பகத் சிங்குக்கும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கும் என்ன தொடர்பு? சில கேள்விகளும், பதில்களும்

பகத் சிங்
    • எழுதியவர், தலிப் சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

(இன்று பகத்சிங் பிறந்த நாள்)

பகத் சிங்கின் உண்மையான பிறந்த இடம் எது?

லாகூரில் தூக்கிலிடப்பட்ட அவரது இறுதிச்சடங்கு ஹுசைனிவாலாவில் ஏன் நடந்தது?

இறுதியில் பகத்சிங் மதத்தின் பக்கம் சாய்ந்தாரா?

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் மற்றும் அவரது தோழர்கள் தொடர்பான பல கதைகள் உள்ளன.

பகத் சிங்கைப் பற்றி முழுமையாகத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன.

பகத்சிங்கைப் பற்றி ஆராய்ச்சி செய்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் சமன் லாலிடம் இருந்து இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க முயன்றார் பிபிசி செய்தியாளர் தலிப் சிங்.

பேராசிரியர் சமன் லாலுடனான உரையாடலின் முக்கிய அம்சங்களை இங்கே படியுங்கள்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

1. பகத்சிங்கின் சித்தாந்தம் என்ன?

பகத் சிங்கின் சித்தாந்தம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள அவரது எழுத்துகளும், அவர் இணைந்து பணியாற்றிய அமைப்பின் கருத்தியல் என்ன என்ற தகவலும் உதவி செய்யும்.

அவரது 'சிறை நாட்குறிப்பு', 'நான் ஏன் நாத்திகன்?' போன்ற அவரது எழுத்துகள் அவருடையது கருத்தியலைத் தெரிந்துகொள்ள உதவுகின்றன.

பகத்சிங் தாம் இணைந்து பணியாற்றிய அமைப்பின் பெயரை 'இந்துஸ்தான் ரிப்பளிக்கன் அசோசியேஷன்' என்பதில் இருந்து 'இந்துஸ்தான் சோஷியலிஸ்ட் ரிப்பளிக்கன் அசோசியேஷன்' என்று மாற்றினார். இதன் பொருள் அவர் ஒரு சோஷியலிச புரட்சியாளர் என்பதே.

2. பகத்சிங்குக்கும் வெளிர்மஞ்சள் நிறத்திற்கும் ஏதாவது தொடர்பு இருந்ததா?

பகத்சிங்கின் குடும்பம் காங்கிரசுடன் தொடர்புடையது. அவரது குடும்பத்தினர் அனைவருமே வெள்ளை கதர் குர்தா-பைஜாமா மற்றும் வெள்ளை கதர் தலைப்பாகை அணிந்தனர்.

அந்தக் காலப் புரட்சியாளர்களின் முக்கிய ஆடை கதர். பகத்சிங்கும் அதே உடையைத்தான் அணிந்தார்.

பகத் சிங் ஒருபோதும் வெளிர் மஞ்சள் தலைப்பாகை அணிந்ததில்லை என்பதை உறுதியாக சொல்லலாம்.

பகத்சிங்
படக்குறிப்பு, பகத்சிங் வாழ்க்கையின் கடைசி 12 மணி நேரம் இயல்பானதாக இல்லை

அப்போது கருப்பு வெள்ளை கேமராதான் இருந்தது,ஆகவே அவர் மஞ்சள் தலைப்பாகை அணியவில்லை என்று எப்படி உறுதிபடக்கூற முடியும் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள்.

பகத்சிங்கின் கூட்டாளிகளான யஷ்பால், ஷிவ் வர்மா மற்றும் பலரின் நேர்காணல்களை நான் படித்திருக்கிறேன். அவர்களும் பகத்சிங்கின் உடையைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள்.

அவரது நடவடிக்கைகள் தொடர்ந்ததாலும், அவர் தலைமறைவாக இருக்க வேண்டியிருந்ததாலும் பகத்சிங்கின் வெள்ளை உடைகள் அழுக்காகவும், கசங்கியும் இருந்தன.

அவர் ஒரு பாக்கெட்டில் அகராதியும் மற்றொன்றில் புத்தகமும் வைத்திருந்தார்.

3. அவரது பிறந்த இடம் இந்தியாவில் உள்ள கட்கட் கலானா? அல்லது பாகிஸ்தானில் உள்ள சக் பங்காவா?

பகத்சிங்கின் குடும்பத்தின் வரலாறு சுமார் 300 ஆண்டுகள் பழமையானது.

பகத்சிங்கின் சித்தப்பா அஜீத் சிங்கின் சுயசரிதை 'பரீட் அலைவ்' (Buried alive) என்பதாகும்.

'என் வாழ்க்கை முழுவதும் நான் கடவுளை நினைக்கவில்லை'

பட மூலாதாரம், Getty Images

இதில் அவர் தனது முன்னோர்களைப் பற்றி குறிப்பிடுகிறார். அவரது சொந்த கிராமம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள நார்லி.

நானும் நார்லிக்கு சென்றிருக்கிறேன். ஆனால் அங்கு சொத்து அல்லது ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அஜீத் சிங்கின் புத்தகத்தில் அந்த கிராமத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது.

அவரது முன்னோர்கள் சீக்கிய மதத்தை தழுவவில்லை. ஆகவே அந்த காலகட்டத்தில் குடும்பத்தில் ஒருவர் காலமானால் அவரது அஸ்தி ஹரித்வாருக்கு எடுத்துச் செல்லப்பட்டு கங்கையில் கரைக்கப்பட்டது.

அப்போது போக்குவரத்திற்கு வேறு வழி இல்லாததால் மக்கள் நடந்து சென்று வந்தனர்.

அவரது மூதாதையர்களில் ஒருவரான ஒரு இளைஞன், யாரோ ஒருவருடைய அஸ்தியை எடுத்துக்கொண்டு ஹரித்வாருக்குப் புறப்பட்டான். வழியில் இரவுப் பொழுதை கட்கர் கலானில் கழித்தான். அந்த இடத்தின் முந்தைய பெயர் 'கட் கலான்'. கட் என்றால் "கோட்டை" என்று பொருள்.

இளைஞன் கோட்டையின் உரிமையாளரிடம் இரவு தங்க இடம் கேட்டான். அந்த உரிமையாளருக்கு ஒரே ஒரு மகள் இருந்தாள். அவருக்கு அந்த இளைஞனை பிடித்துப்போனது.

காலையில் அவன் விழித்தபோது, நீங்கள் திரும்பும் போதும் எங்கள் விருந்தினராக வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அந்த இளைஞன் திரும்பிவந்தபோது தன் மகளை திருமணம் செய்துகொள்ளும்படியும், தங்களுடனேயே தங்கிவிடும்படியும் கோட்டையின் உரிமையாளர் சொன்னார்.

தன் வீட்டாரிடம் கலந்து பேசிவிட்டுச்சொல்கிறேன் என்று அந்த இளைஞன் கூறினான்.

பகத் சிங்கின் சித்தப்பாஅஜீத் சிங்கின் வாழ்க்கை வரலாற்றில், அந்த இளைஞன் திருமணம் செய்துகொண்டபோது, என்ன 'கட்' கிடைத்தது என்று மக்கள் கேட்டதாக எழுதப்பட்டுள்ளது. கட் என்றால் வரதட்சணை.

பின்னர் அந்த இடத்தின் பெயர் கட்கட் கலான் ஆனது.

பகத் சிங்
படக்குறிப்பு, லாகூர் தேசிய கல்லூரி புகைப்படத்தில் தலைப்பாகை கட்டி நிற்கும் பகத் சிங் (வலப்புறமிருந்து நான்காவதாக நிற்பவர்) (பேராசிரியர் சம்மன் லாலிடமிருந்து பெறப்பட்டது)

கோட்டையின் உரிமையாளர்களின் வரலாறு மகாராஜா ரஞ்சித் சிங்கின் சமகாலத்தவரான ஃபதே சிங் என்பவரிடம் செல்கிறது.

இந்த குடும்பத்தின் நிலம் பிரிட்டிஷ் ஆட்சியால் ஆக்கிரமிக்கப்பட்டது என்று அஜீத் சிங்கின் புத்தகம் கூறுகிறது.

ஆங்கிலேயர்களுடன் ஒத்துழைத்து நிலத்தைத் திரும்பப் பெறுமாறு பஞ்சாபின் மஜிதியா குடும்பத்தின் பெரியவர்கள், ஃபதே சிங்கை அறிவுறுத்தினர்.

இந்த அறிவுரைக்கு பதிலளித்த ஃபதே சிங், பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடிபணிய முடியாது என்று கூறினார்.

அப்போதிலிருந்து பகத்சிங்கின் குடும்பம் தேசபக்தியுடன் தொடர்புடையதாக இருந்தது.

பகத்சிங்கின் தாத்தா அர்ஜன் சிங், ஃபதே சிங்கிற்குப் பிறகு இரண்டாவது மூன்றாவது தலைமுறையில் வருகிறார்.

லயால்பூர் மற்றும் மின்ட்கோமெரியின் புதிய மாவட்டங்கள் 1900 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன.

இந்த மாவட்டங்களில் கால்வாய்கள் அமைக்கப்பட்டு இங்குள்ள நிலம் வளமாக இருந்தது.

இன்றைய இந்தியாவின் மாஜா மற்றும் தோபா பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் விவசாயத்திற்காக அங்கு சென்றனர். பகத்சிங்கின் குடும்பத்துக்கும் நிலம் ஒதுக்கப்பட்டது.

அவரது நிலம் லாயல்பூரில் உள்ள சக் எண். 105 ஆகும். அன்றைய இந்தியாவில் இருந்த பங்கா அவரது பூர்வீக இடமாகும். எனவே இதன் பெயர் சக் பங்கா ஆனது.

பகத் சிங்கின் தந்தை மற்றும் சித்தப்பா இந்திய பஞ்சாபில் பிறந்தவர்கள். பகத் சிங் தற்போதைய பாகிஸ்தானில் உள்ள சக் பங்காவில் பிறந்தார்.

பகத்சிங்கின் மருமகள் வீரேந்திர சிந்து இந்தியில் எழுதிய 'பகத் சிங் மற்றும் அவரது முன்னோர்கள்' என்ற புத்தகம் 1965 இல் வெளியிடப்பட்டது. அந்த புத்தகத்தில் அவரது முழு குடும்பத்தின் வரலாறும் உள்ளது.

மக்களால் பெரிதும் போற்றப்படும் பகத்சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மக்களால் பெரிதும் போற்றப்படும் பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ்

4. பகத்சிங்கின் பிறந்தது செப்டம்பர் 27 ஆம் தேதியா,28 ஆம் தேதியா?

செப்டம்பர் 28ம் தேதிதான் பகத் சிங்கின் பிறந்த நாள்.

பகத் சிங்கின் சகோதரர் குல்தார் சிங்கின் மகள் வீரேந்திர சிந்து, பகத் சிங் செப்டம்பர் 28 ஆம் தேதி காலை 9 மணியளவில் பிறந்ததாக தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

5. லாகூர் சிறையில் பகத்சிங் தூக்கிலிடப்படுவதற்கு முந்தைய சில மணி நேரங்களை எப்படி கழித்தார்?

அதிகாரபூர்வ உத்தரவின்படி மார்ச் 24 அன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.

ஆனால் மார்ச் 23 ஆம் தேதி மாலையே தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஏனெனில் சிறைச்சாலை தாக்கப்படலாம் என்று பிரிட்டிஷ் அரசு பயந்தது.

23ம் தேதி காலை பகத்சிங், பிராண்நாத் மேத்தாவை அழைத்து புத்தகம் கொண்டு வருமாறு கூறினார். அது வி.இ.லெனின் எழுதிய நூல் என கூறப்படுகிறது.

உயிலில் கையொப்பம் பெறவேண்டும் என்ற காரணம் காட்டி பிராண்நாத் மேத்தா, பகத் சிங்கை சந்தித்தார்.

பகத் சிங், பிராண்நாத் மேத்தாவிடமிருந்து புத்தகத்தைப் பெற்றுக்கொண்டு, அதிகம் பேசாமல் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினார்.

மார்ச் 24 ஆம் தேதி தூக்கிலிடப்படுவதற்கு முன்பு புத்தகத்தை படித்து முடித்துவிடலாம் என்று பகத் சிங் நினைத்தார். ஆனால் மார்ச் 23 அன்று அவரை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சிறை ஊழியர் போகாவின் கையிலிருந்து உணவு உண்ண வேண்டும் என்று தனது கடைசி ஆசையை பகத் சிங் தெரிவித்தார்.

பகத்சிங் அவரை 'பேபே' (பஞ்சாபியில் தாய் என்று பொருள்) என்று அன்புடன் அழைப்பார். இது போகாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

குழந்தையின் மலம், சிறுநீரை தாய் மட்டுமே சுத்தப்படுத்துவாள். இதன்படி பார்த்தால் போகா 'பேபே' தானே என்று அப்போது பகத் சிங் அன்புடன் சொல்வார்.

தான் ஒரு தலித் என்பதால், உணவு கொடுக்க போகா மறுத்தார். அவ்வாறு செய்வது 'பாவம்' என்று அவர் நினைத்தார்.

பின்னர் போகா உணவு கொண்டு வர சம்மதித்தார். ஆனால் உணவு வருவதற்குள் பகத்சிங் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.

புறப்படுவதற்கு முன் பகத் சிங் புத்தகத்தில் தான் படித்த கடைசி பக்கத்தை மடித்துவைத்தார்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

6. பகத் சிங் மற்றும் அவரது தோழர்கள் லாகூரில் தூக்கிலிடப்பட்டனர். ஆனால் ஃபெரோஸ்பூரில் உள்ள ஹுசைனிவாலாவில் இறுதிச் சடங்குகள் ஏன் நடத்தப்பட்டன?

லாகூர் சிறைச்சாலைக்கு பக்கத்து கிராமம் இச்ரான். அதே கிராமத்தில் பிரபல பஞ்சாபி கவிஞர் ஹரிபஜன் சிங்கின் குடும்பமும் வசித்து வந்தது.

பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் தூக்கிலிட அழைத்துச் செல்லப்பட்டபோது, அந்த கிராமம் வரை கைதிகளின் இன்குலாப் ஜிந்தாபாத் கோஷங்கள் கேட்டன.

பகத் சிங் மற்றும் அவரது தோழர்கள் இரவு 7 மணி முதல் 7.30 மணிக்குள் தூக்கிலிடப்பட்டனர்.

சிறையின் பிரதான வாயிலில் ஏராளமானோர் திரண்டனர். உடல்களைத் தருமாறு மக்கள் கேட்டார்கள். ஆனால் சிறை நிர்வாகம் பீதியடைந்தது. உடல்கள் துண்டாக்கப்பட்டு, லாரிகளில் அடைக்கப்பட்டு, சிறையின் பின் கதவு வழியாக ஃபெரோஸ்பூர் நோக்கி எடுத்துச்செல்லப்பட்டன.

வாகனம் கசூரில் ஒரு இடத்தில் நின்றது. கட்டைகள் வாங்கப்பட்டன. ஒரு பண்டிதரும், சீக்கிய பூசாரி ஒருவரும் வண்டியில் ஏற்றப்பட்டனர். ஒரு மண்ணெண்ணெய் குப்பியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்லஜ் நதிக்கரையில் காட்டிற்கு உள்ளே உடல்கள் மீது எண்ணெய் ஊற்றப்பட்டு அவசர அவசரமாக எரியூட்டப்பட்டன.

பின்னர் மார்ச் 24 காலை, லாலா லஜபதி ராயின் மகள் பார்வதி பாய் மற்றும் பகத் சிங்கின் தங்கை அமர் கெளர் உட்பட சுமார் 200 முதல் 300 பேர் பின்தொடர்ந்து அதே இடத்தை அடைந்தனர்.

பகத் சிங்

பட மூலாதாரம், Getty Images

தேடல்களுக்கு பிறகு மண்ணைத் தோண்டியபோது பாதி எரிந்த எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த சாம்பல் எடுக்கப்பட்டு, லாகூர் திரும்பிய பிறகு, பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோரின் அஸ்திகள் தயார் செய்யப்பட்டன.

மூவரின் இறுதிச் சடங்கிற்காக ராவி ஆற்றங்கரையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

லாலா லாஜ்பதி ராயின் உடல் தகனம் செய்யப்பட்ட அதே இடத்தில் மூவரின் இறுதிச் சடங்குகளும் ஏராளமான மக்கள் முன்னிலையில் நடைபெற்றதாக மார்ச் 26ஆம் தேதி டிரிப்யூன் நாளிதழின் முதல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது.

7. கடைசி நேரத்தில் பகத்சிங் மதத்தின் பக்கம் சாய்ந்தாரா?

இது முற்றிலும் பொய். பகத்சிங் ,கதர் (Ghadar)கட்சியின் பெரிய தலைவரான ரந்தீர் சிங்குடன் 1930 அக்டோபர் 2 முதல் 4 வரை ஒரு சந்திப்பை நடத்தினார்.

பகத் சிங் முடியை வெட்டிக்கொண்ட காரணத்திற்காக (சீக்கியர்கள் முடி வெட்டிக்கொள்ள அனுமதி இல்லை) அவரை சந்திக்க ரஞ்சித் சிங் முன்னதாக மறுப்பு தெரிவித்தார்.

"சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில்" குண்டு வீசப்பட்டதற்காக பகத் சிங்கிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை

பட மூலாதாரம், WWW.SUPREMECOURTOFINDIA.NIC.IN/BBC

படக்குறிப்பு, "சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில்" குண்டு வீசப்பட்டதற்காக பகத் சிங்கிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை

நாட்டிற்காக உடலின் ஒரு பாகத்தை மட்டுமே வெட்டியுள்ளேன். தேவைப்பட்டால் உயிரையும் கொடுப்பேன் என்று பகத் சிங், ரந்தீர் சிங்குக்கு செய்தி அனுப்பினார்.

இதையடுத்து ரந்தீர் சிங் அவரை அழைத்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு தன்னைப்பற்றிய பேச்சு அடிபடும் என்று பகத்சிங்குக்குத் தெரியும்.

பகத்சிங் 1930 அக்டோபர் 3 மற்றும் 4 தேதிகளில் 'நான் ஏன் நாத்திகன்?' என்ற கட்டுரையை எழுதினார்.

இந்தக் கட்டுரை பகத் சிங் எழுதியதல்ல, அவருடைய கூட்டாளிகளால் எழுதப்பட்டது என்று பின்னர் கூறப்பட்டது. ஆனால் அது உண்மையல்ல.

இந்தக் கட்டுரை முதலில் 1931 செப்டம்பர் 27 ஆம் தேதி,' தி பீப்பிள்' செய்தித்தாளில் வெளியிடப்பட்டது.

இதுவரை பகத்சிங்கின் 135 கட்டுரைகளும், 130 அச்சிடப்பட்ட கட்டுரைகளும் எனக்கு கிடைத்துள்ளன. இவை அனைத்துமே அவரால் எழுதப்படவை என்பதே உண்மை.

Banner
காணொளிக் குறிப்பு, திருமாவளவன் vs தமிழிசை சௌந்தரராஜன்; காந்தி பிறந்த நாளில் ஆர்.எஸ்.எஸ். பேரணி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: