பேகம் ஹஸ்ரத் வரலாறு: ஆஃப்ரிக்க அடிமையின் மகள் ஆங்கிலேயர்களை அலற விட்ட வீரக்கதை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஜூலை 3, 1857. லக்னெளவில் உள்ள கைசர்பாக் அரண்மனை தோட்டத்தில் சாந்திவாலி பராத்ரியை நோக்கி ஒரு பெரிய ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அந்த ஊர்வலத்தின் நடுவே, 14 வயதுடைய மெலிந்த, கருமை நிறமுள்ள சிறுவன் நடந்து சென்று கொண்டிருந்தான்.
பையனின் பெயர் பிர்ஜிஸ் கத்ரு. ஓராண்டு முன்பு நாடு கடத்தப்பட்ட நவாப் வாஜித் அலி ஷாவின் மகன். லக்னெளவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு வாஜித் அலி ஷா விவாகரத்து செய்த ஒன்பது பெண்களில் பிர்ஜிஸ் கத்ருவின் தாயார் பேகம் ஹஸ்ரத் மஹாலும் ஒருவர்.
ஊர்வலத்தின் நோக்கம், 14 வயதான பிர்ஜிஸ் கத்ருவை புதிய நவாபாக அறிவிப்பதாகும்.
இதுகுறித்து, ரோஸி லியோலின் ஜோன்ஸ் தனது 'The Great Uprising in India: Untold Stories Indian and British' என்ற புத்தகத்தில், 'தங்களுக்கு எதிராக கலகம் செய்பவர்கள் வெறுமனே அடையாள ஊர்வலத்தில் பங்கேற்பதாக ஆங்கிலேயர்கள் நம்பினர். ஆனால், இது உண்மையல்ல. அவுத் பகுதியை ஆங்கிலேயர்கள் இணைத்துக்கொண்ட பின்னர், ஓரங்கட்டப்பட்ட குழுவின் தலைவர்கள் ஒன்று கூடி பறிக்கப்பட்ட அரசை மீட்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்கிய புனிதமான தருணம் இது," என்று எழுதுகிறார்.
டெல்லி, மீரட் மற்றும் கான்பூருக்குப் பிறகு, 1857 ஆம் ஆண்டின் கிளர்ச்சியின் தீ லக்னெளவையும் அடைந்தது. கிளர்ச்சியின் முதல் தீப்பொறி 1857 மே 30 ஆம் தேதி அப்பகுதியை அடைந்தது. அன்று நகரின் மாரியன் கன்டோன்மென்ட்டில் அதிகாரிகளின் வீடுகளுக்கு தீ வைத்து மூன்று பிரிட்டிஷ் வீரர்களைக் கொன்றனர் கிளர்ச்சியாளர்கள்.
இப்படியான சூழலில் ஜூலை 3ஆம் தேதி, பிர்ஜிஸ் கத்ரு, அவத்தின் சிம்மாசனத்தில் அமர்த்தப்பட்டார். ஆனால், அப்போது அவருக்கு வயது குறைவென்பதால், நிர்வாகப் பொறுப்பு முழுமையும் அவரது தாயார் பேகம் ஹஸ்ரத் மஹால் மீது விழுந்தது.

பட மூலாதாரம், Getty Images
ஹஸ்ரத் மஹால் ஒரு ஆஃப்ரிக்க அடிமையின் மகள்
வரலாற்றாசிரியர் ரோஸி லியோலின் ஜோன்ஸ் எழுதுகிறார், "ஹஸ்ரத் மஹால் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தந்தை அம்பர் ஒரு ஆஃப்ரிக்க அடிமை. அவரது தாயார் அம்பரின் ஆசை நாயகியாக இருந்த மகேர் அப்சா ஆவார். ஹஸ்ரத் மஹால் லக்னெளவில் உள்ள பரிகானா சங்கீத் பள்ளியில் இசை கற்றுக்கொண்டார். எனவே, அவர் 'மெஹக் பரி' என்று அழைக்கப்பட்டார்.
அவர் தனது திறமை அல்லது நல்ல தோற்றம் அல்லது இரண்டின் காரணமாகவும் வாஜித் அலி ஷாவின் கவனத்தை ஈர்த்தார். மேலும் வாஜித் அலி ஷா ஹஸ்ரத் மஹாலை 'முத்தா' முறை (ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மனைவி ஆக்கிக்கொள்ளுதல்) மூலம் தனது தற்காலிக மனைவியாக்கிக் கொண்டார். 1845 ஆம் ஆண்டில் ஹஸ்ரத் மஹால் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். அதன் காரணமாக அவருடைய நிலை உயர்ந்தது. அரண்மனை அந்தஸ்து வழங்கப்பட்டது."
ஆனால், அடுத்த 5 ஆண்டுகளில் நிலை மாறியது. வாஜித் அலி ஷா ஹஸ்ரத்தை விவாகரத்து செய்ததோடு தனது அந்தப்புரத்தில் இருந்தும் வெளியேற்றிவிட்டார்.

பட மூலாதாரம், Indian Postal Department
இதுகுறித்து ருத்ராங்ஷு முகர்ஜி தனது 'A Begum and the Rani Hazrat Mahal and Lakshmibai in 1857' என்ற புத்தகத்தில், 'வாஜித் அலி ஷா ஆங்கிலேயர்களால் லக்னெளவில் இருந்து வெளியேற்றப்பட்டு கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டபோது, அவரது குழுவில் ஹஸ்ரத் மஹால் இல்லை என்பதே இதன் பொருள். அவர் இனி ஒரு பேகம் அல்ல, ஆனால் அவருடைய மகன் நவாப் மற்றும் முகலாய பேரரசரின் ஆளுநரானதும், தானாகவே மீண்டும் பேகம் என்ற பட்டத்தைப் பெற்றார். அவர் கிளர்ச்சியாளர்களுக்கு மட்டுமல்ல, சாதாரண மக்களுக்கும் தலைவியானார்," என்று எழுதியுள்ளார்.
35000 கிளர்ச்சியாளர்களின் தலைவி
1857 ஜூலைக்குள் பிரிட்டிஷ் அதிகாரிகளைத் தாக்கியதற்காக சிப்பாய் மங்கள் பாண்டே பாரக்பூரில் தூக்கிலிடப்பட்டார். மீரட், கான்பூர் மற்றும் டெல்லி ஆகியவை கிளர்ச்சியின் நெருப்பில் எரிந்து கொண்டிருந்தன, ஜான்சியின் ஜோகுன் பாக் நகரில் பிரிட்டிஷ் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்ட பிறகு ராணி லக்ஷ்மிபாய் ஜான்சியைக் கட்டுப்படுத்த முயன்றார்.
சின்ஹட்டில் ஆங்கிலேயர்களின் தோல்வி பற்றிய செய்தி பரவியதும், கிளர்ச்சி வீரர்கள் லக்னெளவை அடையத் தொடங்கினர். அடுத்த எட்டு மாதங்களுக்கு, அதாவது மார்ச் 1858 வரை, ஹஸ்ரத் மஹால் லக்னெளவில் கிளர்ச்சியாளர்களை வழிநடத்தினார்.
இதற்கிடையில் மூன்று மாதங்கள் வரை, 37 ஏக்கர் பரப்பளவுள்ள குடியிருப்பு, முற்றுகைக்கு உட்பட்டது. பிரிட்டிஷ் மகளிர், குழந்தைகள், வீரர்கள், இந்திய வீரர்கள், அவர்களின் ஆதரவாளர்கள் மற்றும் ஊழியர்கள் என மூவாயிரம் பேர் இருந்தனர்.

பட மூலாதாரம், PENGUIN
ரெசிடென்சி சுமார் 35,000 கிளர்ச்சியாளர்களால் சூழப்பட்டுள்ளது என்றும் ஒவ்வொரு நாளும் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது என்றும் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.
ஜேம்ஸ் நீல் என்ற ஆங்கிலேய அதிகாரி, லார்டு கேனிங்கிற்கு எழுதிய கடிதத்தில், 'குடியிருப்பின் உள்ளே நிலைமை மிகவும் மோசமாகிவிட்டதால், கிளர்ச்சியாளர்களுக்கு முன்னால், அதிகபட்சம் 15-20 நாட்கள்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்று லாரன்ஸ் நினைக்கத் தொடங்கினார்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் கிளர்ச்சி பற்றிய செய்திகளை திரட்ட அனுப்பப்பட்ட 'தி டைம்ஸ்' நாளிதழின் செய்தியாளர் விவியம் ஹாவர்ட் ரஸ்ஸல், தனது அறிக்கையில், 'மூன்று மாத முற்றுகையின் போது, மூவாயிரம் பிரிட்டிஷ் மக்களில் பலர் தப்பிக்க முடிந்தது. சிலர் கொல்லப்பட்டனர். பேகம், அற்புதமான ஆற்றலையும் திறமையையும் வெளிப்படுத்தி, தன் மகனின் உரிமைக்காகப் போராடும்படி ஆவாத் முழுவதையும் அணிதிரளவைத்தார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
லாரன்ஸ் குடியிருப்புக்குள்ளேயே இறப்பு
1857 ஜூலை மாத தொடக்கத்தில் ஒரு நாள், ஹென்றி லாரன்ஸ் எல்லா தளங்களையும் ஆய்வு செய்த பிறகு தனது குடியிருப்பு அறைக்குத் திரும்பினார். ஒரு நாள் முன்னதாக அவரது அறையில் ஒரு ஹோவிட்சர் ஷெல் வெடித்தது. ஆனால் அதில் லாரன்ஸ் காயமடையவில்லை.
ருத்ராங்ஷு முகர்ஜி தனது 'டேட்லைன் 1857 ரிவோல்ட் அகென்ஸ்ட் தி ராஜ்' என்ற புத்தகத்தில், 'லாரன்ஸின் ஊழியர்கள் அவரை ரெசிடென்சியின் உட்புறம் நோக்கியிருந்த மற்றொரு அறைக்கு செல்லும்படி அறிவுறுத்தினர். மறுநாள் அறையை மாற்றலாம் என்று லாரன்ஸ் முடிவு செய்தார். ஒரே இடத்தில் இரண்டு முறை தாக்குதல் நடத்த நினைக்கும் வீரர் யாரும் இருக்க மாட்டார்கள் என்று அவர் நினைத்தார்.
ஆனால் எது நடக்காது என்று அவர் நினைத்தாரோ அது நடந்தது. லாரன்ஸ் கடிதம் எழுதிக் கொண்டிருந்த போது, அவரது அறையில் மற்றொரு குண்டு வெடித்தது. ஹென்றி லாரன்ஸ் படுகாயமடைந்தார். காயம் மிகவும் கடுமையாக இருந்ததால் அவரைக் காப்பாற்ற முடியாமல்போனது. அவர் ஜூலை 4ஆம் தேதி காலமானார். அவர் குடியிருப்புக்குள்ளே அமைதியாக அடக்கம் செய்யப்பட்டார். அடுத்த சில நாட்களுக்கு அவரது மரணம் பற்றி யாரும் அறிய அனுமதிக்கப்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images
பேகம் ஹஸ்ரத் மஹாலின் அரசவை
ஆங்கிலேயர்களை எதிர்ப்பதற்கான எல்லா முடிவுகளும் பேகம் ஹஸ்ரத் மஹாலின் அரசவையில் மேற்கொள்ளப்பட்டன.
"பேகத்தின் இடத்தில் அரசவை கூடும்போது, அரசு உறுப்பினர்கள் மற்றும் தளபதிகள் அனைவரும் அதில் பங்கேற்பது வழக்கம். தாரா கோட்டியில் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்பட்டன. 'தர்பார் பிர்ஜிஸ் கத்ரு' என்ற பெயரில் விளம்பரங்களை வெளியிடுவார்கள். மக்கள் தங்கள் மதத்தை காப்பாற்ற போராட வேண்டும் என்று அதில் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்த விளம்பரங்களில் ஆங்கிலேயர் ஆட்சியும் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கப்பட்டது," என்று நேரில் பார்த்த சாட்சி ஒருவர் கூறியுள்ளார்.
இது தவிர, தர்பார் பிர்ஜிஸ் கத்ரு என்ற பெயரில் தாலுகாக்களின் தலைவர்களுக்கு ஹுகும்நாமா (உத்தரவு) வழங்கப்பட்டது. இந்த ஹுக்கும்னாமாக்கள் மக்களால் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதும், மக்கள் மீதான அவற்றின் தாக்கமும், ஆங்கிலேயர்களை சாமானியர்கள் எதிர்த்தவிதத்தில் தெளிவாகத் தெரிந்தது.
லக்னெள ரெசிடென்சியில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்காக கான்பூரில் இருந்து அனுப்பப்பட்ட ஹென்றி ஹேவ்லாக் மற்றும் ஜேம்ஸ் அவுட்ராம் ஆகியோரின் துருப்புக்கள் சாதாரண கிராமவாசிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டன.

பட மூலாதாரம், TWITTER
சண்டை நடப்பதற்கு இடையிலும், லக்னெள தெருக்களில் கொண்டாட்ட சூழல் நிலவியது. மக்கள் ஒருவருக்கொருவர் ஹல்வா, பூரி மற்றும் இனிப்புகளை விநியோகித்தனர்.
டெல்லியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் லக்னெளவை அடைந்த கிளர்ச்சியாளர்கள் 1857 செப்டம்பர் 25 ஆம் தேதி, ஹேவ்லாக் மற்றும் அவுட்ராமின் படைவீரர்கள் ரெசிடென்சிக்குள் நுழைந்தபோது கிளர்ச்சியாளர்களுக்கு முதல் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் ஆங்கிலேய படைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் அதை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை.

பட மூலாதாரம், Getty Images
அவர்கள் உள்ளே சென்றபிறகு ஒரு வகையில் தனிமைப்படுத்தப்பட்டனர். தனது தோழர்களுடனான தொடர்பை இழந்தனர்.
சார்லஸ் பால் தனது 'ஹிஸ்டரி ஆஃப் தி இந்தியன் மியூட்டினி' புத்தகத்தில், 'அவுட்ராமின் ஒவ்வொரு சமரச முயற்சியும் பேகம் ஹஸ்ரத் மஹாலால் நிராகரிக்கப்பட்டது," என்று எழுதினார்.
ஏனெனில், அந்த நேரத்தில் டெல்லியை ஆங்கிலேயர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதால், அங்கிருந்த கிளர்ச்சியாளர்கள் அவத் கிளர்ச்சியாளர்களுக்கு உதவ லக்னெள வந்தடைந்தனர்.
ருத்ராங்ஷு முகர்ஜி தனது 'அவத் இன் ரிவோல்ட்' புத்தகத்தில், '1858 ஜனவரி வாக்கில், லக்னெளவில் கிளர்ச்சி வீரர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது. ஆங்கிலேயர்கள் லக்னெளவை விட்டு வெளியேறினாலும், அவர்கள் விரைவில் திரும்பி வருவார்கள் என்பது அப்போதைய எண்ணமாக இருந்தது," என்று எழுதுகிறார்.
பேகம் ஹஸ்ரத் மஹால் லக்னெளவை வலுப்படுத்தி, ஆங்கிலேயர் அங்கு திரும்பிவருவதை முடிந்தவரை கடினமாக்க முயற்சி செய்தார். லக்னெளவின் பாதுகாப்பை வலுப்படுத்த சுமார் 15,000 தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். கோமதி ஆற்றின் தண்ணீரை அங்கு கொண்டு வருவதற்காக கைசர்பாக்கைச் சுற்றிலும் ஆழமான அகழி தோண்டப்பட்டது.

பட மூலாதாரம், Anthem Press
ஹஸ்ரத்மஹாலின் வீரர்கள்
1857 நவம்பரில் கோலின் காம்ப்பெல் தலைமையில் பிரிட்டிஷ் துருப்புக்கள் ரெசிடென்சியில் சூழப்பட்ட பிரிட்டிஷ் மக்களையும் அவர்களின் ஆதரவாளர்களையும் வெளியேற்றினர்.
'இந்த மோதலில் 3,000 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் அவர்களின் 80 பீரங்கிகள் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டதில் இருந்து ஆங்கிலேயர்கள் எவ்வளவு எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதை அறிய முடிகிறது,' என்று சார்லஸ் பால் எழுதுகிறார்.
1857 டிசம்பர் மாத வாக்கில் காற்றின் திசை முற்றிலும் மாறத் தொடங்கியது. வாரணாசியில் கர்னல் ஜேம்ஸ் நீல் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களை மாமரத்தில் தூக்கிலிட்டு அப்பகுதி முழுவதும் பீதியை கிளப்பினார். அலகாபாத் நகரத்தில் தீயிடப்பட்டது. பீரங்கி வாயில் கட்டி மக்கள் சுடப்பட்டனர்.
'பேகத்திற்கும் அவரது வீரர்களுக்கும் மிகவும் தொந்தரவாக இருந்தது ஜேம்ஸ் அவுட்ராம் மற்றும் அவரது வீரர்கள் ஆலம்பாக் அரண்மனையில் தொடர்ந்து இருந்ததுதான்," என்று இரா முகோட்டி தனது 'ஹீரோயின்ஸ் பவர்ஃபுல் இந்தியன் விமன் ஆஃப் மித் அண்ட் ஹிஸ்டரி' என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.
பேகத்தின் வீரர்கள் ஆலம்பாக் அரண்மனையை ஒன்பது முறை தாக்கினர். ஆனால், அவர்கள் ஆங்கிலேயர்களை அங்கிருந்து வெளியேற்றவோ அல்லது கான்பூரிலிருந்து அவர்களின் விநியோக பாதைகளை துண்டிக்கவோ முடியவில்லை. பேகம் ஹஸ்ரத் மஹால் தனது யானையின் மீது அமர்ந்து இதுபோன்ற ஒரு தாக்குதலில் ஈடுபட்டார்.

பட மூலாதாரம், ALEPH BOOK COMPANY
ஆனால், 'ஹஸ்ரத் மஹால் சண்டையில் பங்கேற்கவில்லை. அவர் அதைத் திட்டமிட்டதோடு கூடவே சண்டை தொடர்பான எல்லா உத்தரவுகளும் அவரது அரசவையில் இருந்தே வழங்கப்பட்டன. கிளர்ச்சியாளர்களின் மன உறுதியை உயர்த்த அவர் பெருமுயற்சி மேற்கொண்டார்," என்று ருத்ராங்ஷு முகர்ஜி குறிப்பிடுகிறார்.
1856 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் அவத்தை தங்கள் ராஜ்ஜியத்துடன் இணைத்தபோது, அவர்கள் ஒரு தோட்டாவைக் கூட சுடவில்லை. ஆனால், 1858 இல் லக்னெளவை மீண்டும் கைப்பற்றுவதற்கு அவர்கள் தங்கள் முழு பலத்துடன் சண்டையிட வேண்டியிருந்தது.
பேகமை எதிர்த்த மௌலவி அகமதுல்லா
ஆனால், பேகம், பிரிட்டிஷாரை விட தனது சொந்த மண்ணைச் சேர்ந்த மௌல்வி அகமதுல்லா ஷாவிடமிருந்து அதிக எதிர்ப்பை சந்தித்தார். ஆங்கிலேயர்களை வீழ்த்த கடவுளிடம் இருந்து நேரடியாக தான் உத்தரவு பெற்றதாக ஷா கூறினார். மக்கள் மத்தியில் பிரபலமான மௌலவி, தான் குவாலியரின் மெஹ்ராப் ஷாவின் சீடர் என்று கூறினார்.
ருத்ராங்ஷு முகர்ஜி தனது 'அவத் இன் ரிவோல்ட்' புத்தகத்தில், 'அகமதுல்லா ஆக்ராவில் ஒரு ஃபக்கீராக வாழ்ந்தார். அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஜிஹாத் நடத்தினார். அப்போது அவருக்கு வயது நாற்பது. அவர் மிகக் குறைந்த கல்வியறிவு பெற்றவர். பாரசீக மற்றும் அரபு மொழிகளில் சிறிது பேசக்கூடியவர். சின்ஹட் போரின் போது அவர் உடனிருந்தார்," என்று எழுதியுள்ளார்.
பேகம் ஹஸ்ரத் மஹால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ,மெளல்வி லக்னெளவுக்குள் நுழைவதை விரும்பவில்லை. ஆனால், கிளர்ச்சியாளர்கள் மீது ஆங்கிலேயர்களின் அழுத்தம் அதிகரித்தபோது, மெளல்வியின் தீப்பறக்கும் பேச்சை அவர்களால் புறக்கணிக்க முடியவில்லை.
கிளர்ச்சியாளர்கள் போரில் தோல்விகளை சந்திக்கத்தொடங்கியபோது, அவரை லக்னெளவுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டிய கட்டாயம் ஹஸ்ரத் மஹாலுக்கு ஏற்பட்டது. 1858 ஜனவரி மாதத்திற்குள் கிளர்ச்சியாளர்களின் இரண்டு குழுக்கள் உருவாயின. அவத்தின் வீரர்கள் பேகம் ஹஸ்ரத் மஹால் மற்றும் பிர்ஜிஸ் கத்ரு ஆகியோரை ஆதரித்தனர். மற்ற நகரங்கள் மற்றும் டெல்லியைச் சேர்ந்த வீரர்கள் மௌல்விக்கு ஆதரவாக இருந்தனர்.

பட மூலாதாரம், Roli books
ஆங்கிலேயருக்கு ஆதரவாக நேபாள கூர்க்கா வீரர்கள்
நேபாளத்தின் ஜங் பகதூர் ராணாவின் பயங்கரமான கூர்க்கா வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு உதவ லக்னெளவை அடைகிறார்கள் என்ற செய்தி திடீரென்று வந்தது.
'கூர்க்கா வீரர்களுக்கு ஈடாக ஜங் பகதூருக்கு கோரக்பூர் நகரத்தையும், லக்னெளவை கொள்ளையடித்து அதில் ஒரு பகுதியையும் தருவதாக ஆங்கிலேயர்கள் கூறியிருப்பதை பேகம் அறிந்தார். இதை முறியடிக்க பேகம் ஹஸ்ரத் மஹால் ஜங் பகதூருக்கு மாற்று யோசனையை அளித்தார்," என்று ருத்ராங்ஷு முகர்ஜி எழுதுகிறார்.
ராணா ஆங்கிலேயர்களுக்கு உதவாவிட்டால், கோரக்பூரைத் தவிர ஆசம்கர், ஆரா மற்றும் வாரணாசியையும் அவரிடம் ஒப்படைப்பதாக பேகம் அவருக்கு செய்தி அனுப்பினார். ஆனால், ஃபக்கீர் வேடத்தில் அனுப்பப்பட்ட பேகத்தின் தூதர்கள் வழியில் ஆங்கிலேயர்களால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இதன் விளைவாக ஆங்கிலேயர்களுக்கு ஆதரவளிக்க கூர்க்கா வீரர்கள் தொடர்ந்து லக்னெள நோக்கி அணிவகுத்துச் சென்றனர்.
ஆங்கிலேயர்கள் நுழைவதற்குள் தப்பிய ஹஸ்ரத் மஹால்
1858 பிப்ரவரியில் பேகம் தனது தாலுகா தலைவர்களில் ஒருவரான மான் சிங்கின் துரோகத்தையும் சந்திக்க வேண்டியிருந்தது.
இதற்கிடையில், கேம்ப்பெல் தலைமையில், சுமார் 60,000 பிரிட்டிஷ் வீரர்கள் லக்னெளவை நோக்கி முன்னேறினர். இவர்களில் 40,000 வீரர்கள் சண்டையிடுவதற்காக ஐரோப்பாவில் இருந்து இந்தியா வந்தனர். கடைசியில் ஆங்கிலேயர்கள் கைசர்பாக்கை கைப்பற்றினர். ஹஸ்ரத் மஹாலை பாதுகாக்க கிளர்ச்சியாளர்கள் தங்கள் உயிரைக் கொடுத்துப்போராடினர்.
டபிள்யூ.ஹெச்.ரஸ்ஸல் தனது 'மை டைரி இன் இந்தியா' என்ற புத்தகத்தில், 'பேகம் இறுதிவரை மனம் தளரவில்லை. அவர் கைசர்பாக்கில் தொடர்ந்து தங்கினார். பிரிட்டிஷ் வீரர்கள் அரண்மனைக்குள் நுழைவதற்கு முன்பு அவர் 1858 மார்ச் 15 ஆம் தேதி தனது ஆதரவாளர்கள் சிலருடன் தப்பித்துச்சென்றார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
லக்னெளவுக்கு வெளியே உள்ள மூசா பாக் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இரண்டாவது போர்முனையைத் திறந்தார். அவர் 1858 மார்ச் 21 ஆம் தேதி மூசா பாக்கில் மௌல்வி அகமதுல்லாவுடன் ஆங்கிலேயருக்கு எதிரான கடைசி போரில் ஈடுபட்டார். ஆனால், இந்த போரில் ஆங்கிலேயர்கள் அவரை தோற்கடித்தனர்.
இதைத்தொடர்ந்து, கிளர்ச்சியாளர்கள் அனைவரும் கலைந்துவிட்டனர். மௌல்வி ரோஹில்கண்ட் நோக்கிச்சென்றுவிட்டார். அங்கு அவர் ஆங்கிலேயர்களை கொரில்லா போரால் திக்குமுக்காட வைத்தார். ஆனால், அவரது தோழர்களில் ஒருவர் அவருக்கு துரோகம் செய்து மெளல்வியின் தலையை வெட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
நேபாளத்தில் தஞ்சம் புகுந்த பேகம்
பேகம் ஹஸ்ரத் மஹால் தனது மகன் மற்றும் ஆதரவாளர்களுடன் நேபாளத்தின் எல்லையை நோக்கிச் சென்றார். அவர் காக்ரா நதியைக் கடந்து, பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள பூந்தி கோட்டையைத் தனது தளமாக்கினார்.
புந்தேல்கண்டிலிருந்து தப்பிய மராட்டியத் தலைவர் நானா சாஹேப்பும் அங்கு வந்தடைந்தார். லக்னெளவை விட்டு வெளியேறிய பிறகும் பேகத்துடன் 15,000 முதல் 16,000 வீரர்கள் இருந்தனர். அவரிடம் 17 பீரங்கிகளும் இருந்தன. இவ்வளவு தூரத்தில் இருந்தபோதிலும், அவத்தின் நிர்வாகத்தை நடத்தும் முயற்சிகளை அவர் கைவிடவில்லை.
அங்கிருந்தும் பிர்ஜிஸ் கத்ரு என்ற பெயரில் ஆணைகள் வெளியிடப்பட்டன. வீரர்களுக்கு சம்பளமும் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால், எல்லா நம்பிக்கைகளும் தீர்ந்து போகத் தொடங்கி ஆங்கிலேயர்கள் தங்களை பிடித்துவிடுவார்கள் என்று தோன்றியபோது, பேகம் நேபாளத்தில் தஞ்சம் அடைய முடிவு செய்தார்.
பேகம் ஹஸ்ரத் மஹால் நேபாளத்தில் அமைதியாக வாழ்வதாக உறுதியளித்தால், அவர் அங்கு தங்க அனுமதிக்கப்படுவார் என்றும், நேபாள நிலத்தில் தனக்கு எதிரான வன்முறை அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஜங் பகதூர் ராணா அறிவித்தார். பின்னர் ஹஸ்ரத் மஹால் தனது வாழ்நாள் முழுவதையும் நேபாளத்தில் கழித்தார்.

பட மூலாதாரம், HURST
நேபாளத்தில் தனது இறுதிமூச்சை விட்ட பேகம் ஹஸ்ரத் மஹால்
1857 ஆம் ஆண்டு நடந்த முதல் சுதந்திரப் போரில் ஈடுபட்ட ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியாத ஒரே தலைவர் ஹஸ்ரத் மஹால்தான்.
இதற்கிடையில், அவரது முன்னாள் கணவர் வாஜித் அலி ஷா, கிளர்ச்சியில் ஹஸ்ரத் மஹாலின் பங்கைக் கண்டு மிகவும் கோபமடைந்தார்.
ஹஸ்ரத் மஹால் தனது பெயரைப் பயன்படுத்துவது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கர்னல் கெவெனாக்கிடம் புகார் செய்தார்.
வாஜித் அலி ஷா தனது மீதமுள்ள வாழ்நாள் முழுவதையும் கல்கத்தாவிற்கு அருகில் உள்ள மத்தியா புர்ஜில் கழித்தார்.

பட மூலாதாரம், PENGUIN
பேகம் ஹஸ்ரத் மஹால் 1879 வரை உயிர் வாழ்ந்தார். இந்தியா திரும்பும் அவரது விருப்பத்தை கடைசி வரை ஆங்கிலேயர்கள் ஏற்கவில்லை. எஸ்.என்.சென் தனது '1857' புத்தகத்தில், "ஆங்கிலேயர்கள் அவருக்கு வாஜித் அலி ஷாவைப் போல ஓய்வூதியம் வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால், பேகம் அதை நிராகரித்தார். அவர் நேபாளத்தில் காலமானார். அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். ஆனால், ஆங்கிலேயர்களுடன் நேருக்கு நேர் சமமாக போரிட்ட இந்தப் பெண்மணிக்கு வரலாற்றில் உரிய இடம் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். விக்டோரியா மகாராணி அரியணை ஏறிய 50 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பேகத்தின் மகன் பிர்ஜிஸ் கத்ருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. அவர் இந்தியாவுக்குத் திரும்பி கல்கத்தாவில் வசிக்கத் தொடங்கினார். அங்கு அவர் 1893 ஆகஸ்ட் 14 ஆம் தேதி காலமானார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












