பேரரசர் பிருத்விராஜ் சௌஹான் vs முகமது கோரி: வரலாற்றில் எது கற்பனை? எது உண்மை?

பட மூலாதாரம், PUNEETBARNALA/BBC
- எழுதியவர், விகாஸ் திரிவேதி
- பதவி, பிபிசி செய்தியாளர்
(உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 43வது கட்டுரை இது.)
'குழந்தைகளே, சமூக அறிவியல் புத்தகத்தைப் பையில் இருந்து எடுங்கள். அத்தியாயம்-2ஐ திறங்கள். இந்திய வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்த அந்தக் கதையை இன்று படிப்போம். 'புதிய ராஜாவும் அவருடைய ராஜ்ஜியமும்' என்ற இந்த அத்தியாயத்தைக் கவனமாகப் படியுங்கள். இதில் பிருத்விராஜ் செளஹானின் கதையும் டெல்லியின் கதையும் உள்ளது.'
என்சிஇஆர்டி ஏழாம் வகுப்பு 'ஹமாரி அதீத்' (நம் கடந்தகாலம்) புத்தகத்தைக் கற்பிக்கும் போது பள்ளியில் ஆசிரியர்கள் கிட்டத்தட்ட இதே விஷயங்களைச் சொல்லித்தான் கற்பிக்கத் தொடங்குகிறார்கள்.
ஆனால், கற்றுக்கொடுக்கப்பட்ட வரலாற்றை வளர்ந்த பிறகும் நினைவில் வைத்துக் கொள்வது எவ்வளவு கடினம் என்பதற்கு சமீபத்திய உதாரணம், பிருத்விராஜ் செளஹான் வரலாற்று கதாபாத்திரத்தில் நடித்த அக்ஷய் குமார்.
'சம்ராட் பிருத்விராஜ் செளஹான்' படத்தின் பிரமோஷனின்போது, அக்ஷய் குமார் ஒரு பேட்டியில், "துரதிர்ஷ்டவசமாக நமது வரலாற்று புத்தகங்களில் பிருத்விராஜ் செளஹானைப் பற்றி இரண்டு அல்லது மூன்று வரிகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. படையெடுப்பாளர்கள் பற்றி நிறையவே எழுதப்பட்டுள்ளது. ஆனால் நம் நாட்டு மன்னர்கள் பற்றி இரண்டு வரிகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. நம்முடைய அரசர்களும் உயர்ந்தவர்கள். அவர்களுடைய கதைகளை எல்லோர் முன்னிலையிலும் கொண்டு வாருங்கள். படத்தின் இயக்குநர் டாக்டர் சந்திரபிரகாஷ் திவேதி என்னிடம் கதையைச் சொன்னபோது, பிருத்விராஜ் செளஹானைப் பற்றி நமக்குத் தெரியாத பல விஷயங்கள் இருப்பதாக உணர்ந்தேன். இதெல்லாம் உண்மையா, கற்பனை இல்லையே என்று நான் அவரிடம் கேட்டேன்," என்று குறிப்பிட்டார்.
பிருத்விராஜ் செளஹானின் பிரபலமான கதைகள் கற்பனையா அல்லது யதார்த்தமா என்பதை நாம் புரிந்து கொள்ள முயல்வோம். பிருத்விராஜ் சௌஹானை பற்றி கல்வெட்டுகளிலும் சரித்திரப் புத்தகங்களிலும் என்ன பதிவாகி இருக்கிறது, பிருத்விராஜ் சௌஹானின் சில கதைகளை கவிஞரின் கற்பனை, உண்மை அல்ல என்று சொல்பவர்களின் வாதங்கள் என்ன?
பிருத்விராஜ் ராசோ என்றால் என்ன?
திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், பாட்டி கதைகள் அல்லது உறவினர்களின் வாட்ஸ் அப் குழுவில் நீங்கள் படித்த அல்லது பார்த்திருக்கும் பிருத்விராஜ் செளஹானின் கதைகள் இந்த 'பிரித்விராஜ் ராசோ'வில் இருந்து வந்திருக்கலாம்.
1000-1400 வது ஆண்டுகளுக்குள்ளாக ஆதிகாலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் பிருத்விராஜ் ராசோ ஒரு சிறந்த கவிதைத் தொகுப்பு. இந்தி இலக்கியம் ஆதிகால், பக்திகால், ரிதிகால் மற்றும் ஆதூனிக் கால் என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இலக்கிய வரலாற்றின் வளர்ச்சியின் ஆரம்பக் காலம், ஆதிகால் என்று அழைக்கப்படுகிறது.
பிருத்விராஜ் ராசோ என்பது பிருத்விராஜ் செளஹானின் கதை சொல்லப்பட்டுள்ள ஒரு கவிதை. இந்தக் கவிதையை எழுதியவர் சந்த் பர்தாயி என்று கூறப்படுகிறது.
பிருத்விராஜ் ராசோவின் கதை இப்படி இருக்கிறது, "பிரித்விராஜ் அஜ்மீர் மன்னர் சோமேஷ்வரின் மகன். சோமேஷ்வர், டெல்லி அரசர் அனங்பாலின் மகள் கமலாவை மணந்தார். இரண்டாவது மகள் கன்னோஜ் மன்னர் விஜய்பால் என்பவரை மணந்தார். அவர்களுக்கு ஜெய்சந்த் என்ற மகன் பிறந்தான். அனங்பால் பேரன் பிருத்விராஜை தத்தெடுத்தார். ஜெய்சந்த் வருத்தமாக உணர்ந்தார். பின்னர், ஜெய்சந்த் ஒரு யாகத்தை ஏற்பாடு செய்து மகள் சய்யோகிதாவின் சுயம்வரத்தை நடத்தினார். பிருத்விராஜ் யாகத்திற்கு வரவில்லை. கோபமடைந்த ஜெய்சந்த், பிருத்விராஜ் சிலையை வாசலில் வைத்தார். சய்யோகிதாவுக்கு பிருத்விராஜை மிகவும் பிடிக்கும். சிலைக்கு மாலை அணிவித்து தனது காதலை வெளிப்படுத்தினார் சய்யோகிதா. பின்னர் பிருத்விராஜ் வந்து சண்டையிட்டு சய்யோகிதாவை டெல்லிக்கு அழைத்து வந்தார்."
"பிருத்விராஜின் கவனம் சய்யோகிதாவின் மீதுதான் இருந்தது. இதற்கிடையில் முகமது கோரியின் தாக்குதல் நடந்தது. பிருத்விராஜ் கோரியை தோற்கடித்து அவரை விட்டுவிட்டார். கோரி மீண்டும் தாக்குதல் நடத்தினார். பிருத்விராஜை சிறைபிடித்து கஜினிக்கு அழைத்துச் சென்றார். கவி சந்த் பர்தாயியும் பின்னாலேயே வந்துவிட்டார். சந்தின் உத்தரவின் பேரில், பிருத்விராஜ் முதலில் கோரியை அம்பினால் தாக்கி அழித்தார். பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி இறந்தனர்", என்று பிருத்விராஜ் ராசோ கூறுகிறது.
இதுதான் பிருத்விராஜ் ராசோவின் கதை. இது நாட்டுப்புறக் கதைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய பிரிவினர் இதை உண்மை என்று நம்புகின்றனர்.
ஆனால் இந்தி இலக்கியத்தின் நன்கு அறியப்பட்ட அறிஞர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் இதை உண்மை என்று கருதவில்லை.

பட மூலாதாரம், PUNEETBARNALA/BBC
பிருத்விராஜ் ராசோ எப்போது இயற்றப்பட்டது?
ஆச்சார்யா ராமச்சந்திர சுக்லா வரலாற்றாசிரியரும் ஹிந்தி இலக்கியத்தின் சிறந்த அறிஞரும் ஆவார். அவர் 1884 இல் பிறந்து 1941 இல் காலமானார்.
ஆச்சார்யா சுக்லா தனது 'ஹிந்தி சாஹித்ய கா இதிஹாஸ்' என்ற புத்தகத்தில், "பிரித்விராஜ் ராசோவில் கொடுக்கப்பட்ட ஆண்டுகள் வரலாற்று உண்மைகளுடன் ஒத்துப்போவதில்லை. இப்படிப்பட்ட நிலையில், பிருத்விராஜ் காலத்தில் இது எழுதப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிருத்விராஜ் ராசோ, 16 ஆம் நூற்றாண்டில் (ஆண்டு 1500 முதல் 1600 வரை) எழுதப்பட்ட ஒரு பொய்க்கதை என்று பல அறிஞர்கள் கூறுகின்றனர். ராசோவில் செங்கிஸ், தைமூர் போன்ற பிற்கால ஆட்சியாளர்களின் பெயர்கள் உள்ளதால், இந்த சந்தேகம் மேலும் வலுப்பெறுகிறது."என்று எழுதியுள்ளார்.
ஆச்சார்ய சுக்லாவின் இந்தக்கருத்தை ஒரு வரலாற்று உண்மையிலிருந்து புரிந்துகொள்வோம்.
பிருத்விராஜ் செளஹானின் ஆட்சி 1177 முதல் 1192 வரை இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சந்த் பர்தாயியோ அல்லது அவரது மகன்களோ, பிருத்விராஜ் ராசோவில் ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி செய்த தைமூரை குறிப்பிடுவது எப்படி சாத்தியம்?
பிரபல வரலாற்றாசிரியரும் ஹிந்தி எழுத்தாளருமான ராய் பகதூர் பண்டிட் கௌரிசங்கர் ஹிராசந்த் ஓஜாவும், 'பிருத்விராஜ் ராசோ'வை ஒரு புனைகதை என்று அழைக்கிறார்.
"பிருத்விராஜின் அரசவையில் காஷ்மீரி கவிஞரான ஜயானக், சமஸ்கிருதத்தில் 'பிருத்விராஜ் விஜய்' என்ற கவிதையை எழுதியுள்ளார். அது முழுமையாக கிடைக்கப் பெறவில்லை. இதில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் வரலாற்றின்படி துல்லியமாகத் தெரிகிறது. இதில், பிருத்விராஜின் தாயாரின் பெயர் கற்பூர்தேவி என்று எழுதப்பட்டுள்ளது. இதற்கு ஹன்சி கல்வெட்டும் ஆதாரமாக உள்ளது," என்று ஆச்சார்ய சுக்லா எழுதியுள்ளார்.
ஹரியானாவின் ஹிசாரில் ஹன்சி இருக்கிறது. பிருத்விராஜ் செளஹானின் கோட்டையால் இந்த இடம் பிரபலமாக உள்ளது.
இங்கிருந்து கிடைத்த கல்வெட்டுகள் அல்லது நன்கொடை கடிதங்கள் மற்றும் பழங்கால நாணயங்கள் பிருத்விராஜ் ராசோவில் எழுதப்பட்ட ஆண்டு (சம்வத்) உடன் பொருந்தவில்லை.
உதாரணமாக, சம்வத் 1115இல் அதாவது 1080ஆம் ஆண்டில் பிருத்விராஜ் மற்றும் முகமது கோரியின் போரைப் பற்றி சந்த் எழுதினார். கல்வெட்டுகள் மற்றும் பாரசீக வரலாற்றின்படி, கோரி மற்றும் பிருத்விராஜ் செளஹானுக்கு இடையிலான போர் 1191ஆம் ஆண்டு நடந்தது. அதே ஆண்டுதான், இந்திய வரலாற்று புத்தகங்களிலும் காணப்படுகிறது.

பட மூலாதாரம், BOOKCOVER
பிருத்விராஜ் ராசோவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் என்ன வாதங்கள் உள்ளன?
பிருத்விராஜ் ராசோவை நியாயப்படுத்தும் கருத்துகளை நிபுணர்கள் தெரிவிக்கவில்லை என்று கூறமுடியாது.
ஆனால் இங்கே ஷக் சம்வத், விக்ரம் சம்வத் மற்றும் ஆங்கில நாட்காட்டிக்கு இடையே என்ன வித்தியாசம் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஷக் சம்வத் ஆங்கில நாட்காட்டியை விட 78 வருடங்கள் பின்தங்கியும், விக்ரம் சம்வத் 57 வருடங்கள் முன்னாலும் உள்ளது.
பண்டித மோகன் லால் விஷ்ணு லால் பண்டியா, பாபு ஷியாம் சுந்தர் தாஸ் மற்றும் டாக்டர் தஷ்ரத் ஷர்மா ஆகியோர் இந்தியில் சிறந்த நிபுணர்களாகக் கருதப்பட்டனர். இவர்கள் 'பிருத்விராஜ் ராசோ'வை சரியென ஏற்றுக்கொள்வதற்கு ஆதரவாக இருந்தனர்.
"பிரித்விராஜ் ராசோவில் உள்ள சம்வத்தின் வேறுபாடு 90-91 ஆண்டுகளின் வித்தியாசத்தின் விதியை அடிப்படையாகக் கொண்டது. இந்த வேறுபாடு வேண்டுமென்றே வைக்கப்பட்டுள்ளது, தவறுதலாக அல்ல", என்று பண்டியா குறிப்பிடுகிறார்.
அதற்கு ஆதரவாக பண்டியா, பிருத்விராஜ் ராசோவின் ஒரு ஜோடி கவிதை வரிகளைக் குறிப்பிட்டார்.
"ஏகாதஸ் சய் பஞ்சதஹ் விக்ரம் சாக் ஆனந்த்…." என்ற வரிகளில், சாக் ஆனந்த் என்பதன் பொருள் பூஜ்யம். நந் என்றால் 9, அதாவது விக்ரம் சம்வத்தில் இருந்து 90 ஆண்டுகள் கழிக்க வேண்டும்.
ஆனால் ஆச்சார்ய சுக்லா உட்பட பல அறிஞர்கள், 90 ஆண்டுகள் எப்படிக் குறைக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர்.
"நந்தவன்ஷிகள் சூத்திரர்கள். எனவே அவர்களின் ஆட்சி காலத்தை ராஜபுத்திரர்கள் அகற்றிவிட்டனர். பண்டியாவின் இத்தகைய வாதங்கள் கற்பனை மட்டுமே. ஏனென்றால் இன்று வரை நடைமுறையில் உள்ள விக்ரம் சம்வத்தில் இருந்து சில ஆண்டுகள் கழிக்கப்பட்ட எந்த ஒரு சம்பவமும் தெரியவரவில்லை. பிரித்விராஜ் ராசோவை தற்காலக் கவிஞன் இயற்றியிருந்தால், சில பகுதிகள் மட்டுமே பின்னால் இருந்தாலும், சில சம்பவங்கள் சரியாக இருந்திருக்கும்," என்று ஆச்சார்ய சுக்லா தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
டாக்டர் நாகேந்திரா மற்றும் டாக்டர் ஹர்தயாள் பதிப்பகத்தின் கீழ் வெளியிடப்பட்ட 'ஹிந்தி சாஹித்யா' புத்தகத்திலும் இது பற்றிய கூடுதல் தகவல்கள் உள்ளன.
"பிரித்விராஜ் ராசோவை போலி என்று கருதியவர்களின் வாதங்களில் ஒன்று, அதில் அரபு-பாரசீக வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது. ஆனால் கவி சந்த், லாகூரில் வசிப்பவர் என்றும் இந்தப் பகுதி முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது என்றும் எனவே அரபு-பாரசீக வார்த்தைகள் தவிர்க்க முடியாதவை என்றும் ரசோ ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்," என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையெல்லாம் மீறி, வரலாற்றின் பார்வையில் மட்டுமே பார்த்தால், பிருத்விராஜ் ராசோவின் நிகழ்வுகள் வரலாற்றுடன் ஒத்துப்போவதில்லை என்று பெரும்பாலான நிபுணர்கள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், HARYANAGOV
பிருத்விராஜ் ராசோவின் எழுத்து காலம் மற்றும் விவாதம்
இவ்வளவு பெரிய 'பிரித்விராஜ் ராசோ'வை எழுதியது யார், அது எப்போது எழுதப்பட்டது?
"பிருத்விராஜ் ராசோ 1600 விக்ரம் சம்வத்தில் அதாவது 1543ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. அதாவது பிருத்விராஜ் செளஹானின் ஆட்சிக்காலத்திற்கு 351 ஆண்டுகளுக்குப் பிறகு,"என்று கௌரிசங்கர் ஓஜா கூறுகிறார்.
"பிருத்விராஜின் மகன்கள் கோவிந்தராஜ் அல்லது ஹரிராஜ் ஆகியோரின் சில சந்ததியினரில், சந்த் என்ற கவிஞர் இருந்திருக்க வேண்டும். அவர் தனது மூதாதையரான பிருத்விராஜின் வீரத்தைப் பற்றி எழுதியிருப்பார். இவை அனைத்தும் ஒரே காலகட்டம் எனக் கருதி ராசோ பெயரில் இவை சேர்க்கப்பட்டுள்ளன," என்று ஆச்சார்ய சுக்லா எழுதினார்.
மொழியின் மட்டத்தில் கூட, 'பிருத்விராஜ் ராசோ' நிபுணர்களால் உண்மை என்று கருதப்படவில்லை. சில இடங்களில் அதன் மொழி நவீனமாகவும் சில சமயங்களில் பழமையானதாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால். பிருத்விராஜ் ராசோவில், 12ஆம் நூற்றாண்டின் மொழி, இணைப்புப் போக்குடன் காணப்படுகிறது. இது 12ஆம் நூற்றாண்டின் உரையாகத் தோன்றுகிறது என்று ஹசாரி பிரசாத் த்விவேதி கூறுகிறார்.
விஸ்வநாத் திரிபாதி, ஆச்சார்யா ஹசாரி பிரசாத் த்விவேதியின் சீடர் மற்றும் நன்கு அறியப்பட்ட இந்தி மொழி நிபுணரும் ஆவார்.
விஸ்வநாத் திரிபாதி தனது 'இந்தி சாஹித்ய கா சரள் இதிஹாஸ்' என்ற புத்தகத்தில், "பிருத்விராஜ் ராசோ உருவான காலமும் அதன் தோற்றமும் மிகவும் சர்ச்சைக்குரியவை. எனவே ராசோவின் தேதிகள், நபர்களின் பெயர்கள் மற்றும் நிகழ்வுகள் வரலாற்றுடன் பொருந்தவில்லை என்று டாக்டர் பூலர் அறிந்ததும் அதை வெளியிட வேண்டாம் என்று பரிந்துரைத்தார்," என்று எழுதியுள்ளார்.
டாக்டர் பூலருக்கு, காஷ்மீரைச் சேர்ந்த ஜெயநாக் பட் என்பவரால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 'பிருத்விராஜ் விஜய்', 1875 இல் கிடைத்தது. பிருத்விராஜ் விஜய்யில் காணப்படும் பிருத்விராஜ் செளஹானின் கதை, வரலாறு மற்றும் தேதிகளின்படி யதார்த்தத்திற்கு நெருக்கமாகத் தெரிகிறது.
'பிரித்விராஜ் ராசோ'வை பிரபலப்படுத்திய பெருமை கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரியும் வரலாற்று ஆசிரியருமான அறிஞர் கர்னல் ஜேம்ஸ் டோட் என்பவருக்கும் செல்கிறது. ராஜஸ்தானில் நியமிக்கப்பட்ட முதல் பிரிட்டிஷ் அதிகாரிகளில் ஜேம்ஸ் டோட் ஒருவர்.
ஜேம்ஸ் டோட் 1829 ஆம் ஆண்டு தனது 'அன்னல்ஸ் அண்ட் ஆண்டிக்விட்டிஸ் ஆஃப் ராஜஸ்தானின்' புத்தகத்தில் பிருத்விராஜ் ராசோவின் கதையைச் சேர்த்தார். மேலும் பிருத்விராஜ் செளஹானை வர்ணிக்க 'கடைசி இந்து ஆட்சியாளர்' போன்ற வார்த்தைகளை பலமுறை பயன்படுத்தியுள்ளார்.

பட மூலாதாரம், TWITTER/MIB_INDIA
பிருத்விராஜ் செளஹான் பற்றிய உண்மை என்ன?
பிருத்விராஜ் ராசோவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருக்கும் நிலையில், பிருத்விராஜ் செளஹான் பற்றிய உண்மை என்ன என்று நீங்கள் கேட்கலாம்.
இப்போது இதை சரித்திர ஆசிரியர்கள் மூலமாகவும், 'பிருத்விராஜ் விஜய்' மூலமாகவும் புரிந்துகொள்ள முயல்வோம்.
சதீஷ் சந்திரா இடைக்கால இந்தியாவின் நன்கு அறியப்பட்ட வரலாற்றாசிரியராகக் கருதப்படுகிறார். சதீஷ் சந்திரா,'மத்ய காலீன் பாரத்' என்ற தனது புத்தகத்தில், பிரித்விராஜ் சௌஹானைப் பற்றி எழுதியிள்ளார்.
இந்த புத்தகத்தின் 5வது அத்தியாயத்தில், சதீஷ் சந்திரா, "குஜராத் அரசர்களின் கீழ் இருந்த சௌஹான்கள், பத்தாம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் நந்தோலுக்கு தங்கள் தலைநகரை மாற்றினர். இந்த வம்சத்தின் ஆட்சியாளர் விக்ரஹராஜ், சிட்டோரை கைப்பற்றி, அஜய்மேரு அதாவது அஜ்மீரை அமைத்தார். விக்ரஹராஜ் 1151 இல் தில்லிகாவை(தில்லி) தோமர்களிடமிருந்து பறித்தார். சௌஹான் அரசர்களில் மிகவும் பிரபலமானவர் 1177ஆம் ஆண்டில் அரியணை ஏறிய மூன்றாம் பிருத்விராஜ் ஆவார். பிருத்விராஜ் உடனடி விரிவாக்க கொள்கையை பின்பற்றினார். பல சிறிய ராஜபுத்திர மாநிலங்களை கைப்பற்றினார். குஜராத்தின் சாளுக்கிய மன்னனுக்கு எதிரான போரில் அவர் வெற்றிபெறாததால், கங்கைப் பள்ளத்தாக்குக்கு திரும்பினார்," என்று எழுதியுள்ளார்.
"புந்தேல்கண்டின் தலைநகரான மஹோபாவிற்கு எதிராக பிருத்விராஜ் போர் தொடுத்தார். ஆல்ஹா மற்றும் ஊதல் என்ற புகழ்பெற்ற போர்வீரர்கள் கொல்லப்பட்ட போர் இதுவாகும்" , என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், மஹோபாவில் இன்னும் சொல்லப்படும் கதைகளில், பிருத்விராஜ் சௌஹானுடனான சண்டையில் ஊதல் கொல்லப்பட்டதாகவும், அதற்காக அல்ஹா பழிவாங்கினார் என்றும் அவர் பிருத்விராஜ் செளஹானுடன் போரிட்டு அவரை தோற்கடித்து குருவின் கட்டளைப்படி அவருக்கு உயிர் பிச்சை கொடுத்தார் என்றும் சொல்லப்படுகிறது.
"கன்னௌஜின் ஜெய்சந்த் இந்த போரில் மஹோபாவின் சந்தேலா மன்னருக்கு உதவினார். டெல்லி மற்றும் பஞ்சாப்பைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளையும் கஹாட்வால்கள் எதிர்கொண்டனர். இந்தப் பகை காரணமாகவே, ராஜபுத்திர அரசர்களால் கஜ்னியின் படைகளை பஞ்சாபிலிருந்து விரட்டியடிக்கும் சமரசத்தை செய்து கொள்ள முடியாமல் போனது."
பிருத்விராஜ் ராசோவில், பிருத்விராஜ் செளஹானின் பகைவன் என்று வர்ணிக்கப்பட்ட ஜெய்சந்த் இவர்தான்.

பட மூலாதாரம், TWITTER/MIB_INDIA
பிருத்விராஜுக்கும் கோரிக்கும் இடையிலான முதல் சண்டை
ஆப்கானிஸ்தானில் காபூலில் இருந்து 400 கிமீ தொலைவில் ஒரு மாகாணம் உள்ளது. அதன் பெயர் கோர்.
ஷஹாபுதீன் முகமது எனப்படும் முய்சுதின் முஹம்மது பின் சாம், இந்த இடத்தின் பெயரால்தான் முகமது கோரி என்றும் அழைக்கப்பட்டார். மேலும் இன்றும் இந்தியா முழுவதும் அவர் இந்தப் பெயரால் அறியப்படுகிறார்.
1173 ஆம் ஆண்டில், முகமது கோரி கஜினியின் அரியணையில் அமர்ந்தார். 1178 ஆம் ஆண்டில், கோரி பாலைவனத்தின் வழியாக குஜராத்தில் நுழைய முயன்றார். ஆனால் தோற்கடிக்கப்பட்டார். கோரி தயார் நிலையில் திரும்பி லாகூர், பெஷாவர் மற்றும் சியால்கோட்டை 1190 இல் கைப்பற்றினார்.
இங்கு செளஹான் அரசர்களின் அதிகாரம் அதிகரித்தது. அவர்கள் பல படையெடுத்து வந்த துருக்கியர்களைக் கொன்று அல்லது தோற்கடித்து விரட்டியடித்தனர்.
மறுபுறம்,விரிவாக்கத்தை விரும்பும் இரண்டு மன்னர்களுக்காக காலம் காத்திருந்தது. 1191 இல், முகமது கோரிக்கும், பிருத்விராஜ் செளஹானுக்கும் இடையே, தராய்யினில் (கர்னால், ஹரியானா) போர் நடந்தது.
இருவரும் தபர்ஹிந்த் (படிண்டா) மீது ஆதிக்கம் செலுத்த நினைத்ததன் காரணமாக இந்த சண்டை நடந்தது.
பிருத்விராஜ் செளஹானின் படையை தாக்குப்பிடிக்க முடியாமல் முகமது கோரியின் படை அழிக்கப்பட்டது. முகமது கோரியின் உயிரும் ஒரு இளைஞன் கல்ஜி ஸ்வரால் காப்பாற்றப்பட்டது என்று வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
பிருத்விராஜ் செளஹான் தபர்ஹிந்த் நோக்கிச் சென்றார். 12 மாத முற்றுகைக்குப் பிறகு, தபர்ஹிந்த் வீழ்ந்தது. பஞ்சாபிலிருந்து முகமது கோரியின் படையை விரட்ட பிருத்விராஜ் முயற்சிக்கவில்லை.
இங்கு முகமது கோரி இரண்டாம் போருக்குத் தயாராகி வந்தார்.

பட மூலாதாரம், OBJECTS OF TRANSLATION BOOK
1192 ஆம் ஆண்டு தராய்யின் போர்: பிருத்விராஜுக்கு என்ன நடந்தது?
1192ல் நடந்த இந்தப் போர் இந்தியாவின் வரலாற்றை மாற்றியது.
முகமது கோரி ஒரு லட்சத்து 20 ஆயிரம் வீரர்களுடன் முன்னேறியதாக கூறப்படுகிறது. அவருடன் கனரக குதிரைப்படை மற்றும் 10,000 குதிரைகளில் வில்லாளர்கள் இருந்தனர்.
"பிரித்விராஜின் முந்தைய போரின் வெற்றி நாயகன் ஸ்கந்த், வேறொரு இடத்தில் சண்டையிட்டார். பிருத்விராஜ், கோரியின் ஆபத்தை உணர்ந்தவுடன், அரசர்களின் உதவியை நாடினார். கன்னௌஜ் மன்னர் ஜெய்சந்த் தவிர பல மன்னர்கள் உதவினார்," என்று வரலாற்றாசிரியர் சதீஷ் சந்திரா எழுதியுள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஜெய்சந்த் உதவி செய்யாததற்குக் காரணம், சய்யோகிதாவின் திருமணம் தொடர்பான கதைகள் அல்ல என்றும் பழைய பகையே இதற்குக்காரணம் என்றும் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
"பிரித்விராஜ் மூன்று லட்சம் பேர் கொண்ட ராணுவத்தை களம் இறக்கினார். அதில் குதிரை வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது மற்றும் 300 யானைகள் இருந்தன. இந்திய ராணுவம் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தது. ஆனால் முகமது கோரியின் ராணுவத்தின் தலைமை மிகவும் சிறப்பாக இருந்தது." என்று சதீஷ் சந்திரா குறிப்பிடுகிறார்.
இந்தப் போரில் இந்திய வீரர்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர்.
சதீஷ் சந்திராவின்,"மத்ய காலீன் பாரத்' என்ற புத்தகத்தில், "பிரித்விராஜ் போரில் இருந்து தப்பினார். ஆனால் சிர்சா அருகே பிடிபட்டார். துருக்கிய படைகள் ஹன்சி, சரஸ்வதி மற்றும் சமனா வலுக்கோட்டைகளை கைப்பற்றின. பின்னர் அஜ்மீரை தாக்கி அதையும் கைப்பற்றின. பிருத்விராஜ் சில காலம் அஜ்மீரை ஆட்சி செய்ய அனுமதிக்கப்பட்டார்.
இதற்கு சாட்சியமளிக்கும் விதமாக, அந்தக் கால நாணயங்களும் உள்ளன. அதில் ஒரு பக்கத்தில் தேதியும், 'பிருத்விராஜ் தேவ்' என்றும் எழுதப்பட்டுள்ளது, மறுபுறம் 'ஸ்ரீ முகமது சாம்' என்றும் எழுதப்பட்டுள்ளது.
சதீஷ் சந்திராவின் புத்தகத்தில் 68வது பக்கத்தில், "சில காலத்திற்குப்பிறகு பிருத்விராஜ், சதி குற்றச்சாட்டின் பேரில் கொல்லப்பட்டார். அவரின் இடத்தில் அவரது மகன் அரியணையில் அமர்ந்தார். சிறிது காலத்திற்குப் பிறகு, பிருத்விராஜின் மகன் ரன்தம்போருக்குச் சென்று புதிய சக்திவாய்ந்த செளஹான் ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை அமைத்தார். இதனால் டெல்லி மற்றும் கிழக்கு ராஜஸ்தான் பகுதி துருக்கி ஆட்சியின் கீழ் வந்தது," என்று எழுதப்பட்டுள்ளது.
தராய்யின் போருக்குப் பிறகு முகமது கோரி, குத்புதீன் ஐபக் போன்ற தலைவர்களின் கைகளில் டெல்லியை ஒப்படைத்து, கஜினிக்குத் திரும்பினார்.
1194இல் மீண்டும் இந்தியா திரும்பிய கோரி, ஜெய்சந்துடன் போரிட்டார். போரில் ஏறக்குறைய வெற்றி பெற்ற ஜெய்சந்த் அம்பு தாக்கி இறந்தார்.
முகமது கோரி 1206ஆம் ஆண்டு கோக்ரி மீது கடைசியாக போர் தொடுத்தார். இங்கு நிறைய ரத்தம் சிந்தப்பட்டதாக வரலாற்றுப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் முகமது கோரி கஜினிக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, ஒரு மதவெறி கொண்ட முஸ்லிம் கோரியைக் கொன்றான்.

பட மூலாதாரம், YRF/TRAILERGRAB
பிருத்விராஜ் செளஹான்: பல்வேறு கதைகளும் விளக்கங்களும்
பிருத்விராஜ் செளஹானின் கதை இந்தி இலக்கியத்தில் ஆதிகால் அல்லது வீர்காதா காலம் என்று அழைக்கப்படும் அந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டவை .அரசர்களின் வீரத்தை விளக்கும் வகையில் அக்காலத்தில் கதைகள் எழுதப்பட்டன.
மேலும், இந்தியா போன்ற நம்பிக்கைகள் நிறைந்த பாரம்பரியங்களைக் கொண்ட ஒரு நாட்டில், பிருத்விராஜ் செளஹான் தொடர்பான கதைகள் இத்துடன் முடிவடையவில்லை.
பிருத்விராஜ் தொடர்பான பல கதைகள், பல ஆவணங்களில் காணப்படுகின்றன. காஷ்மீரில் டாக்டர் பூலருக்கு கிடைத்த 'பிரித்விராஜ் விஜய்' , 'தாஜ் அல்-மாசிர்', 'தப்காத்-இ-நசிரி', 'பிருத்விராஜ் பிரபந்த', 'பிரபந்த சிந்தாமணி' மற்றும் 'புராதன் பிரபந்த் சங்ர', ஆகியவை இதில் அடங்கும்.
எழுதப்பட்ட ஒவ்வொரு ஆவணமும் பிருத்விராஜ் செளஹான் தொடர்பான புதிய கதையைச் சொல்கிறது. உதாரணமாக ஜெயின் ஆவணமான- பிரபந்த் சிந்தாமணி. பிருத்விராஜ் செளஹான் பல நாட்கள் தூங்கி, தாக்குதல் நடந்தால் எழுப்பினாலும் எழுந்திருக்க மாட்டார் என்று இது தெரிவிக்கிறது.
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் வரலாறு கற்பிக்கும் பேராசிரியர் சிந்தியா டால்போட், 'தி லாஸ்ட் ஹிந்து எம்பரர்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகத்தில், காஷ்மீரின் டாக்டர் பூலருக்கு கிடைத்த 'பிருத்விராஜ் விஜய்', நிஜத்திற்கு நெருக்கமாக இருப்பதாகச் சொல்கிறார் பேராசிரியர் சிந்தியா. இதில் 1192-ன் தோல்வி பற்றி குறிப்பிடப்படவில்லை என்றாலும், அதன் பெயர் 'பிருத்விராஜ் விஜய்' என்பதால், அதில் எழுதப்பட்ட விஷயங்களும் சரியாகத் தெரிகிறது.
ஹசன் நிஜாமி எழுதிய பாரசீக ஆவணமான 'தாஜ்-அல்-மாசிர்' இல், முகமது கோரியின் 1191 போரின் தோல்வி மறைக்கப்பட்டுள்ளது. கிளர்ச்சி நடத்திய குற்றசாட்டின் பேரில் பிருத்விராஜ் சௌஹானுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை, இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் உண்மைகளைப் பார்த்தால், பாரசீக ஆவணங்களில் உள்ள 'தப்காத்-இ-நாசிரி' உண்மைக்கு நெருக்கமானது. அதன் ஆசிரியர் மின்ஹாஜ் சிராஜ் ஜுசைனி, படித்த குடும்பத்தைச் சேர்ந்தவர் மற்றும் வரலாற்றை நன்கு புரிந்து கொண்டவர்.
மின்ஹாஜ், கோரியின் தோல்விகளைப் பற்றியும் எழுதினார். மேலும் பிருத்விராஜ் கோரியை தோற்கடித்தது பற்றியும் குறிப்பிட்டார். மின்ஹாஜின் எழுத்துக்களில் ஹன்சியைப் பற்றிய குறிப்பும் உள்ளது. அங்கு கிடைத்த ஆதாரங்கள் உண்மையானவை மற்றும் கற்பனை அல்ல.

பட மூலாதாரம், BBC/PUNEETBARNALA
புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட உலகம்
"பிரித்விராஜ் சௌஹான் என்ற வரலாற்றுப் பாத்திரத்தைப் பற்றி அறிவது மிகவும் கடினம். ஏனென்றால் அந்தக் காலகட்டத்தின் விஷயங்கள் குறைவாகவே மிஞ்சியுள்ளன அல்லது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன."என்கிறார் பேராசிரியர் சிந்தியா.
ஆனால் இந்த ஆவணங்கள் அல்லது புத்தகங்கள் அனைத்திற்கும் அப்பாற்பட்டு, அஜ்மீரில் உள்ள பிருத்விராஜ் நினைவிடத்தில், பிருத்விராஜ் சௌஹானின் ஒரு பெரிய சிலை உள்ளது. அதில் அவர் கையில் குறிவைக்கப்பட்ட வில், அம்புடன் குதிரையின் மீது அமர்ந்திருக்கிறார்.
சிலையின் கீழே நிற்பவர்கள் கைகூப்பி வணங்குவதைக் காணலாம். இவர்களில் பெரும்பாலானோருக்கு பிருத்விராஜ் சௌஹானின் கதை, 'பிரித்விராஜ் ராசோ'வில் எழுதப்பட்டதைப் போலவே அல்லது அக்ஷய் குமாரின் 'சம்ராட் பிருத்விராஜ் சௌஹான்' படத்தில் காட்டப்படுவதைப்போலவே உண்மையாக இருக்கிறது.
படத்தின் ப்ரோமோஷனின் நேர்காணலில் வரலாற்றுப் புத்தகங்களை மாற்றி எழுதி சமநிலைப்படுத்துமாறு கல்வி அமைச்சரிடம் அக்ஷய் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், இயக்குனர் டாக்டர் சந்திரபிரகாஷ் திவேதி, 'சம்ராட் பிருத்விராஜ் செளஹான்' படத்திற்காக '18 வருடங்களாக செய்த ஆராய்ச்சியை' அக்ஷய் குமார் ஒரு பேட்டியில் பாராட்டியுள்ளார்.
"நீங்கள் நிறைய ஹோம்வொர்க் செய்திருப்பீர்கள் என்று பலர் என்னிடம் சொன்னார்கள். 'நான் ஏன் ஹோம்வொர்க் செய்ய வேண்டும். இதற்கு மேல் நான் ஹோம் வொர்க் செய்திருந்தால் அது நாசமாகியிருக்கும்,' என்று நான் பதில்சொன்னேன்," என்கிறார் அக்ஷய் குமார்.
வரலாறு மற்றும் வரலாற்று நாயகர்கள் தொடர்பான உண்மைகள் குறித்த சர்ச்சைகள் எப்போதுமே இருந்துவருகின்றன. ஆனால் வரலாற்றை, வரலாற்றின் கண்ணாடி வழியாக மட்டுமே பார்க்க வேண்டும், தற்போதைய அளவுருக்கள் மற்றும் கதைகளின் அடிப்படையில் அல்ல.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












