஔரங்கசீப், வரலாற்றின் மிகவும் சிக்கலான ஒரு பாத்திரம். அவருடைய வாழ்க்கையில் மக்களை ஆச்சரியப்படுத்தக்கூடிய பல விஷயங்கள் அடங்கியுள்ளன.

ஔரங்கசீப்பின் சகோதரர் தாரா ஷிகோ, வேதங்களையும் உபநிடதங்களையும் பாரசீக மொழியில் மொழிபெயர்த்த இளவரசராக புகழ் பெற்றவர். 1659 இல் நிகழ்ந்த அதிகாரப் போரில் ஔரங்கசீப் அவரை கொடூரமாகக் கொன்றார்.

இருப்பினும், ஔரங்கசீப் தனது மகனின் கல்விக்காக இந்தி-பாரசீக சொல் அகராதியைத் தயாரிக்கும் பணியைச்செய்தார். அது அவரது ஆளுமையில் பெரிதாக அறியப்படாத அம்சத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

வரலாற்றாசிரியர் ஓம் பிரகாஷ் பிரசாத்தின் 'ஒளரங்கசீப், ஏக் நயீ த்ரிஷ்டி' என்ற புத்தகம், 'தோஃபத்துல்-ஹிந்த்' என்ற இந்த ஹிந்துஸ்தானி அகராதி, பாரசீக மொழி தெரிந்த ஒருவர் இந்தி கற்றுக்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறது.

ஔரங்கசீப்பின் மூன்றாவது மகன் ஆசம் ஷாவுக்கு உள்ளூர் மொழியான இந்தியை கற்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட அகராதியின் பிரதிகள் பல நூலகங்களில் உள்ளன. அவற்றில் ஒன்று பாட்னாவின் புகழ்பெற்ற குதாபக்ஷ் கான் ஓரியண்டல் நூலகம் ஆகும். இது சமீபத்தில் பொதுமக்களுக்காக இந்த அகராதியை அச்சிட்டது.

பொதுமக்களுக்காக அச்சிடப்பட்ட அகராதி
படக்குறிப்பு, பொதுமக்களுக்காக அச்சிடப்பட்ட அகராதி.

வாரிசின் படுகொலை

ஆசம் ஷாவின் முழுப் பெயர் அபுல் ஃபைஸ் குத்புதீன் முகமது ஆசம். 1707 இல் ஔரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு ஆசம் ஷா மூன்று மாதங்களுக்கு அரியணையில் அமர்ந்தார். ஆனால் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ஷா ஆலம் ஒரு போரில் ஆசம் ஷாவைக் கொன்றுவிட்டார்.

ஔரங்கசீப் உயிருடன் இருக்கும்போதே ஆசம் ஷாவை தனது வாரிசாக அறிவித்தார். தந்தையின் மரணத்திற்குப் பிறகு,1707 மார்ச் 14 ஆம் தேதி அவர் அரியணையில் அமர்ந்தார். ஆனால் 1707 ஜூன் 12 ஆம் தேதி ஆக்ராவுக்கு அருகிலுள்ள ஜஜாவ் என்ற இடத்தில் நடந்த போரில் அவர் தோற்கடிக்கப்பட்டார்.

ஆசம் ஷாவின் கல்லறை மகாராஷ்டிராவின் குல்தாபாத்தில் உள்ளது.

குல்தாபாத்தில் உள்ள ஆசம் ஷாவின் கல்லறை

பட மூலாதாரம், SHRIKANT BANGALE/BBC

படக்குறிப்பு, குல்தாபாத்தில் உள்ள ஆசம் ஷாவின் கல்லறை

அகராதியின் சிறப்பு

ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் மிர்சா கான் பின் ஃபக்ருதீன் முகமது இந்த அகராதியை 1674 இல் தயாரித்தார். "இந்தி மற்றும் பிரஜ்பாஷா வார்த்தைகளைக் கொண்ட இந்த அகராதியில், ஒவ்வொரு வார்த்தைக்குப்பிறகும் அதன் உச்சரிப்பு மற்றும் அந்த வார்த்தையின் அர்த்தம் பாரசீக மொழியில் விளக்கப்பட்டுள்ளது,”என்று குதா பக்ஷ் கான் நூலகத்தின் இயக்குனர் ஷயிஸ்தா பேதர் கூறினார். எடுத்துக்காட்டாக, 'சம்பா' என்ற சொல்லுக்கு அருகே, அதை உச்சரிக்கும்போது எந்தெந்த எழுத்துக்களை வலியுறுத்த வேண்டும் என்று பாரசீக மொழியில் கூறப்பட்டுள்ளது. அதன் பொருள் இவ்வாறு விளக்கப்படுகிறது. "சிறிது வெண்மையுடன் கூடிய மஞ்சள் நிற மலர். இது இந்தியக் கவிஞர்களால் காதலியின் அழகை விவரிக்க பயன்படுகிறது. காதலி அதன் மொட்டுடன் ஒப்பிடப்படுகிறாள்."

'சிந்தா' என்ற சொல்லின் உச்சரிப்புக்குப் பிறகு, இந்தியில் இதன் பொருள் ‘கவலை அல்லது பயம்’ என்று பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ளது. அதேபோல், ’ரத்’ என்பதற்கு நான்கு சக்கரங்கள் கொண்ட வாகனம் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. முகலாயர் காலத்தில், அரசவை மொழியாக பாரசீகம் இருந்தது. பாரசீக மொழியின் பல சொற்கள் இப்போது இந்தி மொழியில் அதாவது ஹிந்துஸ்தானியிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தி அகராதி இளவரசரின் கல்விக்காக உருவாக்கப்பட்ட கலைக்களஞ்சியத்தின் (விஷ்வ கோஷ்) ஒரு பகுதியாகும். விஸ்வ கோஷின் மற்ற பகுதிகளில், இந்திய மருத்துவம், இசை, ஜோதிடம் மற்றும் பிற துறைகள் தொடர்பான தகவல்கள் கிடைக்கின்றன. 'அகராதியை வெளியிட்டதன் நோக்கம் மத மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதாகும்' என்று ஷாயிஸ்தா பேதர் கருதுகிறார். " இந்தியில் பயன்படுத்தப்படும் உருது-பாரசீகம் மற்றும் உருதுவில் இருக்கும் சமஸ்கிருதம்-இந்தி சொற்களின் பட்டியலை குதா பக்ஷ் கான் நூலகம் தயாரித்து வருகிறது. இதனால் மொழியின் வளர்ச்சியில் பரஸ்பர பங்களிப்பை நன்கு புரிந்துகொள்வதில் உதவி கிடைக்கும்." என்று அவர் குறிப்பிட்டார்.

ஔரங்கசீப்

பட மூலாதாரம், PENGUIN INDIA

முகலாய பேரரசர்களின் இந்தி கவிதை

ஹிந்தி எழுத்தாளர், விமர்சகர் மற்றும் டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான மைனேஜர்பாண்டே, 'முகலாயப் பேரரசர்களின் இந்தி கவிதை' என்ற புத்தகத்தில், ஆசம் ஷாவின் கவிதையை குறிப்பிட்டுள்ளார். அதில் வறுமையை ஒழிக்க, இந்து தெய்வங்களான கௌரி மற்றும் சிவன் வழிபாடு செய்யப்படுகிறது.

மொழியறிவு உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய கவிதையை இயற்ற முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

மைனேஜர் பாண்டே ’முகலாயப் பேரரசர்களின் இந்தி கவிதை’ புத்தகத்தில், அக்பர் முதல் பகதூர் ஷா வரையிலான அரசர்களின் இந்தி மொழிக் கவிதைகளைத் தொகுத்துள்ளார்.

இந்தப் புத்தகத்தைத் தயாரிக்க முக்கியமாக இரண்டு நூல்களின் உதவியை அவர் எடுத்துக்கொண்டுள்ளார். முதலில், கிருஷ்ணதேவ் வியாஸ் தேவ் ரஸ்சாகரின்’ ’சங்கீத்ராக்கல்பத்ரும்' மற்றும் இரண்டாவது, சந்திரபாலி பாண்டேயின் 'முகலாய பேரரசர்களின் இந்தி' என்ற புத்தகம்.

ஐரோப்பிய மருத்துவரும் பயணியுமான பிரான்சுவா பெர்னியர், ஔரங்கசீப்பைப் பற்றிய ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார். 'ஆட்சியாளரான பிறகு, ஔரங்கசீப் ஒரு மத ஆசிரியரிடம், ஒரு ஆட்சியாளருக்கு, மதத்தின் மொழியை விட உள்ளூர் மொழி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' என்று கூறியதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

”அவர் அரபு மற்றும் பாரசீக மொழிகளில் வல்லுனர். அவரது குடும்பத்தில் இந்தி மொழி பயன்படுத்தப்பட்டது. ஔரங்கசீப் பல பிரபலமான இந்தி பழமொழிகளை நினைவில் வைத்து உரையாடலில் பயன்படுத்தினார்,” என்று பல வரலாற்றாசிரியர்கள் ஔரங்கசீப்பை பற்றி எழுதியுள்ளனர்.

கவிதையில் ஆர்வம், மொழி அறிவு ஆகியவை ஔரங்கசீப்பின் வாழ்க்கையின் ஒரு அம்சம். மற்ற

அம்சங்களைப் பற்றிய விவாதங்கள் நடந்துள்ளன, அவை தொடர்ந்து நடக்கும்.

புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் ஆட்ரி ட்ருஷ்கே தனது 'ஒளரங்கசீப் மேன் அண்ட் தி மித்' புத்தகத்தில், 'ஒளரங்கசீப்பின் பாத்திரம் சிக்கலானது'. அதாவது அவரை ஒரு குறிப்பிட்ட இடத்தில் பொருத்துவது கடினம் என்று கூறுகிறார்.

காணொளிக் குறிப்பு, எகிப்து மன்னர் மம்மியை வைத்து 100 ஆண்டுகளாகத் தொடரும் ஆராய்ச்சி