பார்வை: பிரிட்டிஷ் ஆட்சியில் 10 லட்சம் இந்தியர்களை கொன்ற பஞ்சத்தின் அறியப்படாத வரலாறு

பட மூலாதாரம், Alamy
- எழுதியவர், தின்யார் படேல்
- பதவி, வரலாற்று அறிஞர்
ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மிக மோசமான கோடைக்காலம் அது. வறட்சியும் அதிதீவிரமான வெப்பமும் நாடு முழுவதும் இருந்த 33 கோடி இந்தியர்களை நினைத்துப்பார்க்க முடியாத அளவில் பாதித்தது. அதைவிட இந்த கோடைக்காலம் மிக மோசமான, அழிவுகரமான காலநிலை பேரிடரை ஏற்படுத்தியிருந்தது: அதுதான் ஒரிசா பஞ்சம் - 1866. இந்த பஞ்சம் குறித்து சிலர் மட்டுமே அரிதாகவே அறிந்துவைத்துள்ளனர். அடர்த்தியான கருத்துகள் பொதிந்த இந்திய வரலாற்று பக்கங்களிலும் மிகச்சிறிதளவே இப்பஞ்சம் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
மிகச்சில நினைவு நிகழ்ச்சிகளே இதுகுறித்து நடத்தப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஒரிசா பஞ்சம் கிழக்கு இந்தியாவில் சுமார் 10 லட்சம் இந்தியர்களை கொன்றுள்ளது.

பட மூலாதாரம், Alamy
தற்போதைய ஒரிசா மாநிலத்தில் இந்த பஞ்சம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது, அங்கு மூன்றில் ஒருவர் இப்பஞ்சத்தால் இறந்தனர். ஒட்டுமொத்த இறப்பு விகிதம் திகைப்பூட்டும் வகையில் உள்ளது. அயர்லாந்தில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தைவிட (அயர்லாந்தின் உருளைக்கிழங்கு பஞ்சம்) ஒரிசா பஞ்சத்தால் இறந்தவர்கள் அதிகம். இந்திய அரசியலில் முக்கியமான திருப்புமுனையாகவும் ஒரிசா பஞ்சம் அமைந்தது. இதனால், இந்திய வறுமை குறித்து தேசிய அளவில் விவாதங்கள் எழுந்தன. இந்த விவாதங்களுள் சில, இன்றும் வறட்சி நிவாரண நடவடிக்கைகளில் எதிரொலிக்கின்றன.
'எந்த நிவாரணமும் சிறந்த நிவாரணம் இல்லை'
இந்திய துணைக்கண்டத்திற்கு பஞ்சம் புதிது இல்லை என்றாலும், பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தால் பஞ்சங்கள் நிகழ்வதும் அதன் கொடூரமும் அதிகரித்தது.
முன்பு வலுவாக இருந்த ஆடை தொழிலை அழித்து அதிகமான இந்திய மக்களை வேளாண் தொழிலுக்குள் தள்ளியது கிழக்கிந்திய கம்பெனி. இதனால், இந்திய பொருளாதாரம் முன்பிருந்ததைவிட பருவமழையை சார்ந்திருக்கக்கூடியதாக மாறியது.
சுமார் 155 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட இந்த பஞ்சத்துக்கு பருவமழை பொய்த்ததே முதன்மை காரணமாக உள்ளது.
"அனைவரையும் பாதிக்கக்கூடிய பற்றாக்குறையை நாம் எதிர்நோக்கியிருக்கிறோம் என்பதை இனி மறைக்க முடியாது," என கொல்கத்தா செய்தித்தாள் வாயிலாக 1865ம் ஆண்டில் பிரிட்டிஷ் நபர் ஒருவர் அறிவித்தார்.
விலைவாசி உயர்வு, தானியங்களின் கையிருப்பு குறைதல், உணவுக்கே வழியில்லாத விவசாயிகளின் விரக்தி உள்ளிட்ட செய்திகளை தாங்கி இந்திய மற்றும் பிரிட்டிஷ் செய்தித்தாள்கள் வெளியாகின.
ஆனாலும் பிரிட்டீஷ் அரசாங்கத்தை இதெல்லாம் நடவடிக்கையில் இறங்கவைக்கவில்லை. பஞ்சத்தை தீர்ப்பதில் அரசாங்கத்தின் தலையீடு தேவையற்றது, ஆபத்தானது என்பதே 19ம் நூற்றாண்டின் மத்தியில் நிலவிய பொதுவான பொருளாதார அறிவாக இருந்தது. சந்தை தாமாகவே சரியான நிலைக்குத் திரும்பிவிடும், மால்தூசியன் கோட்பாட்டின்படி, மக்கள்தொகை பெருக்கத்திற்கான இயற்கையின் பதிலடியே அதிகமான உயிரிழப்புகள் என்ற கருத்துகளே நிலவின. இந்த பஞ்சம் ஏற்படுவதற்கு சுமார் இரு தசாப்தங்களுக்கு முன் அயர்லாந்தில் பேரழிவை ஏற்படுத்திய பஞ்சத்தின் போது பிரிட்டன் அரசாங்கம், இதே தர்க்கத்தின் அடிப்படையில்தான், எந்த நிவாரணமும் சிறந்த நிவாரணம் இல்லை என முடிவு செய்தது.

பட மூலாதாரம், Alamy
1866 ஆம் ஆண்டில் வங்காளத்தின் (அக்காலத்தில் ஒரிசாவுடன் இணைந்திருந்தது) அப்போதைய காலனியாதிக்க ஆளுநர் செசில் பீடன் வான்வழியாக ஒரிசாவுக்கு வருகை தந்தபோதும் இதே நிலைப்பாட்டைதான் கூறினார். அப்போது, 'இத்தகைய வருகைகளின் மூலம் எந்தவொரு அரசாங்கத்தாலும் அழிவை தடுக்கவோ, தணிக்கவோ முடியாது," என அவர் தெரிவித்தார்.
'மிகவும் தாமதமான, மிக அழுகிய நிவாரணம்'
விண்ணைத் தொடும் தானியங்களின் விலையை ஒழுங்குபடுத்துவது பொருளாதாரத்தின் இயற்கை விதிகளை சீர்குலைக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். "நான் இதைச் செய்ய முயற்சித்தால், நான் ஒரு கொள்ளைக்காரன் அல்லது திருடனை விட சிறந்தவன் இல்லை என்று கருத வேண்டும்" என்று ஆளுநர் செசில் பீடன் கூறினார்.
1866, மே மாதத்தில் ஒரிசாவின் பேரழிவை புறக்கணிப்பது எளிதானதாக இருக்கவில்லை. ஒரிசாவின் கட்டக் நகரில் தங்கள் படையினரும் காவல் அதிகாரிகளும் பசியால் வாடுவதை பிரிட்டிஷ் அதிகாரிகள் கண்டனர். புரி நகரில் எஞ்சியிருந்த மக்கள் இறந்தவர்களைக் குவிப்பதற்காக அகழிகளை வெட்டிக் கொண்டிருந்தனர். "மைல் கணக்கான தூரத்திற்கு உணவுக்காக அவர்கள் அலறுவதை கேட்க முடிந்தது" என்று ஒரு பார்வையாளர் கருத்து தெரிவித்தார்.
இத்தகைய அச்சுறுத்தும் விளைவுகளுக்கிடையே, காலம் கடந்து ஒரிசாவுக்கு அரிசியை இறக்குமதி செய்யும் நடவடிக்கையில் இறங்கினார் பீடன். ஆனால், அம்முயற்சி கொடூரமான மற்றும் அதிகப்படியான மழை மற்றும் வெள்ளத்தால் தடைபட்டது. இந்த நிவாரணம் மிகச்சிறிதளவிலும், மிக தாமதமான, அழுகிப்போன ஒன்றாகவும் இருந்தது. சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தால் ஒரிசா மக்கள் தங்கள் உயிர்களை இழக்க வேண்டியிருந்தது.
மேற்கத்திய கல்வி முறையில் படித்த இந்தியர்கள் பலரும் இந்தியாவை ஒட்டுமொத்தமாக வறுமை பீடித்த நாடாக மாற்றியதாக பிரிட்டிஷ் ஆட்சியின்மீது பல ஆண்டுகளாக குற்றம்சாட்டி வந்தனர். இது ஆரம்பகால தேசியவாதியான தாதாபாய் நௌரோஜியை இந்திய வறுமை பற்றிய தனது வாழ்நாள் ஆய்வைத் தொடங்க தூண்டியது. 1867ன் ஆரம்பத்தில் பஞ்சம் தணியத்தொடங்கிய நிலையில், தாதாபாய் நௌரோஜி 'வடிகால் கோட்பாட்டை' உருவாக்கினார். அதாவது, இந்தியாவின் வளத்தை உறிஞ்சியே பிரிட்டன் வளமானது என்பதே அந்த கோட்பாடு.

பட மூலாதாரம், Alamy
"உயிர், உடைமைகளுக்கான பாதுகாப்பு இந்தக் காலத்தில் சிறப்பாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை" என்பதை ஒப்புக்கொள்ளும் தாதாபாய் நௌரோஜி, "ஆனால், ஒரு பஞ்சத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் அழிந்தது, இவ்வாறு பாதுகாக்கப்பட்ட உயிர் மற்றும் சொத்து மதிப்புக்கு ஒரு விசித்திரமான எடுத்துக்காட்டு" என்கிறார்.
அலட்சியமான பதில்
அவருடைய கருத்து எளிமையானது. பசியில் இருப்போருக்கு உணவளிக்கப் போதுமான உணவு வளம் இந்தியாவில் இருந்தது. ஆனால் அரசாங்கம் ஏன் மக்களை இறக்க அனுமதித்தது? 1866ல் ஒரிசா மக்கள் அழிந்துகொண்டிருந்த போது, இந்தியாவிலிருந்து 200 மில்லியன் பவுண்ட் அரிசி பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக நௌரோஜி குறிப்பிடுகிறார். மேலும், இந்தியாவில் ஏற்பட்ட மற்ற பஞ்சங்களிலும் இதேபோன்று அதிகளவு ஏற்றுமதி நிகழ்ந்ததை அவர் கண்டறிந்தார். "இறைவா, எப்போது இது முடிவுக்கு வரும்?" என கேட்கிறார் நௌரோஜி.
சென்னை மாகாணப் பஞ்சம்
ஆனால், இது விரைவில் முடிவுக்கு வரவில்லை. 1869 முதல் 1874 வரை வெவ்வேறு பஞ்சங்கள் ஏற்பட்டன. 1876 முதல் 1878 வரை ஏற்பட்ட சென்னை மாகாண பஞ்சத்தின்போதும் அயர்லாந்து மற்றும் ஒரிசா பஞ்சங்களைப் போன்றே வைசிராய் லிட்டன் பஞ்சத்தைக் கட்டுப்படுத்துவதில் எந்த தலையீடும் செய்யாததால் சுமார் 40 முதல் 50 லட்சம் மக்கள் இறந்தனர்.
1901ம் ஆண்டில் மற்றொரு தேசியவாதியான ரொமேஷ் சந்தர் தத், 1860களில் ஏற்பட்ட 10 பெரும் பஞ்சங்களில் சுமார் ஒரு கோடியே 50 லட்சம் மக்கள் இறந்ததாக கணக்கிட்டுள்ளார். இந்தியர்கள் அப்போது மிகவும் ஏழ்மையில் இருந்தனர், மேலும் அரசாங்கத்தின் பதில் அலட்சியமாக இருந்தது. "ஒவ்வொரு ஆண்டும் வறட்சி ஏற்படும்போதும் பஞ்சம் ஏற்பட்டது" என குறிப்பிடுகிறார் அவர்.

பட மூலாதாரம், Alamy
பணக்கார, விவசாயத்தை குறைவாக சார்ந்து இருக்கும் இந்தியா, இப்போது அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள முடிகிறது. எனினும் சில பிரச்னைகள் இன்னும் நீடிக்கின்றன. 2016ம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சியை தணிப்பதில் சில மாநில அரசுகள் மிக மெதுவாக செயல்படுவதாக இந்திய உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இந்த காரணங்களுக்காக ஒரிசா பஞ்சத்தை இப்போதும் நாம் நினைவில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். இந்த மானுடப் பேரழிவும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த பிறவும், பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு எதிராகப் போராட இந்தியர்களை ஊக்குவித்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: • ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக் • டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர் • இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம் • யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













