அம்னஸ்டி அலுவலகத்தில் அமலாக்க இயக்குநரகம் சோதனை

அம்னஸ்டி இலச்சினை

பட மூலாதாரம், Getty Images

பெங்களூரு நகரில் உள்ள அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் அமலாக்க இயக்குநரகம் சோதனை மேற்கொண்டுள்ளதாக குறைந்தது 2 வட்டாரங்கள் பிபிசியிடம் உறுதி செய்துள்ளன.

பிற்பகல் 2 மணியளவில் தொடங்கிய இந்த சோதனையில் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற நிர்வாகிகளின் தொலைபேசிகள் எடுத்து செல்லப்பட்டுள்ளதாக பெயர் சொல்ல விரும்பாத இந்த அமைப்பின் பணியாளர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (ஃபெமா சட்டம்) கீழ் தாங்கள் நிதிகள் பெறாததால், இந்த சோதனை ஏன் நடைபெறுகிறது என்பது புரியவில்லை என்று இன்னொரு பணியாளர் கூறியுள்ளார்.

மக்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு அம்னெஸ்டி அமைப்பு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

இது பற்றி பிபிசி விசாரித்தபோது சட்ட அமலாக்க இயக்குநரகம் பதிலளிக்கவில்லை.

கிரீன் பீஸ் என்ற சுற்றுச்சூழல் அமைப்பின் அலுவலகத்தில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தி மூன்று வாரங்களுக்குப் பிறகு இந்த சோதனை நடக்கிறது.

பெயர் தெரிவிக்க விரும்பாத கிரீன் பீஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், "எங்கள் அலுவலகத்தின் மீதான சோதனை காலை 11.30 தொடங்கி, மாலை 6 மணி வரை நடந்தது. அவர்கள் வாரண்ட் இல்லாமல் வந்தனர். கராறாகப் பேசினால் நாங்கள் வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில்லை. உள்நாட்டிலேயே நிதி திரட்டிக் கொள்கிறோம். எனவே ஃபெமா சட்டத்தின் கீழ் நாங்கள் வரமாட்டோம்" என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: