மகாராஜா ஹரி சிங் வரலாறு: தலித்துகளுக்கு கோவில் கதவுகளை திறந்த ஜம்மு - காஷ்மீரின் கடைசி டோக்ரா மன்னர்

பட மூலாதாரம், Keystone-France/Gamma-Keystone via Getty Images)
- எழுதியவர், அஷோக் குமார் பாண்டே
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
(உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 56ஆவது கட்டுரை இது.)
மகாராஜா ஹரி சிங்கின் பிறந்ததினத்தை விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்ற டோக்ரா அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இறுதியாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
ஹரி சிங் ஒரு 'சிறந்த கல்வியாளர், முற்போக்கு சிந்தனையாளர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் லட்சியவாதி' என்று மனோஜ் சின்ஹா வர்ணித்துள்ளார். ஹரி சிங் மற்றும் டோக்ரா ஆட்சி குறித்து ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி மக்களின் கருத்துகள் மாறுபட்டவையாக உள்ளன. ஜம்மு மக்களுக்கு தங்களின் இழந்த புகழ் மற்றும் பெருமையின் அடையாளமாக டோக்ரா வம்சத்தின் கடைசி ஆட்சியாளர்கள் இருக்கும் அதே நேரம், பள்ளத்தாக்கில் உள்ள பலர் டோக்ரா ஆட்சியாளர்களை அடக்குமுறையின் அடையாளமாகப் பார்க்கிறார்கள்.
1846-ல் சோப்ரானில் நடந்த ஆங்கிலேயர்களுக்கும் சீக்கியர்களுக்கும் இடையிலான போரில், பஞ்சாப் ராணி குலாப் சிங்கை தளபதியாக நியமித்தார். ஆனால் அவர் போரில் இருந்து விலகி ஆங்கிலேயர்களுக்கு உதவினார். அதன் பிறகு குலாப் சிங் 'அமிர்தசரஸ் ஒப்பந்தத்தின் கீழ்' 75 லட்சம் நானக் ஷாஹி ரூபாயை வழங்கி, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மீது ஆட்சி செலுத்தும் முழு உரிமையை பெற்றார். ஜம்மு பள்ளத்தாக்கு பகுதியில் இந்த ஒப்பந்தம் 'அமிர்தசரஸ் பைனாமா( விற்பனை பத்திரம்)' என்று குறிப்பிடப்படுகிறது.
அதற்கு முந்தைய காலகட்டத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் செல்வாக்கு அதிகமாக இருந்தது. ஜம்முவின் மன்னர்கள் பள்ளத்தாக்கின் மன்னர்களுக்கு அடிபணிந்தனர் அல்லது அவர்களுக்கு கப்பம் கட்டி வந்தனர். குலாப் சிங், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கின் மகராஜாவாக ஆனபிறகு, இது தலை கீழாக மாறியது. ஆட்சிக்கு வந்த பிறகு குலாப் சிங்கின் கொள்கைகள் இந்த மேலாதிக்கத்தை நிலைநிறுத்திய விதமானது, பள்ளத்தாக்கு முஸ்லிம்கள் மத்தியில் ஒரு பாகுபாட்டு உணர்வை ஏற்படுத்தியது.


ஹரி சிங்கின் பரம்பரை
ஹரி சிங் ஜம்மு காஷ்மீரின் ஆட்சியாளராக எப்படி ஆனார் என்ற கதை மிகவும் சுவாரசியமானது. ஆனால் முதலில் ஹரி சிங்கின் பரம்பரை என்ன என்று பார்ப்போம்.

பட மூலாதாரம், Keystone-France/Gamma-Keystone via Getty Images
1925ல் ஹரி சிங் அரியணை ஏறியபோது, ஆரம்பம் சிறப்பாக இருந்தது. அவரது முடிசூட்டலுக்குப் பிறகு அவர் வெளியிட்ட அறிவிப்புகள் புரட்சிகரமானவை என்றே சொல்லலாம்.
"மகாராஜா ஹரி சிங் தனது முதல் உரையில், , நான் ஓர் இந்து. ஆனால் என் மக்களின் ஆட்சியாளராக, எனக்கு ஒரே ஒரு மதம் மட்டுமே உள்ளது. அதுதான் நீதி என்று கூறினார். ஈகை பெருநாள் கொண்டாட்டங்களிலும் அவர் கலந்து கொண்டார். 1928இல் ஸ்ரீநகர் வெள்ளத்தில் மூழ்கியபோது அவர் நகரத்தை சுற்றிப் பார்க்கச்சென்றார்," என்று 'The Tragedy Of Kashmir' என்ற புத்தகத்தில் வரலாற்றாசிரியர் எச்.எல். சக்சேனா குறிப்பிட்டுள்ளார்.
"முகத் துதி செய்வோரை ஹரி சிங் வெறுத்தார். எனவே ஒவ்வோர் ஆண்டும் அவர்களை இழிவுபடுத்தும்விதமாக மிகச்சிறந்த முகத் துதி செய்பவருக்கு , அரசவையின் மூடிய கதவுகளுக்குள் 'விருது' வழங்கப்பட்டது," என்று 'காஷ்மீரி ஃபைட்ஸ் ஃபார் ஃப்ரீடம்' என்ற தனது புத்தகத்தில் எம்.ஒய்.சராஃப், ஜம்மு காஷ்மீர் அரசில் அமைச்சராக இருந்த ஜார்ஜ் எட்வர்ட் வேக்ஃபீல்ட் என்பவரை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இதுமட்டுமின்றி தனது முடிசூட்டு விழாவில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள் உண்மையில் நவீனமயமாக்கலை நோக்கிய படிகள். உதாரணமாக, ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தலா 50 பள்ளிகளையும், கில்கிட் மற்றும் லடாக்கில் தலா 10 பள்ளிகளையும் திறப்பதாக அறிவித்தார். அவற்றின் கட்டுமானத்திற்காக வனத் துறையிலிருந்து இலவசமாக மரங்கள் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
ஜம்மு மற்றும் பள்ளத்தாக்கில் தலா மூன்று நடமாடும் மருத்துவமனைகளைத் திறப்பது, தொழில்நுட்பக் கல்வியை விரிவுபடுத்துவது, ஸ்ரீநகரில் மருத்துவமனையைத் திறப்பது, குடிநீர் ஏற்பாடு செய்தல் ஆகியவை அவரது பல பெரிய நடவடிக்கைகளில் அடங்கும். ஆண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆகவும், சிறுமிகளுக்கு 14 ஆகவும் உயர்த்தினார். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவும் ஏற்பாடு செய்தார்.


விவசாயிகளின் நிலையை மேம்படுத்த, 'விவசாய நிவாரணச் சட்டம்' இயற்றினார். இது விவசாயிகளை கந்து வட்டிக்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்க உதவியது. கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த ஜம்மு காஷ்மீரில், கட்டாயக் கல்விக்கான விதிகளை உருவாக்கினார். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டது. அதனால்தான் இந்த பள்ளிகளை மக்கள் 'ஜபரி பள்ளி' (கட்டாயப் பள்ளி) என்று அழைக்கத் தொடங்கினர்.
1932 அக்டோபரில் அவர் மிகவும் புரட்சிகரமான ஓர் அறிவிப்பை வெளியிட்டார். மாநிலத்தில் உள்ள எல்லா கோவில்களிலும் தலித்துகளும் செல்லலாம் என்று அவர் அறிவித்தார். மகாத்மா காந்தியின் தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்திற்கு முன்பே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது . இது நாட்டிலேயே இந்த திசையில் முதல் முயற்சியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கோலாப்பூரின் ஷாஹுஜி மஹாராஜைத் தவிர, அந்தக் காலத்தில் இந்த வழியில் சிந்தித்தவர்கள் வேறு யாரும் இல்லை. ரகுநாத் கோவிலின் தலைமை அர்ச்சகர் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்த அளவிற்கு இது புரட்சிகரமான முடிவாக இருந்தது.
35-A பிரிவை நோக்கிய பயணம்
காஷ்மீர் மாநிலத்தின் வேலை வாய்ப்புகள் மற்றும் நிலம் வாங்கல், மாநில குடிமக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை இருந்தது. பிரிட்டிஷ் ரெசிடென்ட் நியமிக்கப்பட்ட பிறகு மாநிலத்தில் பெரும் எண்ணிக்கையில் வெளி அதிகாரிகள் வர ஆரம்பித்தனர்.1889ஆம் ஆண்டில் பாரசீக மொழிக்கு பதிலாக உருது, ஆட்சி மொழியாக மாற்றப்பட்டது. மேலும் அரசுப் பணிகளுக்கான நியமனங்கள் போட்டித் தேர்வுகள் மூலம் செய்யப்பட்டன.
பதிமூன்று-பதிநான்காம் நூற்றாண்டிலிருந்தே பாரசீக மொழி காஷ்மீரி பண்டிட்டுகளின் மொழியாக இருந்தது. எனவே இந்த முடிவு காஷ்மீரி பண்டிட்டுகள் மற்றும் முஸ்லிம்களின் வேலை வாய்ப்புகளை அழித்தது. அதே நேரத்தில் உருது ஏற்கனவே அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த பஞ்சாபைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளைத் திறந்தது.
1925 இல் ஹரி சிங் அரசராகும் வரை இந்த செயல்முறை தொடர்ந்தது. "காஷ்மீரை காஷ்மீரிகள் அல்லது ஆங்கிலேயர்களுக்காக ஒதுக்காமல், பஞ்சாபியர்கள் மற்றும் பிற இந்தியர்களுக்காக ஒதுக்கவேண்டும் என்று மாநில ஊழியர்களிடையே ஒரு எண்ணம் உள்ளது," என்று 1909ஆம் ஆண்டில், காஷ்மீரில் வசித்த சர் பிரான்சிஸ் யங்ஹுஸ்பெண்ட் எழுதினார்.
இந்த சூழ்நிலையால், 'காஷ்மீரிகளுக்கு காஷ்மீர்' என்ற கோரிக்கை அங்கு எழுந்தது. காஷ்மீரி பண்டிட்டுகள் படித்தவர்கள் மற்றும் வேலைக்கு தகுதியானவர்கள் என்பதால், அவர்கள் முதலில் இந்தக் கோரிக்கையை எழுப்பினர். கஷ்மீர் குடிமகனாக இருக்க ஒரு 'அனுமதியை' கட்டாயமாக்கும் விதிமுறை 1912இல் அறிமுகமானது. ஆனால் அது பெரிய விளைவை ஏற்படுத்தவில்லை.

பட மூலாதாரம், Horace Abrahams/Keystone/Getty Images
மகாராஜா ஹரி சிங் இந்த பிரச்னையில் தனது கவனத்தை திருப்பினார். அவரது ஆட்சியின் போது ஒரு வலுவான "மாநில வாரிசு சட்டம்" 1927 ஜனவரி 31ஆம் தேதி இயற்றப்பட்டது. இதன் கீழ் மகாராஜா குலாப் சிங் அரசராவதற்கு முன்பில் இருந்து மாநிலத்தில் வாழ்ந்த மக்கள் மாநிலத்தின் குடிமக்களாக அறிவிக்கப்பட்டனர். வெளியாட்கள் காஷ்மீரில் நிலம் (விவசாயம் அல்லது விவசாயம் அல்லாதது) வாங்குவது தடைசெய்யப்பட்டது. வேலை வாய்ப்புகள், உதவித் தொகைகள் மற்றும் சில சமயங்களில் அரசு ஒப்பந்தங்கள் பெறுவதும் கட்டுப்படுத்தப்பட்டது.
இதற்குப் பிறகு காஷ்மீரில் வெளியாட்கள் வேலை பெறுவது அல்லது சொத்து வாங்குவது திறம்பட நிறுத்தப்பட்டது. பின்னர் இந்த சட்டம் பிரிவு 35-A இன் அடிப்படையாக மாறியது.
"மாநில குடியுரிமைக்கான வரையறை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை இது ஓரளவு பூர்த்தி செய்தாலும், இதன்மூலம் எல்லா பிரச்னைகளையும் தீர்க்க முடியாது என்பதற்கான அறிகுறிகள் இருந்தன," என்று புகழ்பெற்ற காஷ்மீர் வரலாற்றாசிரியர் பிரேம்நாத் பஜாஜ் எழுதுகிறார். மாநில குடியுரிமைச் சட்டத்தை அமல் செய்ததன்மூலம் மகாராஜா ஹரி சிங், வெளியாட்களின் ஊழலுக்கும், உறவுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் போக்கிற்கும் முற்றுப்புள்ளி வைத்தார் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் அவர் சிம்மாசனத்தில் அமர்ந்தவுடன், ஒரு வகையான ராஜபுத்திர ஆதிக்கம் நிலவத்தொடங்கியது. ராஜபுத்திரர்கள் அரசின் பல்வேறு துறைகளின் தலைவர்களாக ஆனார்கள். ராணுவம் முழுவதுமாக டோக்ராக்களுக்கு குறிப்பாக ராஜபுத்திரர்களுக்கு ஒதுக்கப்பட்டது. மேலும் அறுபது சதவிகிதத்திற்கும் அதிகமான முக்கிய அரசு பதவிகள் டோக்ராக்களால் ஆக்கிரமிக்கப்பட்டன.
இதோடுகூடவே முஸ்லிம் மாணவர்கள் நன்கு படித்து இந்த வேலைகளில் தங்களுக்கான நியாயமான பங்கைக் கோரத் தொடங்கியபோது பண்டிட்களுக்கு போட்டி எழுந்தது. இந்த வேலைவாய்ப்பு தகராறு பின்னர் காஷ்மீரில் இரு சமூகங்களுக்கு இடையே பதற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக மாறியது. மேலும் 1930களின் வன்முறை மோதல்களுக்குப் பிறகு முஸ்லிம் அரசியலின் ஆரம்பம் காஷ்மீருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
ஷேக் அப்துல்லா இந்த அரசியலில் இருந்துதான் முன்னணிக்கு வந்தார். பின்னர் அவர் காங்கிரஸ் கட்சியின் தாக்கத்தின் கீழ் மதச்சார்பற்ற தேசிய மாநாட்டு கட்சியை நிறுவினார். டோக்ரா-பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து காஷ்மீரின் சுதந்திரத்திற்கான சங்க நாதத்தை எழுப்பினார்.


சிறப்பான தொடக்கத்திற்குப் பிறகு சரிவு
மகாத்மா காந்தி ஓர் இடத்தில் இப்படி எழுதுகிறார்: "ஒவ்வொரு இந்திய அரசனும் தனது ராஜ்ஜியத்தில் ஹிட்லர் தான். எந்த சட்டத்தையும் பொருட்படுத்தாமல் அவன் மக்களைச் சுடலாம். ஹிட்லரிடம் கூட இதைவிட அதிக அதிகாரம் இல்லை. அப்படியானால் ஹரி சிங் தனது காலத்தை விட எப்படி முன்னே இருந்திருக்க முடியும்?"
1930களில் இயக்கம் தீவிரமடைந்தபோது, எந்த ஓர் ஏகாதிபத்திய அரசனும் கடைப்பிடிக்கும் அதே கொள்கைகளை ஹரி சிங்கும் ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக வட்டமேசை மாநாட்டில் இந்த இளம் மகாராஜா பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடுகளில் இந்தியர்களுக்கு சம உரிமை கோரியது மற்றும் அகில இந்திய கூட்டமைப்பில் சேருமாறு மன்னர்களிடம் வேண்டுகோள் விடுத்த விதம், பிரிட்டிஷ் அரசை அதிருப்தி அடைய வைத்தது.
கில்கிட்டின் கட்டுபாடு தொடர்பான மகாராஜாவின் அணுகுமுறை பிரிட்டிஷ் அரசை சிக்கலில் தள்ளியது. இதன் காரணமாக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் அதிருப்தி ஏற்பட்டபோது, மகாராஜாவுக்கு உதவுவதற்கு பதிலாக பிரிட்டிஷ் அரசு தன்னை முஸ்லிம்களின் நலவிரும்பியாக காட்டிக் கொண்டது. இதை சாதகமாக்கிக் கொண்டு அப்போதைய பிரதமர் ஹரிகிருஷ்ண கெளலின் இடத்தில் காஷ்மீர் பிரதமராக பிரிட்டிஷ் அதிகாரி கால்வினை நியமிக்க வைத்தது. கூடவே மாநிலத்தின் உள்துறை, வருவாய், காவல்துறை ஆகிய மூன்று முக்கிய அமைச்சகங்களும் பிரிட்டிஷ் ஐ.சி.எஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
மகாராஜா ஹரி சிங், கில்கிட்டின் கட்டுப்பாட்டை அறுபது வருட குத்தகைக்கு ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தார். ஆனால் கில்கிட் ராணுவத்தின் சம்பளம் மகாராஜாவின் கருவூலத்தில் இருந்தே தொடர்ந்து வழங்கப்பட்டுவந்தது.
இந்த நேரத்தில் ஹரி சிங் காஷ்மீரில் தனது பிரபலத்தை இழந்ததோடு மட்டுமல்லாமல், அவரது நிர்வாகத் திறனுக்கும் சவால் எழுந்தது. 1930களின் மந்தநிலையால் அழிந்த காஷ்மீரி தொழில்களை அவரால் ஒருபோதும் மீண்டும் நிலைநிறுத்த முடியவில்லை. முக்கிய வருமான ஆதாரமான சால்வைத் தொழிலும் நொடிந்துபோனது.
1946-ல் ஷேக் அப்துல்லா வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பின்னணியில் காஷ்மீரைவிட்டு வெளியேறு இயக்கத்தை தொடங்கியபோது, இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. 'அமிர்தசரஸ் ஒப்பந்தத்தை முடித்துவிடு, காஷ்மீரைவிட்டு வெளியேறு' என்ற கோஷத்தை மகாராஜாவால் பொறுத்துக் கொள்ள முடியவிலை.
ஹரி சிங்கிற்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளி பற்றி மேலும் விவாதிப்போம். ஆனால் அதற்கு முன் ஹரி சிங் நேரடியாக அரியணையை அடையவில்லை என்ற சுவாரசியமான விஷயத்தை தெரிந்துகொள்வோம்.

பட மூலாதாரம், Getty Images
முடிசூட்டல் வரையிலான பயணம்
குலாப் சிங் மற்றும் ரன்பீர் சிங்கிற்குப் பிறகு, மகாராஜா பிரதாப் சிங் ஜம்மு காஷ்மீரின் சிம்மாசனத்தில் அமர்ந்தார். ஹரி சிங் உண்மையில் மகாராஜா பிரதாப் சிங்கின் சகோதரரின் மகன். சித்தப்பா அவரை வாரிசாக்க விரும்பவில்லை. ஆனால் ஹரி சிங்கின் சகோதரர் அமர் சிங்கின் மரணத்திற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் ஹரி சிங்கை ஆட்சியாளராக தயார் செய்தனர்.
இப்பணிக்காக ராணுவ அதிகாரி மேஜர் எச்.கே.பார் அவரது பாதுகாவலராக நியமிக்கப்பட்டு ஆங்கில வழியில் கல்வி புகட்டப்பட்டது. அஜ்மீரில் உள்ள மயோ கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற பிறகு, டேராடூனின் 'இம்பீரியல் கேடட் காப்ஸ்'-இல் ராணுவ பயிற்சிக்காக அனுப்பப்பட்டார்.
அவரது பயிற்சி முடிந்தபோது முதலாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. அவர் பிராந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். ராணுவத்திற்கு பயிற்சி அளிப்பது அவரது பொறுப்பு. அவர் பல முனைகளில் சிறப்பாக செயல்பட்டார்.
அரியணை ஏறுவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 1921இல் ஓர் இளம் இளவரசராக அவர் பிரிட்டனுக்குச் சென்றபோது மிரட்டி பணம் பறிப்பவர்களின் வலையில் சிக்கினார். பாலியல் விவகாரத்தில் சிக்கியதால், அவரின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டது. பிரச்னையை மூடிமறைக்க கணிசமான தொகை அரசு கருவூலத்தில் இருந்து கொடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் அவரது தொழில் வாழ்வில் இடையூறு ஏற்படுத்தியது மற்றும் அவர் சிறிது காலம் அரசுப் பணியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார். இருப்பினும் அடுத்த ஆண்டு பிரதாப் சிங்கிற்கு முழு நிர்வாக உரிமை கிடைத்ததும், ஹரி சிங்கிற்கு ஆட்சியில் முக்கிய இடம் வழங்கப்பட்டது.
மகாராஜா பிரதாப் சிங்கின் கீழ் ஒரு சிறந்த நிர்வாகியாக ஹரி சிங் செயல்பட்டார். தன் சாமர்த்தியத்தால் மாநிலத்தில் வர இருந்த பஞ்சத்தைத் தடுத்தார். டோக்ரா வம்சத்தில் நவீன கல்வியைப் பெற்ற முதல்அரசர் ஹரி சிங். அவர் சமயவாதியும் அல்ல, பழமைவாதியும் அல்ல.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு
1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, பாகிஸ்தானும் ஜம்மு காஷ்மீரும் அதனுடன் சுதந்திரமடைந்தன. இப்போது ஹரி சிங் இந்தியா மற்றும் பாகிஸ்தானை சமாளிக்க வேண்டியிருந்தது, ஆங்கிலேயர்களை அல்ல. அதற்காக அவர் ஒரு வழியை கண்டுபிடித்தார். அதுதான் 'ஸ்டாண்ட் ஸ்டில்' ஒப்பந்தம் . அதாவது உள்ளது உள்ளபடியே இருக்கும் ஒப்பந்தம்.
முகமது அலி ஜின்னாவைப் பொருத்தவரை, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீர், பாகிஸ்தானுடன் இணைவது என்பது ஒரு கௌரவப் பிரச்னையாக இருந்தது. 'ஸ்டாண்ட் ஸ்டில்' ஒப்பந்தத்தை சாதகமாகப் பயன்படுத்தி முதலில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன. பின்னர் பழங்குடியினர் என்ற போர்வையில் பாகிஸ்தான் ராணுவம் அனுப்பப்பட்டது. காஷ்மீரைக் கைப்பற்றுவதே இந்த நடவடிக்கையின் நோக்கம்.
ராணுவப் பயிற்சி பெற்ற மகாராஜா போரிலிருந்து பின்வாங்கவில்லை. ஆனால் காஷ்மீரின் வலு குறைவான ராணுவம் பாகிஸ்தானுடன் போட்டியிட முடியாது என்பதை அவர் விரைவில் புரிந்து கொண்டார். இப்போது அவரிடம் இரண்டு வழிகள் மட்டுமே இருந்தன. இந்தியாவின் உதவியை நாடுவது அல்லது பாகிஸ்தானிடம் சரணடைவது.

பட மூலாதாரம், Getty Images
தன்னுடன் இணையாதவரை உதவிகளை அனுப்ப இந்தியா தயாராக இல்லை. எனவே சுதந்திரம் அடைந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 1947 அக்டோபர் 26 அன்று, மகாராஜா ஹரி சிங் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அத்துடன் சுதந்திர டோக்ரிஸ்தான் என்ற அவரது கனவு முடிவுக்கு வந்தது.
காஷ்மீரில் டோக்ரா வம்சத்தின் கடைசி ஆட்சியாளரின் கடைசி நாள் இது. அவர் அக்டோபர் 26 ஆம் தேதி ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு சென்றார். வைரங்கள், நகைகள், ஓவியங்கள், கம்பளங்கள் என விலைமதிப்பற்ற பொருட்கள் அனைத்தையும் 48 ராணுவ டிரக்குகளில் எடுத்துச்சென்றார்.
இதுமட்டுமின்றி பழங்குடியினரின் தாக்குதலை எதிர்கொள்ள வாகனங்கள் தொடர்ந்து தேவைப்பட்ட அந்த நேரத்தில், காஷ்மீரின் பெட்ரோல் கோட்டா அனைத்தையும் அவர் தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டார்.
இப்படியாக 1846ல் குலாப் சிங் ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்கு இடம் பெயர்ந்ததுடன் ஆரம்பித்த டோக்ரா வம்சத்தின் பயணம், இந்தத் திரும்புதலுடன் இறுதி கட்டத்தை எட்டியது. தான் ஆட்சியாளராக இனி ஸ்ரீநகருக்கு திரும்ப முடியாது என்பதை அவர் உணர்ந்திருக்கலாம். எனவே அவர் தனது குடும்பம், உறவினர்கள், செல்வம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை தன்னுடன் எடுத்துச் சென்றார்.
அதன்பிறகு அவர் ஒருபோதும் ஸ்ரீநகருக்குத் திரும்பிச் செல்லவில்லை.1949 ஜூன் 20ஆம் தேதி அதிகாரத்தில் இருந்து முறையாக வெளியேற்றப்பட்டபோது அவர் பம்பாய் சென்றுவிட்டார். அங்கு அவருக்கு பல நண்பர்கள் இருந்தனர். கூடவே அவருக்கு விருப்பமான குதிரை பந்தய மைதானமும் இருந்தது.
டோக்ரா ஆட்சியின் முடிவு மற்றும் ஷேக் அப்துல்லா தலைமையிலான புதிய அமைப்புடன், மாநில அரசியலின் மீது பள்ளத்தாக்கின் மேலாதிக்கம் மீட்டெடுக்கப்பட்டது. டோக்ரா சமூகத்திற்கு தனது ஆதிக்கத்தின் முடிவு போல இது இருந்தது. நிலச் சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் நிலங்களின் அதிகாரத்தை இழந்தபிறகு, ஷேக் அப்துல்லாவுடனான பகைமையும், டோக்ரா ஆட்சியின் சிறந்த நாட்கள் பற்றிய நினைவுகளுமே இந்த சமூகத்திற்கு எஞ்சியிருந்தது.
ஹரி சிங்கின் பிறந்ததினத்தன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையானது, புதிய எல்லை மறுவரையறுப்பு மற்றும் 370வது சட்டப்பிரிவு நீக்கம் ஆகியவை மீண்டும் அளித்துள்ள நம்பிக்கை உணர்வின் வெளிப்பாடாகும். ஜம்மு மற்றும் பள்ளத்தாக்கு இடையேயான இந்த மோதலை பாரதிய ஜனதா கட்சியும், ஜனசங்கமும் எப்போதும் பயன்படுத்தி வருகின்றன. இந்த நடவடிக்கையின் மூலம் ஜம்முவில் தங்கள் பிடியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று அவை நம்புகின்றன.
தனது சுயசரிதையான 'ஹேர் அப்ரண்ட்' இல், கரண் சிங் தனது தந்தை மகாராஜா ஹரி சிங்கைப் பற்றி ஒரு சுவாரசிமான கருத்தைக் கூறுகிறார். இது மகாராஜா எதிர்கொண்ட இக்கட்டான சூழ்நிலைகளைக் காட்டுகிறது.
"அப்போது இந்தியாவில் நான்கு பெரிய சக்திகள் இருந்தன. அவர்களுடனான எனது தந்தையின் உறவு விரோத போக்குடனேயே இருந்தன. ஒருபுறம் ஆங்கிலேயர்கள் இருந்தனர். அவர் (ஹரி சிங்) மிகவும் தேசபக்தியுடன் இருந்தார். எனவே அவர் ஆங்கிலேயர்களுடன் ரகசிய ஒப்பந்தம் எதுவும் செய்துகொள்ளவில்லை. மறுபுறம் காங்கிரஸ் இருந்தது. ஜவஹர்லால் நேரு மற்றும் ஷேக் அப்துல்லாவுக்கு இடையிலான நெருக்கம் என் தந்தையின் பகைக்கு முக்கிய காரணம். மூன்றாவதாக முகமது அலி ஜின்னா தலைமையிலான இந்திய முஸ்லிம் லீக் இருந்தது. லீக்கின் வலுவான முஸ்லிம் வகுப்புவாத நிலைப்பாட்டை பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு இந்துவாக என் தந்தை இருந்தார். இறுதியாக ஷேக் அப்துல்லா தலைமையிலான 'தேசிய மாநாடு' கட்சி இருந்தது. என் தந்தை பல தசாப்தங்களாக அவருடன் விரோத உறவைக் கொண்டிருந்தார். தனது அதிகாரம் மற்றும் டோக்ரா ஆட்சியின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக என் தந்தை அவரை கருதினார். முக்கியமான நேரம் வந்தபோது எல்லா செல்வாக்குமிக்க சக்திகளும் அவருக்கு எதிராக இருந்தன," என்று கரண் சிங் எழுதியுள்ளார்.
முற்போக்கு சிந்தனை கொண்ட மகாராஜா ஹரி சிங் வரலாற்றின் ஏடுகளில் பின்னுக்கு தள்ளப்பட்ட வரலாற்றுச் சூழல்கள் இவை. ஹரி சிங்,1961 ஏப்ரல் 26ஆம் தேதி பம்பாயில் கிட்டத்தட்ட அனாமதேயமாக காலமானார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












