இந்திய - சீன எல்லை மோதல்: நேரு எப்படி எதிர்கொண்டார்?

இந்திய-சீன எல்லை மோதல்: நேரு எப்படி எதிர்க்கொண்டார் ?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்திய எல்லைக்குள் சீனா ஊடுருவியது தெரிந்தவுடன், மக்கள் சோசியலிச கட்சி, சுதந்திர கட்சி, லோஹியா சோசியலிஸ்டுகள், ஜன சங்க கட்சியினர் என அனைவரும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவைக் கடுமையாக விமர்சித்தனர். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நேருவை எதிர்த்தனர்.

அப்போதைய ஜன சங்க கட்சியின் இளம் தலைவராக உருவாகி வந்த அடல் பிகாரி வாஜ்பாயும் நேருவுக்கு எதிராகக் குரல் எழுப்பினார்.

குறிப்பிட்ட தேதிக்குள் சீனா, இந்திய எல்லையைவிட்டு வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை 1959ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் நேரு முன்மொழிந்தார்.

1960ம் ஆண்டு ஜனவரி மாதம் நாக்பூரில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாட்டில் திபெத்தின் சுதந்திரத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும் ஐ.நாவில் சீனா இணைவதற்காக இந்திய தெரிவித்திருந்த ஆதரவைத் திரும்ப பெறவேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள சீன ஆதரவு நிறுவனங்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எல்லையில் இந்திய ராணுவப்படையினர் அதிக அளவில் குவிக்கப்பட வேண்டும் என்றும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

இந்திய-சீன எல்லை மோதல்: நேரு எப்படி எதிர்க்கொண்டார் ?

பட மூலாதாரம், THE ASAHI SHIMBUN

படக்குறிப்பு, அடல் பிகாரி வாஜ்பாய்

இந்தியாவில் உள்ள சீனர்களை வெளியேற்ற ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என 1960ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைதராபாதில் நடந்த தேசிய மாநாட்டில் பாரதிய ஜன சங்கத்தின் தலைவர் பீதாம்பர் தாஸ் குறிப்பிட்டார்.

அப்போதைய சீன பிரதமர் சோவ் என்லை 1960ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் பிரதமர் நேருவைச் சந்திக்க இந்தியா வந்தார். நேரு மற்றும் சோவ் என்லை சந்திப்பதை ஜன சங்க கட்சியினர் விரும்பவில்லை என கிரேக் பாக்ஸ்டேர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆரம்பக் கட்டத்திலிருந்தே சீனாவின் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றக்கூடாது, எந்த சலுகையும் வழங்கப்படக் கூடாது என்ற கருத்தையே ஜன சங் கட்சியினர் கொண்டிருந்ததாகவும் கிரேக் பாக்ஸ்டேர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய-சீன எல்லை மோதல்: நேரு எப்படி எதிர்க்கொண்டார் ?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நேரு மற்றும் சோவ் என்லை

சோவ் என்லை இந்தியா வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு, ''இந்தியாவை விட்டு சீனர்கள் வெளியேற வேண்டும்'' என்ற பதாகைகளுடன் ஜன சங்கத்தினர் ஜவஹர்லால் நேருவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நேரு மீது அதிகரித்த குற்றச்சாட்டுகள்

1962ம் ஆண்டு வரை ஜன சங் தலைவராக இருந்த தீனதயாள் உபாத்யாயா,''இந்திய அரசாங்கம் சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைவைத்து வந்தார்''.

''ஜன சங்க தலைவரின் இந்த கோரிக்கை தேசிய நலனுக்கு எதிரானது, அரசியல் ஆதாயத்திற்காக இவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்'' என அரசியல் விமர்சகர் பிராங்க் மோர்ஸ் குறிப்பிட்டார்.

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு திபெத், பூடான், நேபாள் உள்ளிட்ட நாடுகளில் சீனா தனது எல்லையை விரிவுபடுத்தியதை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடர்ந்து விமர்சித்து வந்தது.

1959ம் ஆண்டு காஷ்மீரில் உள்ள அக்சாய் சின் பகுதியில் சீனா சாலை அமைக்க திட்டமிட்டபோது இந்தியா சீனா எல்லை பிரச்சனை தீவிரம் அடைந்தது என்றே கூறலாம்.

இந்திய-சீன எல்லை மோதல்: நேரு எப்படி எதிர்க்கொண்டார் ?

பட மூலாதாரம், CENTRAL PRESS

மேலும் அப்போதைய சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் நேருவுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர் என்றே சொல்லலாம். அதில் ஒருவர் ஆச்சார்ய கிரிப்பலனி. இவர் ஏற்கனவே காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பிலிருந்தவர். அப்போது பிரஜா சோசியலிச கட்சி தலைவராக இருந்தார்.

பிரஜா சோசியலிஸ்டு கட்சியின் மற்றொரு உறுப்பினர் அசோக் மேத்தா, சுதந்திர கட்சியின் ரங்கா, மீனு மாசாணி என பலர் இந்திய-சீன எல்லை பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர். ஏற்கனவே இவர்கள் மூவருமே காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தவர்கள்.

1962ம் ஆண்டு சீனா படையெடுப்பிற்குப் பிறகு ''எங்கள் நிலத்தைச் சீனாவிலிருந்து மீட்டெடுக்கும் வரை பேச்சு வார்த்தை நடத்துவதில் அர்த்தம் இல்லை'' என ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டது. மேலும் திபெத் சுதந்திரம் பெறுவதால் மட்டுமே சீனா தனது எல்லை பரப்பை விரிவுபடுத்துவதைத் தடுக்க முடியும் என்றும், இந்திய எல்லையைப் பாதுகாக்க முடியும் என்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

அதே ஆண்டு,திபெத்தில் உள்ள தலாய்லாமாவை ஆதரித்து, சீன கம்யூனிஸ்ட்டுகளின் உறவை முறிக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தெரிவித்தனர்.

சீன-இந்தியப் போருக்குப் பிறகு அரசியல் ரீதியாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ஆதாயம் அடைந்து வந்ததால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கருத்துகளை நேரு ஏற்கவில்லை.

சீனாவின் அக்சாய் சீன் கட்டுப்பாட்டை நேரு வீழ்த்தியபோது, ''இங்கு ஒரு புல்லைக் கூட முளைக்க விட மாட்டேன்’` என கூறினார். இதற்கு மூத்த காங்கிரஸ் உறுப்பினர் மஹாவீர் தியாகி, தனது தொப்பியை நீக்கி வழுக்கை தலையைச் சுட்டிக்காட்டி, நேருவைக் கேலி செய்தார். வழுக்கைத் தலையில் எதுவுமே முளைக்காது இதையும் யாரிடமாவது கொடுக்க வேண்டுமா என்றும் மஹாவீர் தியாகி கேள்வி எழுப்பினார்.

இந்திய-சீன எல்லை மோதல்: நேரு எப்படி எதிர்க்கொண்டார் ?

பட மூலாதாரம், J. WILDS

படக்குறிப்பு, நேரு மற்றும் கிருஷ்ண மேனன்

இந்திய - சீன போர் முற்றியபோது பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருஷ்ண மேனன் வில்லினாக கருதப்பட்டார்.

நேருவின் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகளுக்குத் திருப்தி இல்லை. ஆனாலும் நேருவிடம் நேரடியாக மோதாமல், அவரிடம் நெருக்கமாக இருக்கும் கிருஷ்ணமேனனிடம் பலர் மோதினார்கள்.

நேருவுக்கு நெருக்கமான கிருஷ்ணமேனனுக்கு நெருக்கடி

1962ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி காங்கிரஸ் கட்சியின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அரசாங்கம் நாட்டை தவறாக வழிநடத்தியது என்ற குற்றச்சாட்டைத் தவிர்த்துவிட்டு, கிருஷ்ணமேனன் நேருவை தவறாக வழிநடத்தினார், கிருஷ்ணமேனன் நாடாளுமன்றத்தையும் நாட்டையும் தவறாக வழிநடத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இந்திய-சீன எல்லை மோதல்: நேரு எப்படி எதிர்க்கொண்டார் ?

பட மூலாதாரம், KEYSTONE-FRANCE

மேலும் சீனாவின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் சாதகமான சூழல் லடாக்கில் நிலவவில்லை என கிருஷ்ணமேனன் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். இதுவே அவர் மீது குற்றச்சாட்டுகள் எழ காரணமாக மாறியது.

ஆச்சார்ய கிருபலானியும் பல எதிர்க்கட்சி தலைவர்களும் சேர்ந்து ஜவஹர்லால் நேருவே பாதுகாப்புத்துறையை நிர்வகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்த மாநிலங்களின் முதல்வர்கள் பலர் கிருஷ்ணமேனனுக்கு எதிராகக் குரல் கொடுக்க துவங்கினர். அடுத்த சில நாட்களில் கிருஷ்ணமேனனை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என அப்போதைய ஜனாதிபதி ராதாகிருஷ்ணனும் குரல் கொடுத்தார்.

கிருஷ்ணமேனன் பதவி விலகல்

அக்டோபர் 31ம் தேதி நேரு பாதுகாப்புத் துறையை தன் பொறுப்பிலேயே வைத்துக்கொண்டு நிர்வகிக்கப்போவதாக அறிவித்தார். ஆனால் கிருஷ்ணமேனன் மத்திய அமைச்சர் பொறுப்பிலிருந்து விலக்கப்படவில்லை. புதிதாகப் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தித்துறை அமைச்சராகக் கிருஷ்ணமேனன் பொறுப்பேற்றார்.

இந்திய-சீன எல்லை மோதல்: நேரு எப்படி எதிர்க்கொண்டார் ?

பட மூலாதாரம், KEYSTONE-FRANCE

'பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து கிருஷ்ணமேனன் பதவி விலகினாலும், மேனனை விமர்சித்தவர்களைப் பதிலுக்கு விமர்சிக்கும் விதத்தில், கிருஷ்ணமேனனுக்கு புதிய அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. மேனன் தன்னுடன் தொடர்ந்து அரசியல் பயணம் மேற்கொள்ள வேண்டும் என நேரு விரும்பினார்'' என்று இந்திய-சீன போர் என்ற புத்தகத்தில் நெவில்லி மாக்ஸ்வெல் குறிப்பிட்டுள்ளார்.

''பாதுகாப்புத்துறை நிர்வாகத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை'' என 1961ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதியின் தி ஹிந்து நாளிதழ் குறிப்பிட்டது.

நேருவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது

''கிருஷ்ணமேனனை பதவி விலக சொல்வது என்னைப் பதவி விலக சொல்வது போல'', மேனன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் முழு அரசாங்கத்தின் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு என நேரு கூறினார்.

இந்திய-சீன எல்லை மோதல்: நேரு எப்படி எதிர்க்கொண்டார் ?

பட மூலாதாரம், BETTMANN

''மேனன் மீது உங்களுக்கு அவ்வளவு அக்கறை இருந்தால், நாங்கள் உங்களுடன் கட்சியில் தொடர்வது குறித்து யோசிக்க வேண்டும் என காங்கிரஸின் பல மூத்த தலைவர்கள் நேருவிடம் கூறியுள்ளனர்.

இதற்கு அடுத்த நாள் கிருஷ்ணமேனன் தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். காங்கிரஸ் கட்சியிலிருந்தும் கிருஷ்ணமேனன் நீக்கப்பட்டார். வரலாற்றில் நேருவின் விருப்பத்திற்கு எதிராகக் காங்கிரஸ் கட்சி செயல்பட்டது இதுவே முதல் முறையாகக் கருதப்பட்டது.

நேரு தன்னை காத்துக்கொள்வதற்காகவே கிருஷ்ணமேனனை பதவியிலிருந்து நீக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் பிறகு இந்திய அரசியலிலும் நேரு ஆதிக்கம் செலுத்தமுடியாத நிலை ஏற்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: