தந்த வேட்டைக்கு பலியாகும் ஆசிய யானைகள் - சர்வதேச நெட்வொர்க் எப்படி இயங்குகிறது? #WildlifeTrafficking

பட மூலாதாரம், Wildlife Crime Control Bureau
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
"முப்பது ஆண்டுகளாக இந்தத் தொழிலைச் செய்து வருகிறேன். முதல்முறையாக என்னைக் கைது செய்துவிட்டீர்கள்" என நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை சேர்ந்த 70 வயதான நாகராஜன் வாக்குமூலம் கொடுத்தபோது வனத்துறை அதிகாரிகள் உறைந்து போனார்கள். இத்தனைக்கும் அவர் தேயிலை எஸ்டேட் ஒன்றை நடத்தி வருகிறார். கோத்தகிரியிலும் தென்காசியிலும் அவருக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி நடந்த சம்பவம் இது.
தந்தத்தை தந்தமாகவே கொண்டு சென்றால் சிக்கல் என்பதால் கேரளாவில் சிறிய கலைப் பொருள்களாக மாற்றி கை, கால்களில் அணிந்து கொண்டு எளிதாக நாகராஜனால் வியாபாரம் செய்ய முடிந்துள்ளது. நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி தபாலா நடத்திய 5 மணிநேர சோதனையில் நாகராஜனின் வீட்டில் இருந்து தந்தம், தந்தத்தால் ஆன கலைப்பொருள்கள், வனவிலங்குகளின் உறுப்புகள், வங்கிப் பரிவர்த்தனை ஆவணங்கள் என ஏராளமானவை சிக்கின.
நாகராஜன் பிடிபடுவதற்கு முகநூல் கணக்கு ஒன்று பிரதான காரணமாக இருந்ததுதான் வேடிக்கை. கன்னியாகுமரியில் சங்கர், சாம்ராஜ், ஆண்டோ போரஸ் ஆகியோர் புராதன பொருள்களை விற்பனை செய்வதாக முகநூலில் பதிவிட்டிருந்தனர்.
அந்தக் கணக்குகளை மத்திய வனஉயிரின குற்றத் தடுப்புப் பிரிவினர் (Wildlife crime control bureau) தீவிரமாக ஆராய்ந்த போது, கலைப் பொருள்கள் என்ற பெயரில் தந்தத்தால் ஆன பொருள்களை அவர்கள் விற்றுவந்தது தெரியவந்தது. அவர்களைத் தொடர்பு கொண்டு கலைப் பொருள்களை வாங்க விரும்புவதாகக் கூறி வனக் காவலர்கள் பேரம் பேசியபோதுதான், மொத்த நெட்வொர்க்கும் சிக்கியது.

பட மூலாதாரம், Wildlife Crime Control Bureau
அவர்கள் மூவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கோத்தகிரி நாகராஜனை நோக்கி கை காட்டியுள்ளனர். நாகராஜனோ கல்கத்தாவை சேர்ந்த சிவதாஸ் என்பவரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். சிவதாஸுவுக்கு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பத்ரா என்பவர் விற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது தலைமறைவாக உள்ள சிவதாஸ் பிடிபட்டால், தந்தங்களை வாங்கிய பெரும் புள்ளிகளின் பெயர் வெளியில் வரலாம் என்கின்றனர் வனத்துறையினர்.
`` கடந்த 15 வருடங்களாக யானை வேட்டைக் கும்பலையும் அதுதொடர்பான வர்த்தகத்தில் ஈடுபடுகிறவர்களையும் கவனித்து வருகிறேன். கன்னியாகுமரியில் பிடிபட்ட தந்தப் பொருள்களில் மோதிரம், புடவையைக் கட்டுவதற்குப் பயன்படும் ஊக்கு, காது குடையும் பட்ஸ், வளையல், மாலை, யானை முடி பிரேஸ்லெட், கடவுள் சிலைகள் என விதம்விதமாக தயாரித்துள்ளனர். தந்தமாக விற்றால் கிடைக்கும் லாபத்தைவிடவும் இதில் அதிக வருவாய் பார்த்துள்ளனர். முப்பது வகைககளில் யானையின் தந்தத்தை வைத்து கார்விங் செய்துள்ளனர். இது மிகப் பெரிய நெட்வொர்க்காக செயல்படுகிறது" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் மதிவாணன். இவர் மத்திய அரசின் வனஉரியின குற்றத் தடுப்புப் பிரிவின் ஆய்வாளராக இருக்கிறார்.
"தந்த வணிகத்தில் ஈடுபடுகிறவர்களுக்கு திருவனந்தபுரம்தான் முக்கியமான தலைமைச் செயலகம். அங்கு தந்தத்தைக் கொண்டு வந்து கொடுப்பவர்கள், ஐவரியை கார்விங் செய்து கொடுப்பவர்கள் என இரண்டு பிரிவாகச் செயல்படுகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தந்த வணிகத்தில் ஈடுபட்டவர்களை கேரள வனத்துறை அதிகாரிகள் கைது செய்தபோது தந்தங்களை பாபு ஜோஸ் என்பவர் மூலம் அஜிபிரைட் என்பவருக்கு விற்றுள்ளது தெரியவந்தது. அவர் மூலமாக டெல்லியைச் சேர்ந்த உமேஷ் அகர்வாலுக்கு தந்தங்கள் விற்கப்பட்டுள்ளன.
உமேஷின் வீட்டில் இருந்து 400 கிலோவுக்கும் மேல் யானை தந்தம், கலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருவனந்தபுரத்தில் அஜிபிரைட் போலவே பிரிஸ்டன் செல்வா என்பவரும் உமேஷ் அகர்வாலுக்கு சப்ளை செய்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்தும் கர்நாடகாவில் இருந்தும் கேரளாவுக்கு தந்தங்களைக் கொண்டு வருகின்றனர். இந்த நெட்வொர்க்கை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தந்தத்தின் விலையில் தரம், கிரேடு ஆகியவையும் முக்கியமானதாக உள்ளது" என்கிறார் மதிவாணன்.
தமிழ்நாட்டின் வீரப்பன் மரணத்துக்குப் பிறகு மேட்டூரை அடுத்த கொள்ளேகால் வனப்பகுதியில் சரணவன் என்கின்ற குட்டி வீரப்பன் தந்த வேட்டையில் ஈடுபட்டு வந்துள்ளார். யானைகளை ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக் கொல்வதில் முக்கிய நபராகப் பார்க்கப்படுகிறார். குட்டி வீரப்பன் மீது கர்நாடகாவில் சில வழக்குகளும் தமிழ்நாட்டில் கொளத்தூர் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும் உள்ளன. `யானையின் அருகில் சென்று நெற்றியில் சுடுவேன்' என இவர் அளித்த வாக்குமூலம் வனத்துறைக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது குண்டர் சட்டத்தில் குட்டி வீரப்பன் சிறையில் அடைக்கப்பட்டாலும் அவரது ஆதரவாளர்கள் தந்த வேட்டையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
"தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் வனப்பகுதிகளில் ஆசிய யானைகள் அதிகளவில் உள்ளன. ஆந்திராவில் தற்போது யானைகள் வந்தாலும் அங்கு பெரிதாக புகார்கள் இல்லை. யானையைக் கொல்வதற்கு துப்பாக்கி, மின்வேலி, பழத்தில் நாட்டு வெடிகுண்டு வைப்பது, பன்றியை கொல்வதற்கு பயன்படுத்தும் அவுட்டுக்காய் ஆகிய உத்திகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வேட்டைக்கார்கள் குழந்தைப் பருவத்தில் உள்ள யானைகளைக்கூட விடுவதில்லை. அவற்றிடம் இருந்து அரை கிலோ, ஒரு கிலோ தந்தங்களைக்கூட எடுத்துள்ளனர்.
யானையின் கர்ப்ப காலம் என்பது 22 மாதங்கள். குட்டி ஈன்ற பிறகு அது சற்று வளர்ந்து வரும்போதே கொல்கின்றனர். சுட்டுக் கொல்லப்பட்ட யானைகளை நேரில் சென்று பார்க்கும்போது அவ்வளவு வேதனையாக இருக்கும். சிறிய தந்தத்துக்காக அதன் முகத்தையே சிதைக்கின்றனர். காட்டின் வளர்ச்சிக்கு யானைகள் பேருதவி புரிகின்றன. நாளொன்றுக்கு 150 கிலோவுக்கும் மேல் உணவை சாப்பிடும். அது நடக்கும் வழித்தடங்கள்தான் சிறிய உயிரினங்களுக்கு பாதைகளாக உள்ளன. ஒரிசாவில் நான் வேலை பார்க்கும்போது அங்குள்ள வேட்டைக்காரர்கள் யானையின் துதிக்கை, மூளை ஆகியவற்றை சமைத்து சாப்பிட்ட கொடூரங்களும் நடந்தன" என்கிறார் மதிவாணன்.
"வேட்டைக்காரர்கள் எப்படி இயங்குகிறார்கள்?" என்றோம். "காட்டுக்குள் உள்ளூர் ஆள்களின் துணை இல்லாமல் யாராலும் போக முடியாது. உள்ளே ஒருமுறை நுழைந்துவிட்டால் வழி மறந்துவிடும். தமிழ்நாட்டில் உள்ள வேட்டைக் குழுக்கள் மாட்டுச் சாணம், தேங்காய் மட்டை சேகரிப்பு என்ற பெயரில் வனத்துக்குள் நுழைகின்றனர். பழங்குடிகளுக்கு இதன் தீவிரம் தெரியாது. காட்டுப்பகுதிக்குள் உள்ள உயர் மின் அழுத்த டவர்களை மையமாக வைத்து வேட்டைக்காரர்கள் நகர்கின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் சிறு சிறு குழுக்களாக இவர்கள் இயங்குகின்றனர்.
அதிக மழை பெய்யும் காலங்களில் யானைகள் நகராது. குளிர்காலம், இனப்பெருக்க காலம் ஆகியவைதான் இவர்களின் இலக்கு. இனப்பெருக்க காலங்களில் ஆண் யானைகள், பெண் யானைகளை நோக்கி வரும். அங்குள்ள பகுதிகளில் துப்பாக்கியை மறைத்து வைத்துவிட்டு வந்துவிடுகின்றனர். யானைகள் கூட்டமாக வரும் காலங்களில் குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர்" என்கிறார்.
திருவனந்தபுரத்தை முக்கிய கேந்திரமாக வைத்து தந்த வேட்டைக்காரர்கள் செயல்பட்டாலும் இந்த நெட்வொர்க் முழுமையாக பிடிபடுவதற்கு வனத்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரி உமா என்பவர் பிரதான காரணமாக இருந்தார். இவர் திருவனந்தபுரம் டி.எஃப்.ஓவாக இருந்த 2015 காலகட்டத்தில் திருச்சூர் மத்திய வனவட்டத்தில் ஆசிய யானைகளின் பிறப்பிடமாகக் கருதப்படும் மலையாத்தூர் வனக்கோட்டத்தில் தந்தக் கடத்தல்காரர்கள் பிடிபட்டனர். அவர்கள், ` 20 யானைகளை ஒரே ஆண்டில் கொலை செய்தோம்' என அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்தனர். அந்தக் கும்பல் கொடுத்த தகவலின்பேரில் ஈகிள் ராஜன் என்ற முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
"யாருக்கெல்லாம் தந்தங்களை விற்பனை செய்தேன்?" என ஈகிள் ராஜனின் டைரியில் எழுதப்பட்டிருந்த குறிப்பில் நாற்பதுக்கும் மேற்பட்ட முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அஜிபிரைட்டும் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் பிடிபட்ட 14 பேரின் வாக்குமூலங்களை வைத்து தொடர் ரெய்டுகளை வனத்துறை அதிகாரிகள் மேற்கொண்டபோது, நாற்பதுக்கும் மேற்பட்ட வேட்டைக்காரர்கள் பிடிபட்டனர். இதுதொடர்பான வழக்கை சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில், கேரளாவில் யானை வேட்டையில் முக்கிய நபராக அய்க்கரமட்டம் வாசு என்பவர் பெயரை வனத்துறை அதிகாரிகள் உச்சரிக்கின்றனர். `கேரள வீரப்பன்' என்றழைக்கப்படும் வாசுவை வனத்துறை அதிகாரிகள் கைது செய்வதற்காக காத்திருக்க, அவர் மும்பையில் தூக்கு மாட்டி இறந்து போனதாகத் தகவல் வந்துள்ளது. `போலீஸிடம் சிக்கியிருந்தால் பல பெரும் புள்ளிகளின் பெயர்களை வாசு சொல்ல வேண்டியது வரலாம்' என்பதால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டது. காரணம், இந்தியாவில் பல பெரும் தொழிலதிபர்கள் யானைகளின் தந்தத்தால் செய்யப்பட்ட கலைப் பொருள்களுக்கு வாடிக்கையாளர்களாக உள்ளதுதான்.
உள்ளூர் வேட்டைக்காரர்களிடம் இருந்து வணிகர்களிடமும் அவர்கள் மூலமாக சிறிய சிறிய கலைப் பொருள்களாக உருமாறி பின்னர் டெல்லி, கொல்கத்தா எனப் பயணம் செய்து நாடுகள் கடந்து தந்தங்கள் பயணம் செய்கின்றன. பெரும்பாலும் கடல் வழியாகவே தந்தத்தால் ஆன கலைப் பொருள்கள் பல்வேறு பெயர்களில் கடத்தப்படுகின்றன.
சர்வதேச அளவில் போதைப் பொருள், ஆயுதங்கள் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக யானைகளின் தந்தம், அதன் தோல், கால்கள், எலும்பு என அனைத்து உறுப்புகளுமே வர்த்தகப் பண்டங்களாகப் பார்க்கப்படுகின்றன. செல்வந்தர்களின் வீடுகளில் சீப்பாகவும் பட்ஸாகவும் பயன்படுத்தப்படும் தந்தங்களுக்காக நடக்கும் வேட்டைகள் மிகக் கொடூரமானவை. வன உயிரினங்கள் தொடர்பான வர்த்தகத்தில் சர்வதேச அளவில் ஆண்டுக்கு 20 பில்லியன் டாலர்கள் புழங்குவதாகக் கூறப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு வருடமும் உலகளவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட யானைகள் பலியாகின்றன.
(தந்த வேட்டைக் கும்பல் எவ்வாறு செயல்படுகிறது? சர்வதேச அளவில் இந்த வலைப்பின்னல் எவ்வாறு இயங்குகிறது? அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்)
பிற செய்திகள்:
- இலங்கை தமிழ் அரசியல் கைதிக்கு துப்பாக்கி முனையில் மிரட்டல்? அமைச்சர் மீது என்ன நடவடிக்கை?
- சீனாவை சீண்டும் 'ஆக்கஸ்' திட்டம்: அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஒன்று கூடுவது ஏன்?
- ஆரிய இனத்தைத் தேடி சென்னைக்கு வந்த ஹிட்லரின் விஞ்ஞானிகள்
- சீக்கியர்களுக்கு பிரிட்டிஷார் தலை வணங்குவது ஏன்?
- சூரியன் நிரந்தரமாக 'மறையும்': மனித இனம் எதிர்கொள்ள வேண்டிய 6 அச்சுறுத்தல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












