நேரு பற்றி அமித் ஷா சொல்லும் குற்றச்சாட்டில் உண்மையுள்ளதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிபிசி இந்தி
- பதவி, புது டெல்லி
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டரில் உள்ள யாங்ட்சே பகுதியில் டிசம்பர் 9ஆம் தேதி சீன ராணுவ வீரர்களுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் நடந்து இரண்டு நாட்கள் ஆன பிறகும் அரசு மௌனமாக இருப்பது குறித்து எதிர்க்கட்சிகள் ஆக்ரோஷமாக உள்ளன.
இரண்டு நாட்களாக அரசு மெளனம் காத்தது ஏன் என முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
எல்லையில் நடந்த இரு தரப்பு மோதல் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அரசின் தரப்பை விளக்கினார்.
அதே நேரத்தில் இந்த முழு விஷயத்திலும் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது கடைப்பிடித்த சீனா தொடர்பான கொள்கை குறித்து அமித் ஷா கேள்விகளை எழுப்பினார்.
இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவாஹர் லால் நேருவையும் அவர் விட்டு வைக்கவில்லை.
நேருவின் அன்பு காரணமாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் பதவி பறிபோனது என்றும் அமித் ஷா கூறினார்.
ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்காமல் போனதற்கு நேருதான் காரணமா?
பல ஆண்டுகளாக பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் தீர்மானங்களுக்கு எதிராக சீனா தனது ரத்து அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் சீனா நிரந்தர உறுப்பினராக உள்ளது.
சீனாவின் இந்த நிலைப்பாடு குறித்து இந்தியா அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் மோதி அரசை இலக்கு வைத்து விமர்சித்து வருகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
காங்கிரஸின் இந்த நிலைப்பாட்டை பாஜக எதிர்த்து வருகிறது.
முன்னாள் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஒருமுறை தனது செய்தியாளர் சந்திப்பில், 2004 ஜனவரி 9ஆம் தேதியிட்ட 'தி இந்து' நாளிதழின் நகலை சுட்டிக்காட்டியபடி, ’இந்தியாவின் முதல் பிரதமர் நேரு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியை இந்தியாவுக்கு சாதகமாக பெற மறுத்துவிட்டார் என்றும் அதை சீனாவுக்கு பெற்றுத் தந்தார்’ என்றும் கூறினார்.
காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச் செயலராக இருந்தவருமான சசி தரூரின் 'நேரு - தி இன்வென்ஷன் ஆஃப் இந்தியா' புத்தகத்தை மேற்கோள்காட்டி தி இந்து நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டிருந்தது.
1953 ஆம் ஆண்டில், ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் முன்மொழிவை இந்தியா பெற்றதாகவும், ஆனால் அதை சீனாவுக்கு அப்போதைய இந்திய தரப்பு கொடுத்து விட்டதாகவும் தமது புத்தகத்தில் சசி தரூர் எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
நேருவின் மறுப்பு குறிப்பிடப்பட்ட கோப்பை இந்திய தூதர்கள் பார்த்ததாக தரூர் எழுதியுள்ளார். இந்தப்பதவியை தைவானின் இடத்தில் சீனாவுக்கு வழங்க நேரு பரிந்துரைத்தார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று சீனா ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இருப்பதற்கு நேருதான் காரணம் என்றும் அதன் விளைவை இந்தியா சந்திக்க வேண்டி இருக்கிறது என்பதும்தான் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்த கருத்துகளின் உட்பொருள்.
தற்போது அதே குற்றச்சாட்டை இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கூறியுள்ளார்.
இருப்பினும், இந்த விஷயத்தில் நேருவை விமர்சிப்பவர்கள், வேறு பல உண்மைகளை புறக்கணிக்கிறார்கள் என்று பலர் கருதுகிறார்கள்.
ஐக்கிய நாடுகள் சபை 1945 இல் உருவாக்கப்பட்டது. அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் அப்போதுதான் வடிவம் பெறத்தொடங்கி இருந்தன.
1945இல் பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் சேர்க்கப்பட்ட போது, இந்தியாவுக்கு சுதந்திரம் கூட கிடைத்திருக்கவில்லை.
பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு அதிகாரபூர்வமற்ற முன்மொழிவு எதுவும் இந்தியாவுக்கு கிடைக்கவில்லை என்று நேரு 1955ஆம் ஆண்டு செப்டெம்பர் 27ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக கூறியிருந்தார்.
1955 செப்டம்பர் 27ஆம் தேதி டாக்டர். ஜே.என். பாரேக்கின் கேள்விகளுக்குப் பதிலளித்த நேரு, "ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கான அதிகாரபூர்வ அல்லது அதிகாரபூர்வமற்ற முன்மொழிவு எதுவும் பெறப்படவில்லை. சந்தேகத்திற்குரிய சில குறிப்புகள் மேற்கோள்காட்டப்படுகின்றன. அவற்றில் உண்மை இல்லை. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் ஐநா சாசனத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. சில நாடுகள் அதில் நிரந்தர உறுப்பினர் பதவிகளைப்பெற்றன.
சாசனத்தில் திருத்தம் செய்யாமல் - மாற்றம் செய்யவோ, புதிய உறுப்பினரை சேர்க்கவோ முடியாது. இவ்வாறான நிலையில் இந்தியாவுக்கு இடம் வழங்கப்பட்டதா, இந்தியா அதை ஏற்க மறுத்ததா என்ற கேள்விக்கே இடமில்லை.
ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர் பதவி பெறுவதற்கு தகுதியுடைய எல்லா நாடுகளும் அதில் இடம்பெற வேண்டும் என்பது நமது அறிவிக்கப்பட்ட கொள்கையாகும்,” என்று கூறியிருந்தார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் சீனா நிரந்தர இடம் பெறுவதற்கு ஜவாஹர்லால் நேரு ஆதரவு அளித்ததாக மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் குற்றம்சாட்டியிருந்தார்.
”நேரு இந்தியாவுக்கு பதிலாக சீனாவை ஆதரித்தார். சீனா மற்றும் காஷ்மீர் விஷயத்தில் அவர் பெரிய தவறு செய்து விட்டார்,” என்று ஜேட்லி கூறியிருந்தார்.
1955ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி மாநில முதல்வர்களுக்கு நேரு எழுதிய கடிதத்தை அருண் ஜேட்லி ட்விட்டரில் மேற்கோள் காட்டியிருந்தார்.
“1955 ஆகஸ்ட் 2 ஆம் தேதி நேரு முதலமைச்சர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். சீனாவை ஐக்கிய நாடுகள் சபையில் சேர்க்க வேண்டும், பாதுகாப்பு சபையில் அல்ல என்று அமெரிக்கா அலுவல்பூர்வமற்ற வகையில் கூறியுள்ளது. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு இடம் அளிக்கப்படவேண்டும். ஆனால், பாதுகாப்பு கவுன்சிலில் சீனா சேர்த்துக் கொள்ளப்படாமல் இருப்பது அதற்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்று நேரு குறிப்பிட்டிருந்தார்,” என்று ஜேட்லி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
வரலாறு என்ன?
1950களில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீனாவை சேர்ப்பதற்கு இந்தியா பெரிதும் ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இந்தப் பதவி தைவானிடம் இருந்தது. அந்த இடத்தை சீனாவுக்கு ( பீப்பிள்ஸ் ரிப்பளிக் ஆஃப் சைனா) வழங்க ஐக்கிய நாடுகள் சபை மறுத்துவிட்டது.
சீனா ஐக்கிய நாடுகள் சபையில் நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு இந்திய பிரதமர் ஜவாஹர் லால் நேருதான் குரல் கொடுத்தார் என்று சசி தரூர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
சீனாவை நேரு ஆதரித்தாரா?
1950 களில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய பதற்றத்தை கருத்தில் கொண்டு மாவோவை மகிழ்விக்க நேரு இதைச் செய்தார் என்று சிலர் நம்புகிறார்கள்.
ஆசிய நாடுகளிடையே ஒற்றுமைக்கான நேருவின் அதீத ஆர்வம், தவறான இடத்திற்கு அவரது ஆதரவை கொண்டு சென்றது. ஏனென்றால் இந்த வரலாற்றுப் பயணத்தில் சீனாவும் இந்தியாவும் துணையாக இருந்ததை இரு நாடுகளின் வரலாறும் காட்டுகிறது என்று மற்றவர்கள் வாதிடுகின்றனர்.
சர்வதேச உறவுகளின் லட்சியவாதம் மற்றும் யதார்த்தம் பற்றிய நேருவின் மதிப்பீட்டில் இதை ஒரு குறையாக பலர் பார்க்கிறார்கள். சக்தி முக்கியமானது என்றும் அதற்காக புத்திசாலித்தனமாக செயல்படவேண்டும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
"இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையில் சீன மக்கள் குடியரசை ஆதரிப்பதற்கான நேருவின் காரணங்களை புரிந்து கொள்ள, இந்த வாதத்தை முன்வைத்தவர்கள் தவறி விட்டனர். நேரு வரலாற்றைப் பற்றி அதிகம் படித்தார் என்பதும், நாடுகளுக்கிடையேயான அதிகார சமநிலை அவருக்கு மிகவும் முக்கியமானது என்பதும் அவர்களுக்குத் தெரியாது,” என்று ’தி டிப்ளோமாட்’ இதழ் தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
"நேருவின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள ஒருவர் 20 ஆம் நூற்றாண்டுக்கு செல்ல வேண்டும். பெரிய சக்திகளை அதன் நண்பர்களிடமிருந்து விலகி வைக்கக்கூடாது. அவர்கள் சர்வதேச அமைப்புகளில் சேர்க்கப்பட வேண்டும் என்று அப்போதைய அரசியலை கருத்தில் கொண்டு நேரு நம்பினார்,” என்று அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
முதலாம் உலக போருக்குப் பிறகு ஜெர்மனி அநியாயமாக நடத்தப்பட்டதாகவும், அவமானம் மற்றும் ஒதுக்கிவைக்கப்பட்ட உணர்வானது, அதை அதிருப்தியில் இருந்த மற்றொரு நாடான சோவியத் ஒன்றியத்துடன் நெருக்கமாக்கியது என்றும் நேரு கருதினார்.
மாவோவின் சீன மக்கள் குடியரசு ஒரு சாதாரண சக்தி அல்ல என்பதில் நேரு தெளிவாக இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
" 1922 ஏப்ரலில் ஜெர்மனி ரஷ்யாவுடன் Rapallo ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது ஐரோப்பாவில் பதற்றங்களை அதிகரித்தது. ஆனால் 1926 ஆம் ஆண்டில் லீக் ஆஃப் நேஷன்ஸில் உறுப்பினராவதற்கு பிரிட்டன் ஜெர்மனிக்கு உதவியது. இருந்தபோதிலும் பெரும் மந்தநிலை, உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு மீண்டும் அச்சுறுத்தலாக மாறியது. சீன மக்கள் குடியரசு ஒரு சாதாரண சக்தியல்ல என்பது நேருவுக்குத் தெளிவாகத் தெரிந்தது.
எனவே அது உலக அரசியலில் இணைக்கப்பட வேண்டும். ஏனெனில் இதைச் செய்யாவிட்டால் அது எதிர்பாராத விதமாக பிற்காலத்தில் ஆபத்தாக முடியும் என்று அவர் கருதினார். பாதுகாப்பு சபையில் சீனாவின் நிரந்தர உறுப்பினர் பதவி குறித்த நேருவின் நிலைப்பாட்டிற்கு வழிவகுத்த மிகப்பெரிய வாதம் இதுவாகும்,” என்று தெற்காசிய பல்கலைக்கழகத்தின் சர்வதேச விவகாரங்கள் துறையின் உதவி பேராசிரியரான நபருண் ராய், ’தி டிப்ளோமாட்டில்’, எழுதினார்.
"புதிய சீனாவின் காரணமாக கிழக்கில் மட்டுமல்ல, முழு உலகிலும் அதிகார சமநிலை மாறிவிட்டது என்று நேரு நம்பினார். எனவே, சீன மக்கள் குடியரசுக்கு உலக அரசியலில் இடமளிக்காமல் இருப்பது முட்டாள்தனம் மட்டுமல்ல ஆபத்தானதும் கூட என்று அவர் கருதினார். மக்கள் சீனக் குடியரசை ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து விலக்கி வைத்தால், ஐநாவின் முடிவுகளை சீனா பின்பற்றாது என்று நேரு நம்பினார்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் விருப்பம்
ஒரு நாடு சக்திவாய்ந்ததாக மாறும்போது அதன் லட்சியங்களும் அதிகரிக்கின்றன என்று சர்வதேச உறவுகளில் கூறப்படுகிறது.
இந்த விஷயத்தில் இந்தியாவும் வேறுபட்டதாக இல்லை. சமீப காலங்களில், அதன் ராணுவ மற்றும் பொருளாதார பலம் அதிகரித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில் உலக அரசியலில் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்க அதன் விருப்பமும் அதிகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் வேண்டும் என்று கடந்த சில காலமாகவே இந்தியா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஐநா பொதுச் சபை உட்பட உலகெங்கிலும் உள்ள பல்வேறு மன்றங்களில் இந்திய தலைவர்கள் இதற்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். நிரந்தர உறுப்பினராக இந்தியாவின் அந்தஸ்து, சர்வதேச சமூகங்கள் முன் நிலைநிறுத்தப்படும்.
இந்த முயற்சிகளின் முடிவுகள் முற்றிலும் ஏமாற்றமளிப்பதாக இல்லை. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா போன்ற முக்கிய சக்தி வாய்ந்த நாடுகள் பல சந்தர்ப்பங்களில் நிரந்தர உறுப்பினர் பதவிக்கான இந்தியாவின் கோரிக்கைக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.
ஆனால் இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் உள்ள விரிசல்களை சமீபத்திய நிகழ்வுகள் காட்டும் நிலையில் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.
இரு நாடுகளும் நீண்ட காலமாக சர்ச்சை நிலவும் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளன. மேலும் 2017 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே டோக்லாமில் பதற்றம் ஏற்பட்டு. பின்னர் போர் நிறுத்தம் போன்ற நிலை உருவானது.
இந்தியாவும் சீனாவும் தெற்காசிய மற்றும் இந்துமாக்கடல் பகுதிகளில் கால் பதிக்க, செயல் உத்தி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தளங்களைத் தேடி வருகின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













