பி.ஆர்.அம்பேத்கர் அரசியலமைப்பைக் கொளுத்துவேன் என்று சொன்னது ஏன்? அந்த நாளில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரசாந்த் முத்துராமன்
- பதவி, பிபிசி தமிழ்
சில அதிதீவிர அரசியல் போக்குகள், நெருக்கடி நிலைகளைத் தாண்டியும் இந்திய அரசமைப்பின் அடிப்படைச் சட்டகம் உறுதியாக நிற்பதாக காலத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது. காலனியாதிக்கத்தில் இருந்து சுதந்திரம் அடைந்த இந்தியாவை குடியரசு இந்தியாவாக வடிவமைத்தது இந்த அரசமைப்புச் சட்டமே. இந்த சட்டத்தின் உறுதிப்பாட்டுக்கான பெருமை பெருமளவில், இந்த அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக இருந்த டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கே வழங்கப்படுகிறது.
அணைகளை உருவாக்கியது முதல் இந்திய ரூபாயின் பிரச்சனைகளை ஆராய்ந்தது வரை அம்பேத்கருக்கு பல முகங்கள் இருந்தாலும், தலித் மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபட்டவர், அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர் என்ற இரண்டு விஷயங்களே அம்பேத்கரின் முதன்மையான அடையாளங்களாக உள்ளன.
தனது முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மாறிப்போன, தனது வாழ்நாள் சாதனைகளில் முதன்மையானவற்றில் ஒன்றாகப் பார்க்கப்படும் அரசமைப்புச் சட்டத்தை கொளுத்த வேண்டும் என்றால், "அதைச் செய்யும் முதல் ஆளாக நானே இருப்பேன்" என்றும் அம்பேத்கர் கூறியுள்ளார் என்பது ஆச்சரியமாக இல்லையா?
அம்பேத்கர் குறித்தும் அரசமைப்புச் சட்டம் குறித்தும் ஒரே நேரத்தில் பேச்சு எழும்போதெல்லாம், பாருங்கள் அம்பேத்கரே இப்படிப் பேசியிருக்கிறார் என்று, சமூக வலைதளங்களிலும், மேடைகளிலும் வெளிப்படும் கருத்துகளை நீங்கள் நிச்சயம் கவனித்திருப்பீர்கள். ஆனால், ஏன் சொன்னார் என்பது பெரிதும் அறியப்படுவதில்லை. அந்த நாளில் நடந்தது என்ன என்பதை சுருக்கமாக, ஆதாரங்களுடன் தெளிவுபடுத்துவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.
1953 செப்டம்பர் 2ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில், புதிதாக ஆந்திர மாநிலம் உருவாக்கும் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போதையை உள்துறை அமைச்சர் கட்ஜு, அவையில் இந்த கோரிக்கை மீது தன் கருத்துகளையும், இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதில் இருக்கும் சவால்களையும் குறித்து பேசிக்கொண்டிருந்தார்.
இந்த வரிசையில், அம்பேத்கரின் வாய்ப்பு வந்தபோது, தன் பார்வையைப் பதிவு செய்தார். அதாவது, மொழிவாரி மாநிலங்களுக்கான முந்தைய முன்மொழிவு குறித்தும், அதே சமயம், ஆந்திர மாநிலத்தில் ரெட்டி சமூகத்தினரின் கையில் மட்டுமே பெருமளவு நிலமும் தொழில்களும் இருப்பதையும் குறிப்பிட்டு அம்பேத்கர் பேசினார்.
அந்தப் பேச்சின் ஊடாக, "நம்மிடையே ஒரு மரபு ஏற்பட்டு விட்டது. மக்கள் எப்போதும் என்னிடம், நீங்கள்தான் இந்திய அரசியலமைப்பை வடிவமைத்தீர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், நான் ஒரு வாடகை குதிரைக் காரனைப்போல நடத்தப்பட்டேன் என்பதுதான் என் பதில். அவர்கள் என்னை என்ன செய்யச் சொன்னார்களோ, அதை என் எண்ணத்துக்கு விரோதமாக செய்தேன்" என்று பதிவு செய்தார்.
"எஜமானர்களுக்கு அப்படி சேவை செய்தீர்கள்?"
அப்படியென்றால் ஏன் உங்களின் எஜமானர்களுக்கு அப்படி சேவை செய்தீர்கள்? என்று ஆந்திர பகுதியைச் சேர்ந்த உறுப்பினர் சுந்தரய்யா கேட்டதும் அவையில் சலசலப்பு எழுந்தது. இதையடுத்து அவைத்தலைவர் அமைதி ஏற்படுத்தினார்.

பட மூலாதாரம், Screengrab
இதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் எம்.எஸ்.ராணாவத், " நீங்கள்தானே இந்த அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்க வேண்டும் என்று முன்பு வாதாடினீர்கள் " என்று கேட்க, ஒரு வழக்கறிஞராக நான் பல இடங்களில் வாதாடியதுண்டு. ஆனால், இபோது நான் பேசுவது மிகவும் முக்கியமான ஒன்று. தயவுசெய்து கவனியுங்கள் என்று பதிலளித்தார் அம்பேத்கர்.
மேலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் சிறுபான்மையினர் நலனுக்காகவும் அரசியலமைப்புச் சட்டத்தில், ஆளுநர்களுக்கு முறையான அதிகாரம் தரவில்லை என்றும் பேசினார். இதற்காக கனடிய அரசியலமைப்பின் பிரிவு 93ஐயும் அங்கிருந்த மொழி-மத வாரி மக்கள்பிரிவையும் சுட்டிக்காட்டிப் பேசி, அதுபோன்ற மாற்றத்தை இந்திய அரசியலமைப்பில் கொண்டுவரவேண்டும் என்று அவையில் கோரிக்கை வைத்தார்.

பட மூலாதாரம், Getty Images
அதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் கட்ஜு, நீங்கள்தான் இந்த அரசியலமைப்பை வடிவமைத்தீர்கள் என்பதுதான் இதற்கு பதில் என்று தெரிவிக்க, "அதற்காக இப்போது என்மீது குற்றம் சாட்டுகிறீர்களா?" என்று பதிலுக்கு கேள்வி எழுப்பினார் அம்பேத்கர்.
பிரிட்டன் அரசமைப்பில் இருந்து....
இந்தக் கேள்வியைத் தொடர்ந்து பேசும்போது " பிரிட்டன் அரசமைப்பிலிருந்து ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அங்கு இரண்டு கமிட்டிகள் இருக்கும். ஒன்று வேல்ஸ் மற்றும் மன்மௌத்ஷைர் கமிட்டி மற்றொன்று ஸ்காட்லாந்து கமிட்டி. ஸ்காட்லாந்து மக்களுக்கு பிரச்னைகள் வரும்போது அவர்கள் அவர்கள் இந்த கமிட்டியின் மூலம் நேரடியாக தங்கள் பிரச்னைகளை இந்த கமிட்டி மூலம் மன்றத்துக்கு கொண்டுவர முடியும். அதுபோலவே, வேல்ஸ் மற்றும் மன்மௌத்ஷைர் கமிட்டியும் செயல்படும். இப்படியாக, பெரும்பான்மை சமூகத்துக்கு பயப்படும் மக்களின் உணர்வுகளை சாந்தப்படுத்தும் விதமாக பிரிட்டன் நாடாளுமன்றம் இயங்குகிறது.
சிறுபான்மையினரின் உணர்வுகளை சாந்தப்படுத்தும் விதமாகவே இந்த அரசியலமைப்பு செயல்படும். என் நண்பர்கள் பலரும் என்னிடம் சொல்கிறார்கள் நான் இந்த அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தேன் என்று.

பட மூலாதாரம், Screengrab
ஆனால், இந்த அரசியலமைப்பைக் கொளுத்தும் முதல் நபராக நான்தான் இருப்பேன் என்று சொல்ல நான் தயாராகவே இருக்கிறேன். எனக்கு இது தேவையில்லை. இந்த அரசியலமைப்பு யாருக்கும் பொருந்தாதது. அதேசமயம், இந்த அரசியலமைப்பைக் கொண்டே தொடர மக்கள் நினைத்தால், இங்கு சிறுபான்மையினரும் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது" என்று பேசினார்.
இரண்டாண்டுகளுக்குப் பிறகு விளக்கம்
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1955ஆம் ஆண்டு இந்த விவகாரம் மீண்டும் மாநிலங்களவையில் எழுப்பப்பட்டது. அப்போது, இதே விவகாரத்துக்கு விளக்கமளித்துள்ளார் அம்பேத்கர். அவர் கூறியதாவது: கடந்த முறை இந்த அவையில் பேசும்போது, அரசியலமைப்பைக் கொளுத்துவேன் என்று பேசியதற்கு, நேரமின்மையால் அப்போது விளக்கம்தர முடியவில்லை. இப்போது அதற்கான வாய்ப்பை என் நண்பர் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இதுதான் விளக்கம்: ஒரு கோயில் கட்டி அதற்குள் தெய்வத்தைக் குடிவைக்கும் முன்பே கெட்ட சக்திகள் குடிகொண்டுவிட்டால், கோயிலை இடிப்பதை விட சிறந்த வழி வேறென்ன? நல்லது நடக்க வேண்டுமென்ற நோக்கத்தில்தான் நாம் கோயில் எழுப்பினோம். இந்த தீயசக்திகளுக்காக அல்ல. அரசியலமைப்பைக் கொளுத்துவேன் என்று பேசியதற்கு இதுதான் காரணம்" என்று பதிலளித்திருந்தார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












