சசிகலா முன்கூட்டியே விடுதலையாவதில் சிக்கல்?: இதுதான் காரணம்

பட மூலாதாரம், Getty Images
முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினத்தந்தி: சசிகலா முன்கூட்டியே விடுதலையாவதில் சிக்கல்?
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா முன்கூட்டியே விடுதலையாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி அந்த சிறையில் அடைக்கப்பட்டனர். சசிகலாவுக்கு ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அபராதத்தொகை இதுவரை செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. அபராதத்தை செலுத்தாவிட்டால் மேலும் ஓராண்டு அவர் சிறையில் இருக்க வேண்டும்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா 1997-ம் ஆண்டு 13 நாட்கள் சென்னை சிறையிலும், கடந்த 2014-ம் ஆண்டு 24 நாட்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலும் இருந்தார். இரண்டையும் சேர்த்தால், 37 நாட்கள் ஆகிறது. அவரது தண்டனை காலத்தில் இந்த 37 நாட்கள் கழிக்கப்பட்டுவிடும்.
மேலும் ஆண்டுக்கு சுமார் ஒரு மாதம் தண்டனை கைதிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.
அந்த விடுமுறை, தண்டனை காலத்தில் கழிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால் சசிகலாவின் 4 ஆண்டு சிறை தண்டணைக்கு, 4 மாதங்கள் கழிக்கப்படும். இந்த 4 மாத விடுமுறை, ஏற்கனவே சுமார் ஒரு மாதம் சிறையில் இருந்தது என 5 மாதங்கள் தண்டனை காலத்தில் கழிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. இது மட்டுமின்றி, சிறை சூப்பிரண்டு, தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி தண்டனை கைதிகளுக்கு அதிகபட்சமாக 2 மாதங்கள் வரை தண்டனை காலத்தை குறைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஒரு வேளை சசிகலாவுக்கு சிறை சூப்பிரண்டு இந்த சலுகையை வழங்காவிட்டால், சசிகலா அக்டோபர் மாதம்தான் பெங்களூரு சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு உள்ளது. சிறை சூப்பிரண்டு சலுகையை வழங்கினால், பா.ஜனதா பிரமுகர் வெளியிட்ட கருத்துப்படி அவர் ஆகஸ்டு 14-ம் தேதி விடுதலையாக வாய்ப்பு இருக்கிறது. இந்த கணக்குகளின்படிதான் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என்று இப்போதே தகவல்கள் பரவி வருகின்றன.
ஆனால் நன்னடத்தை விதிகள் சசிகலாவுக்கு பொருந்தாது என்று சிறைத்துறை உயர் அதிகாரியாக இருந்த மேக்ரிக் கூறியுள்ளார். பொருளாதார குற்றம் இழைத்தவர்களுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது என்று சிறைத்துறை விதிமுறைகள் கூறுகின்றன. அதன்படி பார்த்தால், சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.
இந்து தமிழ் திசை: “விண்வெளி ஆய்வில் ஈடுபட மாநில அரசுகளுக்கும் அனுமதி”

பட மூலாதாரம், Getty Images
விண்வெளி ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட மாநில அரசுகளுக்கும் அனுமதி அளிக்கப்படும் என்றும் ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தயாரிக்க தனியாருக்கு அனுமதி அளிப்பதால் தேச நலன் பாதிக்காது என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.
உலக அளவில் விண்வெளி ஆய்வுத் துறையின் பொருளாதார மதிப்பு 300 பில்லியன் டாலர் என்ற அளவில் இருக்கிறது. அதில் நம் நாட்டின் பங்களிப்பு 3 சதவீதம் மட்டும்தான். சர்வதேச அளவில் நம் பொருளாதாரச் சந்தை மதிப்பை உயர்த்தினால்தான் அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி நாம் பயணிக்க முடியும். அதற்கேற்ப விண்வெளித் துறையில் வருவாயைப் பெருக்கும் நோக்கத்தில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு, முதலீடுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்கிறது இஸ்ரோ.
‘’ தனியார் அமைப்புகளும் செயற்கைக்கோள்கள், ராக்கெட்கள் தயாரிப்பில் ஈடுபடலாம். மற்றபடி இஸ்ரோ தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டது என்ற கருத்து தவறானதாகும். இஸ்ரோவின் ஆராய்ச்சிகள் மற்றும் இதர நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்களின் தலையீடு ஒரு போதும் இருக்காது.’’
’’இஸ்ரோவைப் போல தனியார் அமைப்புகளும் ராக்கெட்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் தயாரித்து விண்வெளிக்கு அனுப்பலாம். அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபடலாம். அதற்கான தொழில்நுட்ப உதவிகள் மட்டுமே நிறுவனங்களுக்கு இஸ்ரோ சார்பில் வழங்கப்படும். இதன்மூலம் இஸ்ரோவுக்கு வருவாய் கிடைக்கும்.’’ என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியுள்ளார்.
’’இந்த நடவடிக்கையால் எவ்வகையிலும் தேசியப் பாதுகாப்பு, தேசநலன் பாதிக்கப்படாது. மேலும், மத்திய விண்வெளி ஆய்வுத் துறையின் கீழ் புதிதாக இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் (இன்-ஸ்பேஸ்) உருவாக்கப்படவுள்ளது. இந்த தன்னாட்சி அமைப்புதான் தனியார் நிறுவனங்களுக்கான அனுமதி மற்றும் நிர்வாக கண் காணிப்பு பணிகளை மேற்கொள்ளும்.’’
’’கொரோனா பரவல் காரணமாக ககன்யான், ஆதித்யா எல், சந்திரயான்-3 உள்ளிட்ட ஆய்வுத் திட்டப்பணிகள் தற்காலிகமாக தடைப்பட்டுள்ளன.’’
’’குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்க முக்கிய காரணம் அதன் நில அமைப்பு இயற்கையாகவே தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இதனால் அங்கிருந்து எளிதாக தென்திசையில் செலுத்த வேண்டிய ராக்கெட்களை ஏவமுடியும். இதற்கான நிலம் கையகப்படுத்துதல் முடிந்தபின் ஏவுதளம் அமைக்கும் பணிகள் முடுக்கிவிடப்படும்.’’
’’விண்வெளி ஆராய்ச்சியில் மாநில அரசுகள் ஈடுபட முன்வந்தாலும் இஸ்ரோ அனுமதி அளிக்கும். அதற்கான உதவிகளையும் செய்துதரும்.’’ என்று கே.சிவன் கூறியதாக விவரிக்கிறது இந்து தமிழ் திசை.
தினமணி: தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் வரும் திங்கள்கிழமை முதல் ஜூலை 15 வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது என்கிறது தினமணி நாளிதழ்.
தமிழகத்தில்கொரோனா வைரஸ் நோய்த் தொற்று நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நோய்த் தொற்றின் பரவலை மேலும் கட்டுப்படுத்துவதற்காக வரும் திங்கள்கிழமை முதல் ஜூலை 15 வரை தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கு முழுத் தொகையும் திரும்பி செலுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்மூலம், கோவை - மயிலாடுதுறை, கோவை - அரக்கோணம், திருச்சி - செங்கல்பட்டு, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி ஆகிய ரயில்கள் வரும் திங்கள்கிழமை ஜூலை 15 வரை ரத்து செய்யப்படுகின்றன.
அதேசமயம், சென்னை - டெல்லி ராஜ்தானி விரைவு ரயில் அட்டவணைப்படி இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












