கோவையில் ஐந்து ஆண்டுகளில் 79 யானைகள் மரணம்: ஆர்.டி.ஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்

யானைகளின் மரணங்கள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

உலகம் முழுவதும் மே மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமை அருகிவரும் உயிரனங்களின் (Day of Endangered species) நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவில் பரவலாக காணப்படும் யானைகளும் அருகிவரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ளன. தமிழ்நாட்டில் யானைகளின் மரணங்கள் சமீப காலங்களில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.

யானைகளின் மரணங்கள் தொடர்பாக ஆராய தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பு குழுவை அமைத்துள்ளது. அதே சமயம் ரயில்களில் அடிபட்டு யானைகள் இறப்பது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கோவைக்கு வந்து யானைகள் மரணங்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 79 யானைகள் வெவ்வேறு காரணங்களால் இறந்துள்ளன என, தகவல் பெறும் உரிமைச் (ஆர்.டி.ஐ) சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்களில் தெரியவந்துள்ளது. மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளை காட்டிலும் 2022-ம் ஆண்டு யானைகளின் இறப்பு விகிதாச்சாரம் அதிகரித்துள்ள அதிர்ச்சியளிக்கும் தகவலும் தெரியவந்துள்ளது.

அருகிவரும் உயிரினங்கள் நாள்
படக்குறிப்பு, ஆய்வு மேற்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்

'பிபிசி தமிழ்' சார்பில் கோவை மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கிய ஐந்து ஆண்டுகளில் யானைகள் இறப்பு தொடர்பான தகவல்கள் கோரி ஆர்.டி.ஐ மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதற்கு கோவை மாவட்ட வன அலுவலக பொது தகவல் அலுவலர் மற்றும் கண்கானிப்பாளர் பதிலளித்துள்ளார்.

2022-ல் அதிகரித்துள்ள யானை மரணங்கள்:

அதன்படி, 01.01.2017 தொடங்கி 31.12.2021 வரை 79 யானைகள் உயிரிழந்துள்ளன. இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி தற்போது வரை மட்டும் 14 யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த ஐந்தரை ஆண்டுகளில் மொத்தம் 93 யானைகள் உயிரிழந்துள்ளன.

2017 முதல் 2021ஆம் ஆண்டு வரையில், ஆண்டுக்கு சராசரியாக 16 யானைகள் உயிரிழந்துள்ள நிலையில், 2022-ல் ஐந்து மாதத்தில் மட்டும் 14 யானைகள் உயிரிழந்துள்ளன. இது முந்தைய ஆண்டுகளின் சராசரியைவிட அதிகம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இறந்த 79 யானைகளில் 41 ஆண் யானைகளும் 38 பெண் யானைகளும் அடக்கம்.

இதில் ஐந்து வயதுக்கும் குறைவாக 12 யானைகளும் 6 - 15 வயது பிரிவில் 30 யானைகளும் 16 - 25 வயது பிரிவில் 17 யானைகளும் 25 - 30 வயது பிரிவில் 7 யானைகளும் 30 வயதுக்கும் அதிகமான பிரிவில் 13 யானைகள் உயிரிழந்துள்ளன.

இதில் 10 யானைகள் மின்வேலிகளாலும் 4 யானைகள் ரயில்களில் மோதியதாலும் 8 யானைகள் நோய்வாய்ப்பட்டதாலும் 3 யானைகள் இயற்கையாகவும் மரணமடைந்துள்ளன.

யானைகளுக்குள் ஏற்பட்ட மோதலால் மூன்று மரணங்களும் நிகழ்ந்துள்ளன. இரண்டு யானைகளின் மரணத்துக்கான காரணம் அறியப்படாத நிலையில் ஒரு யானை குண்டு அடிபட்டு இறந்துள்ளது. இவை போல பல்வேறு நோய்களால் மீதமுள்ள யானைகள் இறந்துள்ளன.

பிரதானமாக காணப்பட்ட நோய்கள்: ஆந்த்ராக்ஸ், பட்டினி, மூச்சுத்திணறல், நாள்பட்ட ஹெபடைடிஸ், இரைப்பை குடல் தொற்று.

வனச்சரகம் வாரியாக சிறுமுகை - 25 பெரியநாயக்கன்பாளையம் - 13 கோயம்புத்தூர் - 12 மேட்டுப்பாளையம் - 10 மதுக்கரை - 9 போலுவாம்பட்டி - 7 காரமடை - 3. சிறுமுகை வனச்சரகத்தில் மட்டும் அதிகபட்சமாக 25 யானைகள் உயிரிழந்துள்ளன.

இது தொடர்பாக, ஓசை அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ் பிபிசி தமிழிடம் பேசுகையில், "மனித காரணங்களால் அல்லாமல் இறக்கின்ற யானைகளை பற்றி அதிர்ச்சியடைய தேவையில்லை. மின்வேலிகளால் யானைகள் அடிபடுவது தான் மிகவும் கவலைக்குரிய விஷயம். ஆனால், விவசாயிகள் தங்களுடைய பயிர்களை பாதுகாக்க தான் வேலிகளை அமைக்கிறார்களே தவிர யானைகளை கொல்ல வேண்டும் என்பதற்காக இல்லை.

'ஓசை' காளிதாஸ்
படக்குறிப்பு, 'ஓசை' காளிதாஸ்

சட்டவிரோத மின்வேலிகளை முடிவுக்குக் கொண்டு வருவது மிக அவசியமானது. அதே சமயம் காடுகளை ஒட்டியுள்ள நிலங்களில் யானைகளை ஈர்க்கும் தாவரங்களை பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், யானைகள் இறப்பை ஒரு வனக்கோட்டத்தோடு இல்லாமல் பரந்துபட்ட நிலபரப்புடன் தான் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். கோவை வனக்கோட்டம் யானைகளின் வலசைப் பாதையில் அமைந்துள்ளது.

யானைகள் கணக்கெடுப்பு தேவை:

யானைகளின் மொத்த எண்ணிக்கையில் 3% யானைகள் ஆண்டுதோறும் இறக்கும். ஆனால், யானைகளின் உண்மையான எண்ணிக்கை தெரிந்தால் தான் இது தொடர்பான தெளிவான முடிவுக்கு வர முடியும்.

வனத்துறை முறையாக ஒருங்கிணைந்த யானைகள் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும். யானைகள் முன்பு பயணிக்காத இடங்களில் தற்போது பயணிக்கின்றன. இதற்கு யானைகளின் பாரம்பரிய வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள தடைகள் தான் காரணம். அத்தகைய தடைகளையும் அகற்ற வேண்டும்" என்றார்.

இது தொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய வன ஆய்வாளர் ராமகிருஷ்ணன், "கோவையில் ஐந்து வயதுக்குட்பட்ட யானைகள் இறப்பு அதிகமாக பதிவாகுவது இயல்பான ஒன்று தான். யானைகள் தன்னுடைய வாழ்விடத்திலிருந்து இடம் பெயர்ந்து செல்கிற போது உணவு உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும். அவற்றை சமாளிக்க முடியாத யானைகள் இறந்துவிடும். 'survival of the fittest' என்கிற விதியின்படி நடக்கின்ற ஒன்று தான்.

யானைகளின் மரணங்கள்
படக்குறிப்பு, வன ஆய்வாளர் ராமகிருஷ்ணன்

நடுத்தர வயதுடைய ஆண் யானைகள் அதிகம் இறந்தால் தான் அது யானைகளின் இனப் பெருக்கதத்திலும் எண்ணிக்கையிலும் தாக்கத்தை செலுத்தும். ஆந்த்ராக்ஸ் போன்ற தொற்று நோய்களின் தாக்கம் அதிகமாக இருந்தால் கவலைப்பட வேண்டும். மற்றபடி இயல்பான நோய்களின் தாக்கம் தான் பரவலாக காணப்படுகிறது.

சிறுமுகை வனச்சரகம் கோவையிலே நீர்வளம் மிக்க பகுதி. மேலும், அங்கு யானைகளை ஈர்க்கும் கரும்பு மற்றும் வாழை அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. அதனால் யானைகள் இங்கு அதிக அளவில் ஈர்க்கப்படுகின்றன. பணப் பயிர்கள் தான் அதிக லாபம் மற்றும் விளைச்சல் தருவதால் விவசாயிகளும் அதை பயிரிடுகின்றனர், அவர்களையும் குறை சொல்ல முடியாது. இதை அனைத்து தரப்பும் ஒருங்கிணைந்த ஒரு சமூக திட்டமாக செயல்படுத்த வேண்டும்.

இந்த ஆண்டு யானைகள் இறப்பு அதிகமாக உள்ளதற்கு இரண்டு காரணங்கள். யானைகள் அதிக அளவில் முதுமலையிலிருந்து இடம் பெயர்ந்துள்ளன. முதுமலையில் தற்போது மழை பெய்வதால் யானைகள் திரும்ப செல்ல தொடங்கிவிட்டன. எனவே, யானைகளின் இருப்பு, இந்த குறிப்பிட்ட காலத்தில் இடம்பெயர்ந்த யானைகளின் எண்ணிக்கை பற்றிய தரவுகளை வைத்து தான் தீர்மானிக்க முடியும்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அளவுக்கு அதிகமான மழை மற்றும் வறட்சி யானைகளின் வலசையிலும் தாக்கம் செலுத்துவது உண்மை. ஆனால், அதை பற்றிய முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்" என்றார்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய கோவை மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியன், "யானைகள் இறப்பு தொடர்பாக ஆய்வு செய்ய அரசு குழு அமைத்துள்ளது. அந்த ஆய்வுகள் வந்த பிறகு தான் நாம் எந்தவொரு முடிவுக்கும் வர முடியும். ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு தொடர்பாக மத்திய அரசின் Project Elephant திட்டத்திலிருந்து தான் முடிவு செய்வார்கள். விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.

யானைகளின் மரணங்கள்
படக்குறிப்பு, கோவை மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியன்

மின்வேலிகள் அமைப்பது தொடர்பாக விவசாயிகளிடம் தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மின்வேலி அமைத்துள்ள நிலங்களின் உரிமையாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

யானைகள் தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளி வருவதை தடுக்க அனைத்து வனச் சரகத்திலும் தண்ணீர் குட்டைகள் அமைக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. வனத்துறையால் சாத்தியப்படக் கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். இந்த சிக்கல்களுக்கு குறுகிய காலத்தில் தீர்வு கிடைக்காது" என்றார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: