அந்தமான் தீவுகள்: இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பலி பீடமாக உருவானது எப்படி?

காலா பானி

பட மூலாதாரம், SUMRAN PREET

    • எழுதியவர், வக்கார் முஸ்தஃபா
    • பதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்

1857-ல் பஞ்சாபில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடிய அகமது கான் கரல் கொல்லப்பட்டு, அவரது தோழர்கள் சிலர் தூக்கிலிடப்பட்டனர். சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் 'காலா பானி' என்று அழைக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

'காலா பானி' என்பது பொதுவாக இந்தியத் துணைக் கண்டத்தில் தொலைதூரத்தில் உள்ள இடங்களை குறிப்பிட பயன்படுத்தப்படும் சொல்லாகும். நெடுந்தொலைவைக் குறிக்க 'கலா கோஸ்' போன்ற சொலவடைகள் நீண்டகாலமாகப் புழக்கத்தில் உள்ளன.

நாட்டைவிட்டு கடல் கடந்து செல்லும் எவரும் 'புனித கங்கை'யிடம் இருந்து விலகிச்செல்வதால் தங்கள் சாதியைவிட்டும் சமுதாயத்தை விட்டும் விலகுவதாக பண்டைய இந்தியாவில் ஒரு நம்பிக்கை நிலவியது.

அரசியல் பொருளில், காலா பானி என்பது இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவைக் குறிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கைதிகளை நாடு கடத்தி அங்கே கொண்டு சென்றனர்.

ஆயிரம் தீவுகள் கொண்ட அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டம்

காலா பானி

பட மூலாதாரம், Getty Images

கல்கத்தாவிற்கு (தற்போது கொல்கத்தா) தெற்கே 780 மைல் தொலைவில் தெற்கே உள்ள சுமார் ஆயிரம் சிறியதும், பெரியதுமான தீவுகளின் கூட்டமே 'அந்தமான், நிக்கோபார்' என்று அழைக்கப்படுகிறது. இதன் தலைநகரம் 'போர்ட் பிளேர்'.

வரலாற்றாசிரியரும் ஆய்வாளருமான வசீம் அகமது சயீத் தனது 'காலா பானி: 1857 ஆம் ஆண்டின் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்' என்ற தலைப்பிலான ஆய்வுக்கட்டுரையில், "1789 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் இங்கு தங்கள் கொடியை பறக்கவிடுவதோடுகூடவே ஒரு கைதிகளின் குடியேற்றத்தையும், காலனியையும் உருவாக்க முதன்முதலில் முயற்சித்தனர். அது தோல்வியடைந்தது. 1857-ம் ஆண்டு கலவரம் வெடித்தபோது, தூக்குக்கயிறும், தோட்டாக்களும், பீரங்கிகளும் புரட்சியாளர்களின் உயிர்களைப் பறித்தன.

ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. ஆனால், ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ச்சி' செய்தவர்கள் மீண்டும் கிளர்ச்சி செய்யவோ அல்லது எதிர்ப்பு தெரிவிக்கவோ முடியாத வகையில் தொலைதூரத்தில் கைதிகளின் குடியிருப்பு ஒன்று தேவைப்பட்டது. இதற்காக ஆங்கிலேயர்களின் கண்கள் அந்தமான் தீவுகள் பக்கம் சென்றன.

இந்த தீவுகளில் சேறு நிறைந்திருந்தது. கொசுக்கள், ஆபத்தான பாம்புகள், தேள்கள், அட்டைகள், வகை வகையான விஷப் பூச்சிகள் அங்கு இருந்தன," என்று எழுதியுள்ளார்.

காலா பானி சிறை

பட மூலாதாரம், SUMRAN PREET

1858 இல் சென்றடைந்த முதல்குழு

ராணுவ மருத்துவரும், ஆக்ரா சிறை கண்காணிப்பாளருமான ஜே. பி. வாக்கர், ஜெயிலர் டேவிட் பெர்ரி ஆகியோர் மேற்பார்வையில், 'கிளர்ச்சியாளர்களின்' முதல் குழு 1858 மார்ச் 10 ஆம் தேதி ஒரு சிறிய போர்க் கப்பலில் அங்கு சென்றடைந்தது.

அதே கப்பலில் கரலின் தோழர்களும் அழைத்துச் செல்லப்பட்டிருக்கக்கூடும். மேலும் 733 கைதிகள் கராச்சியில் இருந்து கொண்டு வரப்பட்டனர். பின்னர் இந்த செயல்முறை தொடர்ந்தது.

"காலா பானி என்பது கதவுகளோ, சுவரோ இல்லாத ஒரு சிறைச்சாலை. நான்கு பக்கமும் சுவர் என்று சொன்னால் அது கடல்தான். வளாகத்தைப் பற்றிச் சொன்னால், கண்ணுக்கெட்டிய தூரம்வரை கடல்தான் பொங்கிக்கொண்டிருந்தது.

சிறையில் இருந்த போதிலும் கைதிகள் சுதந்திரமாக இருந்தனர். ஆனால் தப்பிக்கும் எல்லா வழிகளும் மூடப்பட்டிருந்தன. காற்று விஷமாக இருந்தது," என்று சயீத் எழுதுகிறார்.

"முதல் கைதிகள் குழு அங்கு சென்றபோது, அவர்களை வரவேற்க கல்லாங்குத்தான உயிரற்ற நிலமே இருந்தது. அடர்ந்த மற்றும் வானளாவிய மரங்கள் கொண்ட காடுகள், சூரியனின் கதிர்கள் பூமியை தொடமுடியாதபடி செய்தன. திறந்த நீல வானம், விரோதமான மற்றும் நச்சு காலநிலை, கடுமையான தண்ணீர் தடுப்பாடு மற்றும் விரோத மனநிலை கொண்ட பழங்குடியினர் அங்கு இருந்தனர்."

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் பலிபீடம் என்று 'அந்தமான்'அறிவிக்கப்பட வேண்டும் என்று டெல்லியைச் சேர்ந்த இந்த ஆய்வாளர் கூறுகிறார்.

ஆங்கிலேயர்கள், அவர்களின் அலுவலகப் பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், கைதிகளுக்கு குடிசைகள் மற்றும் தொழுவங்கள் போன்ற இடங்களும் நீண்டகாலத்திற்கு பிறகே கிடைத்தன. அங்கு வாழ்வதற்கு தரையோ, அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்களோ இல்லை.

நரகம் போன்ற நிலைமைகள்

மழைக்காலங்களில் குடிசைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரே நிலைதான். நாள் முழுவதும் கடுமையான சிறைவாசம், அயராத உழைப்பு, அட்டூழியங்களுக்கும் வன்முறைகளுக்கும் ஆளாகி, மிகக் குறைவான உணவில் திருப்தியடைந்து தொடர்ந்து மரணம் வரை வாழ்வது கைதிகளின் தலைவிதி. அதனால்தான் ஒவ்வொரு கைதியும் மரணத்திற்காக பிரார்த்தனை செய்தார்கள். ஏனென்றால் பிரச்னைகளில் இருந்து விடுபட மரணம் மட்டுமே ஒரே வழி.

மதத்தலைவரும், காலிபின் சமகாலத்தவரும் நண்பருமான அல்லாமா ஃபஸ்ல்-இ-ஹக் கைராபாதி 1857 சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார். அவர் ஜாமா மசூதியில் இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக 'ஜிஹாத்' ஃபத்வா (ஆணை) அளித்தார் என்று எழுத்தாளர் சாகிப் சலீம் குறிப்பிடுகிறார்.

கொலை மற்றும் எழுச்சிக்கு தூண்டிய குற்றச்சாட்டின் பேரில் கைராபாதிக்கு 1859 மார்ச் 4 ஆம் தேதி, காலாபானியில் ஆயுள் தண்டனை மற்றும் சொத்து பறிமுதல் தண்டனை விதிக்கப்பட்டது.

அந்தமான் சிறைச்சாலை

பட மூலாதாரம், SUMRAN PREET

அந்தமான் சிறைச்சாலை 'நோய்களின் புதையல்'

கைராபாதி தனது 'அசுரதல்ஹிந்தியா' என்ற நூலில் சிறைவாசத்தின் நிலைமை பற்றி எழுதியுள்ளார். அந்த புத்தகத்திலிருந்து பின்வரும் வாக்கியங்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

'ஒவ்வொரு கொட்டகைக்கும் கூரை இருந்தது. அதில் துக்கங்களும் நோய்களும் நிறைந்திருந்தன. காற்று துர்நாற்றமாகவும் நோய்களின் புதையலாகவும் இருந்தது. நோய்கள், முடிவற்ற அரிப்பு, தோல் தொடர்ந்து உரிந்துகொண்டேயிருக்கும் தோல் நோய்கள் மிகவும் சாதாரணமாக காணப்பட்டன.

நோயைக் குணப்படுத்தவும், ஆரோக்கியத்தைப் பேணவும், காயங்களைக் குணப்படுத்தவும் வழி இல்லை.

உலகின் எந்தப் பிரச்னையும் இங்குள்ள வேதனையான பிரச்னைகளுக்கு ஈடாகாது. ஒருவர் இறந்துவிட்டால் பிணத்தை சுமக்கும் நபர் அதன் காலைப் பிடித்து இழுத்து, குளிக்கவைக்காமல், ஆடைகளைக் கழற்றி மணல் குவியலில் புதைப்பார். கல்லறை தோண்டப்படுவதில்லை அல்லது தொழுகை-இ-ஜனாஸா வழங்கப்படுவதில்லை.

அடர்ந்த காட்டில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கைதிகள் ராஸ், ஹுலாக் மற்றும் சைதம் தீவுகளில் கடின உழைப்பு செய்ய உத்தரவிடப்பட்டனர்.

கைராபாதி மற்றும் அவரது தோழர்கள் மக்கள் வசிக்காத தீவின் காடுகளை சுத்தம் செய்யும் கடினமான வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது.

இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதிகளில் கூட சங்கிலியால் பிணைக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்.

"மற்ற கைதிகள் நோய்வாய்ப்பட்டிருந்தாலும், சங்கிலியால் இழுக்கப்படுவதை நான் என் கண்களால் பார்க்கிறேன். ஒரு கடுமையான மற்றும் இரக்கமற்ற நபர் துன்பத்தில் வலியை உண்டாக்குகிறார். பசி மற்றும் தாகத்தில் கூட இரக்கப்படுவதில்லை. உடல் முழுவதும் காயங்களுடன், காலையும் மாலையும் கழிகின்றன. ஆன்மாவைக் கரைக்கும் வலியுடனும் வேதனையுடனும் காயங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இந்தக் காயங்கள் என்னை மரணத்திற்கு அருகே கொண்டுசெல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை" என்று கைராபாதி கூறுகிறார்.

ஃபஸ்ல்-இ-ஹக் கைராபாதி அந்தமானில் தனது இறுதி மூச்சை விட்டார். அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்.

பெண் கைதிகள் மற்றும் திருமணம்

ஹரியாணா மாநிலம் தானேசர் பகுதியை சேர்ந்தவர் ஜாஃபர் தானேசரி. முதலில் மரண தண்டனையும் பிறகு காலாபானி தண்டனையும் விதிக்கப்பட்டது. 1866 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி அந்தமான் தீவுகளின் கடற்கரையை தான் அடைந்த காட்சியை 'காலா பானி அல்மரூஃப் தவாரிக் அஜாயப்' என்ற புத்தகத்தில் இவ்வாறு விவரிக்கிறார்:

'தூரத்திலிருந்து கடலின் கரையில் கருங்கற்கள் தண்ணீரில் எருமைக் கூட்டங்கள் நீந்துவது போல் இருந்தது.'

அப்போது அந்த பகுதி ஓரளவு தெளிவாக இருந்தது. காடுகளை சுத்தம் செய்வதுடன் கூடவே கைதிகள் புதிய மரங்களையும் நட்டு வருகின்றனர். முன்னதாக ஆங்கிலேய ஆட்சி பெண் கைதிகளையும் அங்கு அனுப்பத் தொடங்கியது."

ஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் அரசு திருமணத்தையும் பின்னர் குழந்தைகள் பிறப்பதையும் கைதிகளை சீர்திருத்துவதற்கான வழிமுறையாகக் கருதியது என்று ஹபீப் மன்சர் மற்றும் அஷ்ஃபாக் அலி ஆகியோரின் ஆராய்ச்சி கூறுகிறது.

மெட்ராஸ், வங்காளம், பம்பாய் (மும்பை), வடமேற்கு மாநிலம், அவத் மற்றும் பஞ்சாப் போன்ற பகுதிகளில் இருந்து, சில ஆண்டுகள் பிரிட்டிஷ் இந்தியாவின் சிறைகளில் தண்டனை அனுபவித்த பெண்கள், அந்தமானுக்கு அனுப்பப்பட்டனர்.

"போர்ட் பிளேயரில் பெண் கைதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் அனுப்பப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமாக பெண் கைதிகளை அனுப்பவில்லை என்றால், ஐந்து வருடங்கள் தண்டனையை அனுபவித்தபிறகு அவர்களது திருமண ஏற்பாட்டைத் தொடரமுடியாது மற்றும் அரசுக்கு நிறைய சேமிப்பை அளிக்கும் நூற்பு, நெசவு போன்ற வேலைகளைச் செய்யமுடியாது," என்று போர்ட் பிளேயரின் கண்காணிப்பாளர் இந்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

சுயஉதவி கைதிகள் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், குறிப்பிட்ட நாளில் பெண் கைதிகளில் ஒருவரை தேர்வு செய்து, அவர் சம்மதித்தால், அரசு அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து சட்டப்பூர்வமாக்கும். தாங்களாகவே ஏற்பாடு செய்து கொண்ட தம்பதிக்கு சுயஆதரவு கிராமத்தில் வசிக்க இடம் வழங்கப்படும்.

ஆனால் பெண் கைதிகளை அந்தமானுக்கு அனுப்பும் நடவடிக்கை சில ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 1897 ஆம் ஆண்டில், 2447 சுய ஆதரவு கைதிகளில் 363 பெண்கள் இருந்தனர். நோய் மற்றும் இறப்பு விகிதங்களும் பெண்களிடையே அதிகம்.

தானேசரியை மணந்த காஷ்மீரி பெண்கள் திருமணமாகாத தாய்களாகி குழந்தையைக் கொன்ற குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டனர்.

பதினேழு ஆண்டுகள் பத்து மாதங்களுக்குப் பிறகு அந்தமானில் இருந்து 1883 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி தானேசரி இந்தியாவுக்குப் புறப்பட்டார். 1872 இல் போர்ட் பிளேயருக்கு பயணம் செய்த இந்தியாவின் வைஸ்ராய் லார்ட் மேயோ ஒரு கைதியால் கொல்லப்பட்டபோது அவர் அங்குதான் இருந்தார்.

காலா பானி

பட மூலாதாரம், AFP

தப்பிக்க முயன்றவர்கள் தூக்கிலிடப்பட்டனர்

தானாபூர் கன்டோன்மென்ட் கலகத்தின் கைதியான நாராயண், அங்கிருந்து தப்பிக்க முயன்ற முதல் நபர். அவர் பிடிபட்டார். டாக்டர் வாக்கர் முன் கொண்டு வரப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

1868 மார்ச்சில், 238 கைதிகள் தப்பிச் செல்ல முயன்றதாக 'தாரிக்-இ-அந்தமான் ஜெயிலில்' எழுதப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்குள் அவர்கள் அனைவரும் பிடிபட்டனர். ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். 87 பேரை தூக்கிலிட வாக்கர் உத்தரவிட்டார்.

தூக்கு தண்டனை பற்றிய செய்தி கல்கத்தாவை எட்டியதும், பேரவைத் தலைவர் ஜே.பி.கிராண்ட் இதற்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதினார். 'தூக்கிலிடப்பட்டதற்கான காரணங்களை என்னால் ஏற்க முடியவில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால், வாக்கர், அரசு வழக்கிலிருந்து தப்பினார். கிராண்டின் உத்தரவின் பேரில், கைதிகள் இனி ஒருபோதும் தப்பிக்க முடியாதபடியும், பொதுமக்களைத் தூண்டிவிட முடியாதபடியும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆயினும்கூட, கைதிகளான மஹ்தாப் மற்றும் சேத்தன் 1872 மார்ச் 26 ஆம் தேதி தப்பிச்சென்றனர். வங்காள விரிகுடாவில் தாங்களே தயாரித்த படகுகள் மூலம் 750 மைல்கள் பயணம் செய்தனர். தாங்கள் மீனவர்கள் என்றும் தங்கள் படகு சேதமடைந்துள்ளது என்றும் ஒரு ஆங்கிலேய கப்பல் பணியாளர்களை நம்பவைத்தனர். இறுதியில் அவர்கள் லண்டனில் உள்ள Stranger's Home for Asiatics இல் விடப்பட்டனர்.

இருவருக்கும் உணவு, உடை மற்றும் படுக்கை வழங்கப்பட்டது, ஆனால் அவர்கள் தூங்கும் போது, உரிமையாளர் கர்னல் ஹியூஸ், அவர்களை படம் எடுத்து அரசுக்கு அனுப்பினார். மஹ்தாப் மற்றும் சேத்தன் மறு நாள் காலையில் எழுந்தபோது, தாங்கள் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருப்பதை கண்டனர். சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் இந்தியாவுக்குச் செல்லும் கப்பலில் ஏற்றப்பட்டனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சுதந்திர இயக்கம் வேகம் பெற்றது. இதனால் அந்தமானுக்கு அனுப்பப்படும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து, பலத்த பாதுகாப்பு சிறைக்கான தேவை உணரப்பட்டது.

சிறைச்சாலையை கட்டிய கைதிகள்

1889 ஆகஸ்டில், பிரிட்டிஷ் உள்துறைச் செயலர் சார்லஸ் ஜேம்ஸ் லாயலிடம், போர்ட் பிளேயரில் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் பற்றிய ஆராய்ச்சிப் பணியும் ஒப்படைக்கப்பட்டது. 1890 இல் பாகிஸ்தானில் லயால்பூர் இவர் பெயரில்தான் அமைந்தது. 1979 இல், பைசலாபாத் என அது மறுபெயரிடப்பட்டது.

அந்தமான் தீவுகளுக்கு நாடு கடத்தப்படும் தண்டனை அதன் நோக்கத்தில் தோல்வியடைந்துவிட்டதாகவும், இந்திய சிறைகளுக்குச் செல்வதைக்காட்டிலும் குற்றவாளிகள் அந்தமான் செல்வதை விரும்புவதாகவும் சார்ல்ஸ் லாயல் மற்றும் பிரிட்டிஷ் அரசின் அறுவை சிகிச்சை நிபுணர் ஏ.எஸ். லேத் ஃப்ரீஸ், ஒரு முடிவை எட்டினர்.

சார்ல்ஸ் லாயல் மற்றும் லேத்ஃப்ரீஸ், நாடுகடத்தப்படும் தண்டனையில் ஒரு தண்டனை காலம் சேர்க்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தனர். கைதிகள் வந்துசேர்ந்தவுடனே கடுமையான தண்டனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

இதன் காரணமாகவே செல்லுலார் சிறைச்சாலை உருவானது. இது 'ஒரு தொலைதூர தண்டனை மையத்திற்குள் 'நாடுகடத்தப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட இடம்' என்று விவரிக்கப்பட்டது என்று எலிசன் பாஷ்ஃபோர்ட் மற்றும் கரோலின் ஸ்ட்ரேஞ்ச் தெரிவிக்கின்றனர்.

செல்லுலார் சிறைச்சாலையின் கட்டுமானம் 1896 இல் தொடங்கியது. பர்மாவிலிருந்து செங்கற்கள் வந்தன. சிறையில் அடைபட வேண்டிய அதே கைதிகளால் கட்டுமானம் நடந்தது என்பது இங்குள்ள ஒரு முரண்பாடான விஷயமாகும்.

செல்லுலார் சிறைச்சாலை 1906 இல், ஐந்து லட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. பதிமூன்றரை அடி நீளமும், ஏழடி அகலமும் கொண்ட எழுநூறு அறைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள், சிறையின் நடுவே ஒரு கோபுரத்தின் மீதிருந்து கடுமையாக கண்காணிக்கப்பட்டனர்.

சிறை அறைகளில் காற்று கூட வராத வகையில், வெளிச்சம் வர இடம் வைக்கப்பட்டிருந்தது. காலை, மதியம், மாலை சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் என நேரம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதைத்தவிர யாருக்காவது தேவை ஏற்பட்டால் காவலாளிகளின் அடிஉதை கிடைக்கும். ஆங்கிலேயர்கள் யாரை வேண்டுமானாலும் தூக்கிலிட ஏதுவாக 'தூக்குதண்டனை இடமும்' கட்டப்பட்டது.

அந்தமான் சிறைச்சாலை

பட மூலாதாரம், SUMRAN PREET

பல புரட்சியாளர்கள் இங்கு தங்கியிருந்தனர்

கைதிகளை உளவியல் ரீதியாக சித்திரவதை செய்வதற்காக ஜெயிலர், சிறைக்கொட்டடியைப் பூட்டி, சாவியை உள்ளே வீசி எறிவார். சிறைச்சாலைக்குள் இருந்து கைதிகள் பூட்டுக்கு அருகே செல்ல முடியாத வகையில் பூட்டுகள் அமைந்திருந்தன.

சிறைக்குள் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் ஒரு மரக் கட்டில், ஒரு அலுமினியத் தட்டு, இரண்டு பாத்திரங்கள் அதாவது ஒன்று தண்ணீர் குடிப்பதற்கும் மற்றொரு மலம் கழிக்கும் போது பயன்படுத்துவதற்கும் மற்றும் ஒரு கம்பளி போர்வை மட்டுமே இருந்தன. பெரும்பாலும் கைதிகளுக்கு அந்த சிறிய பாத்திரம் போதுமானதாக இல்லை. அதனால் அவர்கள் அறையின் மூலையில் மலம்கழிக்க வேண்டியிருந்தது. பின்னர் தங்கள் சொந்த கழிவுகளுக்கு அருகில் படுத்துக் கொள்ளவும் வேண்டியிருந்தது.

பிரிட்டிஷ் காலனித்துவ அரசு அரசியல் கைதிகளை தனித்தனியாக வைத்திருப்பதை உறுதிசெய்ய விரும்பியதால் Quaid-e-solitude (தனிமைச்சிறை) நடைமுறைக்கு வந்தது.

அரசியல் கைதிகளில் ஃபஸ்ல்-இ-ஹக் கைராபாதி, யோகேந்திர சுக்லா, படுகேஷ்வர் தத், பாபா ராவ் சாவர்க்கர், விநாயக் தாமோதர் வீர் சாவர்க்கர், சசீந்திர நாத் சான்யால், ஹரே கிருஷ்ண கோனார், பாய் பர்மானந்த், சோஹன் சிங், சுபோத் ராய் மற்றும் திரிலோகி நாத் சக்ரவர்த்தி, மெஹமூத் ஹஸன் தேவபந்தி, ஹுசைன் அகமது மதனி மற்றும் ஜாபர் தானேசரி ஆகியோரின் பெயர்கள் பிரபலமானவை.

மரணத்தின் முகத்தில்

1911-1921க்கு இடையில் சிறையில் அடைக்கப்பட்ட தாமோதர் சாவர்க்கர் விடுதலைக்குப் பிறகு தான் எதிர்கொள்ள வேண்டியிருந்த பயங்கரமான நிலைமைகளைப் பற்றி எழுதினார்.

கடுமையான ஜெயிலர் டேவிட் பெர்ரி தன்னை 'லார்ட் ஆஃப் போர்ட் பிளேயர்' என்று அழைத்துக் கொண்டார் என்று சாவர்க்கர் எழுதினார். "சிறையின் கதவுகள் மூடப்பட்டவுடன், தாங்கள் 'மரணத்தின் வாய்க்குள்' சென்றுவிட்டதாக கைதிகள் உணர்ந்தார்கள்."

தனது மூத்த சகோதரரும் இதே சிறையில்தான் உள்ளார் என்பது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் சாவர்க்கருக்கு தெரியவந்தது.

'பிரிட்டிஷ் அரசு, இந்திய எதிர்ப்பாளர்களையும் கிளர்ச்சியாளர்களையும் ஒரு 'சோதனை'அடிப்படையில் காலனித்துவ தீவுக்கு அனுப்பியது. இதன்கீழ் சித்திரவதை, மருந்து பயன்பாடு, கட்டாய உழைப்பு மற்றும் பலருக்கு மரணம் ஆகியவை அடங்கும்," என்று 2021 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் நாளிதழான 'தி கார்டியன்' நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. மருந்துகள் அளிக்கப்பட்டு அவை பரிசோதிக்கப்பட்டன. இதன் காரணமாக பலர் நோய்வாய்ப்பட்டனர் மற்றும் பலர் தங்கள் உயிரை இழந்தனர்.

இந்த ஆய்வுக்காக, கேத்தி ஸ்காட் கிளார்க் மற்றும் அட்ரியன் லெவி ஆகியோர் அரசு பதிவுகளை ஆராய்ந்தனர். சிறையிலிருந்து வெளியே வந்தவர்களிடம் பேசினர்.

செல்லுலார் சிறையில், பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை பெற்ற ,நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட கைதிகள், கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.

விநாயக் தாமோதர் சாவர்க்கர்

பட மூலாதாரம், SAVARKARSMARAK.COM

படக்குறிப்பு, விநாயக் தாமோதர் சாவர்க்கர்

1909 மற்றும் 1931க்கு இடையில், செல்லுலார் சிறைச்சாலையின் ஜெயிலராக இருந்த டேவிட் பெர்ரி புதிய முறைகளில் தண்டிப்பதில் நிபுணராகக் கருதப்பட்டார். ராணியின் எதிரிகளை தூக்கிலிடாமல் அல்லது சுட்டுக்கொல்லாமல், சித்திரவதை மற்றும் வெட்கக்கேடான அட்டூழியங்கள் மூலம் அவர்களை முடித்துவைப்பது தனது தலைவிதியில் எழுதப்பட்டுள்ளதாக டேவிட் பெர்ரி கூறினார். மாவு இயந்திரங்களை இயக்குவது, எண்ணெய் ஆட்டுவது, கற்களை உடைப்பது, மரம் வெட்டுவது, ஒருவாரம் வரை கைவிலங்கு கால்விலங்கு பூட்டி நிற்கவைப்பது, தனிமை சிறை, நான்கு நாட்கள்வரை பட்டினி போடுவது போன்றவை இதில் அடங்கும்.

எண்ணெய் பிரித்தெடுத்தல் மிகவும் வேதனையாக இருந்தது. சுவாசம் விடுவது பொதுவாக மிகவும் கடினமாக இருந்தது, நாக்கு வறண்டு போகும். மூளை உணர்ச்சியற்றுப் போய்விடும். கைகளில் கொப்புளங்கள் ஏற்படும்.

எழுத்தாளர் ராபின் வில்சன், பெங்காலி கைதியான சுஷீல் தாஸ்குப்தாவின் மகனைச் சந்தித்தார்.1932 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி பிரிட்டிஷ் அரசிடமிருந்து சுதந்திரம் கோரியதற்காக கைது செய்யப்பட்டு அந்தமான் தீவுகளுக்கு அனுப்பப்பட்டபோது சுஷீலுக்கு 26 வயது.

"கொளுத்தும் வெயிலில் ஆறு மணி நேரம் கடின உழைப்புக்குப் பிறகு, அவரது கைகள் தனது சொந்த ரத்தத்தில் வர்ணம் பூசப்பட்டிருக்கும். நார் தயாரிப்பதில் அன்றைய இலக்கைஎட்ட, தேங்காயை அடித்தடித்து அவரது உடல் சோர்வடையும். அவரது தொண்டை வறண்டு முள்ளாக மாறியிருக்கும். சோம்பலுக்கு பயங்கர தண்டனைகள் வழங்கப்பட்டன. அவர்கள் கழிப்பறைக்கு செல்லும் நேரம் குறித்தும் கண்டிப்பு நிலவியது.

எந்த கைதியும் மலம் கழிக்க காவலரின் அனுமதிக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். கைதிகள் அடிமைகளைப் போல வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிலருக்கு பைத்தியம் பிடித்துவிடும். மற்றவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்கள்" என்று தாஸ்குப்தாவின் மகன் குறிப்பிட்டார்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்து பூஷண் ராய், எண்ணெய் ஆலையின் முடிவில்லாத உழைப்பால் சோர்ந்துபோய், தனது கிழிந்த குர்தாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எண்ணெய் ஆலை என்ற நரகத்தில் கைதிகள் உழன்றுகொண்டிருக்கும் அதேநேரம் பெர்ரி மற்றும் பிற பிரிட்டிஷ் அதிகாரிகள் ராஸ் தீவில் உல்லாசமாக இருப்பார்கள்.

பெர்ரியின் அதிகாரபூர்வ தலைமையகத்தின் மற்ற கட்டிடங்களில் அவரது சொந்த டென்னிஸ் மைதானம், நீச்சல் குளம் மற்றும் அதிகாரிகளுக்கான கிளப்ஹவுஸ் ஆகியவை இருந்தன.

கைதி உல்ஹாஸ்கர் தத் மிகவும் சித்திரவதை செய்யப்பட்டார். அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. அவர் தீவின் ஒரு பகுதியில் மனநல காப்பகத்தில் 14 ஆண்டுகள் வைக்கப்பட்டார். தத்தின் தந்தை தனது மகனுக்கு என்ன நேர்ந்தது என்று இந்திய வைஸ்ராய்க்கு பலமுறை கடிதம் எழுதியும் பதில் கிடைக்கவில்லை. மேலும் எட்டு கடிதங்களுக்குப் பிறகு, இறுதியாக அந்தமான் தீவின் தலைமை ஆணையரிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் கிடைத்தது."மலேரியா தொற்று காரணமாக நோயாளிக்கு பைத்தியம் பிடித்துள்ளது. தற்போது அவரது உடல்நிலை நன்றாக உள்ளது" என்று அதில் எழுதப்பட்டிருந்தது.

கைதிகளின் கிளர்ச்சி

இத்தகைய அட்டூழியங்களை எதிர்த்து கைதிகள் கிளர்ச்சி செய்தனர். 1930 களின் முற்பகுதியில், செல்லுலார் சிறைச்சாலையின் சில கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1933 மே மாதம் கைதிகளின் உண்ணாவிரதம் சிறை நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்தது. இந்திய அரசின் உள்துறை பதிவுகளில், மாகாணங்களின் ஆளுநர்கள் மற்றும் தலைமை ஆணையர்கள் வழங்கிய உத்தரவுகளுக்கு பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்வினையைப் பார்த்ததாக, கேத்தி ஸ்காட் கிளார்க் மற்றும் அட்ரியன் லெவி குறிப்பிடுகின்றனர்.

"உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் பாதுகாப்புக் கைதிகள் தொடர்பாக, அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். உயிருடன் இருக்க வேண்டிய கைதிகளுக்கு விதிவிலக்கு அளிக்கக் கூடாது. அவர்களை தடுக்க கைகளைப் பயன்படுத்துவது சிறந்த வழியாகும். அவர்கள் எதிர்த்தால், இயந்திர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்று அந்தப்பதிவில் கூறப்பட்டிருந்தது.

தாங்கள் நடத்தப்படும் விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 33 கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பகத் சிங்கின் கூட்டாளியான மகாவீர் சிங், லாகூர் சதி வழக்கில் தண்டனை பெற்ற மோகன் ராகேஷ், ஆயுதச் சட்ட வழக்கில் தண்டனை பெற்ற கிஷோர் நாமாதாஸ் மற்றும் மோகித் மொய்த்ரா ஆகியோர் இதில் அடங்குவர்.

கட்டாய உணவு கொடுத்ததால் மூவர் இறந்தனர். வலுக்கட்டாயமாக உணவளிக்க முயற்சித்தபோது பால் அவர்களது நுரையீரலில் நுழைந்தது. இதன் விளைவாக அவர்களுக்கு நிமோனியாவை ஏற்பட்டு இறந்தனர் என்று ஆர்.வி.ஆர்.மூர்த்தி கூறுகிறார். அவர்களது உடல்கள் கற்களால் கட்டப்பட்டு தீவைச் சுற்றியுள்ள நீரில் மூழ்கடிக்கப்பட்டன.

சிறை

பட மூலாதாரம், SUMRAN PREET

அந்தமான் தீவுகளை கைப்பற்றிய ஜப்பான்

1941-ம் ஆண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டத., சுனாமி வந்திருக்கலாம். ஆனால் உயிர், உடைமை சேதம் குறித்த புள்ளிவிவரங்கள் கிடைக்கவில்லை.

ஜப்பான், 1942 மார்ச் மாதம் அந்தமான் தீவுகளை ஆக்கிரமித்தது. அதன்பிறகு செல்லுலார் சிறையில், ஆங்கிலேயர்கள், ஆங்கிலேய ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் இந்தியர்கள், பின்னர் இந்திய சுதந்திரத்தின் உறுப்பினர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அங்கு வன்முறையில் பலர் பலியாகி கொல்லப்பட்டனர் என இக்பால் சிங் எழுதுகிறார். .

1944 ஜனவரி 30 ஆம் தேதி ஜப்பானியர்கள் 44 உள்ளூர் கைதிகளை செல்லுலார் சிறையில் இருந்து வெளியே அழைத்துச் சென்று, லாரிகளில் ஏற்றி ஹம்ப்ரேகஞ்சிற்கு அழைத்துச்சென்றனர். அங்கு ஏற்கனவே பள்ளம் தோண்டப்பட்டிருந்தது.

ஆங்கிலேயர்களுக்கு உளவு பார்த்ததான சந்தேகத்தின் பேரில் அவர்கள் தோட்டாக்களால் துளைக்கப்பட்டனர். உடல்களை அதே பள்ளத்தில் தூக்கி எறிந்து, மேலிருந்து மண்ணைக் கொட்டி பள்ளம் மூடப்பட்டது.

உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோது, வேலை செய்ய முடியாத வயதான கைதிகளை 'முடித்துவிட' ஜப்பானியர்கள் முடிவு செய்தனர்,"என்று வாசிம் அகமது சயீத் எழுதுகிறார்.

" 1945 ஆகஸ்ட் 13 ஆம் தேதி 300 இந்தியர்கள் மூன்று படகுகளில் ஏற்றப்பட்டு மக்கள் வசிக்காத தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். படகுகள் கரையிலிருந்து தூரத்தில் இருந்தபோது, கைதிகள் கடலில் குதிக்கும்படி

கட்டாயப்படுத்தப்பட்டனர்,"என்று டேவிட் மில்லர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் நீரில் மூழ்கினர் மற்றும் கரையை அடைந்தவர்கள் பசியால் இறந்தனர். ஆறு வாரங்களுக்குப் பிறகு பிரிட்டிஷ் உதவிப் பணியாளர்கள் வந்தபோது, 11 கைதிகள் மட்டுமே உயிருடன் இருந்தனர்.

அடுத்த நாள், 800 கைதிகள் மக்கள் வசிக்காத மற்றொரு தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் கரையோரம் விடுவிக்கப்பட்டனர்.

கரைக்கு வந்தவர்கள் ஒவ்வொருவரும் சுடப்பட்டனர். பின்னர் ராணுவ வீரர்கள் வந்து இறந்தவர்களின் உடல்களை எரித்து அடக்கம் செய்தனர்.

1945 அக்டோபரில் ஜப்பானியர்கள் ஐக்கியப் படையிடம் சரணடைந்தனர். மேலும் அந்தமான் தீவுகள் மீண்டும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. இம்முறை பாதிக்கப்பட்டவர்களில் ஜப்பானியர்களும் அடங்குவர்.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பான் சரணடைந்த ஒரு மாதத்திற்குப் பிறகு, ஆங்கிலேயர்கள், 1945 அக்டோபர் 7 ஆம் தேதி தண்டனைக்காக கட்டப்பட்ட இந்த குடியேற்றத்தை அழித்து, கைதிகளை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைகளுக்கு அனுப்பினர்.

1860 ஆம் ஆண்டு முதல் சுமார் 80 ஆயிரம் இந்தியர்கள் தண்டனையாக அந்தமானுக்கு அனுப்பப்பட்டனர் என்று பதிவுகள் கூறுகின்றன. பெரும்பாலான சுதந்திரப் போராட்ட வீரர்கள் வங்காளம், பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பெரும்பாலும் இந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் மற்றும் எல்லா சாதிகள், சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.

1957ஆம் ஆண்டு இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் சுதந்திரப் போராட்டத்தின் நினைவாக நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில், கிளர்ச்சியாளர்

சாஹிர் லூதியான்வி, 'சுதந்திரப் போரில் சாமானியர்கள் கொல்லப்பட்டதற்கு பிரிட்டன் மன்னிப்புக் கேட்காவிட்டாலும்கூட, காலா பானி அட்டூழியங்களுக்காக துணைக் கண்ட மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

காணொளிக் குறிப்பு, இந்திரா காந்தி அவசர நிலை அறிவித்த நாளில் நடந்தது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: