அம்பேத்கர் பூமியில் அவரது பெயர் தொடர்பாக நடந்த பயங்கர சாதி கலவரம்: 44 ஆண்டுக்கு முந்தைய சமூக-அரசியல் வரலாறு

அம்பேத்கர்

பட மூலாதாரம், Other

படக்குறிப்பு, தனது கல்வி நிறுவன மாணவர்களின் அரசியல் அறிவைப் பக்குவப்படுத்தும் வகையில், மும்பையில் உள்ள சித்தார்த் மகாவித்யாலயாவின் மாணவர் நாடாளுமன்றத்தில் 1950 ஜூன் 11 ஆம் தேதி இந்து சட்ட மசோதாவை ஆதரித்து உரை நிகழ்த்தும் அம்பேத்கர்
    • எழுதியவர், மயூரேஷ் கொன்னூர்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஆந்திர மாநிலம் அமலாபுரம் நகரில் கடந்த வாரம் பயங்கர கலவரம் நடந்தது. அமைச்சர் ஒருவரின் வீடு எரிக்கப்பட்டது. ஐந்து பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன, கல் வீச்சும் நடந்தது.

வன்முறை போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த, போலீசார் பலப்பிரயோகம் செய்ய வேண்டியிருந்தது . கூடவே அப்பகுதியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் பெயரை தங்கள் மாவட்டத்திற்குச் சூட்டுவதை போராட்டக்காரர்கள் விரும்பாததே, இந்தக் கலவரங்களுக் காரணம். டாக்டர் அம்பேத்கர், இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு நீதி கிடைக்க ஒரு நீண்ட போராட்டத்தை நடத்தினார். இதன் விளைவாக பிற்படுத்தப்பட்ட சாதி மக்களுக்கு சமத்துவம் என்ற அரசியலமைப்பு உரிமை கிடைத்தது.

ஒய்.எஸ்.ஆர் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசு, கோனாசீமா மாவட்டத்திற்கு பி.ஆர்.அம்பேத்கரின் பெயரை சூட்ட முடிவு செய்தது. அரசின் இந்த முடிவுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த வன்முறை சம்பவங்கள் அண்டை மாநிலமான மகாராஷ்டிராவில் 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பெயர் மாற்ற சர்ச்சையை நினைவூட்டியுள்ளது. இதன்போது, மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதியில் கடும் கலவரம் ஏற்பட்டது. அப்போதும் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் பெயர் சர்ச்சையின் மையத்தில் இருந்தது. அப்போது மகாராஷ்டிர அரசு பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற முயற்சித்தது.

மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கு டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் பெயரை சூட்ட முடிவு செய்த பிறகு நடந்த கலவரங்கள் மகாராஷ்டிராவின் சமூக வரலாற்றில் ஒரு ஆறாத வடுவாக உள்ளது. பி.ஆர்.அம்பேத்கர் இந்தப் பல்கலைக்கழகத்தில் படித்து, பட்டம் பெற்றார். அரசியல் வாழ்க்கையை மேற்கொண்டார், சமூக இயக்கங்களைத் தொடங்கினார். இதுவே அவரது கடைசி உறைவிடமாக மாறியது.

1978இல் எடுக்கப்பட்ட இந்த முடிவை நடைமுறைப்படுத்த மேலும் 16 ஆண்டுகள் ஆனது. இறுதியாக 1994 இல் அது அமலானது. பல்கலைக்கழகத்தின் முழுப் பெயரையும் மாற்ற முடியவில்லை. ஆனால் அதில் பி.ஆர்.அம்பேத்கரின் பெயர் சேர்க்கப்பட்டு இப்போது 'டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது..

இறுதியில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் இந்தப் பெயரை ஏற்றுக்கொண்டனர். ஆனால் அதற்குப் பின்னால் வன்முறையின் கதையும் பதிவானது. 1978இல், மராத்வாடாவின் உயர்சாதி மக்கள் தலித்துகளைத் தாக்கினர். அதில் பலர் கொல்லப்பட்டனர். பலர் வீடுகளை இழந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பை இழந்தனர்.

அம்பேத்கர்

பட மூலாதாரம், LOKESH GAVATE

படக்குறிப்பு, டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் 1900 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி சதாரா அரசுப் பள்ளியில் சேர்ந்தார். இந்த நாளை மகாராஷ்டிரா அரசு பள்ளி சேர்க்கை நாளாகக் கொண்டாடுகிறது. இன்று இந்தப் பள்ளி பிரதாப் சிங் உயர்நிலைப் பள்ளி என்று அழைக்கப்படுகிறது. அப்போது இப்பள்ளியில் 1 முதல் 4 ஆம் வகுப்பு வரை மட்டுமே இருந்தது. அம்பேத்கர் நான்காம் வகுப்பு வரை இந்தப்பள்ளியில் படித்தார்

1978, ஜுலை 27ஆம் தேதி நடந்தது என்ன?

மராத்வாடா பல்கலைக்கழகத்தின் பெயரை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பல்கலைக்கழகம் என்று மாற்ற மாநில சட்டப்பேரவை ஒருமனதாக முடிவு செய்தபோது இவை அனைத்தும் நடந்தன. 1978 ஜூலை 27ஆம் தேதிஎடுக்கப்பட்ட இந்த முடிவுக்குப் பிறகு மாநிலத்தில் கலவரம் வெடித்தது. மாலையில் பெயர் மாற்றம் பற்றிய செய்தி மக்களை எட்டியவுடன், மராத்வாடாவின் பல பகுதிகளில் வன்முறை தொடங்கியது. நான்டெட் மற்றும் பர்பானி கிராமப் பகுதிகள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டன.

பெயர் மாற்றத்திற்குப் பிறகு இந்த கலவரங்கள் தொடங்கினாலும், அவற்றின் ஆழத்தில் சாதி வேற்றுமை இருந்தது. அந்தப் பகுதியில் உயர் சாதியினர் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்று அழைக்கப்படுபவர்கள் நேருக்கு நேர் மோதினர். கலவரம் சுமார் இரண்டு மாதங்கள் நீடித்தது. இதில் பெருத்தசேதம் ஏற்பட்டது. ஆனால், சிறு சிறு சம்பவங்கள் அடுத்த ஒன்றரை வருடங்கள் தொடர்ந்ததால், அது ஏற்படுத்திய காயங்கள் ஆறுவதற்கு மேலும் பல வருடங்கள் ஆனது.

அந்த காலகட்டத்தை நினைவுகூர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் நிஷிகாந்த் பலேராவ், "சட்டப்பேரவையில் மாலை 4 மணியளவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரவு 7 மணிக்கு மண்டல செய்தியறிக்கை மூலம் இது மக்களுக்கு தெரிய வந்தது. உடனே ஆர்ப்பாட்டம் தொடங்கியது. ஒளரங்காபாத்தில் பெயர் மாற்ற எதிர்ப்புப் போராட்டம் நடத்திய மாணவர்கள்,' டெய்லி மராத்வாடா' செய்தித்தாள் அலுவலகத்திற்கு வெளியே ஆர்பாட்டம் நடத்தினர்," என்று தெரிவித்தார்.

நிஷிகாந்த் பலேராவ் அப்போது அரசியல் சம்பவங்கள் மற்றும் சாதிய ஒடுக்குமுறை குறித்து செய்திகள் எழுதிவந்த ஓர் இளம் பத்திரிகையாளர். இவர் டெய்லி மராத்வாடாவின் ஆசிரியரான அனந்தராவ் பலேராவின் மகன் ஆவார். இந்தப் பத்திரிக்கை அந்தப் பகுதியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நிஷிகாந்தின் தந்தை, பெயர் மாற்றத்தை எதிர்த்தார். ஆனாலும் அரசின் இந்த முடிவுக்கு எதிராக அவர் எதையும் சொல்லவில்லை.

'மராத்வாடா விடுதலைப் போர்' இந்தப் பிராந்தியத்தின் அடையாளத்தை ஆழப்படுத்தியது. இந்த அடையாளம் பல்கலைக்கழகத்தின் பெயரில் பிரதிபலித்தது. ஆனால் சாதி மற்றும் சமூகப் பிளவுகளின் வலுவான அடித்தளம், இந்த எதிர்ப்பை வன்முறையாக மாற்றியது.

மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. அம்பேத்கருக்கு, மராத்வாடா மற்றும் ஒளரங்காபாத்துடன் சிறப்பான உறவு இருந்தது. சமூக மாற்றத்தைக் கொண்டு வர, அம்பேத்கர் முதலில் 1950இல் மும்பையில் உள்ள சித்தார்த் கல்லூரியில்,' மக்கள் கல்விச் சங்கத்தின்' அடித்தளத்தை அமைத்தார். பின்னர் 1952இல் அவர் ஒளரங்காபாத்தில் மிலிந்த் கல்லூரியை நிறுவினார். மராத்வாடா மற்றும் அருகிலுள்ள விதர்பா பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தலித் மாணவர்கள் மிலிந்த் கல்லூரியில் சேர்க்கை பெற்றனர்.

டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர்

பட மூலாதாரம், Getty Images

அந்தக் காலகட்டத்தில் ஒளரங்காபாத் மற்றும் மராத்வாடா, தலித் மாணவர்களின் இயக்கத்தின் பூமியாக மாறியது. மராத்வாடாவின் சமூக, அரசியல் மற்றும் கல்வி உலகில் அம்பேத்கர் இயக்கம் ஒரு வலுவான சக்தியாக மாறியது. மாநிலத்தின் பிற பகுதிகளிலும் ஏறக்குறைய இதே நிலைதான் இருந்தது. மராத்வாடா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இந்தப் பிரிவு மக்களிடம் இருந்து எழத் தொடங்கியது.

சரத் பவார் காங்கிரஸில் இருந்து பிரிந்து 1978இல் முற்போக்கு ஜனநாயக முன்னணி (PDF) அரசை அமைக்கும் வரை இந்தக் கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முற்போக்கு ஜனநாயக முன்னணி அரசு இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்ற முடிவு செய்து ஜூலை 27 அன்று இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியது.

அரசின் இந்த முடிவு வெளியான சில மணி நேரங்களிலேயே மராத்வாடா பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இப்பகுதி முழுவதும் சாதிக் கலவரங்கள் வெடித்து தலித் குடும்பங்கள் குறிவைக்கப்பட்டன. இதைப் பற்றி சரத் பவார் மராத்தியில் எழுதிய 'லோக் மாஜே சங்கீத்' என்ற தனது வாழ்க்கை வரலாற்றில் விரிவாக எழுதியுள்ளார்.

1978 , ஜூலை 27 நிகழ்வுகள் பற்றி, பவார் தனது புத்தகத்தில் இவ்வாறு எழுதினார், "இந்த திட்டத்திற்கு இறுதி ஒப்புதலை வழங்க அமைச்சரவை கூடியபோது, மராத்வாடா பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின. தலித்துகள் மீதான தாக்குதல் தொடங்கியது. அவர்களது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன."

"போச்சிராம் காம்ப்ளே என்ற தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். நாமாந்தர் (பெயர் மாற்ற எதிர்ப்பு) இயக்கத்தின் போதும், அதைத் தொடர்ந்து சில நாட்களிலும் நடந்த இதுபோன்ற சம்பவங்களில் 27 பேர் இறந்தனர். போச்சிராம், மாதங் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் கிராமத்தின் துணைத்தலைவர். சட்டப்பேரவை தீர்மானத்திற்குப் பிறகு தலித் குடும்பங்கள் தீபாவளியைப்போல அதை கொண்டாடத் தொடங்கினர். இதனால் ஆத்திரமடைந்த உயர் சாதியினர் வன்முறையில் ஈடுபட்டு தீயிடலை தொடங்கினர். இதுபோன்ற ஒரு சம்பவத்தில் அந்த கும்பல் போச்சிராமின் கை, கால்களை வெட்டி அவரை உயிருடன் எரித்தது," என்று பவார் எழுதியுள்ளார்.

டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர்

பட மூலாதாரம், EPA

உயிரிழப்புகள் ஏற்பட்டன, வீடுகள் எரிக்கப்பட்டன

பல நாட்கள் வன்முறை தொடர்ந்தது. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் வன்முறையாளர்களை கலைக்க முயன்றனர். தலித்துகள் மீதான வன்கொடுமைகள் மற்றும் அவர்களின் இழப்புகள் பற்றிய ஆவண ஆதாரங்கள் உள்ளன. பல குழுக்கள் அமைக்கப்பட்டு உண்மை கண்டறியும் குழுக்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டன. அங்குள்ள நிலைமை குறித்து அறிக்கை அளிக்க மத்திய அரசும் ஒரு குழுவை அனுப்பியது.

மாணவர்கள், ஆசிரியர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் அமைப்பான ' அத்யாசார் விரோதி மஞ்ச்' (வன்கொடுமைகள் எதிர்ப்பு ) என்ற அமைப்பும் இதே போன்ற அறிக்கையை தயாரித்துள்ளது. இந்த அறிக்கை எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லியின் 1979 மே மாத இதழில் வெளியிடப்பட்டது. மராட்டா பகுதியில் சுற்றுப் பயணத்திற்குப் பிறகு தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, அந்தப் பகுதியின் அடிப்படை உண்மை நிலையை தெளிவாகச் சொல்கிறது.

"கிராமங்களில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் பல வடிவங்களில் நடந்தன. மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஹரிஜனப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர் மற்றும். துன்புறுத்தப்பட்டனர். வீடுகளும் குடிசைகளும் எரிக்கப்பட்டன, பொருட்கள் சூறையாடப்பட்டன. வீடுகளை இழந்த தலித்துகள் கிராமத்திலிருந்து வெளியேற்ற வேண்டிவந்தது. அவர்களின் கிணறுகள் மாசுபடுத்தப்பட்டன, கால்நடைகள் கொல்லப்பட்டன. மேலும் அவர்களுக்கு வேலை கொடுப்பதும் நிறுத்தப்பட்டது. இவை அனைத்தும் 67 நாட்கள் தொடர்ந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமையின் கீழ் கிடைக்கவேண்டிய பாதுகாப்பு கிடைக்கவில்லை," என்று அந்த அறிக்கை கூறுகிறது.

மராத்வாடாவின் 9 ஆயிரம் கிராமங்களில், ஆயிரத்து இருநூறு கிராமங்கள் இந்த வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நான்டெட், பர்பானி மற்றும் பீட் மாவட்டங்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டன. இந்தக் கலவரங்களில் சுமார் ஐயாயிரம் பேர் வீடுகளை இழந்தனர். 2500 தலித் குடும்பங்கள், மன உறுதி உடைந்து மிகவும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டன. இரண்டாயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு காடுகளுக்குள் அல்லது நகரத்தை நோக்கி ஓட வேண்டியிருந்தது. பட்டினி கிடக்கும் சூழல் இருந்தபோதிலும் பீதி காரணமாக தலித் குடும்பங்கள் தங்கள் கிராமங்களுக்குத் திரும்ப முடியவில்லை.

மராத்வாடாவில் நிஜாம் காலத்திலிருந்தே ஜமீந்தார் முறை இருந்தது. தலித்துகள் இந்த அமைப்பில் அடிமட்டத்தில் இருந்தனர். அவர்கள் எழுச்சி பெற்றால், ஒட்டுமொத்த பிராந்தியத்தின் அரசியலும் மாறிவிடும். சிலர் இதை நினைத்து பயப்பட்டனர்," என்று நிஷிகாந்த் பலேராவ் குறிப்பிட்டார்.

டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர்

பட மூலாதாரம், AMOL LANGAR/BBC

வன்முறைக்குக் காரணம் என்ன?

அம்பேத்கர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதால் இந்த வன்முறை ஏற்படவில்லை, தலித் சமூகத்தின் தன்னம்பிக்கையை அது அதிகரித்ததுதான் வன்முறைக்குக் காரணம் என்று அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்தவர்களும், இயக்கங்களில் பங்கேற்றவர்களும், இந்த இருண்ட அத்தியாயத்தைப் படித்தவர்களும் நம்புகிறார்கள்.

அந்த நேரத்தில் மராத்வாடாவின் மக்கள் தொகை சுமார் எண்பது லட்சம். அதில் 16.25 சதவிகிதம் பேர் பட்டியலின சாதியினர்.

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஸ்ரீகாந்த் பராடே, 2018இல் எழுதிய பிபிசி கட்டுரையில், "சுதந்திரத்திற்கு முன்பே பல தலித் குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்காக இடம்பெயர்ந்தன. டாக்டர் அம்பேத்கரின் தலைமை வந்தவுடன், செயல்முறை துரிதப்படுத்தப்பட்டது. நகரங்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.இதனால் பாரம்பரிய கிராமமுறை எப்போதைக்குமாக அழியத்தொடங்கிவிட்டது," என்று குறிப்பிட்டுள்ளார்.

விவசாயப் பொருளாதாரம் சீர்குலைந்தது. ஜமீன்தார்களின் வயல்களுக்கு வேலையாட்கள் கிடைக்கவில்லை. 1956ல் அம்பேத்கருடன் சேர்ந்து பல தலித்துகள் பெளத்த மதத்துக்கு மாறினார்கள். முன்னதாக தங்கள் பாரம்பரிய வேலையை கைவிட்ட தலித்துகள், இப்போது தங்கள் மதத்தையும் கைவிட்டனர். இதுவரை தலை குனிந்திருந்த தலித்துகள் தங்களைத் தாங்களே மதிக்கத் தொடங்கினர். தலித்துகள் தங்கள் அடையாளத்தை மறந்து, திமிர்பிடித்தவர்களாக மாறுவதாக உயர் வகுப்பினர் கருதினர்."

ஆதிக்க சாதியினருக்கும் தலித் மக்களுக்கும் இடையிலான பதற்றம் தெளிவாகத் தெரிந்தது. குறிப்பாக மராத்வாடாவில் இரு தரப்பு மாணவர்களும் கொந்தளித்தனர். அப்பகுதியில் இயல்பு நிலை ஏற்படும் வகையில் பெயர் மாற்றம் செய்யும் முடிவை அரசு நிறுத்த வேண்டியதாயிற்று.

சரத் பவார் தனது வாழ்க்கை வரலாற்றில், "பெயர்மாற்ற முடிவை எதிர்த்து கோபமடைந்த இளைஞர்கள் முன்னிலையில் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான அனைத்து தலைவர்களும் சரணடைந்தனர். ஒவ்வொரு தலித் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்குவது நடைமுறையில் சாத்தியமற்றதாக மாறிவந்தது. பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவதால் மக்களின் உயிர் போவதை நாங்கள் விரும்பவில்லை. இளைஞர்களை சமாதானப்படுத்தவும் அவர்களின் கோபத்தை தணிக்கவும் நாங்கள் தவறிவிட்டோம். இறுதியாக பெயரை மாற்றும் முடிவை நாங்கள் திரும்பப் பெற வேண்டியதாயிற்று," என்று எழுதியுள்ளார்.

சிவசேனாவின் எழுச்சி

பட மூலாதாரம், Getty Images

பெயர்மாற்றத்தின் அரசியல் விளைவுகள் மற்றும் மராத்வாடாவில் சிவசேனையின் எழுச்சி

நாமாந்தர் இயக்கமும், அதைத் தொடர்ந்த சாதி வன்முறையும், மராத்வாடாவின் அரசியல் தன்மையை மாற்றியது. இந்தக் காலகட்டத்தில் உருவான விரிசல் பல தசாப்தங்களுக்குப் பிறகும் காணப்பட்டது. ஆனால் இதனால் ஏற்பட்ட ஒரு முக்கிய விளைவு, சிவசேனை இந்தப் பிராந்தியத்திற்கு வந்து அரசியல் ரீதியாக வலுப்பெற்றதுதான். இப்போது மராத்வாடா சிவசேனையின் கோட்டை என்று அழைக்கப்படும் அளவுக்கு இங்கு சிவசேனை வலுப்பெற்றது.

சிவசேனையும் அதன் தலைவர் பாலாசாஹேப் தாக்கரேவும் பெயர் மாற்றத்தை வெளிப்படையாக எதிர்த்தனர். இது அவரை மராத்வாடாவின் தலித் அல்லாத மக்களிடையே பிரபலமாக்கியது.

மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் அகோல்கர் ஜெய் மகாராஷ்டிரா என்ற தனது புத்தகத்தில், "1978க்குப் பிறகு முதல் ஏழு-எட்டு ஆண்டுகள், பெயர் மாற்றம் பற்றி சிவசேனை கவலைப்படவில்லை. ஆனால் மராத்வாடாவில் சிவசேனை தனது தளத்தை வலுப்படுத்தத் தொடங்கியபோது, இந்துப் பெரும்பான்மையினர் கருத்து தெரிவிக்கத் தொடங்கினர். அப்பகுதியின் பணக்கார மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெரும்பாலான விவசாயிகள் பெரும்பான்மை இந்து வகுப்பைச் சேர்ந்தவர்கள். இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த இளம் மாணவர்கள் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்," என்று எழுதியுள்ளார்.

"1974ல் நடந்த வொர்லி கலவரம், சிவசேனையின் தலித் விரோத நிலைப்பாட்டை ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தது. இதுவே மராத்வாடா விவசாயிகளும் மாணவர்களும் சிவசேனையுடன் தங்களை எளிதில் தொடர்புபடுத்திக் கொள்வதற்குக் காரணம். பல்கலைக்கழக பெயர் மாற்றத்தை எதிர்ப்பதன் மூலம் மராத்வாடாவில் தனது தளத்தை எளிதாக வலுப்படுத்த முடியும் என்று தாக்கரே உணர்ந்தார். இதற்குப் பிறகு அவர் நாமாந்தர் மற்றும் தலித்துகளுக்கு எதிரான தனது எதிர்ப்பை மேலும் தீவிரப்படுத்தினார்."

சிவசேனை இப்பகுதியில் உள்ள பணக்கார விவசாயிகளுக்கு மேலும் பல விவகாரங்களில் ஆதரவளித்ததாக பிரகாஷ் அகோல்கர் தனது புத்தகத்தில் எழுதுகிறார். 1985-86ல் வேலையில்லாத் திண்டாட்டம் தீவிர பிரச்னையாக உருவெடுத்தது. தலித்துகளுக்குச் சொந்தமான தரிசு நிலம் என்ற பிரச்னை எழுந்தபோது, அத்தகைய நிலத்தின் மீதான தாக்குதல்களுக்கு சிவசேனை ஆதரவு அளித்து தலித்துகளின் வயல்களை அழித்தது. அந்தக்காலகட்டத்தில் தலித் வீடுகள் எரிக்கப்பட்ட சம்பவங்களும் அதிகம்.

அம்பேத்கர்

பட மூலாதாரம், http://www.bamu.ac.in/

1985 முதல் இந்துத்துவ கொள்கையும் வலுவடைந்தது. கூடவே தலித் விரோத கொள்கையும், மராத்வாடாவில் சிவசேனையின் எழுச்சிக்கு உதவிகரமாக இருந்தது. சிவசேனைக்கு அரசியல் ரீதியாக இது மிகவும் சாதகமாக இருந்தது. 1995 இல், பாஜகவுடன் இணைந்து சிவசேனை ஆட்சி அமைத்தபோது, 15 சிவசேனை எம்எல்ஏக்கள் மராத்வாடா பகுதியில் இருந்து வெற்றி பெற்றிருந்தனர். தாக்கரே, பெயர் மாற்றப்படுவதற்கு தெரிவித்த தொடர்ச்சியான எதிர்ப்பும் இந்த மாபெரும் வெற்றிக்கு ஒரு காரணம் என்று நம்பப்படுகிறது.

இறுதியாக, 1994-ம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்பட்டபோது, பாலாசாஹேப் தாக்கரே, "உங்கள் வீட்டில் சாப்பிட உணவு இல்லாதபோது, உங்களுக்கு பல்கலைக்கழகத்தின் தேவை என்ன" என்று நான்டெட்டில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

பெயரின் விரிவாக்கம்

அரசியல் சூழ்நிலை காரணமாக பெயர் மாற்றக் கோரிக்கை திரும்பப்பெறப்பட்டாலும், அது கிடப்பில் போடப்படவில்லை.

1992 கலவரத்திற்குப் பிறகு சரத் பவார் மீண்டும் காங்கிரஸுக்கு வந்து மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்ற பிறகு, 1994 இல் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்தது.

இந்த விவகாரத்தில் பவார் மீண்டும் அரசியல் ஒத்துழைப்பை நாடத் தொடங்கினார். மராத்வாடா என்ற வார்த்தையின் மீதான பற்று, பெயர் மாற்ற எதிர்ப்பின் பின்னணியில் இருந்த மற்றும் ஒரு முக்கிய காரணம். அப்போது பெயரை மாற்றுவதற்கு பதிலாக பெயரை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

பின்னர் 'டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் மராத்வாடா பல்கலைக்கழகம் ' என்ற புதிய பெயர் முன்மொழியப்பட்டது. இது இரு வகுப்பினரின் உணர்வையும் மதிப்பதாக இருந்தது. இதனுடன், 'சுவாமி ராமானந்த் தீர்த் மராத்வாடா பல்கலைக்கழகம்' என்ற மற்றொரு பல்கலைக்கழகமும் மராத்வாடாவின் நான்டெட்டில் நிறுவப்பட்டது.

இந்த முடிவுகள் தொடர்பான இறுதி அறிவிப்பு 1994, ஜனவரி 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த முறை அதற்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை.

காணொளிக் குறிப்பு, அம்பேத்கர் படத்தோடு யானை மீது ஊர்வலம் வந்து திருமணம்‌ செய்த பெண்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: