யானை - மனித மோதல்: வழித்தடங்கள் அடைக்கப்படுவதால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கான தீர்வு என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோவை மதுக்கரை அருகே ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு மூன்று யானைகள் உயிரிழந்தன. கடந்த டிசம்பர் 14-ம் தேதி சத்தியமங்கலம் அருகே ஆண் யானை ஒன்று மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது.
யானைகள் ரயிலில் அடிபட்டும், மின்வேலிகளில் சிக்கியும் உயிரிழப்பது அன்றாட செய்தியாகிவிட்டது. இந்தியாவில் கடந்த 2020 டிசம்பர் வரையிலான 11 ஆண்டுகளில் 1,160 யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் யானைகளால் தாக்கப்பட்டு 3,767 மக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் யானைகளின் மரணங்கள், யானை மனித மோதல் இந்தியாவில் யானைகளின் வழித்தடம், வாழ்விடம் தொடர்பான விவாதங்களை எழுப்பியுள்ளது.
யானை நிலத்தில் வாழும் மிகப்பெரிய வன விலங்கு. உலகளவில் ஆப்பிரிக்காவை அடுத்து ஆசியாவில் தான் யானைகள் அதிக அளவில் உள்ளன. ஆசிய கண்டத்தில் கிட்டத்தட்ட 50,000 ஆசிய யானைகள் உள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் 27,312 ஆசிய யானைகள் உள்ளன. இதில் தென்னிந்தியாவில் மட்டும் 11,960 யானைகள் உள்ளன.
இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அவ்வாறு 2012-ல் சராசரியாக 30,000 யானைகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 27,312 யானைகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.
யானைகளை இயற்கை பொறியாளர் என்கிறார் ஆய்வாளர் மோகன் ராஜ். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "யானைகள் சராசரியாக 250 கிலோ அளவிலான உணவை உட்கொள்கிறது. ஆனால், அவற்றில் 70 சதவிகிதத்தை சாணமாக வெளியேற்றி விடுகிறது. அவை உரமாகவும் மரங்கள் வளர்வதற்கு விதையாகவும் பயன்படுகிறது. யானை தனக்காக தயார் செய்யும் உணவில் பெரும் பகுதியை அப்படியே விட்டுச் செல்கிறது. அவை சிறிய விலங்குகளுக்கு உணவாகப் பயன்படுகிறது. வன உணவுச் சங்கிலியில் யானையில் பங்கு முக்கியமானது. யானைகள் பயன்படுத்தாத காடுகளில் மனிதனால் நுழைய முடியாது. உணவிற்காகவும் காலநிலையைப் பொறுத்தும் யானைகள் ஒரு வனப்பகுதியிலிருந்து வேறு ஒரு வனப்பகுதிக்குச் செல்கின்றன" என்றார்.
யானைகள் சராசரியாக 500 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட காடுகளை பயன்படுத்தும் என்கிறார், 'ஓசை' அமைப்பைச் சேர்ந்த காளிதாஸ். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "யானைகளின் வாழ்விடம் என்பது ஒரே மாதிரியான காடுகளை மட்டும் உள்ளடக்கியது கிடையாது. யானைகளின் வாழ்விடங்கள் பல்வேறு வனப்பகுதிகளைச் சேர்த்து பரந்து விரிந்திருக்கும். காலப்போக்கில் ஆக்கிரமிப்புகளால் வனப்பகுதிகள் சுருங்கிவிட்டன, வனத்திற்கு அருகில் உள்ள நிலங்கள் பட்டா நிலங்களாக மாற்றப்பட்டு பின்னர் விளை நிலங்களாக மாற்றப்பட்டுவிட்டன. பட்டா நிலம், விளை நிலம் என்பதெல்லாம் மனிதர்களுக்கு தான், யானைகளுக்கு அந்த வேறுபாடு எல்லாம் தெரியாது. யானைகள் தங்களுடைய வாழ்விடங்களுக்குள் பயணிக்க தங்களின் பாரம்பரியமான வலசைப் பாதைகளைப் (Traditional Migrating Path) பயன்படுத்தும். வாழ்விடங்கள் சுருங்கிய இடத்தைத் தான் வலசைப் பாதை என்கிறோம். வலசைப் பாதை சுருங்கிய இடங்களைத் தான் வழித்தடம் (Corridor) என்கிறோம். அதை இணைப்புப் பாதை என்று சொல்வது தான் சரி`
யானை வாழ்விடங்களுக்கு அருகில் நிலமாற்றம் செய்து கட்டுமானங்களை உருவாக்கியது தான் முதல் சிக்கல். இது வலசைப் பாதைகளை அழித்தது. யானைகளால் மலை மீது ஏற முடியாது. அதனால் அவை காடுகளை விட்டு வெளியே வருகிறது.
அதன் பின்னர் காடுகளுக்கு அருகே விளைநிலங்களாக மாற்றப்பட்ட பட்டா நிலங்களில் பயிரிடப்படும் வாழை போன்றவை யானைகளின் விருப்ப உணவுகளாக உள்ளன. இதனால் யானை காடுகளிலிருந்து உணவு தேடி வெளியே வருகிறது. அங்கே தான் மனித - யானை மோதல் உருவாகிறது. யானைகளால் பயிர், நிலங்கள் சேதமடைகின்றன. இதனைத் தடுக்க விவசாயிகள் தங்களுடைய விலை நிலங்களைச் சுற்றி மின் வேலிகளை அமைக்கின்றனர். யானைகள் தாக்கி மனிதர்கள் உயிரிழப்பதும், மின் வேலிகளில் அடிபட்டு யானைகள் இறப்பதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது" என்றார்
தென்காசியைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் செயற்பாட்டாளர் பாண்டியராஜன் யானைகளின் இறப்பு தொடர்பாக மத்திய அரசிடம் ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவல்களில் இந்தியாவில் கடந்த 11 ஆண்டுகளில் 1,160 யானைகள் விபத்துகளால் இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இதில் 741 யானைகள் மின் வேலியில் அடிபட்டும், 186 யானைகள் ரயிலில் மோதியும், 169 யானைகள் வேட்டையாடப்பட்டும், 64 யானைகள் விஷம் வைக்கப்பட்டதாலும் உயிரிழந்திருக்கின்றன. மின் வேலியில் அடிபட்டு உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிபிசி தமிழிடம் பேசிய பாண்டியராஜன், "தமிழக - கேரள எல்லையில் உள்ள அடர் வனப்பகுதிகளில் யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பது தொடர்கதையாகி வருகிறது. அடர் வனப்பகுதிகளில் ரயில்கள் செல்லும்போது மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை 45 கி.மீ வேகத்தில் தான் ரயில்களை இயக்க வேண்டும் என விதி உள்ளது. ஆனால், அவை முறையாக பின்பற்றப்படுவதில்லை.இது போன்ற அடர்வனப்பகுதிகளில் செல்லும் ரயில்களில் யானைகள் இருப்பதை அறிய தெர்மல் ஸ்கேனிங் கேமராக்களை பொருத்த வேண்டும். விதிமுறைகளை மீறும் ரயில்வே துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்` என்றார்.
டிசம்பர் 2020 வரையிலான எட்டு ஆண்டுகளில் யானைகளால் தாக்கப்பட்டு 3,767 மக்கள் உயிரிழந்துள்ளனர்.
யானைகளின் வழித்தடம் எது?
Wildlife Trust of India நடத்தியுள்ள ஆய்வில் இந்தியா முழுவதும் 101 யானை வழித்தடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் தென்னிந்தியாவில் 28 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் பத்துக்கும் மேற்பட்ட வழித்தடங்கள் தமிழகத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Wildlife Trust of India தயாரித்துள்ள பட்டியலில் உள்ளதைவிடவும் கூடுதலான யானை வழித்தடங்கள் உள்ளதாக சொல்கிறார் காளிதாஸ். அதற்கான ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. யானை வழித்தடத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தால் தான் அதற்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கும். யானை வழித்தடங்களில் உள்ள கட்டுமானங்களை அகற்றி யானை பயணத்திற்கு தடை இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்கிறார் காளிதாஸ்.

பட மூலாதாரம், Getty Images
வனத்துறை என்ன செய்கிறது?
வனத்துறை தரப்பில் யானை - மனித மோதலை தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து வனத்துறை அதிகாரிகள் பிபிசி தமிழிடம் விவரித்தார். "கோவை மாவட்டத்தில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களை 12 பகுதிகளாகப் பிரித்து அங்கு ஆல்ஃபா. பீட்டா, காமா என்கிற மூன்று கண்கானிப்பு குழுக்களை உருவாக்கியுள்ளோம். இந்தக் குழுக்கள் தினமும் இரவு நேரத்தில் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவார்கள்.
அதோடு ஒவ்வொரு பகுதியிலும் உள்ளூர் மக்கள், வனத்துறை அதிகாரிகளை உள்ளடக்கி தடம் என்கிற வாட்சாப் குழு தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் யானை நடமாட்டம் பற்றி உள்ளூர் மக்கள் உடனடியாக தகவல் தெரிவிப்பார்கள். ரோந்து பணியில் இருக்கும் வனத்துறை அதிகாரிகள் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று யானையை காட்டிற்குள் திருப்பி அனுப்புவார்கள்.
மின்வேலி அமைப்பது சட்டவிரோதமானது தான். ஆனால் யானைகளை தடுக்க அது ஒன்று தான் வழி என மக்கள் நினைத்து மின்வேலிகளை அமைத்து விடுகிறார்கள். அதனால் தான் மின்வேலிகளால் அதிக இறப்புகளும் ஏற்படுகிறது. வேலிகளில் நேரடி மின்சாரம் வழங்கக்கூடாது. 12வாட் திறன் கொண்ட சோலார் மின்வேலிகள் தான் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம்.
மின்வேலிகள் அமைக்கப்படுவதை கண்கானிக்க மின்சாரத் துறை உடன் இணைந்து செயல்படுகிறோம். குறிப்பிட்ட ஒரு இணைப்பில் இயல்பான அளவை விட அதிகமான மின்சார பயன்பாடு பதிவானால் அங்கு சென்று மின் வேலி அமைக்கப்பட்டுள்ளதா என சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

பட மூலாதாரம், MOHANRAJ
யானை வழித்தடங்களை அங்கீகரிப்பது எப்படி?
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிகுர் வழித்தடத்தை யானைகளின் வழித்தடமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட முதல் யானை வழித்தடம் இது தான். இது ஒரு முக்கியமான முடிவு. அதைப்போலவே மற்ற யானை வழித்தடங்களையும் மீட்டு பாதுகாப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றனர்.
"யானை வழித்தடத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கின்றபோது அங்குள்ள கட்டுமானங்களை அகற்ற வேண்டும். தனியார் கட்டிடங்களோ அரசு கட்டிடங்களோ எவை யானை வழித்தடத்தில் அமைந்திருந்தாலும் அதனை பாரபட்சம் இல்லாமல் அகற்ற வேண்டும். மேலும் யானை வழித்தடம் அமைந்துள்ள இடங்களில் புதிய கட்டுமானங்களை அனுமதிக்கக்கூடாது" என்கிறார் காளிதாஸ்
முதுமலை வனப்பகுதியிலிருந்து சத்தியமங்கலம் வனப்பகுதிக்குச் செல்லும் யானைகள் கோவை மாவட்டம் கல்லார் வழியாகத் தான் செல்கின்றன. அங்கு தான் ஊட்டி நெடுஞ்சாலை அமைந்துள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான யானை வழித்தடம் இது. இங்கு வாகனப் போக்குவரத்து அதிகம் இருப்பதால் யானைகள் நடமாட்டம் தடைபடுகிறது. இதனால் கல்லாரிலிருந்து இரண்டாவது கொண்டை ஊசி வளைவு வரை 2.4 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. யானை வழித்தடங்களை மீட்பதற்கான பல முயற்சிகள் இதுவும் ஒன்று என்கின்றனர் வனத்துறையினர்.
பிற செய்திகள்:
- ஏழை நாடுகளை தனது கடன் வலையில் சிக்க வைக்கிறதா சீனா?
- மிளகாய் பொடியை நுகர வைத்த தாய்: விபரீத தண்டனையால் 10 வயது சிறுமி உயிரிழப்பு
- இந்தியாவில் பூதாகரமாக உருவெடுக்கும் வேலை இல்லா திண்டாட்டம் - தப்பிக்க வழி என்ன?
- கடன் நெருக்கடியைத் தீர்க்க சீன வெளியுறவு அமைச்சரிடம் கோட்டபய வைத்த கோரிக்கை
- "நரகத்தின் நுழைவாயிலை" மூட துர்க்மெனிஸ்தான் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












