கர்நாடக சிறையில் கன்னடம் கற்றுக்கொண்ட சசிகலா

பட மூலாதாரம், Getty Images
தினத்தந்தி - கன்னடம் கற்றுக்கொண்ட சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, வயது வந்தோருக்கான கல்வி திட்டத்தின் கீழ் நடைபெறும் வகுப்புகளில் கலந்து கொண்டு கன்னடம் பயில தொடங்கியபின் தற்போது கன்னட மொழி பேசுவதுடன், கன்னடத்தில் பிறர் பேசுவதையும் புரிந்துகொள்ளவும் செய்கிறார் என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
பரப்பனஅக்ரஹாரா சிறையில் உள்ள கைதிகள் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலம் சான்றிதழுடன் கூடிய படிப்புகளை படித்து வருவதாக விவரிக்கிறது அந்த செய்தி.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'பிரதமருக்கு அதிகாரம் இல்லை'

பட மூலாதாரம், Getty Images
சிபிஐ இயக்குநர் பொறுப்பில் இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா உடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாணைக்கு வரவுள்ள நிலையில், காங்கிரசின் மக்களவைக் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
சிபிஐ இயக்குநரின் பதவிக்காலத்தில் தலையிட மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கோ, பிரதமருக்கோ அதிகாரம் இல்லை என்றும், அரசின் நடவடிக்கை சட்டத்துக்கு புறம்பானது என்றும் அந்தக் கடிதத்தில் கார்கே குறிப்பிட்டுள்ளார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா - 'நாட்டுக்காக விளையாடுவது எப்போதும் பெருமையே'

பட மூலாதாரம், AFP
'ஒருவர் நாட்டுக்காக பங்களிப்பது அவர் நாட்டுக்காக உதவி செய்வது அல்ல, அது அவருக்கு கிடைத்த வாய்ப்பு' என இந்திய கிரிக்கெட் அணித்தலைவரான விராட் கோலி தெரிவித்துள்ளார் என்ற செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் வெளியிட்டுள்ளது.
அண்மையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்கள் குவித்து சச்சின் சாதனையை முறியடித்த விராட் கோலி, அதனால்தான் 10 ஆண்டுகளாக சர்வதேச அளவில் விளையாடியும் நாட்டுக்காக விளையாடுவது தனக்கு கிடைத்த உரிமையாகவோ, எளிதாகவோ எடுத்துக்கொள்ள தோன்றவில்லை என்று குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் அணிக்காக பீல்டிங் செய்யும்போது தேவைப்பட்டால் ஓவரின் 6 பந்துகளின்போதும் பாய்ந்து தடுப்பது தனது கடமை என்றும், அணிக்காக தான் எப்போதும் அதனை செய்ய விரும்புவதாகவும் கூறினார்.
'எப்படியாவது நாட்டுக்காக விளையாடவேண்டும் என்று பலர் துடிக்கின்றனர். அப்படிப்பட்ட சூழலில், எனக்கு கிடைத்த வாய்ப்பை பெருமையாகவே எடுத்துக் கொள்வேன் என்று மேலும் அவர் கூறியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி தெரிவித்துள்ளது.

தினமணி - நீரவ் மோதியின் சொத்துகள் முடக்கம்

பட மூலாதாரம், FACEBOOK/NIRAVMODI
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,400 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு, திரும்ப செலுத்தாமல் தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோதிக்கு சொந்தமாக ஹாங்காங்கில் உள்ள 255 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
முடக்கப்பட்ட தங்க மற்றும் வைர நகைகள் துபாயில் இருந்து கப்பல் மூலம் ஹாங்காங் அனுப்பப்பட்டவை என்கிறது தினமணியின் செய்தி.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












