அலெக்சாண்டர் பர்ன்ஸ் வரலாறு - ஆபத்துகளுடன் விளையாடிய பிரிட்டிஷ் ஜேம்ஸ் பாண்டின் கதை

பட மூலாதாரம், CRAIG MURRAY
- எழுதியவர், வக்கார் முஸ்தஃபா
- பதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர், லாகூர்
(உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 41வது கட்டுரை இது.)
அலெக்சாண்டர் பர்ன்ஸ் தைரியம், தந்திரம் மற்றும் அழகு மீதான ரசனை உணர்வு நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்தார். இதன் காரணமாக சிலர் அவரை 'விக்டோரியன் ஜேம்ஸ் பாண்ட்' என்று அழைத்தனர். ஆபத்துகளுடன் விளையாடுபவரும் அழகின் ரசிகருமான புத்தகக் கதையின் ஹீரோ 'ஃப்ளாஷ்மேன்' பெயரையும் அவருக்குச் சிலர் அளித்தனர்.
அலெக்சாண்டர் பர்ன்ஸ் ஒரு சாகசக்காரர், போர்வீரன், உளவாளி, ராஜதந்திரி. மாறுவேடத்திலும் மொழி கற்றலிலும் நிபுணத்துவம் பெற்றவர். அழகின் ரசிகர் அவர். தனது இளமை பருவத்திலேயே அவர் கொல்லப்படாமல் இருந்திருந்தால் வேறு என்னவெல்லாம் செய்திருப்பார் எனத் தெரியவில்லை.
பர்ன்ஸ், 1805 மே 17 ஆம் தேதி ஸ்காட்லாந்தின் மாண்ட்ரோஸில் பிறந்தார். 16 வயதில் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்தில் சேர்ந்தார். அவர் பிரிட்டிஷ் இந்தியாவில் பணியாற்றும் போது உருது மற்றும் பாரசீக மொழிகளைக் கற்றுக் கொண்டார். 1822 இல் குஜராத்தில் உள்ள சூரத் நகரில் மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார்.
சிந்து நதியில் ரகசிய வேலை
அலெக்சாண்டர் பர்ன்ஸின் சாகச வாழ்க்கையின் துவக்கம், சிந்துவில் பிரிட்டிஷ் வெற்றிக்கு அடித்தளம் அமைத்த உளவுத்துறை பணியுடன் தொடங்கியது.
1829 இல், சிந்து சமவெளியை அறியும் பயணத்திற்கான பர்ன்ஸின் யோசனை அங்கீகரிக்கப்பட்டது. கிறிஸ்டோபர் ஆலன் பெய்லி பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள உளவுத்துறை அமைப்பு பற்றிய தனது நூலில், "1831 இல் தனது மற்றும் ஹென்ரி பாட்டிங்கரின் சிந்து நதி ஆய்வு மூலம் ஒரு வழி பிறந்தது," என்று எழுதினார். சிந்து மீதான எதிர்கால படையெடுப்பு மத்திய ஆசியாவுக்கான பாதையைத் திறந்தது.
அதே ஆண்டில், பிரிட்டனின் மகாராஜா நான்காவது வில்லியம் சார்பாக பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங்கிற்கு குதிரைகளைப் பரிசாக எடுத்துக் கொண்டு பர்ன்ஸ் லாகூர் வரவிருந்தார். அதுவரை அப்பகுதி சுதந்திர சமஸ்தானமாக இருந்தது. ஆனால் இந்த விஷயம் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை.
சீக்கிய சமஸ்தானத்துடனான தொடர் ஒப்பந்தங்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இந்தப் பயணம் அமைந்ததாக ஜி.எஸ் ஓஜ்லா கூறுகிறார். இந்த ஒப்பந்தங்கள் மூலம் கிழக்கிந்திய கம்பெனி சட்லெஜ் மற்றும் சிந்து நதிகள் வழியாக நீர்வழிகள் மூலம் பயணம் செய்து வர்த்தகம் செய்ய முடியும்.
17ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் அரசவைக்கு பிரிட்டன் தூதராக சர் தாமஸ் ரோவை கிழக்கிந்திய கம்பெனி அனுப்பியபோது, சிந்து நதியைப் பயன்படுத்துவதே வர்த்தக வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான சிறந்த வழி என்று அவர் கூறினார்.
ஆனால் சிந்து நதியின் நீர்வழி இணக்கத்தன்மை, மேற்கு இந்தியா மற்றும் பஞ்சாபின் மற்ற முக்கிய நதிகளுடன் அதன் இணைப்பு பற்றி தாமஸ் ரோ அப்போது அறிந்திருக்கவில்லை. அந்த நதிகளின் போக்கைப் புரிந்துகொள்ள கிழக்கிந்திய கம்பெனி இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டியிருந்தது.
ஓர் உற்சாகமான இளம் அதிகாரியான கேப்டன் அலெக்சாண்டரிடம் இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டது. இங்கிலாந்தின் மகாராஜா நான்காவது வில்லியம், மஹாராஜா ரஞ்சித் சிங்குக்கு பரிசாக அனுப்பிய ஐந்து குதிரைகளை ஒரு படகில் கொண்டு செல்லும் பொறுப்பு பர்ன்ஸுக்கு வழங்கப்பட்டது. இந்த குதிரைகள் சாலைப் பயணத்தில் உயிர் பிழைக்காது என்று ஆங்கிலேயர்கள் கூறினர்.

பட மூலாதாரம், Getty Images
கராச்சி முதல் லாகூர் வரை ஆயிரம் மைல் பயணம்
1830 ஆம் ஆண்டில், பம்பாய் துறைமுகத்தில் ஒரு கப்பல் நங்கூரமிட்டது. அதில் இங்கிலாந்து மன்னரிடமிருந்து பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங்குக்கு பரிசாக அனுப்பப்பட்ட ஐந்து குதிரைகள் மற்றும் நட்பு கடிதம் ஆகியவை இருந்ததாக அபுபக்கர் ஷேக் எழுதுகிறார்.
பயணத்திற்கு முன் பம்பாய் தலைமைச் செயலரிடமிருந்து பர்ன்ஸுக்கு ஒரு ரகசிய கடிதம் கிடைத்தது. "இந்தப் பயணத்தின் முக்கியமான நோக்கம், சிந்து நதியின் விரிவான தொழில்நுட்ப அறிக்கையைத் தயாரிப்பதும் நதியில் எவ்வளவு தண்ணீர் உள்ளது எந்த இடத்தில் எவ்வளவு அகலம் உள்ளது என்று கண்டுபிடிப்பதும் ஆகும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. அதோடு, நீர்வழி பயணத்திற்கு மரக்கட்டைகளைப் பெற கரையோரங்களில் எத்தனை காடுகள் உள்ளன, கரையோரங்களில் என்னென்ன விளை நிலங்கள் உள்ளன, எந்தெந்த சாதி மக்கள் வசிக்கிறார்கள் என்பனவற்றையும் ஆட்சியாளர்களின் பொருளாதார, அரசியல் நிலை எப்படி இருக்கிறது என்பதையும் கண்டறிய வேண்டும் என்றும் அதில் சொல்லப்பட்டது."
கராச்சியிலிருந்து லாகூர் வரையிலான தனது பயணத்தின் போது, அந்த 'ட்ரோஜன் குதிரைகள்' என்ற போர்வையில், அவர் நதிகளைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க வேண்டியிருந்தது என்று ஓஜ்லா கூறுகிறார். ஆனால் சிந்துவின் தால்போர் தலைவர்கள், ஆயுதங்கள் வைத்திருப்பதாக சந்தேகத்தின் பேரில் அவரை மூன்று மாதங்கள் காவலில் வைத்திருந்தனர். இறுதியில் ஆயுதங்கள் எதுவும் கிடைக்காததால் அவர் லாகூருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். ஆற்றின் ஆழத்தை அளந்து மற்ற தகவல்களைச் சேகரிக்க படகில் பல்வேறு இடங்களில் ஆய்வுக் கருவிகள் வைக்கப்பட்டுள்ளது என்பது யாருக்கும் தெரியாது.
உயர் அதிகாரிகளின் அழுத்தம் இருந்தபோதிலும் பயணத்தின்போது துருப்புகளை அழைத்துச் செல்ல பர்ன்ஸ் மறுத்துவிட்டார். ஆங்கிலேயர்கள் தாக்க நினைக்கிறார்கள் என்று உள்ளூர் மக்கள் கருதக்கூடாது என்று அவர் நினைத்தார். பர்ன்ஸ் ஒரேயொரு பிரிட்டிஷ் அதிகாரி, டி.ஜே. லைக்கியுடன் மட்டுமே பயணித்தார். மேலும் இடையிடையே உள்ளூர் மக்களை தனது பயணக் குழுவில் சேர்த்துக் கொண்டார்.
இவ்வாறு செய்வதன் மூலம், சிந்து நதியை ஒட்டிய நகரங்களில் உள்ள உள்ளூர் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் பர்ன்ஸ் நெருங்கிய உறவுகளை உருவாக்கினார்.

பட மூலாதாரம், JUGGERNAUT
ராஜதந்திரத்தில் தேர்ச்சி, உள்ளூர் பழக்கவழக்கங்களுடன் பரிச்சயம் மற்றும் முகஸ்துதி செய்வதில் வல்லமை ஆகியவற்றால், ஐரோப்பியர்களுக்கு அனுமதியில்லாத பகுதிகளில் கூட அவரால் எளிதில் பயணிக்க முடிந்தது. அவற்றில் ஹைதராபாத், பக்கர் மற்றும் ஷுஜாபாத் ஆகிய இடங்களும் அடங்கும்.
பஞ்சாப் ஆட்சியாளர் ரஞ்சித் சிங்கின் அரசவையில் பர்ன்ஸ்
மகாராஜா ரஞ்சித் சிங்கை பர்ன்ஸ் சந்தித்த விவரங்களை, பர்ன்ஸின் வார்த்தைகள் மூலமாக அபுபக்கர் ஷேக் இவ்வாறு விவரிக்கிறார்:
"நாங்கள் ஒரு வண்டிக்குப் பின்னால் யானைகள் மீது சென்று கொண்டிருந்தோம். நான் ஏறிச் சென்ற அழகான யானை முன்னணியில் இருந்தது. நகரத்தின் தெருக்கள் குதிரைப்படை, காலாட்படை மற்றும் துப்பாக்கிப் படைகளால் முறையாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. திருவிழா போன்ற சூழல் இருந்தது. நான் அரசவையின் பிரதான கதவை அடைந்து குனிந்து என் பூட்டின் பட்டைகளைத் திறக்கத் தொடங்கியபோது, யாரோ ஒருவர் என்னைக் கட்டிப்பிடிப்பதை உணர்ந்தேன்."
"நான் நிமிர்ந்து பார்த்தபோது, வயதான மற்றும் மெலிந்த மனிதரான மகாராஜா ரஞ்சித் சிங்கை கண்டேன். அவருடன் அவரது இரு மகன்களும் இருந்தனர். அவர் என் கையைப் பிடித்து அரசவைக்கு அழைத்துச் சென்றார். எங்களுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. எங்களை வெள்ளி நாற்காலிகளில் உட்கார வைத்து, பிரிட்டன் மன்னரின் நலத்தை விசாரித்தார்."
"பிரிட்டன் மன்னர் உங்களுக்காக அனுப்பிய ஐந்து குதிரைகளை நான் பத்திரமாக லாகூர் கொண்டு வந்து சேர்த்துவிட்டேன் என்று மகாராஜாவிடன் நான் சொன்னேன். இதோடு, தங்கக் கம்பிகளால் செய்யப்பட்ட பையில், பிரிட்டன் மன்னரின் இந்திய விவகார அமைச்சரின் கடிதமும் உள்ளது என்றேன். அவரே அந்தக் கடிதத்தை என்னிடமிருந்து பெற்றுக் கொண்டு மன்னரின் முத்திரையை தனது நெற்றியில் வைத்து மரியாதை செய்தார்."
"இரண்டாம் நாள், அதாவது ஜூலை 21 ஆம் தேதி, கடிதத்தின் மொழிபெயர்ப்பு அரசவையில் வாசிக்கப்பட்டது. கடிதம் பாதி படிக்கப்பட்டபோது, லாகூர் மக்கள் தனது மகிழ்ச்சியை அறிந்து கொள்ளும் விதமாக வணக்கம் செலுத்த விரும்புகிறேன் என்று மகாராஜா கூறினார். இந்த மகிழ்ச்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் 60 துப்பாக்கிகள் வெடித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒவ்வொரு துப்பாக்கியில் இருந்தும் 21 குண்டுகள் சுடப்பட்டன.
ஆட்சியில் நிபுணத்துவம் பெற்ற மகாராஜா ரஞ்சித் சிங் பற்றிய குறிப்பு
"மகாராஜா ஆடம்பரத்தில் இருந்து விலகியிருக்கிறார். ஆனால் அவரது ஆளுமை அரசவையில் தெரிகிறது. மகாராஜா ரஞ்சித் சிங்கிடம் ஈர்க்கப்பட்டது போல எந்த ஆசிய குடிமகனிடமும் நான் ஈர்க்கப்பட்டது இல்லை. அவருக்கு கல்வியோ, யாருடைய வழிகாட்டுதலோ இல்லை. ஆயினும் ஆட்சி விஷயங்களில் அவருக்கு அற்புதமான தேர்ச்சி உள்ளது. இந்த வேலையை அவர் துடிப்புடன் கையாள்கிறார்," என்று ரஞ்சித் சிங்கைப் பற்றி பர்ன்ஸ் எழுதியுள்ளார்.
பர்ன்ஸ் விவரிப்பதில் வல்லவர். உதாரணமாக, டேரா காஜி கான் சந்தையில் 1597 கடைகள் உள்ளன, அவற்றில் 115 துணிக்கடைகள், 25 பட்டு விற்பனை கடைகள், 60 பொற்கொல்லர்களின் கடைகள் மற்றும் 18 காகிதங்களின் கடைகள் என்று அவர் தனது பயணத்தைப் பற்றி எழுதியுள்ளார்.
பர்ன்ஸின் இந்த ஆய்வுக்குப்பிறகு, 1835-ல் ஹைதராபாத் மற்றும் கராச்சி இடையே சிந்து நதியில் 'இண்டஸ்' என்ற பெரிய கப்பல் இயக்கப்பட்டது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள், 1843 இல் சிந்துவில் தங்கள் ஆட்சியை நிறுவினர்.
கோஹினூர் வைரத்தை காட்சிப்படுத்திய ரஞ்சித் சிங்
1831 அக்டோபரில் பிரிட்டிஷ் ராணுவத்தின் தளபதியான கவர்னர் ஜெனரல் லார்ட் வில்லியம் பென்டிங்குடன் மகாராஜா ரஞ்சித் சிங்கின் முதல் சந்திப்பை பர்ன்ஸ் ஏற்பாடு செய்தார்.
இந்த சந்திப்பு அக்டோபர் 22 முதல் 26 வரை சட்லஜ் நதிக்கரையில் உள்ள ரோபர் என்ற கிராமத்தில் நடந்தது. பல பிரிட்டிஷ் அரசியல் தூதர்கள் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் மகாராஜா ரஞ்சித் கோஹினூர் வைரத்தைக் காண்பித்தார். இது இறுதியில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் வசம் சென்று, ராணியின் கிரீடத்தை அலங்கரித்தது.
ரோபரில் நடந்த உயர்மட்டத் தலைமையின் கூட்டத்திற்குப் பிறகு, 1831 நவம்பர் முதல் டிசம்பர் வரை பர்ன்ஸ் டெல்லியில் தங்கியிருந்தார்.
டிசம்பர் 19 அன்று பர்ன்ஸ் தனது வருங்கால சக பயணி மோகன் லாலை முதன்முதலில் சந்தித்தார். ஹுமாயூனின் கல்லறையின் மைதானத்தில் உள்ள ஒரு இந்துப் பள்ளிக்குச் சென்றபோது, மேற்குப்பகுதியின் புவியியல் குறித்த அந்த இளைஞனின் அறிவால் பர்ன்ஸ் ஈர்க்கப்பட்டார்.
மத்திய அல்லது உட்பகுதி யூரேசியாவிற்கு தன்னுடன் வருமாறு அவர் லாலை அழைத்தார். டெல்லியிலிருந்து, பர்ன்ஸ் லூதியானாவுக்குப் பயணம் செய்தார். அங்கிருந்து மத்திய ஆசியாவிற்குச் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
க்ரேட் கேம்: ஆப்கானிஸ்தான் மற்றும் புகாராவிற்கு பயணம்
வரவிருக்கும் ஆண்டுகளில், மோகன் லாலுடனான அவரது பயணம் ஆப்கானிஸ்தான் வழியாக இந்து குஷ்ஷை தாண்டி புகாரா (இன்றைய உஸ்பெகிஸ்தான்) மற்றும் பெர்ஷியா அதாவது இன்றைய இரான் வரை தொடர்ந்தது.
ஓர் அரசியல் ஏஜெண்டின் உதவியாளர் என்ற நிலையில் அவர் வடமேற்கு இந்தியா மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளின் வரலாறு மற்றும் புவியியல் ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார். இதைப் பற்றி ஆங்கிலேயர்கள் அதுவரை முழுமையாக ஆராய்ந்திருக்கவில்லை. பின்னர் அவர் ஆப்கானிஸ்தான் சென்றார்.
பிரிட்டிஷ் மற்றும் ரஷ்ய சாம்ராஜ்யங்களுக்கு இடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் சிக்கியது. இந்தியாவைக் கைப்பற்றிய பிறகு பிரிட்டன், ஆப்கானிஸ்தான் வழியாக வடக்கு நோக்கிச் செல்ல நினைப்பதாக ரஷ்யா சந்தேகித்தது.
ரஷ்யா இங்கிருந்து ஹிந்துஸ்தானைக் கைப்பற்ற விரும்புகிறது என்று ஆங்கிலேயர்கள் அஞ்சினர். இதன் காரணமாக 'கிரேட் கேம்' என்ற அரசியல் மற்றும் ராஜதந்திர போராட்டம் பிறந்தது.
பிரிட்டிஷ் அரசுக்கு உளவுத் தகவல்கள் தேவைப்பட்டது. எனவே பர்ன்ஸ் அங்கு அனுப்பப்பட்டார். உள்ளுர் புகாரா நபரின் வேடத்தில் பயணித்த பர்ன்ஸ், காபூலில் இருந்து புகாரா செல்லும் பாதையை ஆய்வு செய்து ஆப்கானிஸ்தான் பற்றிய விரிவான அறிக்கையை வழங்கினார்.
அவர் 1834 இல் பிரிட்டன் சென்று வெளியிட்ட புத்தகம், அந்த நாடுகளின் சமகால அறிவைப் பெரிதும் அதிகரித்தது மற்றும் அக்காலத்தின் மிகவும் பிரபலமான புத்தகங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது.
புகாரா, இந்தியாவில் இருந்து காபூல், மத்திய அல்லது உள் யூரேசியா மற்றும் பாரசீகம் வரை, கூடவே, 1831, 1832 மற்றும் 1833 இல் அரசின் கட்டளைப்படி, பிரிட்டனின் பேரரசரின் பரிசுகளுடன் கடலில் இருந்து லாகூர் வரையிலான சிந்து நதியில் மேற்கொள்ளப்பட்ட பயணத்தின் கதையை இந்த நூல் விவரிக்கிறது. பர்ன்ஸ் அதன் முதல் பதிப்பிலிருந்து 800 பவுண்டுகள் சம்பாதித்தார்.

பட மூலாதாரம், ANN RONAN PICTURES/PRINT COLLECTOR/GETTY IMAGES
ஆப்கானிஸ்தானில் அரசியல் முகவராக செயல்பட்டார்
தோஸ்த் முகமது பராக்சாய் 1838 இல் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். அத்தகைய சூழ்நிலையில், இந்தியாவில் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் லார்ட் ஆக்லாண்ட், ரஷ்ய செல்வாக்கையும் ஊடுருவலையும் கட்டுப்படுத்த ஆப்கானிய வெளியுறவுக் கொள்கையைக் கட்டுப்படுத்த முயன்றார்.
காபூலின் சிம்மாசனத்தில் தோஸ்த் முகமது கானை ஆதரிக்குமாறு ஆக்லாண்ட் பிரபுவை பர்ன்ஸ் கேட்டுக்கொண்டார். ஆனால் வைஸ்ராய், சர் வில்லியம் மெக்கெண்டைனின் கருத்தை ஏற்றுக்கொண்டு, ஷா ஷுஜாவை மீண்டும் பதவியில் அமர்த்தினார். 1839 இல், ஷா ஷுஜா மீண்டும் பதவியில் அமர்த்தப்பட்டவுடன் பர்ன்ஸ், காபூலில் முறையான அரசியல் முகவராக ஆனார். அதிக சம்பளம் வாங்கும் வெற்று மனிதன் என்று பர்ன்ஸ் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்வார்.
ஷா ஷுஜாவின் ஆட்சிக்காலம், ஆப்கானிய குடிமக்கள் மீதான அட்டூழியங்களுக்கும் பரவலான வறுமைக்கும் பெயர் பெற்றது.
கூடவே, கிரிக்கெட், ஸ்கேட்டிங் மற்றும் ஸ்டீபிள் சேஸ் போன்ற விளையாட்டுகளும் அங்கு வந்து சேர்ந்தன. நகரின் மக்கள் தொகையின் திடீர் அதிகரிப்பால், சந்தைகளில் உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொடத் தொடங்கியது.
ஷா ஷுஜா மக்கள் மீது வரியை மேலும் உயர்த்தியபோது, கீழ்தட்டு மக்களிடையே பொருளாதார பிரச்னைகள் பெரிய அளவில் அதிகரித்தன.
ஷா ஷுஜாவின் உத்தரவின் பேரில், பிரிட்டிஷ் மற்றும் இந்திய துருப்புக்கள் நகரத்தை விட்டு வெளியேறி கன்டோன்மென்ட்டுகளுக்குச் செல்ல ஒப்புக்கொண்டன. ஆனால் பர்ன்ஸ் தனது சகோதரர் லெப்டினன்ட் சார்லஸ் பர்ன்ஸ், மேஜர் வில்லியம் பிராட்ஃபுட் மற்றும் சில மூத்த அதிகாரிகளுடன் பழைய நகரத்தின் நடுவில் உள்ள ஒரு வீட்டில் தங்க முடிவு செய்தார்.
பர்ன்ஸ் படுகொலை
1841 நவம்பரில் பர்ன்ஸைக் கொல்ல சதி நடப்பதாக மோகன் லால் கூறினார். மேலும் நகரத்தை விட்டு வெளியேறுமாறு அவர் வலியுறுத்தினார். காபூலில் பிரிட்டனின் பிரதிநிதியாக உள்ள பர்ன்ஸ், நகரின் பொருளாதார மற்றும் தார்மீக வீழ்ச்சிக்குக் காரணமானவர் என்று பல ஆப்கானியர்கள் கருதினர்.
எந்தவொரு பிரச்னையையும் தன்னால் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையில், பர்ன்ஸ் தனது நண்பரின் ஆலோசனையைப் புறந்தள்ளி காபூலில் தங்க முடிவு செய்தார்.
பர்ன்ஸின் வீட்டை ஒட்டிய கட்டடத்தில் கண்டோன்மெண்டின் கருவூலம் இருப்பதாகவும் அங்கு பிரிட்டிஷ் வீரர்களின் சம்பளம் வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறி பர்ன்ஸ் எதிர்ப்புக் கும்பல் நவம்பர் 2 ஆம் தேதி இரவு, நகரத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்டத் தொடங்கியது. இரவானதும் பர்ன்ஸ் வீட்டுத் திண்ணையில் பெரும் கூட்டம் கூடியது. பர்ன்ஸ் உடனடி உதவிக்காக கண்டோன்மெண்டிற்கு தூது அனுப்பினார். ஆனால் இந்த அச்சுறுத்தலுக்கு எவ்வாறு பதிலடி கொடுப்பது என்பது குறித்து பிரிட்டிஷ் ராணுவத்தின் மூத்த அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற விவாதங்கள் காரணமாக உதவி வரத் தாமதமானது.
நிலைமை மோசமானது. தாக்குதல் நடத்தியவர்கள் தொழுவத்திற்குத் தீ வைத்தனர். கூட்டத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மேலும் பால்கனியில் பர்ன்ஸுடன் நின்றிருந்த மேஜர் பிராட்ஃபுட் கொல்லப்பட்டார்.
இப்போது தப்பிக்க வேறு வழியில்லை என்று உறுதியாகிவிட்டதால், சார்லஸ் பர்ன்ஸ் ஆயுதத்துடன் வராண்டாவிற்கு வந்தார். ஆறு பேரை அவர் சுட்டுக் கொன்றார். ஆனால் வன்முறை கும்பல் அவரைக் கொன்றது.
அப்போது அலெக்சாண்டர் பர்ன்ஸ் கூட்டத்தை எதிர்கொள்ள ஆயுதங்கள் இல்லாமல் வெளியே வந்தார். சில நிமிடங்களில் அவரும் அந்த கும்பலால் கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவங்கள் ஆங்கிலேயப் படையினர் தங்கியிருந்த இடத்திலிருந்து அரை மணி நேரம் தூரத்தில் நடந்தன. ஓர் இளம் அதிகாரி நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு ஒரு பத்திரிகையில் , 'காலையில் 300 ஆட்கள் இருந்திருந்தால் போதும். ஆனால் இரவில் 3000 பேர் இருந்திருந்தாலும் அது குறைவாகவே இருந்திருக்கும்,' என்று எழுதினார்.
அடுத்த நாள், பர்ன்ஸ், மேஜர் பிராட்ஃபுட் மற்றும் லெப்டினன்ட் சார்லஸ் பர்ன்ஸின் தலைகள் சதுக்கத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன. அப்போது பர்ன்ஸுக்கு 36 வயது.

பட மூலாதாரம், Alamy
மாறுவேடத்தில் தலைசிறந்தவராக இருந்த பர்ன்ஸ்
உஸ்பெகிஸ்தானுக்கான முன்னாள் பிரிட்டிஷ் தூதர் கிரேக் மர்ரே, 'அலெக்சாண்டர் பர்ன்ஸ், மாஸ்டர் ஆஃப் தி கிரேட் கேம்' என்ற புத்தகத்தில் அவரது உளவு நுட்பங்களை விவரித்துள்ளார்.
"பர்ன்ஸ் பயணி போல் மாறுவேடத்தில் வருவார். ஆனால் வரைபடங்களை உருவாக்குவதில் மிகவும் கவனமாக இருந்தார். இரவு வேளையில் அவரின் கூடாரத்தில் வரைபடங்கள் ரகசியமாக தயாரிக்கப்பட்டன. பின்னர் அவை தாயத்துக்கள் போல் செய்யப்பட்டு தூதர்களால் கடத்தப்படும். தூதர்களும் மாறுவேடத்தில் பயணம் செய்வார்கள். ரஷ்யர்களிடமிருந்து கடிதங்களை தடுக்க மற்றும் முறியடிக்க சிக்கலான குறியீட்டு வார்த்தைகள் பயன்படுத்தப்படும்."
'பர்ன்ஸ்' இன், செக்ஸ் வாழ்க்கையும் சுவாரசியமாக இருந்ததாக மர்ரே கூறுகிறார். ஆப்கானிய பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும், இதன் காரணமாக ஆப்கன் கிளர்ச்சிக்கு உத்வேகம் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் துல்லியமான எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அவருக்கு நெருக்கமான பெண்கள்(Harem), பயணத்தின் போது அவருடன் செல்வார்கள் என்பதற்கான உறுதியான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.
'பர்ன்ஸ்' மேற்கொண்ட பயணத்தின் போது, பல்வேறு இடங்களுக்கும் பம்பாயில் உள்ள கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையகத்திற்கும் இடையே உள்ள தூரம் மிகவும் அதிகமாக இருந்தது மற்றும் தொடர்பு மிகவும் கடினமாக இருந்தது. எனவே அவர் பெரும்பாலும் தனது சொந்த தலைவராக இருந்தார்,' என்று ஷான் டெமர் எழுதியுள்ளார்.
'பர்ன்ஸின்' வாழ்க்கை, சுவாரசியமான சந்திப்புகள், சுவையான உணவு, மது, விருந்துகள், நடனமாடும் பெண்கள், ஆபரணங்கள் மற்றும் ஆடம்பரத்தால் நிரம்பியிருந்தது என்று சொன்னால் மிகையாகாது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













