பிரிட்டிஷ் ஆட்சியில் தடை செய்யப்பட்ட பாரம்பரிய ‘இலுப்பைச் சாராயம்’ குறித்து தெரியுமா?

பட மூலாதாரம், Alamy
- எழுதியவர், சுகதோ முகர்ஜி
- பதவி, பிபிசி ட்ராவல்
பல நூற்றாண்டுகளாக பழங்குடியினரின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மஹுவா பானம் எனப்படும் இலுப்பைச் சாராயம் இருந்தது. மஹுவா மரத்தின் (இலுப்பை மரத்தின்) பூக்களை விற்பனை செய்வதற்கும், சேகரிப்பதற்கும் பிரிட்டிஷ் ஆட்சியின் போது தடை விதிக்கப்பட்டது. மீண்டும் அண்மையில் இது கவனம் பெறத் தொடங்கியுள்ளது.
கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவில் உள்ள சிமிலிபால் தேசிய பூங்காவின் உள்ளே அதிகாலை வேளையில் சென்றபோது அழகிய அருவி அருகே நின்றேன். சுற்றிலும் உள்ள மரங்களில் இருந்து கீழே விழுந்து கிடந்த வெளிர்-பச்சை நிற பூக்கள், காட்டுப் பகுதியின் தரைவிரிப்பு போல காணப்பட்டன. அதனை காண்பதற்கு முன்பு அந்த இனிமையான மலர்களின் வாசனை என் மூக்கைத் துளைத்தது.
அவை மஹுவா மரங்கள் என சந்தால் பழங்குடி பகுதியில் இருந்து வந்திருந்த என்னுடைய வழிகாட்டி சுரேஷ் கிஸ்கு கூறினார். குட்டையான, தடிமனான தண்டு பகுதிகள் மற்றும் குவிமாடம் போல மேல் கிளைகளின் கொத்து கொண்ட அந்த மரங்கள் இருந்த பகுதியின் அருகே சிறிய புல்வெளியும் இருந்தது.
மஹுவா மரம் அல்லது மதுகா லாங்கிஃபோலியா என்றழைக்கபடும் இந்த மரம், இந்தியாவின் கிழக்கு மற்றும் மத்திய, மேற்கு பகுதியில் உள்ள காடுகள் நிறைந்த சமவெளிப்பகுதிகளில் ஏராளமாக வளர்கின்றன. இந்த பகுதிகளில் சந்தால், கோண்ட், முண்டா மற்றும் ஓரான் பழங்குடியின மக்கள் கடந்த 3000 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கின்றனர். இந்த மரம் அவர்களின் வாழ்வாதாரம் என்று கருதப்படுகிறது. பாரம்பரியமாக இந்த பழங்குடியினர், இந்த மரங்களின் பூக்கள், பழங்கள், கிளைகள் மற்றும் இலைகள் ஆகியவற்றை உணவு, கால்நடை தீவனம், எரிபொருள், கலை, மருத்துவம் ஆகியவற்றுக்கு மட்டுமின்றி தானியங்களை வாங்குவதற்கான பண்டமாற்று முறைக்கான பணமாகவும் உபயோகித்து வருகின்றனர். தவிர அவர்கள் துடிப்பான நாட்டுப்புற விழாக்கள், பாடல்கள், வசனங்கள் ஆகியவற்றின் வழியே அதனை போற்றி பாதுகாத்து வருகின்றனர்.
அன்றைய தினத்தின் பிற்பகலில், வனத்தின் வெளிப்பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு கிஸ்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கே அவரது தாய், அவரது மூத்த சகோதரி கீதா ஆகியோர், விறகு அடுப்பின் மேல் வைக்கப்பட்டிருந்த உலோக பானையில் புளித்த மஹுவா சாற்றை தயாரித்துக் கொண்டிருந்தனர். மஹுவாவை காய்ச்சுவதற்காக ஒரு பெரிய பானைக்கு மேலே இரண்டு பானைகள் வைக்கப்பட்டிருந்தன.

பட மூலாதாரம், Conrad Braganza
காய்ச்சப்படும் சாறு, ஒடுக்கமான ஒரு குழாய் வழியே தரையில் அமைக்கப்பட்டிருந்த கொள்கலனில் சேமிக்கப்படுகிறது. சிறிது நேரம் கழித்து, கீதா அந்த சாற்றில் ஒரு கரண்டியை நனைத்து அந்த திரவத்தை நெருப்பில் இட்டார். நெருப்பு வெள்ளைத்தீயாக கொழுந்துவிட்டு எரிந்தது. "இந்த மஹுவா மதுபானம் தூய்மையானது" என கிஸ்கு கூறினார்.
அந்த மாலை நேரத்தில், இலைகளால் தயாரிக்கப்பட்ட சிறிய கோப்பையில் என்னிடம் கீதா கொடுத்த தெளிவான நிறமற்ற திரவத்தை நான் மெதுவாக உறிஞ்சி குடித்தேன். சுத்தமான வடிக்கட்டப்பட்ட மஹுவா மது, என்னுடைய தொண்டைக்குள் மகிழ்ச்சியான ஒரு புதிய பாதையில் இறங்கியது. குடித்து முடித்த பின்னர் புகையுடன் கூடிய பூவின் நறுமணத்தை அது விட்டுச் சென்றது.
"இதற்கு முன்பு ஏன் இதனை ருசித்துப் பார்க்கவில்லை?" என்று நான் வியந்தேன்.

பட மூலாதாரம், Conrad Braganza
பண்டையகாலம் முதல் 1800ஆம் ஆண்டுகளின் பிற்பகுதி வரை, கிஸ்கு போன்ற உள்நாட்டு பழங்குடியினத்தை சேர்ந்த குடும்பத்தினர் சுதந்திரமாக இதனை காய்ச்சி குடித்தனர். மஹுவா பானமாகவும் விற்றனர். எனினும், இந்திய அரசால் நாட்டு சாராயமாக கருதப்பட்டு தயாரிகப்பட்டு வந்த இந்த மதுவின் உற்பத்தி, பிரிட்டிஷ் ஆட்சியின்போது பலத்த அடியை சந்தித்தது. மஹுவா பொதுமக்களின் ஆரோக்கியம், ஒழுக்கத்துக்கு அச்சுறுத்தலான, ஆபத்தான போதைப்பொருளாக ஆங்கிலேய ஆட்சியில் வரையறுத்தனர்.
எனவே பிரிட்டிஷ் ஆட்சியில் இயற்றப்பட்ட 1878 ஆம் ஆண்டின் பாம்பே அப்காரி சட்டம், 1892 ஆம் ஆண்டின் மௌரா சட்டம் போன்றவற்றை அமல்படுத்தினர். இந்த சட்டங்கள் பழங்குடியினரின் மஹுவா பானத்தை தடை செய்வதுடன், அவர்கள் மஹுவா பூக்களை சேகரித்து வைத்திருப்பதையும் தடை செய்தது.
ரகசியமான முறையில் காய்ச்சுவதற்கு குறைந்த அளவிலான மஹுவா பூக்கள் பெரும்பாலும் அசுத்தங்களுடன் சேகரிக்கப்பட்டன. அந்த காலத்தில், உள்ளூர் மதுபான உற்பத்தியை கட்டுப்படுத்தி, ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மது வகைகளை விற்று ராணுவ ஆக்கிரமிப்புகளுக்கு வருவாய் ஈட்டுவது பொதுவாக பிரிட்டீஷ் ஆட்சியின் கொள்கையாக இருந்தது.
"அதே நேரத்தில், சில பிரிட்டிஷ் அதிகாரிகள், மஹுவா போன்ற கலாச்சார, ஊட்டச்சத்து முக்கியத்துவம் கொண்ட உள்நாட்டு பானங்களை அங்கீகரித்தனர். ஆனால், வருவாய் என்ற அச்சுறுத்தலே முன்னுரிமை பெற்றது," என்றார் லண்டன் பல்கலைக்கழகத்தில் நவீன வரலாற்றுப் பேராசிரியர் டாக்டர் எரிகா வால்ட்.
வியப்பூட்டும் வகையில், 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் கூட, பழைய பொருளாதார மற்றும் சமூக பழக்க வழக்கங்கள் அப்படியே இருந்தன. "பிரிட்டிஷ் ஆட்சியாளர்களைப் போலவே மது உற்பத்தி மற்றும் விற்பனை என்பது ஏகபோக உரிமையுடன் அரசுடன் தொடர்பு கொண்டதாக இருந்தது. மஹுவா தொடர்ந்து கடுமையான சட்டங்கள், கட்டுப்பாடுகளுக்கு உள்ளானது," என்றார் வால்ட்.
"மதுபானத்தை தவிர்ப்பது ஆரம்பகாலகட்ட தேசியவாதிகளின் இலக்காக மது இருந்தது, மதுபான கடைகள் முன்பு மறியல், போராட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவுக்கு மது அந்நியமாக இருந்தது என சில தேசியவாதிகள் வலியுறுத்தினர். ஆனால், மஹுவா போன்ற பானங்கள் , பல்வேறு பழங்குடியின மக்களின் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது," என்றார்.

பட மூலாதாரம், Conrad Braganza
ஆகவே, மஹுவா தொடர்ந்து தரம் குறைந்த அபாயகரமான பானமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பழங்குடி மக்கள் தங்களின் பாரம்பரியமான சந்தைகளுக்கு வெளியே அதனை உற்பத்தி செய்வதற்கும், விற்பனை செய்வதற்குமான உரிமை மறுக்கப்படுகிறது.
"சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்திய உயரடுக்கினரின் இயல்பை இது உங்களுக்குச் சொல்கிறது, அவர்கள் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறைகளை மிகவும் இழிவுபடுத்தினர்," என்கிறார் நியூயார்க் பல்கலைக்கழக உணவு ஆய்வுப் பேராசிரியர், கிருஷ்ணேந்து ரே. "பல சாதாரணமான, ஒரே மாதிரியான பொருட்களைத் தயாரிப்பதுதான் இந்திய மதுபானத் தொழிலின் வடிவமைப்பு என்ற இடத்துக்கு இது வந்து முடிந்தது," என்றார் அவர்.
சமூக-அரசியல் சித்தரிப்புக்கு மாறாக, மஹுவா திறன் கொண்ட தரமான மது என்ற குரல் மறு பிராண்ட் செய்யும் ஆர்வம் கொண்ட சில வலுவான தொழில்முனைவோரின் குரலாக வடிவம் பெற்றது. இந்த மது மீதான தடையை நீக்கத்தொடங்கும் வகையில், கலால் சட்டங்களில் மாற்றங்களை கொண்டு வருவது பற்றியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
"கோவாவில் நாங்கள் மஹுவா பானத்தை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபானம் என்ற வகையின் கீழ் அறிமுகம் செய்தோம். அரசாங்கத்திடம் அதிகம் வற்புறுத்திய பிறகு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபானம் என்ற குறிச்சொல்லை பயன்படுத்த அனுமதி கிடைத்தது," என்றார் டெஸ்மண்ட் நாசரேத். இவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் டெஸ்மண்ட்ஜி என்ற பிராண்டின் கீழ் மஹுவா மது மற்றும் மஹுவா சாராயம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார்.
கோவாவை தளமாகக் கொண்ட மது தயாரிக்கும் இந்த நிறுவனம் இதுதவிர, கர்நாடகா மாநிலத்திலும் மஹுவாவை விற்பனை செய்கிறது. நாட்டு சாராயம் என்ற பெயருடன் இல்லாமல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபானம் என்ற பெயரில் மஹுவாவை கோவா தவிர கர்நாடகாவும் அங்கீகரித்துள்ளது. இந்திய சட்டத்தின்படி நாட்டு மது வகைகளை மாநிலங்களுக்கு இடையே விற்பனை செய்ய முடியாது. எனவே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபானம் என்ற பெயரின் கீழ், மற்ற மாநிலங்களில் விற்கப்படும்போது பெருமளவில் வாடிக்கையாளர்களை சென்றடையும்.
கடந்த சில ஆண்டுகளாக மாநில அரசாங்கங்கள், முகமைகளின் மனப்பான்மைகளில் மெதுவாக ஒரு மாற்றம் நிகழ்ந்தது. உதாரணமாக, கடந்த 2021ஆம் ஆண்டு மஹுவா ஒரு பாரம்பரிய மது என மத்திய பிரதேச மாநிலம் அறிவித்தது. மகாராஷ்டிரா மாநிலம் தனது தொன்மையான சட்டங்களில் மாற்றங்கள் செய்து, பழங்குடிகள் மஹுவா மலர்களை சேகரிப்பது, சேமித்து வைப்பது சட்ட விரோதம் அல்ல என்று மாற்றியது.

பட மூலாதாரம், Conrad Braganza
அதே ஆண்டில் முதன் முறையாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி வாரியம் என்ற அரசின் அமைப்பு, பழங்குடி மக்களால் சத்தீஸ்கர் மாநில காடுகளில் சேகரிக்கப்பட்டு காயவைக்கப்பட்ட மஹுவா பூக்களை பிரான்ஸ் நாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
இன்னொருபுறம் சில மாநிலங்கள், மஹுவா மீதான தடையை நீக்கின. இந்த தடை நாடு முழுவதுக்கும் நீக்கப்பட்டால், மதுபானம் தயாரிக்கும் வணிக நிறுவனங்களுக்கு இது மிகவும் சாத்தியமான வணிக முயற்சியாக மாறும்.
2018ஆம் ஆண்டில் வசந்ததாடா சர்க்கரை நிறுவனத்துடன் இணைந்து நேடிவ் ப்ரூஸ் என்ற மும்பையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் இயக்குநர் சூசன் டயஸ், மஹுவாவை தயாரிக்கத் தொடங்கியிருக்கிறார். "எங்கள் செய்முறையை நாங்கள் வைத்திருக்கின்றோம். தேசிய அளவில் மஹுவா எளிதாக கிடைக்கும் வகையில் எங்கள் முதல் தொகுப்பை தயாரிக்க உற்பத்தி, விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தலுக்கான வழிகாட்டும் நடைமுறைகள் தேவைப்படுகின்றன," என்றார் அவர்.
கூடுதலாக பொருளாதார ரீதியாக உள்நாட்டு மஹுவா பயிரிடுவோரை ஆதரிக்க ஒரு நுண் தொழில் உருவாக்கப்பட வேண்டியது முக்கியம் என்று டயஸ் நம்புகிறார். காட்டில் இருந்து உற்பத்தி ஆலை முறைக்கு மஹுவா மது தொழில் மாறவேண்டும் . இந்த முறையில் பழங்குடிகளுக்கு மஹுவா பூக்களை சேகரிப்பதற்கும், சேமிப்பதற்கும், நேரடியாக மது ஆலைகளிடம் விற்பனை செய்வதற்குமான உரிமைகள், அதன் மூலம் அந்த பூக்களுக்கு பணம் ஈட்டும் முறை வேண்டும்.
எடுத்துக்காட்டாக, நாசரேத், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் மற்றும் ஒடிசாவின் மத்திய இந்திய வனப்பகுதிகளில் உள்ள பழங்குடியினர் குழுக்களுடன் இணைந்து பூக்களை பெறுகிறார். இது தவிர உள்ளூர் பழங்குடியினருக்கான சமூக பொருளாதார திட்டங்கள் மற்றும் வன உற்பத்தியை வணிகம் செய்தலை முன்னெடுக்கும் சத்தீஸ்கர் மாநில சிறு வன உற்பத்தி கூட்டுறவு கூட்டமைப்புடனும் அவர் இணைந்து உள்ளார்.
மஹுவா பூக்கள் என்று வரும்போது தரம் குறித்த விஷயங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. மஹுவாவின் மதிப்பை மீட்டெடுப்பது, அதே போல அதன் உற்பத்தியை நவீனப்படுத்தி அதிக அளவில் அதனை நோக்கி ஈர்க்க செய்வதுமே நாசேரத்தின் குறிக்கோளாக இருக்கிறது.
"உண்ணும் தரமுள்ள பூக்களை மட்டுமே நாங்கள் தேர்வு செய்கின்றோம். வலைகள் மூலம் சுகாதாரமான முறையில் இவை சேகரிக்கப்படுகின்றன. அதனை பின்னர் பாய்கள் அல்லது சோலார் உலர்த்திகளில் இவை உலர்த்தப்படும்," என்றார். மஹுவாவை நொதித்தல் மற்றும் பல முறை வடிகட்டுவதற்கு (ஒரே முறை காய்ச்சும் பாரம்பரியமுறைக்கு எதிராக) தங்கள் நிறுவனம் தரப்படுத்தப்பட்ட ஈஸ்டை எவ்வாறு பயன்படுத்துகிறது என்று அவர் விவரித்தார். இதன் மூலம் சுவை, ஆற்றல் மற்றும் தெளிவு ஆகியவற்றின் நிலைத்தன்மையை பராமரிக்க 40% அளவிலான ஆல்கஹால் சர்வதேச தரத்தில் பேக்கேஜ் செய்யப்படும்.
இந்தியாவின் மிகவும் பிரபலமான கலவை நிபுணர்களில் ஒருவரான ஷத்பி பாசு, மஹுவாவை உலகளாவிய பானமாக ஈர்க்க பாரம்பரிய முறைகளை உயர்த்துவது முக்கியம் என்று நம்புகிறார்.
"உற்பத்திக்கான வரையறுக்கப்பட்ட அளவைகள் இருக்கும்போது, டெக்யுலா, சேக் மற்றும் பிஸ்கோ போன்ற சிறிய உள்ளூர் மக்களால் முன்னெடுக்கப்பட்ட மது வகைகளின் பயணம் தொடங்கியது போல மஹுவாவும் உலகளவில் பாராட்டப்பட்ட பானமாக உண்மையில் மாறும்," என்றார் அவர். சுத்தமான மென்மையான சுவையை கொண்ட மஹுவாவின் தரம் காக்டெய்ல்களில் பயன்படுத்தப்படும். இது குறைந்த மெத்தனால் செறிவைக் கொண்டுள்ளது. எனவே அதிக போதையை விரும்பும் ஹேங்கோவர்களுக்கு துணைபுரிவதாக இருக்கும்" என்றும் மேலும் கூறினார்.
இந்திய பாரம்பரிய மதுவாக அங்கீகரிக்கப்பட சரியான போட்டியாக மஹுவா உள்ளது. அதே போல உலக தளத்தில் மிகவும் புகழ் பெற்றதாக மாறும்,"என்று நாசரேத் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் 13 மாநிலங்கள் மஹுவா உற்பத்தி செய்கின்றன. இது ஒன்றுதான் உலக அளவில் இயற்கையான இனிமையான மலரில் இருந்து தயாரிக்கப்படும் மதுவாக இருக்கிறது. இது தனித்துவமான சுவையை உள்ளடக்கியதாக உள்ளது," என்றும் கூறினார்.
உலகத்துக்கான மஹுவா என்று குறிப்பிடப்படும் ஒரு திட்டத்தில் 2023ஆம் ஆண்டின் கோடை காலத்தில் இங்கிலாந்துக்கும் , பின்னர் வட அமெரிக்கா மற்றும் இதர உலகநாடுகளுக்கும் இந்த மதுவை கொண்டு செல்வது என நாசரேத், பிராகன்சா ஆகியோர் திட்டமிட்டுள்ளனர்.
பல ஆண்டுகளாக ஒரு சட்டவிரோத பூர்வீகமான மிதமிஞ்சிய மதுவகை என இது முத்திரை குத்தப்பட்டிருந்தது. இந்த நிலையை மாற்றி, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பெரும் சந்தையில் வீட்டு வாசலுக்கே மஹுவாவை கொண்டு செல்வது நீண்ட பயணம். இந்த மஹுவா தயாரிப்பைப் பற்றி கிஸ்கு என்ன நினைக்கிறார் என்று கேட்டேன்.
"மேலும் இது குறித்து உண்மையில் புரிந்து கொள்ள முடியவில்லை," என தொலைபேசி வழியாக அவர் என்னிடம் கூறினார். ஆனால், இந்த புனிதமான மரம் மற்றும் அதன் பூக்கள் இறுதியில் ஒரு அங்கீகாரத்தை பெற உள்ளன என என்னுடைய சக நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன் என்று கூறினா். இதனை கூடுதலாக கொஞ்சம் மஹுவா அருந்தி கொண்டாடுவோம் என்றும் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













