சாகச வரலாறு: உலகை வலம் வந்த முதல் பெண்ணை நிர்வாணமாக்கி அவமதித்த மாலுமிகள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிபிசி நியூஸ் முண்டோ அணி
- பதவி, .
(உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், 22ஆம் கட்டுரை இது)
1768ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், இரண்டு பிரெஞ்சு கப்பல்கள், பொடீஸ் (Boudeuse) மற்றும் இட்வொல் (Étoile), டஹிடி (Tahiti) கடற்கரையில் நங்கூரமிட்டன. இந்த டஹிடி என்பது பிரெஞ்சு பாலினீசாவின் மிக உயரமான மற்றும் பெரிய தீவு, இது மோரியா தீவுக்கு அருகே உள்ளது. இது ஹவாயிக்கு தெற்கே 4,400 கிலோ மீட்டர் (2,376 கடல் மைல்), சிலியிலிருந்து 7,900 கிமீ (4,266 கடல் மைல்), ஆஸ்திரேலியாவில் இருந்து 5,700 கிமீ (3,078 கடல் மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
அதுவரை, பாலினீசா என ஒரு எரிமலைத் தீவு இருந்தது பற்றி பிரான்சுக்குத் தெரியாது. பின்னர் அவ்விடம் பூமிக்குரிய சொர்க்கம் என்ற நற்பெயரைப் பெற்றது, கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் முதல் முறையாக நிலத்தில் காலடி எடுத்து வைத்த 330 அதிகாரிகள் அதன் இயற்கை அழகைப் பாராட்டினர். இரண்டு பிரெஞ்சு கப்பல்களும் லூயி அன்டோயின் டி பூகெய்ன்வில் என்ற கடற்படை தளபதியின் தலைமையின் கீழ், உலகத்தை முதன் முதலில் சுற்றி வருவதற்கும், ஏகாதிபத்திய பிரெஞ்சு ஆளுகைக்கு பயனுள்ள இயற்கை வளங்களைக் கண்டறிவதற்கும் பயன்படுத்தப்பட்டன.
பூகன்வில் வெளியிட்ட தகவலின்படி, டஹிடியன் பாலியல் சுதந்திர பார்வையுடன் பிரெஞ்சுக்காரர்களின் பாலியல் கூச்ச சுபாவம் முரண்படுகிறது. பிரெஞ்சுக்காரர்கள் பாலியல் சுதந்திரத்தை செயல்பாட்டில் காண்பிப்பதை விட பார்வையில் ஆசைப்படுவதிலேயே வெளிப்படுத்தியவர்களாக இருந்தனர்.
இருப்பினும், இந்த பயணத்தின் போது ஒரு பெண் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த டஹிடியர்களின் பார்வையில் ஆபத்தைக் கண்டார், தன்னைக் காப்பாற்ற உதவிடுமாறு தனது தோழர்களிடம் அவர் உதவி கோரினார்.


இத்தனைக்கும் பிரெஞ்சுக்காரர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், இந்த பெண் ஒரு தீவுவாசி ஆக அல்லாமல் மாலுமிகள் குழுவில் ஒருவராக இருந்தார்.
தளபதி பூகன்வில் பின்னர் எழுதிய குறிப்பில், "அதுவரை ஒரு பையனாக பார்த்து வந்த ஃபிலிஃபர்ட் காமர்சனின் உதவியாளர், ஒரு பெண் என்பதை குழுவில் இருந்தவர்கள் கண்டறிந்தனர்," என்று கூறியிருந்தார்.பூகன்வில் கூற்றுப்படி, பயண இயற்கை விஞ்ஞானியான காமர்சனின் ஊழியர் ஜீன் பரா ஒரு பெண் என்ற உண்மையை இரு கப்பல்களில் இருந்த மாலுமிகளில் ஒருவர் கூட டஹிடியில் தரையிறங்கும்வரை (அதாவது ஒரு வருடத்திற்கும் மேலாக) கவனிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
"தாவரவியலாளர்கள்"
1766ஆம் ஆண்டு டிசம்பரில், ஜீன் பராவுக்கு 26 வயது. அப்போது ஜீன் பரா ஆண் ஆடை உடுத்தி மாறுவேடமிட்டு தென்மேற்கு பிரான்சில் உள்ள ரோச்ஃபோர்ட் துறைமுகத்தின் கரையோரத்தில் காத்திருந்தார்.

அங்கிருந்து பிரெஞ்சு கப்பல்களில் குறைந்தது மூன்று ஆண்டுகள்வரை உலகை வலம் வர திட்டமிடப்பட்ட முதலாவது பிரெஞ்சு திட்டத்தில் இடம்பெற அரசால் நியமிக்கப்பட்ட இயற்கை தாவர ஆய்வாளர் ஃபிலிபர்ட் காமர்சனுக்கு சேவை செய்ய பூகன்வில் நியமிக்கப்பட்டார். காமர்சனின் சம்பள முன்பணத்தில் ஒரு உதவியாளரை வேலைக்கு அமர்த்துவதற்கான பணமும் அடங்கியிருந்தது. அந்த விஞ்ஞானிக்கு தனது விருப்பப்படி ஒருவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அப்போது ஜீன் பராவை தமது உதவியாளராக வைத்துக் கொள்ள காமர்சன் இணங்கினார். அடிக்கடி சுகவீனம் அடைந்த காமர்சனுக்கு செவிலியராகவும் அவரது அறிவியல் பணிகளில் உதவிடும் பணிகளையும் செய்ய பூகன்வில் கேட்டுக் கொள்ளப்பட்டார். உண்மையில், காமர்சனை விட 12 வயது இளையவர் ஜீன் பரா, எளிய பூர்விகத்தில் இருந்து வந்தபோதிலும், படிக்கவும் எழுதவும் தெரிந்த ஒரு பெண் ஆக அவர் விளங்கினார். 1764ஆம் ஆண்டு முதல் விஞ்ஞானியுடன் வாழ்ந்து அவருக்கு ஒரு மகனைக் கொடுத்தார்.

- வரலாற்றுத் தொடர் 17: ஜெனோபியா: பால்மைரா சிற்றரசியின் வரலாறு
- வரலாற்றுத் தொடர் 16: ஹிட்லருக்காக குழந்தை பெற்ற 'ஆரிய' கர்ப்பிணிகள்
- வரலாற்றுத் தொடர் 15: சாஃபோ: லெஸ்பியன் உறவுக்காக உருகிய பெண் கவிஞர்
- வரலாற்றுத் தொடர் 14: சீனர்களை விரட்டியடித்த வியட்நாமிய லேடி ட்ரியூ
- வரலாற்றுத் தொடர் 13: ரோமானிய துருப்புகளை அலற விட்ட ராணி பூடிக்கா

பூகன்வில் பயணத்திற்கு காமர்சன் நியமிக்கப்பட்டபோது, அவருக்கு உதவியாளராக பணிக்கு அமர்த்தப்படும் ஜீன் பரா ஒரு பெண் என்பது தெரிந்திருந்தால் அவருக்கு அந்த வேலையே கிடைத்திருக்காது. காரணம், பிரெஞ்சு கடற்படை கப்பல்களில் பெண்கள் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. எனவே ஆணாக வேடமிட்டு வேலையை ஏற்க காமர்சனும் ஜீனும் இணைந்து திட்டம் தீட்டினர்.இந்த முடிவு தோழமையின் அடிப்படையில் மட்டுமே எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. காமர்சன் எழுதிய உயிலில், தான் இறந்த பிறகு பரா உயிர் பிழைத்திருந்தால் தன்னால் சேகரித்து வைத்திருந்த தாவர மாதிரிகள் உட்பட தனது இயற்கை வரலாற்று சேகரிப்புகளை ஒழுங்கமைக்க பாரிஸில் உள்ள தங்களின் பகிரப்பட்ட குடியிருப்பில் தங்கியிருக்க பராவுக்கு ஒரு வருடம் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இத்தகைய பணியை பராவுக்கு காமர்சன் ஒப்படைக்க காரணம், அவர் போதுமான தாவரவியல் அறிவையும் திறமையையும் பெற்றிருந்தார் என்பதுதான். மேலும், தமது புத்தகத்திலும் பூகன்வில் பற்றி எழுதும்போது அவரை தாவரவியலாளர் என்றே காமர்சன் கூறியிருந்தார்.


ரோச்ஃபோர்ட்டில் இட்வொல் கப்பலில் மாலுமிகள் ஏறியதும், காமர்சனுக்கு அவரது கள உபகரணங்களுக்கு இடமளிக்க கேப்டனின் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அது தனி கழிப்பறையைக் கொண்டிருந்தது, இதனால் பிற மாலுமிகளுடன் ஜீன் பரா சேர்ந்து வசிப்பது தவிர்க்கப்பட்டது. அது நடந்திருக்காவிட்டால் ஜீனின் குட்டு ஆரம்பத்திலேயே வெளிப்பட்டிருக்கும். 1767ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி - ஆறு வார ஏற்பாடுகளுக்குப் பிறகு, ரியோ டி ஜெனிரோவில் உள்ள பூகன்வில்லை சந்திப்பதற்காக இட்வொல் கப்பல் தென்மேற்கு நோக்கி பயணம் செய்தது. அங்கு பூகன்வில் பொடீஸ் கப்பலில் ராஜிய விவகார பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
சந்தேக புத்தி

பட மூலாதாரம், Getty Images
பூகன்வில்லை தவிர, பயணக்குழுவில் இடம்பெற்ற மேலும் மூன்று உறுப்பினர்கள் பராவை பற்றி தங்களுடைய நாட்குறிப்புகளில் எழுதியிருந்தனர். இட்வொல் கப்பலில் இடம்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரான பிரான்சுவா வைவ்ஸ், கப்பல் பயணம் தொடங்கிய சில நாட்களிலேயே ஜீன் பரா ஒரு பெண் என சந்தேகிக்கத் தொடங்கினர்.
மேலும், இட்வொல் கப்பலில் இருந்த மற்றொரு குழு உறுப்பினருடன் காமர்சன் பகிர்ந்த குறிப்பு ஒன்றில் ஜீன் பராவின் உண்மையான அடையாளம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அவர் ஒரு பெண் என்பதை வெளிப்படுத்தியது.கடல்சார் பாரம்பரியம் சடங்கின்படி, பூமத்திய ரேகையை ஒரு கப்பல் கடந்தபோது, 'பூமத்திய ரேகைக் கன்னிகள்', அருட்தந்தை நெப்டியூன் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களால் ஞானஸ்நானம் பெற நிர்வாணமாக்கப்பட வேண்டியிருந்தது.
அந்த வகையில், 1767ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதியன்று இட்வொல் கப்பல் பூமத்திய ரேகையை கப்பல் கடக்கும் தருணம் வந்தது. கப்பலில் இருப்பவர்கள் நிர்வாண குளியலுக்கு உட்பட வேண்டியிருந்தது.

இந்த நேரத்தில் அந்த சடங்கை மிருகத்தனமான விழா என்றும் "பேய்களின் முகமூடி" என்றும் அழைத்தார். அது வழக்கத்துக்கு மாறான விமர்சனமாக கப்பலில் இருந்தவர்களுக்கு தென்பட்டது.
இருப்பினும், ஒரு பண்புள்ளவராக காமர்சனின் 'ஞானஸ்நானம்' என்பது ஒரு வாளி தண்ணீருடன் குளிப்பதுடன் முடிந்து விட்டது. சாதாரண மாலுமிகள் குளத்தில் மூழ்குவதற்காக கீழே குதித்தனர். பிறகு அவர்கள் "நெப்டியூன் அகோலைட்டுகளால்" துடுப்புகள் மூலம் தாக்கப்பட்டனர். அவர்கள் மீது பச்சை வண்ணம் பூசப்பட்டது.இந்த நிகழ்வு நடந்தபோது ஜீன் பரா மட்டுமே முழுமையாக ஆடை அணிந்திருந்தவராக இருந்தார். அதை குழுவில் இருந்தவர்கள் கவனித்தனர்.
உற்சாகம்
இட்வொல் கப்பல் ஜூன் நடுப்பகுதியில் ரியோவை அடைந்தது. அங்கு பொடீஸ் கப்பலின் வருகைக்காக காத்திருந்த போது, பராவும் காமர்சனும் உள்ளூர் தாவரவியல் ஆய்வுக்காக வெளியே சென்றனர், இருப்பினும் காமர்சனின் தொடர்ச்சியான சுருள் சிரை புண்கள் அவரது நடமாட்டத்தை கட்டுப்படுத்தியது.
உண்மையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அறுவை சிகிச்சை நிபுணர் பாதிக்கப்பட்ட காலை துண்டிக்க பரிந்துரைத்தார். எனவே, காமர்சனின் பணியை பராவே மேற்கொண்டார்.
அங்கு வண்ணமயமான வெப்பமண்டல கொடியை கண்டுபிடித்த அவரது நினைவாகவே அந்த செடிகளுக்கு கடற்படை தளபதி பூகன்வில் பெயர் வைக்கப்பட்டிருக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
ஜூலை நடுப்பகுதியில், இரண்டு கப்பல்களும் தெற்கு அட்லான்டிக் கடலின் அலைகளை கிழித்துக் கொண்டு ஹம்ப்பேக் திமிங்கலங்களுக்கு இடையில் தெற்கே வேகமாக பாய்ந்தன. ஆனால் இட்வொல் கப்பலின் கிடங்கு அறையொன்றில் கசிவு ஏற்பட்டதால், அதை பழுதுபார்க்க ஏதுவாக ஜீன் பரா காமர்சன் உள்ளிட்டோர் உருகுவே தலைநகர் மான்டிவீடியோ துறைமுகத்தில் தரையிறங்க நேர்ந்தது.இந்த நேரத்தில் கார்மைன் கொச்சினலின் மாதிரிகள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன. முட்கள் நிறைந்த பேரிக்காய், பட்டைகளிலிருந்து சேகரிக்கப்பட்டன, அதன் ஓட்டில் இருந்து சிவப்பு சாயம் தயாரிக்கப்பட்டது. இதை தயாரிக்கும் நிறுவனங்கள் லண்டன் மற்றும் ஆம்ஸ்டர்டாம் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு வர்த்தகம் செய்தன.1767ஆம் ஆண்டு நவம்பரில் இட்வொல் கப்பலில் பழுதுபார்ப்பு முடிந்ததும், பயணம் ரியோ டி லா பிளாட்டாவிலிருந்து புறப்பட்டு, நீல நிறத்தில் ஒளிரும் கடல் பகுதியில் சென்றது. தெளிவான கடலின் அடிப்படையில் காணப்படும் பால் மூட்டத்துடன் நீல மேகம் பிரதிபலிப்பதால் இங்கு கடல் பகுதி ஒளிருகிறது.

- வரலாற்றுத்தொடர் 08: 'மாயன் நாள்காட்டி': உலகம் அழியும் என்று கணித்தது உண்மையா?
- வரலாற்றுத்தொடர் 07: மத்திய அமெரிக்காவை ஆட்டிப்படைத்த ஆஸ்டெக் பேரரசைதெரியுமா?
- வரலாற்றுத்தொடர் 06: ரஷ்யாவின் கடைசி ஜார் மன்னரின் குடும்பம் சுட்டுக் கொல்லப்பட்ட ரத்த வரலாறு
- வரலாற்றுத்தொடர் 05: பழங்கால மெசபடோமிய நகரான பாபிலோன் வரலாறு உங்களுக்கு தெரியுமா?

இந்த பயணத்தின்போது பூகன்வில் குழு, கடல் பகுதியில் இடம்பெற்ற சீல்கள், பென்குயின்கள், திமிங்கலங்கள், அல்பாட்ராஸ்கள், பெட்ரல்கள் மேலே பறந்ததை பதிவு செய்தது.அதுநாள்வரை தினக்கூலிகளான தமது பெற்றோரின் ஆதரவில் வாழ்ந்து வந்த ஜீன் பராவுக்கு இந்த அனுபவம் அற்புதமானதாக இருந்திருக்க வேண்டும்.

டிசம்பர் 4ஆம் தேதி, இந்த இரு கப்பல்களும் தென் அமெரிக்க கண்டத்தின் தெற்கு முனையை அடைந்து மேற்கு நோக்கி மாகெல்லன் ஜலசந்தியில் திரும்பின.
பூகன்வில்லின் நாட்குறிப்பில் ஐந்தில் ஒரு பங்கு இந்த பயண அனுபவங்களை விளக்க ஒதுக்கப்பட்டன. இந்த இடத்தில் பயணம் செய்தபோது கடல் பனி மீது மோதுவதையோ அல்லது தவிர்ப்பதையோ நோக்கமாக் கொண்டு கப்பல்கள் மெதுவாக சென்றன. இங்குள்ள கடற்கரையில் சில நேரம் இறங்கிய காமர்சனும் ஜீன் பராவும் படகோனிய பூர்வகுடிகளை இங்கே கண்டதை பூகன்வில் பதிவு செய்கிறார்.
மேலும் இந்த பூர்வகுடிகள் தாவரங்களின் தன்மை பற்றிய புரிதலையும் அறிவையும் கொண்டவர்களாக விளங்கினர். அப்பகுதியில் தங்களுடைய ஆய்வுக்கும் அவர்கள் உதவியதாக பூகன்வில் குறிப்பிடுகிறார். பிறகு ஜலசந்தியில் தொடர்ந்த பயணத்தின்போது கப்பல்களின் ஓட்டத்துடன் சேர்ந்து கடலில் துள்ளிக்குதித்த கறுப்பு மற்றும் வெள்ளை நிற டால்பின்கள் ஐரோப்பிய அறிவியலுக்கு புதியவை என்று காமர்சன் நம்பினார்; சுயநலத்துடன் இந்த டால்பின்களுக்கு தமது குடும்பப் பெயரை இணைத்து அவை Cephalorhynchus commersonii என்று அவர் பெயரிட்டார்.கரைக்கு நெடுந்தூரத்தில் இந்த பயணம் தொடர்ந்தபோது மாகெல்லானிக் பென்குயின் மற்றும் கடல் யானை கூட்டம் கூட்டமாக செல்வதை மாலுமிகள் கண்டனர். கடுங்குளிரிலும் இந்த பயணம் தொடர்ந்தபோது, அதை சமாளித்துக் கொண்டு மற்ற ஆண்களுடன் ஜீன் பராவும் பயணத்தை தொடர்ந்ததாக பூகன்வில் குறிப்பிடுகிறார்.
சந்தேகம் எப்படி வந்தது?
1768ஆம் ஆண்டு ஜனவரியின் பிற்பகுதியில், இந்த பயணம் இறுதியாக பசிபிக் பகுதிக்குள் நுழைந்தது, டச்சு காலனித்துவ ஆட்சியாளர்களால் நெருக்கமாகப் பாதுகாக்கப்பட்ட ஸ்பைஸ் தீவுகளை (அல்லது மொலுக்காஸ், இப்போது இந்தோனீசியாவில் உள்ள மலுகு தீவு) அடையும் நோக்கில் கப்பல்கள் சென்றன.
இந்த தீவுகளில் மாலுமிகள் பெற்ற பொருட்களில், மிகவும் முக்கியமானது ஜாதிக்காய்.
இங்கு செல்லும் வழியில் தான், 1768ஆம் ஆண்டு ஏப்ரலின் தொடக்கத்தில், கப்பல்கள் டஹிடி சென்றன. அங்கு ஜீன் பரா, காமர்சன் குழு ரொட்டிப்பழத்தை பற்றி அறிந்தனர். அதை சேகரிக்கும் ஆசையில் கேப்டன் ப்ளி பயணத்தை தொடங்கினார் என காமர்சன் தனது குறிப்பேட்டில் ரொட்டிப்பழச் செடி வரைந்து குறிப்பிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
பூகன்வில் குறிப்பின்படி இங்குதான் ஜீன் பரா "ஒரு பெண்" என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜீன் பரா ஒரு பெண் என்பதை அவரது உருவ அமைப்பை வைத்தே டஜிடியர்கள் கண்டுபிடித்தனர். அந்த ஞானத்தை அவர்கள் பெற்றிருந்தனர்.ஆனால், பூகன்வில் அந்த தீவில் பயணம் செய்த காலம்வரை ஜீன் பராவின் பாலின அடையாளம் வெளிப்படுத்தப்பட்டதை பற்றி அவர் எந்த தகவலையும் பதிவு செய்யவில்லை. 1768ஆம் ஆண்டு மே 28-29 வரையிலான நாட்குறிப்பு பதிவில்தான் அவர் ஜீன் பரா பற்றி முதலாவதாகவும் கடைசி முறையாகவும் ஜீன் பரா பற்றிய விவரங்களை எழுதி அவரை டஹிடியர்கள் அடையாளம் கண்டது பற்றி எழுதியிருந்தார்.
மே மாத இறுதியில் என்னிடம் சொல்ல அதிகம் இல்லாததால் இதை எழுதவில்லை என்று அல்ல. அந்த நேரத்தில் கப்பல்களில் உணவும் தண்ணீரும் குறைவாகவே இருந்தன. இதனால் மாலுமிகள் எலிகளை கூட உண்ணத் தொடங்கினர், சாதாரண மாலுமிகளுக்கு வேகவைத்த தோல் உணவாக கொடுக்கப்பட்டது.மேலும், வனுவாட்டு தீவுக்கூட்டத்தில் கப்பல்கள் ஆயுதமேந்திய மெலனேசிய தீவுவாசிகளால் சூழப்பட்டது. அப்போது அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வெப்பமண்டல மிகுதியின் மத்தியில், பொடீஸ் மற்றும் எட்வொல் கப்பல்களை நிறுத்த வசதியான இடத்தை தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவை எல்லாம் ஜீன் பரா அடையாளத்தை கடந்த மிகப்பெரிய பிரச்னை என்பதால் பிரத்யேகமாக தன்னால் அதில் கவனம் செலுத்த முடியவில்லை என்று கூறியிருக்கிறார் பூகன்வில்.

- வரலாற்றுத்தொடர் 04: இல்லுமினாட்டி ரகசிய சமூகம் எங்கு தோன்றியது? அதன் வரலாறு என்ன?
- வரலாற்றுத்தொடர் 03: பேரரசர் நெப்போலியன் வாழ்வு, மரணம் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?
- வரலாற்றுத்தொடர் 02: 15,000 ஜப்பானியர்களை 1,500 இந்தியர்கள் வென்ற கதை
- வரலாற்றுத்தொடர் 01: சீனப் பெருஞ்சுவரை கட்டத் தொடங்கிய மன்னரின் கல்லறை ரகசியம்

மீறல்
1768ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி, கடல் பகுதியில் உள்ள கடலடிப்பவளப் பாறையின் ஆபத்தை எட்வொல் கப்பலுக்கு எச்சரிக்கும் விதமாக பொடீஸ் கப்பலில் இருந்து வான் நோக்கி துப்பாக்கியால் சுடப்பட்டது. அந்த நேரத்தில் கப்பல்கள் கிரேட் பேரியர் ரீஃப் என்ற கடலடிப்பவளப்பாறைக்கு அருகே சென்றன. கேப்டன் ஜேம்ஸ் குக் இதை இப்படி விவரித்தார்: "புரிந்துகொள்ள முடியாத கடலில் இருந்து செங்குத்தாக உயரும் பவளப்பாறையின் சுவரை பார்த்தோம். அது பற்றி புரியாமல் மாலுமிகள் பிரமித்தனர்."
இன்று, ஆஸ்திரேலிய கண்டத்தில் இருந்து கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடலடி பவளப்பாறையை அக்காலத்தில் இந்த குழுவினர் கண்டறிந்ததன் நினைவாக அதை பூகன்வில் பவளப்பாறை என்று அழைத்தனர். இதனால் இரு கப்பல்களும் வடக்கு நோக்கி திரும்பின. ஜூன் 10ஆம் தேதி இந்த பயணம் நியூ கினியின் தென்கிழக்கு கடல் பகுதியில் இருந்தது. அங்கு கடலின் வேகமான நீரோட்டம் மற்றும் வெப்பமண்டல புயல்கள் முன்கூட்டியே வந்தன. அதனால் நியூ கினியன் வடக்கே உள்ள நியூ அயர்லாந்தில் கப்பல்கள் நிறுத்தப்பட்டன.இந்த நேரத்தில் பயணக்குழுவில் இருந்த மற்ற மூன்று பேரின் நாட்குறிப்புகள் இங்கு ஜீன் பராவுக்கு குறிப்பிடத்தக்க ஒன்று நடந்ததாக தெரிவிக்கின்றன.

பிரான்சுவா வைவ்ஸ் என்ற புத்தகம் ஜீன் பராவை பற்றி வெளிப்படையாகவே பேசியது. ஜீன் பராவை நிர்வாணமாக்கிய ஒரு குழு அவரை தாக்கத் தொடங்கியது என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த நிகழ்வுகள் பயணக்குழுவில் இடம்பெற்ற வேறு சில மாலுமிகள் தெரிவித்த தகவலுடன் ஒத்துப்போனாலும், வரலாற்றாய்வாளர்களும் நிபுணர்களும் இந்த பயணத்தின் கடற்படை தளபதி பூகன்வில் எழுதிய குறிப்புகளையே உண்மையான தகவல்கள் என்று நம்புகிறார்கள்.
மசாலா தேடி
நியூ அயர்லாந்தில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு ஒரு மாதத்திற்கு காமர்சனும் பராவும் தங்களுடைய அறையை விட்டு வெளியே வரவில்லை.இதற்கிடையில், இந்த பயணம் நியூ கினியின் வடக்கு கடற்கரையை நெருங்க முயன்றபோது இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசியது.இதனால் மேற்கே பயணம் செய்து ஸ்பைஸ் தீவுகளில் கப்பலை நிறுத்த பூகன்வில் முடிவு செய்தார். ஆனால், டச்சுக்காரர்கள் ஆதிக்கம் நிறைந்த அந்த தீவுகளில் நீண்ட காலமாக இங்கு உற்பத்தி மற்றும் நங்கூரமிடும் டச்சு கப்பல்கள் பற்றிய பட்டியலை ஒழுங்குபடுத்தி வந்ததால், டச்சு அல்லாத கப்பல்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இதனால் கிடைத்த பாதையில் கப்பல்கள் கண்மூடித்தனமாக பயணித்தன.

பட மூலாதாரம், Jeffdelonge
இந்த நேரத்தில் மசாலா தயாரிக்காத ஒரு தீவில் கப்பல்கள் நங்கூரமிடப்பட்டதும் கடைசியாக தங்களுடைய கப்பல்களை விட்டு காமர்சனும் ஜீன் பராவும் வெளியே வந்தனர். அந்த இடம்தான் இன்றைய புரு தீவு. அங்கு டச்சு கவர்னர் உத்தரவின்பேரில் இரு கப்பல்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
கடைசியில் அதில் இருந்தவர்களுக்கு உணவு வழங்க கவர்னர் உத்தரவிட்டார்.
பிறகு டச்சு கடற்படை கண்காணிப்பில் செப்டம்பரின் தொடக்கத்தில், மொலுக்கன் கடல் வழியாக நேரடியாக மேற்கே ஒரு பெரிய துறைமுகத்திற்கு செல்ல பிரெஞ்சுகடற்படை தளபதி பூகன்வில் கப்பல்கள் கட்டாயப்படுத்தப்பட்டன.
அந்த மாதத்தின் பிற்பகுதியில், படேவியாவிற்கு (இன்றைய ஜகார்த்தா) பயணம் தொடங்கியது. அங்கு சென்ற பிறகு அவர்கள் பிரெஞ்சு கட்டுப்பாட்டில் உள்ள பிரான்சின் ஐல் ஆஃப் பிரான்ஸ் தீவுக்கு (இப்போது மொரிஷியஸ்) பயணம் செய்வதற்கு முன் மீண்டும் எரிபொருளையும் உணவையும் நிரப்பிக் கொண்டனர். அந்த தீவில் ஜீன் பரா, காமர்சன் மற்றும் வானியலாளர் Pierre-Antoine Véron ஆகியோரை Pierre Poivre என்ற தாவரவியல் பூங்காவின் இயக்குநர் தமது வீட்டில் தங்க அழைத்தார். தமது தோட்டங்களில், ஃபிரான்ஸ் மற்றும் அதன் பேரரசுக்கு உணவளிப்பதற்கும் ஆடைகள் தயாரிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும் வெப்பமண்டல தாவரங்களை சோதனையிடும் பயிர்களை Poivre மேற்பார்வையிட்டார்.இந்த தீவில் தாவரவியலாளர்களின் திறன்கள் அதிகமாக தேவைப்பட்டனர். 1768ஆம் ஆண்டு டிசம்பரில் பூகன்வில் பயணத்தைத் தொடர்ந்தபோது, ஜீன் பரா, காமர்சன், வெரோன் ஆகிய மூவரும் ஐல் ஆஃப் பிரான்ஸ் தாவரவியல் பூங் இயக்குநருடனேயே தங்கினர்.
கௌரவங்கள்
1769ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சுக்கு கப்பல்கள் திரும்பியபோது, பூகன்வில் அந்த நாட்டில் ஒரு கதாநாயகனாக போற்றப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

இதேவேளை மொரிஷியஸில் உள்ள ஜீன் பராவும் காமர்சனும் இருந்தபடி தங்களுடைய தாவர ஆய்வை தொடர்ந்தனர். 1773ஆம் ஆண்டில் காமர்சன் இறப்பதற்கு முன் மடகாஸ்கரை இருவரும் ஆய்வு செய்தனர்; 1774 அல்லது 1775இன் முற்பகுதியில் ஜீன் பரா பிரான்சுக்கு திரும்பினார்.பிரான்ஸ் மண்ணில் அவர் காலடி எடுத்து வைத்தபோது, தாயகத்தில் இருந்து வெளியேறி சுமார் 8 ஆண்டுகள் ஆகியிருந்தது. அவர் திரும்பியதை கொண்டாட யாரும் இல்லை. இருப்பினும், கடற்படை தளபதி பூகன்வில் இந்த அசாதாரண பெண்ணை அங்கீகரிக்க வேண்டும் என்று கடற்படை அமைச்சர் டி லா மரைனுக்கு (கடற்படை அமைச்சகம்) வேண்டுகோள் விடுத்தார்.1785ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல், உலகை வலம் வந்த பிரெஞ்சு பயணத்தில் பங்கேற்றதற்காக அவருக்கு அரசாங்கம் ஓய்வூதியம் வழங்கியது. ஜீன் பரா உலகைச் சுற்றி வந்த முதல் பெண்மணி மற்றும் அறிவியல் பயணத்தில் ஆற்றிய பங்களிப்பிற்காக அரசாங்க ஓய்வூதியத்தைப் பெற்ற முதல் பெண்மணி ஆக விளங்கினார். உலகை வலம் வந்தபோது ஜீன் பரா மற்றும் காமர்சன் 6,000 க்கும் மேற்பட்ட தாவரங்கள், விலங்குகள் மற்றும் தாதுக்களின் மாதிரிகளை சேகரித்தனர், அவை அனைத்தும் பின்னர் பாரிஸில் உள்ள தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் இடம்பெற்றன.*க்ளினிஸ் ரிட்லி கென்டக்கி, லூயிவில் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையின் பேராசிரியராகவும் தலைவராகவும் உள்ளார். "பராவின் கண்டுபிடிப்புகள்" என்ற நூலின் ஆசிரியராகவும் உள்ளார்.(இந்த கட்டுரை முதன் முதலாக பிபிசி ஹிஸ்டரி எக்ஸ்ட்ரா இதழில் வெளியிடப்பட்டது.)

பிற செய்திகள்:
- கிலோ கணக்கில் கறி சாப்பிட்டவருக்கு தடை விதித்த சீன உணவகம்
- 'ஆமைக்கறி, பூனைக்கறி': சீமான் பற்றி இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் எம்.பி பேச்சால் சர்ச்சை
- "சென்னை அணியின் தலைவராக தோனியே தொடர வேண்டும்": மு.க. ஸ்டாலின்
- ஆப்கன் அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை வழங்க ஒப்புக்கொண்ட தாலிபன்கள்
- பேக்கரியில் திண்பண்டம் திருடியதாக சிறுமி எரித்துக் கொலையா? வளர்ப்புத் தந்தை கைது
- டாஸ்மாக் வருமானம்: வெள்ளை அறிக்கை கேட்ட சங்கத் தலைவர், இடை நீக்கம் செய்த தமிழ்நாடு அரசு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












