மகாராஜா துலீப் சிங் வரலாறு: விக்டோரியா மகாராணியுடன் நட்புறவை பேணிய சீக்கிய பேரரசர்

மகாராஜா துலீப் சிங்

பட மூலாதாரம், GAGGAN SABHERWAL

    • எழுதியவர், ககன் சபர்வால்
    • பதவி, பிபிசி

பிரிட்டனில் நடைபெற்று வரும் கண்காட்சி, பஞ்சாபின் கடைசி சீக்கிய பேரரசர் துலீப் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை முற்றிலும் பிரதிபலிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

1799ம் ஆண்டில் பஞ்சாபில் சீக்கிய ராஜ்ஜியத்தை நிறுவிய பேரரசர் ரஞ்சித் சிங்கின் இளைய மகன் தான் துலீப் சிங்.

தன்னுடைய தாய்-தந்தையின் மறைவுக்குப் பின்னர் ஐந்து வயதில் அரசராக அரியணை ஏறிய துலீப் சிங், 1849ம் ஆண்டில் பிரிட்டன் பஞ்சாபை கைப்பற்றியபோது அரியணையிலிருந்து நீக்கப்பட்டார்.

15வது வயதில் இங்கிலாந்து சென்ற துலீப் சிங், அதன்பின் தன் மொத்த வாழ்க்கையையும் அந்நாட்டிலேயே கழித்தார். அந்த காலத்தில், பிரிட்டனை ஆட்சிபுரிந்த விக்டோரியா மகாராணிக்கும் பஞ்சாபின் முன்னாள் அரசர் துலீப் சிங்குக்கும் நல்லதொரு நட்புறவு உருவானது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

நார்விச்சில் உள்ள ஆர்க்கைவ் சென்டரில் நடைபெற்றுவரும் இக்கண்காட்சி, இருவருடைய நட்பு குறித்தும் சிறிது பிரதிபலிக்கிறது. தற்செயலாக, அக்டோபர் 22 அன்று துலீப் சிங்கின் 129வது பிறந்த தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

"இந்த கண்காட்சியில் எனக்குப் பிடித்த ஒன்று, விக்டோரியா மகாராணியின் கையெழுத்திடப்பட்ட கையேடு. அதில், "மகாராஜா துலீப் சிங்குக்கு தங்கள் பாசமுள்ள ராணி விக்டோரியாவிடமிருந்து… விண்ட்சர் கோட்டை, மார்ச் 1868," என எழுதப்பட்டுள்ளது" என்கிறார், பிரிட்டனைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியரும் கலைப்பொருட்கள் சேகரிப்பாளருமான பீட்டர் பேன்ஸ்.

"பஞ்சாபின் முன்னாள் அரசரை தன்னுடைய நண்பராக விக்டோரியா ராணி நெருக்கமாகவும் தனிப்பட்ட ஒன்றாகவும் கருதும் வார்த்தைகள் இவை," எனவும் அவர் கூறுகிறார்.

துலீப் சிங் குறித்து தான் சேகரித்த நினைவுச் சின்னங்கள் பலவற்றை இந்த கண்காட்சிக்காக வழங்கியுள்ளார் பீட்டர் பேன்ஸ். பொதுமக்களுக்காக இவ்வளவு நிறைய வரலாற்று பொருட்கள் காட்சிப்படுத்தப்படுவது இதுவே முதன்முறை என அவர் தெரிவித்தார். "இந்த நினைவுச் சின்னங்களை கண்டறியும்போது நான் அடைந்ததைப் போன்றே பார்வையாளர்களும் உற்சாகமடைவார்கள்" என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

மகாராஜா துலீப் சிங்

பட மூலாதாரம், PETER BANCE COLLECTION

பல்வேறு கலைப்பொருட்களின் வாயிலாக துலீப் சிங்கின் சுவாரஸ்யமான வாழ்க்கையை இந்த கண்காட்சி பிரதிபலிக்கிறது. ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டு துலீப் சிங்கின் தாய் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், ராணுவ அறுவைசிகிச்சை நிபுணர் சர் ஜான் ஸ்பென்சர் லாகின் மற்றும் அவருடைய மனைவி லேடி லாகினின் பாதுகாப்பில் அவர் வளர்க்கப்பட்டார்.

இந்த காலகட்டத்தில் தான் துலீப் சிங்குக்கு கிறிஸ்தவ மதம் குறித்த தேடல் தொடங்கியது. 1850ம் ஆண்டில் உதவியாளர் ஒருவர் துலீப் சிங்குக்கு வழங்கிய பைபிள் ஒன்றும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வேல்ஸ் இளவரசர்-பின்னாளில் ஏழாம் எட்வர்டு அரசருடன் வேட்டைக்கு செல்லும்போது துலீப் சிங் பயன்படுத்திய வெல்வெட் மேலங்கி, துப்பாக்கி சாதனங்கள் மற்றும் அவருடைய புகைப்படங்கள், கடிதங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஜெர்மன் வங்கியாளர் ஒருவரின் மகளான பம்பா முல்லர் என்பவரை 1864ம் ஆண்டில் மணந்த துலீப் சிங், சஃபோல்க் ஊரகப்பகுதியில் அமைந்த கம்பீரமான இல்லத்தை தனது குடும்ப இல்லமாக அமைத்துக்கொண்டார்.

இந்த தம்பதிக்கு ஆறு குழந்தைகள் இருந்தனர். அவருடைய மகள்களும் இளவரசிகளுமான கேத்தரீன், பம்பா, சோஃபியா மூவரும் அணிந்த ஆடைகள் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. 1990களில் பெண்கள் வாக்குரிமை பெறுவதை ஆதரிப்பவர்களாக இளவரசிகள் பம்பா மற்றும் சோஃபியா ஆகியோர் இருந்தனர்.

துலீப் சிங்கின் இரண்டாவது மகனான ஃப்ரெட்ரிக் துலீப் சிங் அணிந்த ராணுவ உடை மற்றும் அவருடைய பொருட்களும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மகாராஜா துலீப் சிங்

பட மூலாதாரம், GAGGAN SABHERWAL

பீட்டர் பேன்ஸ் துலீப் சிங் மற்றும் அவருடைய குடும்பம் குறித்து 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்தும் அவர்கள் குறித்த கலைப்பொருட்களை சேகரித்தும் வருகிறார்.

"எங்களின் பல்கலைக்கழகத்திலிருந்து சீக்கிய சமூகக் குழுவுடன் நார்ஃபோல்க்குக்கு வந்தபோது, எல்வெடெனில் உள்ள மகாராஜா துலீப் சிங்கின் கல்லறைக்கு செல்ல வேண்டும் என நான் வலியுறுத்தினேன்," என அவர் கூறுகிறார். அப்போது, துலீப் சிங் மற்றும் அவருடைய பாரம்பரியம் குறித்து அவருக்கு அதிகம் தெரியாது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

அவருடைய கல்லறைக்கு சென்றபோது, அங்கிருந்த மூதாட்டி ஒருவர் துலீப் சிங் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் குறித்து கூறியுள்ளார். அதன்பின், அந்த அருங்காட்சியகம் குறித்து பேன்ஸ் மேற்கொண்ட ஆய்வின் வாயிலாக, அது ஏன்சியன்ட் ஹவுஸ் மியூசியம் என்றும், 1921ம் ஆண்டில் இளவரசர் ஃப்ரெட்ரிக் துலீப் சிங் வாங்கிய 15ம் நூற்றாண்டு கால டியூடர் வகை இல்லம் என்றும் பின்னாளில் அது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டதையும் அறிந்தார்.

பின்னர் மூன்றாண்டுகள் கழித்து, அந்த அருங்காட்சியகத்தை அவர் உள்ளூர் மக்களுக்கு தன்னுடைய கலைப்பொருட்களுடன் தானமாக அளித்துள்ளார். அருங்காட்சியகத்தின் காவலரிடம் துலீப் சிங்கின் குடும்பம் குறித்த புத்தகங்கள் குறித்து கேட்டபோது, "துலீப் சிங் குதித்த புத்தகங்கள் உள்ளன, ஆனால், அவருடைய குழந்தைகள் குறித்து எந்த புத்தகமும் இல்லை" என தெரிவித்ததாக பேன்ஸ் கூறுகிறார்.

மகாராஜா துலீப் சிங்

பட மூலாதாரம், PETER BANCE COLLECTION

துலீப் சிங் வாழ்க்கையை குறித்து மேலதிகமாக தெரிந்துகொள்ள அவருடைய குழந்தைகள் குறித்த தகவல்கள் இருந்தால் பகிருமாறு உள்ளூர் மக்களுக்கு செய்தித்தாள்களில் பல விளம்பரங்கள் வாயிலாக கேட்டுக்கொண்டிருக்கிறார் பேன்ஸ்.

அதன்பின் அடுத்த ஆறு மாதங்கள், பலரிடமிருந்தும் 300க்கும் மேற்பட்ட கடிதங்கள் அவருக்குக் கிடைத்துள்ளது. அதில் துலீப் சிங்கின் குடும்ப உறுப்பினர் ஒருவர் குறித்து தெரியும் என்ற தகவல்களும் மேலும் சிலவற்றில் அவர் தொடர்பான கலைப்பொருட்களும் இருந்துள்ளன.

"நான் அவர்களுடைய பேட்டிகளை பதிவு செய்தேன், துலீப் சிங் குறித்த அவர்களுடைய நினைவுகளை எழுதிவைத்துள்ளேன்," என்கிறார் பேன்ஸ். மேலும் துலீப் சிங் தொடர்பான கலைப்பொருட்களையும் பலர் இலவசமாகவும் சிலர் பணம் வாங்கியும் பேன்ஸிடம் கொடுத்துள்ளனர்.

"இந்தக் கண்காட்சி இளைய தலைமுறை பிரிட்டிஷ் இந்தியர்களுக்கு அவர்களின் வரலாற்றை ஆராய்வதற்கும், சுவாரஸ்யமான கலைப்பொருட்களைக் கண்டுபிடிப்பதற்கும் ஊக்கமளிக்கும் என்று நான் நம்புகிறேன்" என அவர் தெரிவித்தார்.

Banner
காணொளிக் குறிப்பு, பொன்னியின் செல்வன் பார்த்துவிட்டு தமிழ்நாட்டிற்கு 'பைக் டூர்' வந்த ஆந்திர இளைஞர்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: